search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரி கூக்குரலின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி
    X

    காவேரி கூக்குரலின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி

    • பூமியை பாதுகாக்க மரங்களை நடவு செய்வோம், மிளகின் மூலம் கூடுதல் வருவாய் பெறுவோம்.
    • விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் கடந்த 5-6 ஆண்டுகளில் மீட்டெடுத்து, பசுமை பரப்பை அதிகரித்துள்ளனர்.

    ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் 'லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே' எனும் மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது. ஒரே நாளில் தமிழகத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தார். அப்போது காவேரி கூக்குரல் சார்பில் அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்று முன் வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.

    சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, பொள்ளாச்சி, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

    புதுக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சரை வரவேற்றுப் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், "தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே தோட்டக்கலை துறை சார்பாக, விவசாயிகளுக்கு மிளகு கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியம் என்று நிரூபிக்கப்பட்டு இருப்பதால், தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

    கருத்தரங்கை துவக்கி வைத்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், "2018 கஜா புயலுக்கு பின் புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டிருந்த நிலங்களை இந்த பகுதி விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் கடந்த 5-6 ஆண்டுகளில் மீட்டெடுத்து, பசுமை பரப்பை அதிகரித்துள்ளனர். இயற்கையை பாதுகாக்கும் விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள் என பெருமிதத்துடன் கூறினார். அத்துடன் பூமியை பாதுகாக்க மரங்களை நடவு செய்வோம், மிளகின் மூலம் கூடுதல் வருவாய் பெறுவோம். மேலும் காவேரி கூக்குரல் சார்பில் வைக்கப்பட்ட அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் " என உறுதியளித்தார்.

    இந்த மிளகு சாகுபடி கருத்தரங்குகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் புதிய ரக மிளகை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றவர்கள் எனப் பலர் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல்வேறு தகவல்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

    குறிப்பாக ஒவ்வொரு இடத்திலும் வல்லுனர்கள் பேசியது மற்ற மூன்று மாவட்டங்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அந்தவகையில் பொள்ளாச்சியில் நடந்த கருத்தரங்கில் 'மிளகை எளிமையாக ஏற்றுமதி செய்வது எப்படி' என்பதை குறித்து, ஈரோடு - இந்திய நறுமண பயிர்கள் வாரியத்தின் தலைவர் கனக திலீபன் விரிவாக பேசினார்.

    அதை போலவே புதுக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குனர் சிமந்தா சைக்கியா, 'மிளகை எளிமையாக ஏற்றுமதி செய்வது எப்படி' என்பது குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    அதுமட்டுமின்றி, 'பெப்பர் தெக்கன் ஒரு திரியில் 800-1000 மிளகு மணிகள் கண்ட' கேரளாவை சேர்ந்த டி.டி. தாமஸ், மிளகில் 'அஸ்வினி, ஸ்வர்னா ப்ரீத்தி' மூன்று புதிய ரகங்களை கண்டுபிடித்த முன்னோடி விவசாயி ஏ. பாலகிருஷ்ணன், அகளி மிளகு காப்புரிமை பெற்ற விவசாயி கே.வி. ஜார்ஜ், இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகள் டாக்டர். கண்டிஅண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் ஆகியோர் மிளகு சாகுபடி குறித்தும் அதில் ஏற்படும் நோய்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் பேசினர். இவர்களோடு இந்திய நறுமண பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குனர் ந. சிமந்தா சைக்கியா மிளகு ஏற்றுமதி குறித்து பேசினார்.

    மேலும், சமவெளியில் மிளகு சாகுபடி மூலம் வெற்றி கண்டிருக்கும் முன்னோடி விவசாயிகளான பாலுசாமி, ராஜாகண்ணு, செந்தமிழ் செல்வன், பாக்கியராஜ், வளர்மதி, காமராசு, பூமாலை மற்றும் நாகரத்தினம் உள்ளிட்டோர் தங்கள் அனுபவங்களை விளக்கி கூறினர்.

    இது மட்டுமின்றி, கருத்தரங்க நிறைவுக்கு பின் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கிருந்த பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்து கேட்டு தெரிந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    Next Story
    ×