search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "K Rajan"

    • கேசவ் தெபுர் இயக்கியுள்ள படம் 'ரா ..ரா ..சரசுக்கு ராரா'.
    • இப்படம் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகுகிறது.

    ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ரா ..ரா ..சரசுக்கு ராரா' இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.கே.வி. இசையமைத்துள்ளார். ஆர்.ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 9V ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை நவம்பர் 3-ஆம் தேதி வெளியிடுகிறது. இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.


    இதில், விநியோகஸ்தர்கள் ரமேஷ் சுப்பிரமணியன், அஞ்சலி முருகன், படத்தின் இசையமைப்பாளர் ஜி.கே.வி, எழுத்தாளர் பொன். முருகன்,கலை இயக்குனர் ராமச்சந்திரன்,சண்டை இயக்குனர் ராஜாசாமி,பாடல் ஆசிரியர் சிவப்பிரகாசம், படத்தில் நடித்திருக்கும் மாரி வினோத், வில்லன் விஜய் பிரசாத், நடிகைகள் காயத்ரி, சிம்ரன், தீபிகா, சாரா அக்ஷயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



    இந்த நிகழ்ச்சியில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே .ராஜன் பேசியதாவது, இப்போதெல்லாம் பட விழாக்களுக்கு அதில் நடித்த நடிகைகள் வருவதில்லை. அந்த நிலையில் இங்கே வந்திருக்கிற இந்த நான்கு நடிகைகளை நான் பாராட்டுகிறேன். புதிதாக இவ்வளவு துணிச்சலாகத் தமிழ்ப் படம் எடுக்க வந்துள்ள தயாரிப்பாளருக்கு நான் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுக்குப் போட்ட பணம் திரும்ப வந்துவிடும். இப்பொழுது எல்லாம் போட்ட பணம் திரும்பி வந்தாலே பெரிய விஷயம்.



    அவுட்டோரில் வெளிப்புறங்களில் படம் எடுக்கும் போது நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன் முதலமைச்சரைச் சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுத்தோம் .அவுட்டோர் லொகேஷன்களில் டிராபிக், போலீஸ் என்று ஏகப்பட்ட பேர் வந்து லஞ்சம் வாங்குகிறார்கள். தினசரி 25 ஆயிரம் ரூபாய் லஞ்சத்துக்கே கொடுக்க வேண்டியிருக்கிறது. இதை தடுத்து முறைப்படுத்த வேண்டும்.



    தலைமைச் செயலகத்தில் சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வர வேண்டும் அப்படி அமைத்து ஒருமுறை அனுமதி வாங்கிவிட்டால் தமிழ்நாட்டில் எங்கே சென்றாலும் பிரச்சினை இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்கும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். முதலமைச்சரும் பரிசீலிக்கிறோம் என்றார்.

    நான் 2004 -ல் இதே தலைப்பை என் படத்திற்கு வைத்தேன். ஆனால் அப்போது எதிர்ப்பு இருந்ததால் நான் பின் வாங்கி, விட்டு விட்டேன். ஆனால் இந்த தயாரிப்பாளர் போராடி அதே தலைப்பை வாங்கி இருக்கிறார் .அவருக்கு என் பாராட்டுக்கள் இவ்வாறு பேசினார்.

    • ராகுல் ஆர்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஐமா’.
    • இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

    'ஆருயிரே' குறும்படத்தை இயக்கிய இயக்குனர் ராகுல்.ஆர். கிருஷ்ணா. எழுதி, இயக்கியுள்ள படம் 'ஐமா'. தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக யூனஸ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக எல்வின் ஜூலியட் நடிக்கிறார்.


    மேலும், அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன்,சிஷிரா, சாஜி தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கே.ஆர். ராகுல் இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ஐமா ' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குனர் பேரரசு, இயக்குனர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



    இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் பேசியதாவது, சிறு முதலீட்டு படங்கள் தான் திரையுலகை என்றும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் தோராயமாக 320 படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 100 முதல் 150 படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாக்கள் நடந்துள்ளன. ஆனால் சுமார் 70 படங்கள் தான் சிரமப்பட்டு வெளிவந்திருக்கின்றன. வெளியான பல படங்களின் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள். மீதமுள்ள 250 லிருந்து 300 படங்கள் வெளிவராமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இந்தப் படங்களில் முடங்கி உள்ளது.


    நான் நிதி உதவி செய்த ஒரு படத்திற்கு 12 கோடி செலவானது. ஆனால் அதன் வெளி மொழி உரிமை போன்றவை ஆறு கோடிக்கு விற்பனையானது, இருந்தாலும் கூட அந்தப் படத்தை வெளியிட முடியவில்லை. இதுதான் இன்றைய நிலைமை. சிறு முதலீட்டுப் படங்கள் சிரமம் இன்றி வெளிவர வேண்டும். அப்படி வெளிவந்தால் அந்த தயாரிப்பாளர் மீண்டும் படம் தான் எடுப்பார். ஆனால் பெரிய படங்களின் மூலம் வரும் லாபம் மீண்டும் சினிமாக்கு வருமா என்றால்,தெரியாது. இன்று 'ஜெயிலர்' படம் வெற்றிகரமாக ஓடியுள்ளது. ரஜினிகாந்த் பெரிய நட்சத்திர நடிகர்தான் சந்தேகம் இல்லை. இருந்தாலும் அவருக்குக் கூட மலையாளத்திலிருந்து மோகன்லாலும் கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமாரும் வந்து நடிக்க வேண்டி உள்ளது. இப்படி இன்று சினிமா மாறி உள்ளது. இப்போதெல்லாம் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படம் எடுக்கிறார்கள். அவர்களை நான் வரவேற்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

    • இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘ப்ரின்ஸ்’ படத்தில் நடித்திருந்தார்.
    • இப்படம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    கே. ராஜன்

    இப்படம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் கே.ராஜன் கூறியதாவது, "ஒரு படம் வெற்றி அடைந்தாலும் தோல்வியடைந்தாலும் அதற்கு இயக்குனர்களே காரணம். ஒரு படத்திற்கு நல்ல கதை முக்கியம். சிவகார்த்திகேயனின் 'ப்ரின்ஸ்' பட தோல்விக்கு அதன் இயக்குனர் தான் காரணம். " என்று கூறினார்.

    • திரையரங்குகளை கணினி மயமாக்க வேண்டும்.
    • டிக்கெட் விற்பனையில் வெளிப்படைத் தன்மை வேண்டும்.

    தமிழ்நாடு திரைப்படத்துறைக்கு இன்றைய சூழலில் இருக்கும் சவாலான விஷயங்களில் ஒன்று திரையரங்கத்தில் வெளியாகும் படங்களின் வசூல் உண்மை நிலையை தெரிந்து கொள்வது தான்.

    இது தொடர்பாக தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருக்குள் கருத்து மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 1168 திரைகளையும் கணினி மயமாக்க வேண்டும் அப்போது தான் இதை நேர்மையான முறையில் கண்காணிக்க முடியும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

    இது குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கே.ராஜன் கூறியதாவது, "டிக்கெட் விற்பனையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதே எனது கருத்து. இதை கண்காணிக்கக்கூடிய சர்வரை தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், அரசாங்கத்தின் மேற்பார்வையிலும் என இரண்டு இடங்களிலும் வைக்க வேண்டும்.


    கே ராஜன்

    அப்போது தான் எல்லாம் நேர்மையாக நடக்கும். ஆனால் இங்கே தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்கும் வழக்கம் வந்து விட்டது. ஒரே நபர் கையில் 40 தியேட்டர்கள் இருக்கின்றன. அதேபோல படம் திரையிடுவதற்கு முன்னால் திரையிடும் விளம்பரங்கள் மூலம் வரும் தொகையையும் தருவதில்லை.

    எங்கள் படங்களைப் பார்க்க வருவதன் மூலம்தான் விளம்பரங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள். அதனால் அதிலும் தயாரிப்பாளர்களுக்கு பங்கு வேண்டும். இதையெல்லாம் அரசாங்கம் தன் கண்காணிப்புக்குள் கொண்டு வரவேண்டும். அதற்கு தியேட்டர்களை கணினிமயம் ஆக்க வேண்டும்" என்றார் கே. ராஜன்.

    ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’ என்ற விழிப்புணர்வு படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களை பார்த்து பயப்படுவதாக கூறினார்.
    இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’.

    திரைப்படங்களை சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் இணையத்தில் பதிவேற்றப்படுவதை தடுப்பதற்காக ஒரு மணி நேர விழிப்புணர்வு படமாக இது உருவாகியுள்ளது.

    இந்த படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், சினிமா நடிகர்களை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படுவதாகக் கூறினார்.

    எத்தனை படங்கள் எடுத்தாலும், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை. படம் ரிலீசாவதற்கு ஒருநாள் முன்பே இணையத்தில் வெளியாகிறது. அவன் சொல்லி அடிக்கிறான்.

    இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தான். எத்தனை முறை ஆட்சி மாறினாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு, வேறு எந்த ஆட்சியாளர்களும் சினிமாவுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.


    அரசியல்வாதிகளுக்கு சினிமாக்காரர்களை பார்த்து பயம். எங்கே நம்ம இடத்துக்கு இவர்கள் வந்துவிடுவார்களோ என்ற பயம். சினிமாக்காரர்களின் ஓட்டு அரசியல்வாதிகளுக்கு தேவையில்லை.

    அதை அவர்கள் கள்ள ஓட்டாகப் போட்டுக் கொள்வார்கள். பைரசி இணையதளத்துக்கு அரசியல்வாதிகள் தான் ஏஜெண்டாக இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். இல்லை என்றால் அவர்களால் இத்தனை தைரியமாக செயல்பட முடியாது.

    அரசியலில் நல்லவர்கள் இப்போது இல்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் தவறாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன். தமிழ்நாடு மட்டும் தப்பித்துக்கொள்ளும் என நினைக்கிறேன். கூடிய விரைவில் நாம் எல்லோரும் காவியை கட்டிக்கொண்டு தான் அலையப் போகிறோம்’.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பற பட விழாவில் தன்னைப் பற்றி பேசிய தயாரிப்பாளர் ராஜனுக்கு, பாடகி சின்மயி பயப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். #MeToo
    நடிகைகள், பெண் இயக்குனர்கள், பாடகிகளின் பாலியல் புகார்களால் பட உலகை உலுக்கி வந்த மீ டூ இயக்கம் சமீபகாலமாக ஒய்ந்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் நடந்த ‘பற’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ‘மீ டூ’ குறித்து பேசியவர்களின் கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

    சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் பேசும்போது, பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயிக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் பேசும்போது, “சமீபகாலமாக சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயரை கெடுக்கும் செயல் நடக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது சொல்வதன் நோக்கம் என்ன? விளம்பரத்துக்காக பெருமைக்குரியவர்களை அசிங்கப்படுத்தி பெயரை சிதைக்கலாமா?. அப்படி சிதைத்தால் உங்களையும் சிதைப்பார்கள்.” என்று பேசினார்.

    இதற்கு பதில் அளித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, “சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்ரீரெட்டி உள்பட குற்றச்சாட்டு சொன்னவர்களின் புகார் குறித்து விசாரித்தால்தானே உண்மை தெரியவரும். புகார் சொன்ன பெண்ணை குற்றவாளியாக பார்க்க கூடாது” என்றார்.



    கே.ராஜன் பேசிய வீடியோவை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்து, “சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே. பயப்பட வேண்டுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
    இளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு நடந்ததாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் ஆகியோர் விஷால் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். #Ilayaraja75 #Vishal
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்நிலையில் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் இருவரும் விஷால் மீது இன்று மதியம் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுபற்றி கே.ராஜனிடம் கேட்டபோது ‘தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அறக்கட்டளை நிதியில் தலைவர் விஷால் 7 கோடி வரை மோசடி செய்துள்ளார் என்று கூறி போராட்டம் நடத்தினோம். அவர் எங்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீசில் தான் சங்க நிதி எட்டே முக்கால் கோடியை செலவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.



    பொதுக்குழு அனுமதி இல்லாமல் சங்க நிதியை பயன்படுத்திய விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளையராஜா இசை நிகழ்ச்சியை அவர் நடத்தக்கூடாது என்றும் கூறி இருக்கிறோம். இசை நிகழ்ச்சி என்ற பெயரில் பல்வேறு முறைகேடு நடக்கின்றன. அரசு தரப்பில் இருந்து ஒருவரை நியமித்து நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தினால் அதில் இருந்து திரட்டப்படும் நிதியை கொண்டு பழைய கணக்கை காட்டக்கூடாது’ என்று கூறினார். #Ilayaraja75 #Vishal

    ×