search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhupender Yadav"

    • 2014-2015 நிதி ஆண்டில் ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை 51 லட்சமாக இருந்தது.
    • 2021-2022 நிதி ஆண்டில் 72 லட்சமாக உயர்ந்தது.

    புதுடெல்லி :

    மோடி அரசு பதவி ஏற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, கடந்த 9 ஆண்டுகளில் மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் டெல்லியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளில், வேலைவாய்ப்பு பெருமளவு அதிகரித்துள்ளது. 1¼ கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் தரவுகளை பார்த்தால், 2014-2015 நிதிஆண்டில், வைப்புநிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட சந்தாதாரர்கள் எண்ணிக்கை 15 கோடியே 84 லட்சமாக இருந்தது. 2021-2022 நிதி ஆண்டில், இந்த எண்ணிக்கை 27 கோடியே 73 லட்சமாக உயர்ந்தது.

    வைப்புநிதி அமைப்பின் சம்பள பட்டியல்படி, கடந்த 2022-2023 நிதி ஆண்டில் மட்டும் 1 கோடியே 38 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். முந்தைய 2021-2022 நிதிஆண்டில் 1 கோடியே 22 லட்சம் சந்தாதாரர்களும், 2020-2021 நிதிஆண்டில் 77 லட்சத்து 8 ஆயிரம் பேரும் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் புதிதாக வேலை பெற்றவர்கள் ஆவர்.

    கடந்த 2014-2015 நிதி ஆண்டில் ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை 51 லட்சமாக இருந்தது. 2021-2022 நிதி ஆண்டில் 72 லட்சமாக உயர்ந்தது. 9 ஆண்டுகளில் 21 லட்சம் பேர் மட்டும் ஓய்வு பெற்ற நிலையில், புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது.

    சேவை, நல்ல நிர்வாகம், நல்வாழ்வு ஆகிய 3 அம்சங்களில் மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது. அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் நலன்களில் மட்டுமின்றி, அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன்களிலும் அக்கறை செலுத்தி வருகிறோம்.

    மொத்த பணியாளர்களில் 10 சதவீதம்பேர் மட்டுமே அமைப்பு சார்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். மீதி 90 சதவீதம்பேர், அமைப்புசாரா தொழிலாளர்கள்.

    அமைப்புசாரா தொழிலாளர்களின் தகவல்களை பதிவு செய்ய 'இ-ஷரம்' இணையதளம் தொடங்கப்பட்டது. 400 வகையான பணிகளை செய்பவர்கள் அதில் பதிவு செய்யப்படுகிறார்கள்.

    இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 231 ஆக உள்ளது. விரைவில், மேலும் 10 ஆயிரத்து 120 படுக்கைகள் உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாட்டில் 33 யானை காப்பகங்கள் உள்ளன.
    • வனவிலங்குகள் பாதுகாப்பில் மத்திய அரசு மிகுந்த அக்கறை செலுத்திவருகிறது.

    புதுடெல்லி :

    யானைகள் பராமரிப்பு பற்றிய 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இந்தப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கன்சால்வஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோரை பிரதமர் மோடி நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.

    இந்தநிலையில் இந்தப்படக்குழுவினரை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் விரைவில் சந்திக்க உள்ளார். இந்தத்தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் நேற்று தெரிவித்தார். அத்துடன் பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள முதுமலைக்கு வர இருப்பதாகவும் கூறினார்.

    டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு பேட்டி அளித்த பூபேந்தர் யாதவ் இதுபற்றி மேலும் கூறியதாவது:-

    நாட்டில் 33 யானை காப்பகங்கள் உள்ளன. யானைகளை அதன் வாழ்விடங்களில் அதன் போக்குக்கு விட்டுவிட வேண்டும். அவை தன் வழித்தடங்களை தானே அமைத்துக்கொள்கின்றன. வனவிலங்குகள் பாதுகாப்பில் மத்திய அரசு மிகுந்த அக்கறை செலுத்திவருகிறது. யானைகள் பாதுகாப்பு, புலிகள் பாதுகாப்பு, டால்பின்கள் பாதுகாப்புக்கு என திட்டங்கள் உள்ளன.

    வருகிற 6, 7-ந்தேதிகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவுக்குச்செல்கிறார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுமலைக்கும் செல்கிறார். அங்கு யானைகள் பராமரிப்பு படத்துக்காக ஆஸ்கார் விருது பெற்றவர்களை சந்திக்கிறார்.

    இதேபோல 9-ந் தேதி பிரதமர் மோடியும் தமிழ்நாட்டில் உள்ள முதுமலைக்குச்செல்கிறார். புலிகள் பாதுகாப்புத்திட்டத்தின் 50-வது ஆண்டையொட்டி நாடு முழுவதும் உள்ள 53 புலிகள் காப்பகங்களிலும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதனையொட்டி கர்நாடக மாநிலம் பந்திப்பூர், தமிழ்நாட்டின் முதுமலை, கேரளாவின் வயநாடு ஆகிய இடங்களில் உள்ள புலிகள் சரணாலயங்களுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகம் வரும் பிரதமர் மோடி முதுமலையில், ஆஸ்கார் விருது பெற்ற பாகன் தம்பதியினரை நேரில் சந்திப்பார் எனத்தெரிகிறது.

    • நாடு முழுவதும் 23 புதிய மருத்துவமனைகளை அமைக்கப்படுகிறது.
    • 2000 மருத்துவர்கள் உள்பட 6400 பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு.

    சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

    ஊழியர் காப்பீட்டு கழகம், மக்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், திறமையான இளம் மருத்துவர்களை ஆதரிப்பதிலும் ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளது. இங்கு பட்டம் பெறும் மாணவர்கள், மக்களின் நல்வாழ்வுடன் தொடர்புடைய பணியை மேற்கொள்ள உள்ளனர். நமது சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை உயர்த்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு மருத்துவர்கள் பங்களிக்க வேண்டும்.


    நாட்டின் தொழிலாளர்களுக்கு மருத்துவச் சேவை எளிதாக கிடைக்க அதன் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.தொழிலாளர்கள் மருத்துவமனைகளுக்குச் சென்ற நிலை மாறி, இப்போது தொழிலாளர்களுக்கு அவர்களின் பணியிடங்களில் இஎஸ்ஐ சென்று சேவை புரிந்து வருகிறது.

    பீடி மற்றும் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு சுகாதார பரிசோதனைகள் மற்றும் தொடர் கண்காணிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்பட 6400 பணியிடங்களை நிரப்ப ஊழியர் காப்பீட்டு கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    நாடு முழுவதும் 100 படுக்கைகள் கொண்ட 23 புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. 60 க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்றுப் பொருள் கண்டுபிடிக்க வேண்டும்.
    • மாவட்டங்களில், பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுத்து அகற்ற ஏற்பாடு.

    நந்தம்பாக்கம்:

    ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் தயாரிப்பு குறித்த தேசிய கண்காட்சி மற்றும் தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை மந்திரி பூபேந்தர் யாதவ், 


    பிளாஸ்டிக்கால் கணினி, செல்போன் போன்ற நன்மைகள் கிடைத்துள்ள போதும், பல தீமைகளுக்கு வழி வகுத்துள்ளது என்றார். கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி நடந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாட்டில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்றுப் பொருள் கண்டுபிடிக்க வேண்டும்ட என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக நினைவு கூர்ந்தார்.

    பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மரம், சணல், மூங்கில் ஆகியவற்றை பயன்படுத்துவதை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். 


    தொடர்ந்து பேசிய தமிழக அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்கள் கண்காட்சி இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெறுகிறது என்றார். புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றில் பிளாஸ்டிக் பங்களிப்பும் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்தெடுத்து அகற்றும் ஏற்பாடுகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆவின் பால் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மட்கும் தன்மையுடைய பைகளை பயன்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    • உலகளவில் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம்.
    • மீட்பு நடவடிக்கைகள் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும்.

    பாலி:

    இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மந்திரிகளுக்கான மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய பருவநிலை மாற்றத்திற்கான மந்திரி பூபேந்தர் யாதவ் கலந்துகொண்டார். நிறைவு நாளில் அவர் பேசியதாவது:

    பருவநிலை மாற்றத்தை தடுக்க, உலகளவில் ஒன்றிணைந்து வலுவான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம். நிலையான மீட்பு நடவடிக்கைகள் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும்.

    பருவ நிலை மாற்றம் என்பது உலகளாவிய நிகழ்வாக இருந்தாலும், அதன் எதிர்மறையான தாக்கங்கள் குறிப்பாக, வளரும் நாடுகளில் உள்ள மக்களை பாதிக்கிறது. இயற்கை வளங்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலையில் பருவநிலை மாறுபாடு மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்கும் திறன் குறைவாக உள்ளது. வளரும் நாடுகளில் இருந்து குறைந்த பட்ச பங்களிப்பு செய்தவர்கள் புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    கார்பன் அளவு குறைக்கப்பட்ட சுத்தமான எரிசக்தி, மற்றும் திறமையான தொழில்துறை வளர்ச்சி, நிலையான விவசாயம் ஆகியவற்றிற்கான இந்தியாவின் முயற்சியானது அனைவருக்கும் நிலையான வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 75 கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் இயக்கம் நாடெங்கும் நடைபெறுகிறது.
    • பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதியுடன் இது நிறைவடைகிறது.

    புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தைத் தலைமைச் செயலகம் அருகில் மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், 7500 கிலோ மீட்டர் தூர கடல் பரப்பைக் கொண்ட இந்திய கடலோரத்தை தூய்மையாக வைத்திருப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார். வருங்கால சந்ததியினருக்குத் தூய்மையான கடற்கரையை நாம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    விடுதலை அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 75 நாட்கள் கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் இயக்கம் நாடெங்கும் உள்ள 75 கடற்கரைகளில் மேற்கொள்ளப்படுவதாகவும், இப்பணிகள் பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி நிறைவடையும் என்றும், அவர் குறிப்பிட்டார்.

    புதுச்சேரி பிரோமினேட் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கடலோரப் பகுதி தூய்மை விழிப்புணர்வு ஓட்டத்தைக் கொடியசைத்துத் அவர் தொடங்கி வைத்தார். 


    கடலோரத் தூய்மையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார். முன்னதாக புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள, ஈடன் கடற்கரைக்கு சென்று அங்கு கட்டமைப்பு வசதிகளை மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் பார்வையிட்டார்.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வ கணபதி, மத்திய சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ரிச்சா ஷர்மா, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, அறிவியல், தொழில்நுட்பம் & சுற்றுச்சூழல் செயலர் ஸ்மிதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • ராம்சர் பட்டியலில் பள்ளிக்கரனை உள்ளிட்ட 3 இடங்கள் இடம் பிடித்தன.
    • மிசோரம், மத்தியப்பிரதேச மாநிலங்களை சேர்ந்த இரண்டு இடங்கள் பட்டியலில் இடம் பெற்றன.

    தமிழ்நாட்டில் கரிக்கிளி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரனை சதுப்பு நிலக்காடு, பிச்சாவரம் சதுப்ப நிலக்காடு ஆகியவை உட்பட 3 இடங்களை, ராம்சர் எனப்படும் சர்வதேச அங்கீகார பட்டியலில் இந்தியா சார்பில் இடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதேபோல் மிசோரமில் பாலா சதுப்பு நிலம், மத்தியப்பிரதேசத்தில் சாக்கிய சாகர் சதுப் புநிலம் ஆகிய இரண்டு பகுதிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் ராம்சர் அங்கீகார பட்டியலில் இடம் பெற்றுள்ள பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலங்களின் எண்ணிக்கை 49-லிருந்து 54-ஆக அதிகரித்துள்ளது.

    இது குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிரதமர்நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள முன்முயற்சி சதுப்பு நிலங்களை இந்தியா எவ்வாறு பராமரித்து முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

    சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் அங்கீகார பட்டியலில் மேலும் 5 இந்திய சதுப்பு நிலங்கள் அறிவிக்கப்பட்டது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×