search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிபா வைரஸ் காய்ச்சல் - தமிழகத்தில் 4 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு
    X

    நிபா வைரஸ் காய்ச்சல் - தமிழகத்தில் 4 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

    'நிபா' வைரஸ் காய்ச்சல் குறித்து தமிழக - கேரள எல்லைகளில் உள்ள கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #NipahVirus
    நாகர்கோவில்:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தொற்றுநோயாக பரவி வரும் இந்த காய்ச்சலுக்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். நிபா வைரஸ் காய்ச்சல் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதியைச் சேர்ந்த பொதுமக்களையும் பீதி அடையச் செய்துள்ளது.

    இதன் காரணமாக தமிழக - கேரள எல்லைகளில் உள்ள கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கேரளாவுக்கு சென்று வேலை பார்த்து வருகிறார்கள். அவ்வாறு வேலை பார்த்து திரும்பும் அவர்களில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அவர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என 4 மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-

    நிபா வைரஸ் மூலம் ஏற்படக்கூடிய காய்ச்சல் கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. நிபா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஏற்கனவே அரசு துறைகள் மூலம் ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    காய்ச்சல் பாதிப்பு பகுதிகளை கண்காணித்து வருகிறோம். 141 தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் 11 அரசு மருத்துவமனைகள் மூலமும் காய்ச்சல் அறிகுறியோடு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு எதனால் காய்ச்சல் ஏற்பட்டது? என்பது தொடர்பாக மேற்கண்ட மருத்துவமனைகள் மூலமாக சுகாதாரத்துறை அறிக்கை பெற்று வருகிறது. நிபா வைரஸ் காய்ச்சல் கோழிக்கோட்டில் இருந்து குமரி மாவட்டத்துக்கு பரவ வாய்ப்பில்லை.

    இருந்தாலும் மாநில அரசின் ஆலோசனையின்பேரில் காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மக்கள் வதந்திகளை நம்பக்கூடாது. இந்த காய்ச்சல் வராமல் தடுக்க சுகாதாரத்துறையும், தமிழக அரசும் தயார் நிலையில் இருந்து வருகிறது. எந்த தொற்றுநோய் ஏற்பட்டாலும் அதை தடுக்க அரசு தயாராக இருக்கிறது. இதனால் யாரும் பயப்படத்தேவையில்லை.

    குமரி மாவட்டத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. தமிழ்நாட்டிலும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை.

    இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.  #NipahVirus
    Next Story
    ×