search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெளிப்புற படப்பிடிப்பில் காவல்துறையினர் லஞ்சம் கேட்கின்றனர்- கே. ராஜன் புகார்
    X

    வெளிப்புற படப்பிடிப்பில் காவல்துறையினர் லஞ்சம் கேட்கின்றனர்- கே. ராஜன் புகார்

    • கேசவ் தெபுர் இயக்கியுள்ள படம் 'ரா ..ரா ..சரசுக்கு ராரா'.
    • இப்படம் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகுகிறது.

    ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ரா ..ரா ..சரசுக்கு ராரா' இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.கே.வி. இசையமைத்துள்ளார். ஆர்.ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 9V ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை நவம்பர் 3-ஆம் தேதி வெளியிடுகிறது. இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.


    இதில், விநியோகஸ்தர்கள் ரமேஷ் சுப்பிரமணியன், அஞ்சலி முருகன், படத்தின் இசையமைப்பாளர் ஜி.கே.வி, எழுத்தாளர் பொன். முருகன்,கலை இயக்குனர் ராமச்சந்திரன்,சண்டை இயக்குனர் ராஜாசாமி,பாடல் ஆசிரியர் சிவப்பிரகாசம், படத்தில் நடித்திருக்கும் மாரி வினோத், வில்லன் விஜய் பிரசாத், நடிகைகள் காயத்ரி, சிம்ரன், தீபிகா, சாரா அக்ஷயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



    இந்த நிகழ்ச்சியில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே .ராஜன் பேசியதாவது, இப்போதெல்லாம் பட விழாக்களுக்கு அதில் நடித்த நடிகைகள் வருவதில்லை. அந்த நிலையில் இங்கே வந்திருக்கிற இந்த நான்கு நடிகைகளை நான் பாராட்டுகிறேன். புதிதாக இவ்வளவு துணிச்சலாகத் தமிழ்ப் படம் எடுக்க வந்துள்ள தயாரிப்பாளருக்கு நான் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுக்குப் போட்ட பணம் திரும்ப வந்துவிடும். இப்பொழுது எல்லாம் போட்ட பணம் திரும்பி வந்தாலே பெரிய விஷயம்.



    அவுட்டோரில் வெளிப்புறங்களில் படம் எடுக்கும் போது நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன் முதலமைச்சரைச் சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுத்தோம் .அவுட்டோர் லொகேஷன்களில் டிராபிக், போலீஸ் என்று ஏகப்பட்ட பேர் வந்து லஞ்சம் வாங்குகிறார்கள். தினசரி 25 ஆயிரம் ரூபாய் லஞ்சத்துக்கே கொடுக்க வேண்டியிருக்கிறது. இதை தடுத்து முறைப்படுத்த வேண்டும்.



    தலைமைச் செயலகத்தில் சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வர வேண்டும் அப்படி அமைத்து ஒருமுறை அனுமதி வாங்கிவிட்டால் தமிழ்நாட்டில் எங்கே சென்றாலும் பிரச்சினை இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்கும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். முதலமைச்சரும் பரிசீலிக்கிறோம் என்றார்.

    நான் 2004 -ல் இதே தலைப்பை என் படத்திற்கு வைத்தேன். ஆனால் அப்போது எதிர்ப்பு இருந்ததால் நான் பின் வாங்கி, விட்டு விட்டேன். ஆனால் இந்த தயாரிப்பாளர் போராடி அதே தலைப்பை வாங்கி இருக்கிறார் .அவருக்கு என் பாராட்டுக்கள் இவ்வாறு பேசினார்.

    Next Story
    ×