search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி முதுமலை வருகை: மத்திய மந்திரி தகவல்
    X

    பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி முதுமலை வருகை: மத்திய மந்திரி தகவல்

    • நாட்டில் 33 யானை காப்பகங்கள் உள்ளன.
    • வனவிலங்குகள் பாதுகாப்பில் மத்திய அரசு மிகுந்த அக்கறை செலுத்திவருகிறது.

    புதுடெல்லி :

    யானைகள் பராமரிப்பு பற்றிய 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இந்தப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கன்சால்வஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோரை பிரதமர் மோடி நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.

    இந்தநிலையில் இந்தப்படக்குழுவினரை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் விரைவில் சந்திக்க உள்ளார். இந்தத்தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் நேற்று தெரிவித்தார். அத்துடன் பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள முதுமலைக்கு வர இருப்பதாகவும் கூறினார்.

    டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு பேட்டி அளித்த பூபேந்தர் யாதவ் இதுபற்றி மேலும் கூறியதாவது:-

    நாட்டில் 33 யானை காப்பகங்கள் உள்ளன. யானைகளை அதன் வாழ்விடங்களில் அதன் போக்குக்கு விட்டுவிட வேண்டும். அவை தன் வழித்தடங்களை தானே அமைத்துக்கொள்கின்றன. வனவிலங்குகள் பாதுகாப்பில் மத்திய அரசு மிகுந்த அக்கறை செலுத்திவருகிறது. யானைகள் பாதுகாப்பு, புலிகள் பாதுகாப்பு, டால்பின்கள் பாதுகாப்புக்கு என திட்டங்கள் உள்ளன.

    வருகிற 6, 7-ந்தேதிகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவுக்குச்செல்கிறார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுமலைக்கும் செல்கிறார். அங்கு யானைகள் பராமரிப்பு படத்துக்காக ஆஸ்கார் விருது பெற்றவர்களை சந்திக்கிறார்.

    இதேபோல 9-ந் தேதி பிரதமர் மோடியும் தமிழ்நாட்டில் உள்ள முதுமலைக்குச்செல்கிறார். புலிகள் பாதுகாப்புத்திட்டத்தின் 50-வது ஆண்டையொட்டி நாடு முழுவதும் உள்ள 53 புலிகள் காப்பகங்களிலும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதனையொட்டி கர்நாடக மாநிலம் பந்திப்பூர், தமிழ்நாட்டின் முதுமலை, கேரளாவின் வயநாடு ஆகிய இடங்களில் உள்ள புலிகள் சரணாலயங்களுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகம் வரும் பிரதமர் மோடி முதுமலையில், ஆஸ்கார் விருது பெற்ற பாகன் தம்பதியினரை நேரில் சந்திப்பார் எனத்தெரிகிறது.

    Next Story
    ×