search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிபா வைரஸ் காய்ச்சலால் மக்கள் பீதி அடைய வேண்டாம் - கலெக்டர் தகவல்
    X

    நிபா வைரஸ் காய்ச்சலால் மக்கள் பீதி அடைய வேண்டாம் - கலெக்டர் தகவல்

    நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.
    திண்டுக்கல்:

    நிபா வைரஸ் கிருமியால் நிபா காய்ச்சல் எனும் தொற்றுநோய் பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது தும்மும்போது உமிழ்நீரில் கிருமிகள் வெளிப்படுகின்றன. இக்கிருமிகள் நம்மை அறியாமல் நம் உடலில் ஊடுருவி தாக்க ஆரம்பிக்கிறது

    வவ்வால் கடித்த பழங்கள், பாதி உண்ட பழங்கள், பன்றி மற்றும் வெளவாலுடன் தொடர்புடையவர்களிடமிருந்து நோய் பரவுகிறது. தற்போது கேரளாவில் நிபா வைரஸ் பரவி உள்ளது.

    நிபா வைரஸ் தாக்கினால் மூக்கில் நீர்ச்சளி ஒழுகுதல், தலைவலி, காய்ச்சல், இருமல், மூச்சு திணறல், கழுத்து பிடிப்பு, தசைவலி, ஞாபகம் மறத்தல், மயக்கமடைதல், வலிப்பு, கோமா பிறகு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. நோய் ஏற்படின் அறிகுறிகளுக்கேற்ப உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் இந்நோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கைகளை சுத்தமாக கழுவுதல், கைகளை மூக்கு, வாய் பகுதிக்கு அடிக்கடி கொண்டு போகாமல் இருத்தல். இருமல் வந்தால் பாதுகாப்பாக கைகுட்டை பயன்படுத்துதல், மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

    எனவே, பொதுமக்கள் பழங்களை கழுவிய பிறகு பயன்படுத்தவும், வவ்வால், பறவைகள் கடித்த பழங்களை பயன்படுத்தாமலும், இப்பழங்களை வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கு கொடுக்காமலும் இருக்க வேண்டும். பன்றி வளர்ப்போர் பண்ணைகளை சுத்தமாகவும், தினந்தோறும் கிருமிநாசினி கொண்டு பண்ணையை சுத்தப்படுத்த வேண்டும்.

    மேலும், பன்றிகளை ஊராட்சியிடம் உரிமம் பெற்று பன்றிகளை அவர்கள் அளிக்கும் நிபந்தனைகளின்படி பொதுமக்கள் வசிக்காத இடங்களில் வளர்க்க வேண்டும்.

    பொது மக்களுக்கு தொல்லைதரும் விதமாக பன்றிகளை நடமாட விடுவது, பொது இடங்களில் அலையவிடுவது, அசுத்தம் செய்வது, வீடுகளில் புகுந்து பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் பன்றி வளர்க்கும் நபர்களின் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். பன்றிகள் நோய் வாய்ப்பட்டாலோ, இறந்தாலோ உடனடியாக கால்நடைத்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியுடன் நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்கப்படும். பொது மக்கள் இத்தொற்று நோய் குறித்து பீதியடைய வேண்டாம் என மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×