search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வருங்கால சந்ததியினருக்கு தூய்மையான கடற்கரையை வழங்க வேண்டும்- மத்திய மந்திரி வேண்டுகோள்
    X

    பூபேந்தர் யாதவ்

    வருங்கால சந்ததியினருக்கு தூய்மையான கடற்கரையை வழங்க வேண்டும்- மத்திய மந்திரி வேண்டுகோள்

    • 75 கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் இயக்கம் நாடெங்கும் நடைபெறுகிறது.
    • பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதியுடன் இது நிறைவடைகிறது.

    புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தைத் தலைமைச் செயலகம் அருகில் மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், 7500 கிலோ மீட்டர் தூர கடல் பரப்பைக் கொண்ட இந்திய கடலோரத்தை தூய்மையாக வைத்திருப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார். வருங்கால சந்ததியினருக்குத் தூய்மையான கடற்கரையை நாம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    விடுதலை அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 75 நாட்கள் கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் இயக்கம் நாடெங்கும் உள்ள 75 கடற்கரைகளில் மேற்கொள்ளப்படுவதாகவும், இப்பணிகள் பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி நிறைவடையும் என்றும், அவர் குறிப்பிட்டார்.

    புதுச்சேரி பிரோமினேட் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கடலோரப் பகுதி தூய்மை விழிப்புணர்வு ஓட்டத்தைக் கொடியசைத்துத் அவர் தொடங்கி வைத்தார்.


    கடலோரத் தூய்மையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார். முன்னதாக புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள, ஈடன் கடற்கரைக்கு சென்று அங்கு கட்டமைப்பு வசதிகளை மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் பார்வையிட்டார்.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வ கணபதி, மத்திய சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ரிச்சா ஷர்மா, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, அறிவியல், தொழில்நுட்பம் & சுற்றுச்சூழல் செயலர் ஸ்மிதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×