search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Meyyanathan"

    • பூமியை பாதுகாக்க மரங்களை நடவு செய்வோம், மிளகின் மூலம் கூடுதல் வருவாய் பெறுவோம்.
    • விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் கடந்த 5-6 ஆண்டுகளில் மீட்டெடுத்து, பசுமை பரப்பை அதிகரித்துள்ளனர்.

    ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் 'லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே' எனும் மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது. ஒரே நாளில் தமிழகத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தார். அப்போது காவேரி கூக்குரல் சார்பில் அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்று முன் வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.

    சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, பொள்ளாச்சி, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

    புதுக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சரை வரவேற்றுப் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், "தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே தோட்டக்கலை துறை சார்பாக, விவசாயிகளுக்கு மிளகு கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியம் என்று நிரூபிக்கப்பட்டு இருப்பதால், தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

    கருத்தரங்கை துவக்கி வைத்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், "2018 கஜா புயலுக்கு பின் புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டிருந்த நிலங்களை இந்த பகுதி விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் கடந்த 5-6 ஆண்டுகளில் மீட்டெடுத்து, பசுமை பரப்பை அதிகரித்துள்ளனர். இயற்கையை பாதுகாக்கும் விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள் என பெருமிதத்துடன் கூறினார். அத்துடன் பூமியை பாதுகாக்க மரங்களை நடவு செய்வோம், மிளகின் மூலம் கூடுதல் வருவாய் பெறுவோம். மேலும் காவேரி கூக்குரல் சார்பில் வைக்கப்பட்ட அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் " என உறுதியளித்தார்.

    இந்த மிளகு சாகுபடி கருத்தரங்குகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் புதிய ரக மிளகை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றவர்கள் எனப் பலர் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல்வேறு தகவல்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

    குறிப்பாக ஒவ்வொரு இடத்திலும் வல்லுனர்கள் பேசியது மற்ற மூன்று மாவட்டங்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அந்தவகையில் பொள்ளாச்சியில் நடந்த கருத்தரங்கில் 'மிளகை எளிமையாக ஏற்றுமதி செய்வது எப்படி' என்பதை குறித்து, ஈரோடு - இந்திய நறுமண பயிர்கள் வாரியத்தின் தலைவர் கனக திலீபன் விரிவாக பேசினார்.

    அதை போலவே புதுக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குனர் சிமந்தா சைக்கியா, 'மிளகை எளிமையாக ஏற்றுமதி செய்வது எப்படி' என்பது குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    அதுமட்டுமின்றி, 'பெப்பர் தெக்கன் ஒரு திரியில் 800-1000 மிளகு மணிகள் கண்ட' கேரளாவை சேர்ந்த டி.டி. தாமஸ், மிளகில் 'அஸ்வினி, ஸ்வர்னா ப்ரீத்தி' மூன்று புதிய ரகங்களை கண்டுபிடித்த முன்னோடி விவசாயி ஏ. பாலகிருஷ்ணன், அகளி மிளகு காப்புரிமை பெற்ற விவசாயி கே.வி. ஜார்ஜ், இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகள் டாக்டர். கண்டிஅண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் ஆகியோர் மிளகு சாகுபடி குறித்தும் அதில் ஏற்படும் நோய்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் பேசினர். இவர்களோடு இந்திய நறுமண பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குனர் ந. சிமந்தா சைக்கியா மிளகு ஏற்றுமதி குறித்து பேசினார்.

    மேலும், சமவெளியில் மிளகு சாகுபடி மூலம் வெற்றி கண்டிருக்கும் முன்னோடி விவசாயிகளான பாலுசாமி, ராஜாகண்ணு, செந்தமிழ் செல்வன், பாக்கியராஜ், வளர்மதி, காமராசு, பூமாலை மற்றும் நாகரத்தினம் உள்ளிட்டோர் தங்கள் அனுபவங்களை விளக்கி கூறினர்.

    இது மட்டுமின்றி, கருத்தரங்க நிறைவுக்கு பின் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கிருந்த பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்து கேட்டு தெரிந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • அமைச்சர் மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறையின் புதிய அறிவிப்புகளை சட்டசபையில் இன்று வெளியிட்டார்.
    • பசுமை தமிழ்நாடு திட்டத்தின்கீழ் 1,000 குறுங்காடுகள் தொழிற்சாலைகளால் உருவாக்கப்படும் என்றார்.

    சென்னை:

    அமைச்சர் மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறையின் புதிய அறிவிப்புகளை சட்டசபையில் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    ரூ.10 கோடி மதிப்பீட்டில் 50 பள்ளிகளில் கால நிலை மாற்றம் குறித்து அறிய பசுமை பள்ளிக்கூடத் திட்டம்.

    காலநிலை மாற்றம் தொடர்பாக பள்ளிகளில் செயல்படும் சூழல் மன்றங்கள், காலநிலை மன்றங்களாக புதுப்பித்து மாற்றியமைக்கப்படும்.

    பசுமை தமிழ்நாடு திட்டத்தின்கீழ் 1,000 குறுங்காடுகள் தொழிற்சாலைகளால் உருவாக்கப்படும்.

    ரூ. 10 கோடியில் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு இடையே, காலநிலை மாற்றத் தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பசுமை சவால் நிதி உருவாக்கப்படும்.

    பொதுமக்கள் அதிகளவில் கூடும் மையங்களில் சூழலுக்குகந்த பழக்க வழக்கங்களை ஊக்குவிக்க ரூ. 50 லட்சத்தில் சூழலுக்குகந்த வாழ்வியல் சான்றிதழ் வழங்கப்படும்.

    நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்க திட்டம்

    சென்னையில் குப்பை சேகரிப்பவர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

    • தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் மெய்யநாதன்.
    • அமைச்சருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கடலூர்:

    ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்னைக்கு வருகை தருவதற்காக பயணம் செய்தார். புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ஏறிய அமைச்சர் மெய்யநாதனுக்கு பயணத்தின் போது ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

    சிதம்பரம் ரெயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மெய்யநாதன் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அமைச்சர் சிகிச்சை பெற்று வருவதை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    • தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் முதல்வரின் அனுமதி பெற்று விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.
    • திருவொற்றியூர் பகுதியில் பரவி வரும் வாயு கசிவிற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இ்ன்னும் ஒரு சில நாட்களில் அவை சரிசெய்யப்படும்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழகம் மற்றும் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 43-வது தென் மண்டல தேசிய பூப்பந்தாட்ட போட்டி திருவொற்றியூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    பகல்- இரவு போட்டியாக மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் இருந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கு பெற்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கும், பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற கர்நாடக அணிக்கும் பரிசுத்தொகையாக தலா 50 ஆயிரம் மற்றும் கோப்பையை வழங்கினார்.

    விழாவில் வடசென்னை எம்.பி.டாக்டர் கலாநிதி வீராசாமி மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:- இந்ந தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று வெகுவிரைவில் திருவொற்றியூரிலும் மாதவரம் தொகுதியிலும் 3 கோடி ருபாய் அளவில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

    அதேபோல் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் முதல்வரின் அனுமதி பெற்று விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். திருவொற்றியூர் பகுதியில் பரவி வரும் வாயு கசிவிற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இ்ன்னும் ஒரு சில நாட்களில் அவை சரிசெய்யப்படும் என்றார்.

    முன்னதாக பூப்பந்தாட்ட கழக மாநில பொதுச் செயலாளர் எழிலரசன், அனைவரையும் வரவேற்றார். முடிவில் மாரிமுத்து நன்றி கூறினார்.

    ×