என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Isha"
- ஸ்மித்தின் இந்த பதிவிற்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
- அடுத்த புகைப்படத்தில் அவருடன் இரு நடிகைகள் இருக்கின்றனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் சமீபத்தில் 3 புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் 'சத்குரு' அவர்களின் படமும் இடம்பெற்று உள்ளது. அந்தப் புகைப்படங்களுடன் வலிமையான காப்பாளர்கள் தன்னை என்றும் சூழ்ந்து இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு உள்ளார்.
நடிகர் வில் ஸ்மித், உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பேட் பாய்ஸ் (Bad Boys), மென் இன் பிளாக்(Men in Black), ஐ ரோபாட் (I Robot), தி பர்சுயூட் ஆப் ஹாப்பினஸ் (The Pursuit of Happiness) ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். அவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் 3 புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
அதில் அவர், 'நான் எப்பொழுதும் வலிமையான காப்பாளர்களால் சூழப்பட்டு உள்ளேன்' என்று குறிப்பிட்டு உள்ளார். முதல் புகைப்படத்தில் வில் ஸ்மித் அவரின் தந்தை மற்றும் கார்த்தே கிட் படத்தில் நடித்து புகழ்பெற்ற அவரின் முதல் மகன் இருக்கின்றனர். அடுத்த புகைப்படத்தில் அவருடன் இரு நடிகைகள் இருக்கின்றனர்.
மேலும் மூன்றாவது புகைப்படத்தில் வில் ஸ்மித், பிரபல எழுத்தாளர் ஜெய் ஷெட்டி மற்றும் சத்குரு ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். ஸ்மித்தின் இந்த பதிவிற்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு சத்குரு அவர்கள் அமெரிக்காவில் உள்ள பூர்வகுடிமக்களின் ஆன்மீக கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக அந்நாட்டில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருந்தார்.
அப்போது சத்குருவை தனது வீட்டிற்கு வில் ஸ்மித் அவர்கள் அழைத்து இருந்தார். அதன்படி சத்குரு அவர்களும் ஸ்மித்தின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது வெளியான புகைப்படங்களும், வீடியோக்களும் மிகவும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் முதல் மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்.
- கிராமப்புறத்தின் நல்வாழ்விற்கான எதிர்காலமாக திகழ்கின்றன.
சத்குருவின் பிறந்த தினமான இன்று 'ஈஷா மண் காப்போம் இயக்கத்தோடு' இணைந்து குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மண் வளத்தினை மேம்படுத்தும் நோக்கில் "பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை" (BSSFPC) தொடங்கி உள்ளனர். இது இந்தியாவின் முதல் மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்பது குறிப்பிடதக்கது.
மண் வளத்தை மேம்படுத்த சத்குரு கடந்த 2022-ஆம் ஆண்டு "மண் காப்போம்" எனும் உலகளாவிய இயக்கத்தை தொடங்கினார்.
இவ்வியக்கத்தினால் உந்தப்பட்டு, அதன் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டதே "பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்".
இந்நிறுவனத்தை குஜராத் மாநில சட்டமன்றமான 'விதான் சபாவின்' சபாநாயகரும், பனஸ் டெய்ரியின் தலைவருமான ஶ்ரீ சங்கர்பாய் செளத்ரி இன்று தொடங்கி வைத்தார்.
மேலும் அவர் தராத் பகுதியில் 'பனஸ் மண் பரிசோதனை ஆய்வகம், கிமானாவில் 'பனஸ் உயிர் உர ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வகம்' மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வுக்கு காணொளி மூலம் சத்குரு வாழ்த்து செய்தியில், "குஜராத் மற்றும் பாரதத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக, மண் காப்போம் பனஸ் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தை உருவாக்கி உள்ள பனஸ் டெய்ரியில் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும், ஆசிகளும்.
இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மக்களுக்கு ஊட்டமளிப்பது மட்டுமின்றி நம் வாழ்வின் ஆதாரமாக விளங்கும் மண்ணுக்கும் ஊட்டமளித்து அதை வளம் கொழிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் செய்யும்.
நிச்சயமாக FPO-க்கள் பாரதம் மற்றும் கிராமப்புறத்தின் நல்வாழ்விற்கான எதிர்காலமாக திகழ்கின்றன. ஏனெனில் அவை நமது 65% மக்கள்தொகையின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. சங்கர்பாய் மற்றும் பனஸில் இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்துகளும், ஆசிகளும்" எனக் கூறியுள்ளார்.
https://x.com/SadhguruJV/status/1830887859282420019
மண் காப்போம் இயக்கம் மற்றும் பனஸ் டெய்ரி இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஶ்ரீ சங்கர்பாய் செளத்ரி பேசுகையில் 'இது பனஸ் டெய்ரியின் வழக்கமான தினம் அல்ல. இது ஒரு முக்கியமான நாள்.
தராத் மற்றும் கிமானாவில் அமைந்துள்ள பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் நாம் ஏற்படுத்தியுள்ள புதிய வசதிகள் நமது நிலையான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.
நம்மை தாங்கி நிற்கும் மண்ணை காப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வு மேம்பட தேவையான அறிவு, கருவிகள் மற்றும் ஆதரவை நாம் வழங்குகிறோம்." எனக் கூறினார்.
இந்நிகழ்வில் மண் காப்போம் இயக்கத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பிரவீணா ஶ்ரீதர் பேசுகையில் "பனஸ்கந்தாவில் நிலவி வரும் சவாலான மற்றும் வறண்ட சூழலுக்கு இடையே மண்ணின் வளத்தை கூட்டுவதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் இந்நிறுவனம் ஏற்படுத்த போகும் மாற்றம், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள மண் சிதைவுற்ற பகுதிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான உலகளாவிய தரநிலை முன்னுதாரணமாக அமையும்" எனக் கூறினார்.
இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் விவசாயிகளை இணைப்பதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மண் காப்போம் இயக்கம் தொடர்ந்து களத்தில் இயங்கி வருகிறது.
பனஸ் டெய்ரி குழுவுடன் இணைந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு தொடர்ச்சியான கருத்தரங்கங்களை நடத்தி உள்ளது.
அதிகம் வறண்ட பகுதியாக அறியப்படும் இந்த தராத் மற்றும் லக்கானி பகுதியில் உள்ள விவசாயிகள் மோசமான மண் வளம், குறைவான நிலத்தடி நீர் மற்றும் மோசமான காலநிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர்.
இந்த பகுதியில் அளவுக்கு அதிகமான ரசாயன பயன்பாட்டால் மண் வளம் குறைந்துள்ளது. மண்ணின் ஆரோக்கியம் குறித்த துல்லியமான கணக்கீடு இல்லாததால் விவசாயிகள் தேவையில்லாத ரசாயனங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தேவையான ஊட்டச்சத்தை வழங்கவும் தவறி உள்ளனர்.
இந்த இடைவெளியை சரி செய்ய 'அதி நவீன மண் பரிசோதனை ஆய்வகம்' தொடங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள முதன்மை ஆய்வகங்கள் சிலவற்றுள் ஒன்றாக மண் குறித்த முழுமையான அறிக்கையை இந்த ஆய்வகம் வழங்கும்.
இந்த அறிக்கையின் மூலம் விவசாயிகள் தங்கள் மகசூலின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த சரியான தகவல்களை அறிந்து, தேவையான உரங்களை தேர்வு செய்ய முடியும்.
இதே போல் பனஸ் உயிர் உர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், நிலைத்த நீடித்த உரங்களின் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகை செய்யும். இந்த ஆய்வகத்தை பார்வையிட்ட விவசாயிகள் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உரங்கள் இங்கே உருவாக்கப்படுவதை நேரடியாக கண்டனர்.
உயிர் உரங்கள் நிலத்தின் விவசாய உற்பத்தியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மண்ணின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுகிறது.
கிமானாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் மண் தன்மைக்கு ஏற்ப இந்த தொழில்நுட்பம் செயல்படும்.
முதல் கட்டமாக இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 3000 விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கான பதிவுகள் இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், வரவிருக்கும் பருவ காலத்தில் முதன் முறையாக நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதை குறுகிய கால இலக்காக இந்த நிறுவனம் கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் மூலம் 40-க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருக்கும் 911 விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி குறித்தப் பயிற்சி பல மாதங்களாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் முதல் வருடத்திற்கான மண் பரிசோதனையை இலவசமாக பெறுவார்கள். மேலும் தொடர்ச்சியான பரிசோதனைகள் அவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
மேலும் விவசாயிகள் ட்ரோன் சேவைகள், பயிர் சார் மண் மேலாண்மை பயிற்சிகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை உள்ளிட்ட பலன்களை பெறுவார்கள்.
பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நீண்ட கால இலக்கு, பனஸ்கந்தா மாவட்டம் முழுவதும் விரிவடைந்து அனைத்து விவசாயிகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதே ஆகும்.
இதன் மூலம் விளைநிலங்களின் மண் வளத்தை கூட்டுவது, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மட்டுமின்றி அந்த பகுதியின் உணவு மற்றும் நீர் தேவைகளும் பாதுகாக்கப்படுகின்றன.
- பாக்கும், பலா மரங்களும் மிக நல்ல முறையில் வளர்ந்து மகசூல் கொடுக்கிறது.
- எல்லா பயிரும் இங்கும் விளையும். மஞ்சள் மிக நல்ல முறையில் வளர்ந்து வருகிறது.
அரியலூர் மாவட்டம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை ஒட்டி நிற்கும் பகுதி. அரியலூர் மாவட்டத்திற்குள் ஒரு சிலப் பகுதிகள் டெல்டா பகுதிக்குள் வந்தாலும் பெரும்பாலானப் பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறது. அரியலூர் மாவட்டத்திற்குள் செல்லும் போதே டெல்டா மாவட்டங்களில் இருக்கும் பசுமையான நிலப்பரப்பு சற்றே மாற துவங்குவதை கவனிக்க முடியும். அங்கு மலைப் பகுதிகளில் விளையும் மர வாசனை பயிர்கள் விளையும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதனை சாத்தியப்படுத்தி நம்மை வியக்க வைக்கிறார் அரியலூர் மாவட்ட விவசாயி ஒருவர்.
மழை இல்லாத காலங்களில் வறட்சி வந்து விளையாடும் மாவட்டத்தில் தன் நிலத்தை வளம் கொழிக்கும் குளிர்ச்சி பகுதியாக மாற்றியிருக்கிறார் முன்னோடி விவசாயி கே.ஆர். பழனிச்சாமி. அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், கருக்கை கிராமத்தில் அமைந்துள்ளது இவரின் பண்ணை. 5 அரை ஏக்கர் பரப்பளவில் வறண்டு கிடக்கும் பகுதியில் புதிதாக உதித்த கொடைக்கானல் போல குளுமையாக அமைந்துள்ளது இவரது "நற்பவி வளர்சோலை" இயற்கை பண்ணை.
பழனிசாமி, சமவெளியில் மரவாசனை பயிர்கள் சாத்தியமா என்ற கேள்வியோடு தொடங்கி இன்று அதில் வெற்றிகரமாக சாதித்துள்ளார். கடந்த 15 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவரிடம், பண்ணையில் உள்ள பயிர்கள் என்னென்ன என கேட்ட போது, பூரிப்போடு பேசினார் "என்னுடைய 5 அரை ஏக்கர் தோட்டத்தில் மொத்தம் 2 ஆயிரம் டிம்பர் மரங்கள் இருக்கின்றன. இதில் தேக்கு, மஹோகனி, வேங்கை, செம்மர, படாக், கடம்பு, கடம்பில் அனைத்து ரகங்கள் என கிட்டத்தட்ட 30 வகையான டிம்பர் மரங்கள் இருக்கின்றன, நிறைய மூலிகைகள் இங்கு உள்ளது.
இதற்கிடையே மர வாசனை பயிர்களான ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, சர்வ சுகந்தி மூலிகை பயிர் என பல வகை உண்டு. மேலும் பாக்கு, கொய்யா, சப்போட்டா, ஆவக்கோடா, சாத்துக்கொடி, பைனாப்பிள், லிட்சி, பன்னீர் பழம், எல்லாமும் இருக்கிறது. ஹனி ஜாக், கேரளா வகைகள் உள்ளிட்ட 22 வகையான பலாப்பழ மரங்கள் இருக்கின்றன." என அவர் சொல்லும் போது, இவர் பண்ணையில் என்ன தான் இல்லை என்று வியப்பாக இருந்தது.
மலை பிரதேசத்திலும், குளிர் பிரதேசத்திலும் மட்டுமே வளரும் என நம்பப்பட்ட மரங்கள் இந்த சமவெளியில் எப்படி சாத்தியம் என நாம் ஆச்சரியத்துடன் கேட்ட போது, விரிவாக பேசத் தொடங்கினார் "இந்த கேள்வி ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது. ஆனால் இன்று இதில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். இதற்கு காரணம் சமவெளியில் இந்த பயிர்கள் வளர தேவையான சூழலை நான் உருவாக்கியிருக்கிறேன். இங்கே கொடைக்கானல் போன்ற ஒரு குளுமையான சூழலை நாம் உருவாக்கியிருக்கிறோம். அதனால் அங்கு வளரும் எல்லா பயிரும் இங்கும் விளையும். மஞ்சள் மிக நல்ல முறையில் வளர்ந்து வருகிறது.
இங்கு பாக்கும், பலா மரங்களும் மிக நல்ல முறையில் வளர்ந்து மகசூல் கொடுக்கிறது. குறிப்பாக பலா மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் தன்மை இருப்பதாக சொல்கிறார்கள். விஞ்ஞான ரீதியாக உண்மையா தெரியாது, ஆனால் என் நிலம் இந்த மரங்களால் குளுமையாக இருக்கிறது. இங்கு எத்தனை நீர் சேர்ந்தாலும் ஒரு போதும் தேங்குவதில்லை. அத்தனை நீரையும் மண் உறிஞ்சி கொள்ளும் அளவும் மண் கண்டம் மிகச் சிறப்பாக உள்ளது.
மேலும் இங்கு உழவில்லா விவசாயம் செய்கிறேன். இரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகள் என எதுவும் பயன்படுத்துவது இல்லை. மாறாக மாட்டு எரு, பஞ்சக்கவ்யம், மீன் கரைசல் போன்ற இயற்கை இடுப்பொருட்களே பயன்படுத்துகிறேன். இதனால் மண் வளமாக, உயிரோட்டமாக இருக்கிறது. பொதுவாக எங்கள் ஊர் பக்கம் முந்திரி பயிர் தான் பிரதான பயிராக இருக்கும், ஆனால் என் நிலத்தில் அனைத்து வகையான பயிர்களும் வருகின்றன. நான் உருவாக்கிய இந்த மாற்றம், நான் உருவாக்கிய இந்த சூழலாலே சாத்தியம்" என உறுதியாக சொன்னார்.
இந்தப் பண்ணை மூலம் அவருக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பாக அவர் பயன்படுத்தும் உத்திகள் குறித்து நாம் கேட்ட போது, வெற்றிப் புன்னகையோடு பேசத் தொடங்கினார் "என்னிடம் இப்போது 15 ஆண்டுகள் பழமையான டிம்பர் மரங்கள் இருக்கின்றன, இவற்றை இனியும் பல வருடங்களுக்கு வெட்டும் எண்ணம் எனக்கு இல்லை. இது என் தலைமுறை கடந்து வருபவர்களுக்கு நான் உருவாக்கியிருக்கும் மிகப் பெரிய சொத்து. இதை வெட்டாமல் ஊடுபயிர் மூலம் என் வருவாயை ஈட்டி வருகிறேன். உதாரணமாக, கேரளா போன்ற இடங்களில் மட்டுமே விளையும் என சொல்லப்படும் 'எக்ஸாடிக் பழ வகைகளில்' ஒன்றான 'குடம் புளி' இப்போது காய்ப்புக்கு வந்திருக்கிறது. மேலும் இங்கிருக்கும் 100 பலா மரங்களிலிருந்து 2 இலட்சம் வரை வருமானம் வருகிறது. மிளகு சாகுபடியில், பைனாப்பிள் சாகுபடியில் எனப் பல வழிகளில் எனக்கு வருமானம் வருகிறது. மாதத்திற்கு இந்த நிலத்திலிருந்து குறைந்தது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நிரந்தர வருமானம் வருகிறது.
மேலும் எங்கள் நிலம் கும்பகோணத்திலிருந்து விருதாச்சலம் செல்லும் பிரதான சாலையில் அமைந்திருப்பதால், எங்கள் நிலத்தின் முன்பாகவே ஒரு இயற்கை அங்காடி வைத்திருக்கிறோம். அங்கு வருபவர்கள் எங்கள் நிலத்தை பார்த்து இது இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என்பதை தெரிந்து கொண்டு நல்ல விலைகொடுத்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள்." என்றார் உற்சாகமாக.
எனவே கலப்பினப் பயிர்கள், மலையினப் பயிர்கள், வாசனைப் பயிர்கள் என அனைத்து ரகங்களும் ஒரே இடத்தில் சாத்தியமா என்றால் சாத்தியம் என்பதை அடித்து சொல்கிறார். மேலும் அவருடைய அனுபவத்தை ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பூர் தாராபுரத்தில் "சமவெளியில் மர வாசனைப் பயிர்கள் சாத்தியமே" எனும் மாபெரும் கருத்தரங்கில் நேரடியாக பகிர்ந்து கொள்ள இருக்கிறார்
இவரைப் போலவே இன்னும் பல முன்னோடி விவசாயிகள், வேளாண் வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என பல அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தை பகிர உள்ளனர்.
இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079 / 94425 90081 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- ஜாதிக்காய் என்றாலே அது மலைப்பகுதியில் மட்டுமே வளரும் என்ற கருத்து விவசாயிகளிடம் உள்ளது.
- தென்னையில் 6 ரகங்களும், மிளகில் 20 ரகங்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம், செப்டம்பர் 1-ஆம் தேதி தாராபுரத்தில் "சமவெளியில் மரவாசனை பயிர்கள் சாத்தியமே" என்ற கருத்தரங்கை நடத்தவுள்ளது. இதில் கேரளாவை சேர்ந்த முன்னோடி ஜாதிக்காய் விவசாயி சொப்னா கல்லிங்கல் அவர்கள் கலந்து கொள்கிறார்.
ஜாதிக்காய் என்றாலே அது மலைப்பகுதியில் மட்டுமே வளரும் என்ற கருத்து விவசாயிகளிடம் உள்ளது. ஆனால், கேரளாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஜாதிக்காய் சாகுபடி செய்துவரும் சொப்னா கல்லிங்கல் அவர்கள் தமிழ்நாட்டில் ஜாதிக்காய் வளர நல்ல சூழ்நிலை உள்ளது என்கிறார். சமீபத்தில் மரவாசனைப் பயிர்கள் குறித்து கல்லிங்கல் பண்ணையைப் பார்வையிட்டு சொப்னா அவர்களை பேட்டி கண்டோம்.
சொப்னா அவர்களின் கல்லிங்கல் நர்சரி மற்றும் பிளாண்டேஷன் திருச்சூர் அருகில் உள்ள பட்டிக்காடு கிராமத்தில் உள்ளது. அங்கு சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் சுமார் 12 வகையான ஜாதிக்காய் தேர்வு ரகங்களும், 40க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத ஜாதிக்காய் ரகங்களும் பாதுகாக்கப்படுகிறது. கல்லிங்கல் பிளாண்டேஷன் ஒரு ஜாதிக்காய் நர்சரியாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த ஜாதிக்காய் களஞ்சிய காப்பகமாக (Nutmeg Conservatory) செயல்படுகிறது. பண்ணையில் 45 ஆண்டுகள் வயதுடைய ஜாதிக்காய் தாய் மரங்களுடன், 700க்கும் மேற்பட்ட ஜாதிக்காய் மரங்கள் உள்ளன. மேலும் தென்னையில் 6 ரகங்களும், மிளகில் 20 ரகங்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த கல்லிங்கல் பிளான்டேஷன், 40 ஆண்டுகளுக்கு முன்பு சொப்னா அவர்களின் கணவர் சிபி கல்லிங்கல் அவர்களால் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் பல்வேறு காட்டு ஜாதிக்காய் நாற்றுகள் கொண்டு வரப்பட்டு நடப்பட்டுள்ளது. இதிலிருந்து பல தேர்வுகளுக்கு பிறகு 12 ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த ரகங்களை இந்திய மசாலா ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் (IISR) ஆய்வு செய்து அங்கீகரித்துள்ளனர், அவை கல்லிங்கல் 1, கல்லிங்கல் 2 என பெயரிடப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதிகளில் ஜாதிக்காய் சாகுபடி குறித்து சொப்னா அவர்களிடம் கேட்டபோது, அவரின் பதில் ஆச்சர்யம் அளிப்பதாய் இருந்தது. "கேரளாவில் நிலையில்லாத காலநிலை இருக்கு, திடீரென்று மழை வரும், அதிக மழையினால் தண்ணீர் தேங்கும், மேகமூட்டத்தினால் வெய்யிலும் ஒரே சீராக இருக்காது. இப்படி பல்வேறு சூழ்நிலையால் ஜாதிக்காய் பாதிக்குது."
"ஜாதிக்காய் நுட்பமான உணர்வுகள் கொண்ட (Sensitive tree) மரம், தண்ணீர் தேங்கினால் முதலில் காய்கள் உதிரும், பின்னர் பூக்கள் உதிரும், சில நேரங்களில் இலைகள் கூட உதிரும். கேரளாவோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தட்பவெப்ப நிலையில் அதிக வேறுபாடு இல்லை. மழை பெய்தாலும் தேங்கி நிற்பதில்லை, தண்ணீர் சில மணி நேரங்களில் வடிந்து விடும் என்பதால் ஜாதிக்காய் சாகுபடிக்கு தமிழநாடு ஏற்ற மாநிலமாகும். ஆரம்ப காலத்தில் சரியான நிழல் கொடுத்து வளர்த்தால் தமிழ்நாட்டில் ஜாதிக்காய் நன்றாக வளரும்".
தொடர்ந்து நம்மிடம் பேசியவர் சமவெளியில் எப்படிப்பட்ட ஜாதிக்காய் ரகங்களை சாகுபடி செய்யலாம் என்று தெளிவுபடுத்தினார். "விவசாயிகள் சமவெளியில் வளர்கிற ரகத்தை தேர்வு செய்யனும். சராசரியான அளவுள்ள காய்கள் தரும் மரங்கள் முக்கியம், பெரிய காய்கள் உள்ள ரகம் அதிக காய்கள் தராது. ஒரே ரகமா வைக்காமல் வேறு வேறு ரகத்தை வைத்தால் வருடம் முழுவதும் காய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். மரங்களை நடும் போதே 15 - 20 வருஷம் கழித்து மரம் எவ்வளவு வளர்ந்திக்கும் அதற்கு எவ்வளவு இடம் தேவை என்பதை கவனித்து நடவேண்டும்".
"எங்களது கள்ளிங்கல் - 1 ரகம் 20 - 25 அடி அகலத்துக்கு படர்ந்து வளரும், சுமாரான உயரம் இருக்கும். ஆனால் கள்ளிங்கல் - 2 ரகம் 30 அடிக்கு மேலே படர்ந்து வளரக்கூடியது அதற்கேற்ப இடம் விட்டு நடவேண்டும். எங்ககிட்ட 12 ரகம் இருந்தாலும் விவசாயத்துக்கு ஏற்ற ஒரு கல்லிங்கல் 1,2,3,4 ரகத்தைதான் அதிகமாக கொடுக்கிறோம்."
தொடர்ந்து பேசியவர் கல்லிகல் ரக நாற்றுகள் உற்பத்தி குறித்தும் பேசினார். "கல்லிங்கல் ஒட்டு ரகங்களுக்கு, வேர் செடிக்கு (Rood stock) காட்டு ஜாதிக்காய் கன்றுகளை பயன்படுத்துகிறோம், காட்டு ஜாதிக்காயில் வேர் நன்றாக ஆழமாக போகும், இந்த கன்றுகளை 1.5 - 2 வருஷம் வளர்த்து தருகிறோம்". ஒட்டுகன்று மட்டும் இல்லாமல், விவசாயிகளின் தேவையைப் பொறுத்து விதை மூலம் உற்பத்தி செய்த நாற்றுகளையும் தந்து வருகிறார்.
கல்லிங்கல் ப்ளான்டேஷனில் பல ஜாதிக்காயில் ரகங்களை பாதுகாத்து வருவதால் மத்திய அரசின் தாவர ஜீனோம் சேவியர் விருதைப் (Plant Genome Saviour Award) பெற்றுள்ளார். மேலும் மசாலா பயிர்கள் சாகுபடியில் இவரது பங்களிப்பை கருத்தில் கொண்டு ICAR - IISR 2024 ஆம் ஆண்டுக்கான மசாலா விருது (Spice Award) வழங்கி கௌரவித்துள்ளது.
ஈஷா காவேரி கூக்குரல் கருந்தரங்கில் சொப்னா கல்லிங்கல் போன்ற மரவாசனைப் பயிர்களை சாகுபடி செய்து வரும் முன்னோடி விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள், நறுமணப்பயிர் விஞ்ஞானிகள் என பலரும் கலந்து கொண்டு பல்வேறு தகவல்களை பகிர உள்ளனர்.
இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் 94425 90079 / 94425 90081 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- பல விவசாயிகள் வெற்றிகரமாக தங்கள் நிலத்தில் விளைவித்து நிருபித்துள்ளனர்.
- ஜாதிக்காய் பயிருக்கு பெருமளவு நோய் தாக்குதல் ஏற்படுவதில்லை.
விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் பயிர்களில் மரவாசனைப் பயிர்கள் முக்கியமானவை. ஆனால் மர வாசனைப் பயிர்கள் சமவெளியில் வளருமா என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு. அதனாலேயே அந்தப் பயிரை தேர்வு செய்வதில் விவசாயிகள் பலர் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் உண்மை நிலையே வேறு. மிளகு, ஜாதிக்காய், இலவங்கப் பட்டை போன்ற வாசனை பயிர்கள் சமவெளியிலும் சாத்தியம் தான். இதனை பல விவசாயிகள் வெற்றிகரமாக தங்கள் நிலத்தில் விளைவித்து நிருபித்துள்ளனர்.
அந்த வகையில் சமவெளியில் ஜாதிக்காய் விளைவித்து வெற்றிகரமாக வருவாய் ஈட்டி வருகிறார் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தக்ஷிணா மூர்த்தி. கோபி செட்டிபாளையம் அந்தியூர் பகுதியில் 5 ஏக்கரில் விரிந்திருக்கிறது இவரின் இயற்கை பண்ணை. பாக்கு மரங்களின் நடுவே ஜாதிக்காயை ஊடுபயிராக செய்து வருகிறார்.
ஜாதிக்காயை எப்படி துணிந்து தேர்வு செய்தீர்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து சொல்லுங்கள் என கேட்ட போது, உறுதியான குரலில் பேசத் தொடங்கினார்,
"என் பண்ணை பாக்கு தான் பிரதான பயிர். பாக்கு மரம் 30 – 40 ஆண்டுகள் வரை இருக்கும் நீண்ட கால பயிர். அதை போலவே ஜாதிக்காயும் 100 வருடம் வரை இருக்கக்கூடிய உறுதியான மரம். மேலும் இந்த மரத்திற்க்கான பராமரிப்பு குறைவு ஆனால் வருவாய் அதிகம் என்பதால் இந்த பயிரை ஊடுபயிராக தேர்வு செய்தேன்.
எங்கள் தோட்டத்தில் 200 ஜாதிக்காய் மரங்கள் இப்போது இருக்கின்றன. இவை காப்புக்கு வர 4 வருடங்கள் வரை ஆகும். ஜாதிக்காய் 15 அடி வளரும் வரை அதை ஒரு குழந்தை போல் பராமரித்தால் போதுமானது. உதாரணமாக 800 பாக்கு மரங்களுக்கு பயன்படுத்தும் தண்ணீர், 200 ஜாதிக்காய் மரங்களுக்கும் போதுமானதாக இருக்கிறது. மேலும் ஆண்டுகள் கூடக் கூட நமக்கு காய்ப்பு அதிகம் கிடைக்கும். மேலும் இதோடு மிளகும் வளர்த்து வருகிறேன்.
அது மட்டுமின்றி ஜாதிக்காய் பயிருக்கு பெருமளவு நோய் தாக்குதல் ஏற்படுவதில்லை. வெகு அரிதாக வேர் கரையான் மூலம் ஒரு சில மரங்கள் பாதிக்கப்பட்டன. வேப்பம் புண்ணாக்கை வருடத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால் அதுவும் கூட வருவதில்லை. மேலும் ஜாதிக்காயின் கொட்டை, தோல், பத்ரி என அனைத்து பாகங்களுக்கும் தற்போது தேவை இருக்கிறது.
ஜாதிக்காயிலிருந்து ஊறுகாய் போன்ற மதிப்புகூட்டல் பொருட்கள் செய்ய முடியும். அதோடு ஜாதி பத்ரியை நன்றாக உலர்த்தி எடுத்தால் எத்தனை ஆண்டுகளானாலும் வைத்துக் கொள்ள முடியும். மேலும் அதன் ஒரு கிலோ ரூ.1,500/- முதல் ரூ.2,000/- வரை விற்பனை ஆகிறது. அடுத்து ஜாதிக்காயின் கொட்டை கிலோ ரூ.300/- முதல் ரூ.400/- வரையில் விற்பனை ஆகிறது. மொத்தத்தில் ஒரு ஜாதிக்காய் ரூ.5 வரை விற்பனை ஆகிறது.
மரம் வைத்த பத்தாண்டுகளுக்கு பின் ஒரு மரத்தில் இருந்து 500 காய்கள் முதல் 1,000 காய்கள் வரை மகசூல் எடுக்க முடியும். ஜாதிக்காய் தரும் வருவாயை பார்த்த பின்பாக எனக்கிருக்கும் மற்றொரு 3 ஏக்கர் நிலத்தில் மீண்டும் 200 ஜாதிக்காய் செடிகளை வைத்துள்ளேன்.
மொத்தத்தில் ஒரு அடுக்கு முறையில் விவசாயம் செய்யாமல் பல அடுக்கு முறையில் விவசாயம் செய்கிற போது, குறைவான சூரியவொளியின் மூலம் வாசனைப் பயிர்களை நல்ல முறையில் வளர்க்க முடிகிறது. குறைந்தது 21 அடிக்கு மேலான இடைவெளியில் அவைகளை நட்டு வளர்த்தால் நிச்சயமாக நல்ல வருவாய் ஈட்டலாம். பல அடுக்கு முறையில் விவசாயம் செய்வதன் மூலம் 3 மடங்கு அதிக லாபம் கிடைப்பதோடு மண் வளம், சுற்றுச்சுழல் மேம்படுதல், குளுமையான சூழல், மண் புழு அதிகரித்தல் உள்ளிட்ட ஏராளமான நன்மைகளை பெற முடிகிறது.
எனவே சமவெளியில் மரப்பயிர்களை துணிந்து நடுங்கள், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதற்கு என் நிலமே சாட்சி" எனக் கூறினார்.
இவரைப் போல இன்னும் பல வெற்றி விவசாயிகள் தங்களின் அனுபவங்களை ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி திருப்பூர் தாராபுரத்தில் நடைபெறும் "சமவெளியில் மர வாசனைப் பயிர்கள் சாத்தியமே" எனும் மாபெரும் கருத்தரங்கில் பகிர உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பல முன்னோடி வெற்றி விவசாயிகள், வேளாண் வல்லுனர்கள் மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் என பல அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனுள்ள பல்வேறு தகவல்களை பகிர உள்ளனர்.
இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079 / 94425 90081 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- விவசாயிகளின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யபட்டு உள்ளது.
- கேரளாவை சேர்ந்த நிபுணர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, 'சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் துவங்கி வைக்கிறார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைப்பெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் கலந்து கொண்டு இக்கருத்தரங்கு குறித்து விரிவாக பேசினார். இதில் அவருடன் வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் குமார் பங்கேற்றார்.
தமிழ்மாறன் பேசியதாவது, 'ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, 'சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தக் கருத்தரங்கை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைக்கிறார்.
ஆழியாறு அறிவு திருக்கோவிலின் அறங்காவலர் பச்சையப்பன் முன்னிலை நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக கேரள மின்சாரத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி அவர்களும், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மருத்துவர் துரைசாமி கலந்து கொள்கின்றனர்.
மலைப்பகுதிகளில் மட்டுமே விளையும் என்று சொல்லப்படும் மரவாசனைப் பயிர்களான ஜாதிக்காய், லவங்கப்பட்டை, சர்வ சுகந்தி (பிரியாணி இலை), கிராம்பு, அவகோடா ஆகியவை தகுந்த சூழலை உருவாக்கினால் சமவெளியிலிலும் தரமான முறையில் விளைவிக்க முடியும். மரவாசனை பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை வெகுவாக அதிகரித்துக் கொள்ள முடியும். இது குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தவும், சாகுபடி நுணுக்கங்கள், அதன் பராமரிப்பு முறைகள் மற்றும் முன்னோடி வெற்றி விவசாயிகளின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யபட்டு உள்ளது.
இக்கருத்தரங்கை ஈஷாவுடன், இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (IISR), இந்திய மசாலா வாரியம் (SBI), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR) ஆகிய மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து நடத்துகிறது. இதில் இந்த ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, மரவாசனைப் பயிர்கள் சாகுபடி குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்குகிறார்கள். உற்பத்தி செய்த பொருட்களை உலரவைத்தல், பதப்படுத்தல் ஆகிய நுட்பங்கள் குறித்தும், சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி குறித்தும் பேச உள்ளனர்.
மேலும் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த நிபுணர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இதனுடன் சமவெளியில் அவகாடோ மரங்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பங்கேற்று அவகாடோ சாகுபடி குறித்தும் அனுபவங்களை பகிர உள்ளார்கள். தென்னையில் இணை மரங்களாக மரவாசனை மரப்பயிர்களை சாகுபடி செய்யும் போது குறிப்பாக பல அடுக்கு பல பயிர் முறையில் செய்வதால் குறைந்த நிலத்தில் அதிக மரங்களை வளர்க்க இயலும். மேலும் பல்வேறு பயிர்கள் உள்ளதால் தென்னையில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலும் குறையும். நிலத்தின் மண் வளமும் அதிகரிக்கும்.
காவேரி நதிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடு 'காவேரி கூக்குரல் இயக்கம்'சத்குரு அவர்களால் 2019-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இவ்வியக்கம் மூலம் காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கோடிக்கணக்கான மரங்கள் நட திட்டமிடப்பட்டது. அதிகளவில் மரங்கள் நடுவதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிக்கும் திறனும் மேம்படும். இதனால் மழைக் காலங்களில் பொழியும் மழையானது மண்ணில் அதிகளவு சேகரிக்கப்படும். இது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, காவேரியின் கிளை நதிகளையும், காவேரியையும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவும்.
சுற்றுச்சூழல் நோக்கத்தோடு, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விவசாயிகள் மத்தியில் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்வியக்கம், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பயிற்சி கருத்தரங்குகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக மர வாசனை பயிர்கள் குறித்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே தென்னை, பாக்கு, மற்றும் டிம்பர் மர விவசாயிகள் அதிக அளவில் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெற காவேரி கூக்குரல் அழைக்கிறது. கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90081, 94425 90079 என்ற எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
- விஜயா மகாதேவன் தன்னுடைய வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
- கேன்டீனில் அவர்களுக்கு சிறுதானிய உணவுகளை வழங்குவது குறித்தும் எடுத்துரைத்தோம்.
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா" எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு கோவையில் இன்று (ஆக 15) நடைப்பெற்றது.
கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வசீகர வேதா என்ற நிறுவனத்தை தன்னுடைய 50 வயதுக்கு மேல் நிறுவி வேளாண் மதிப்பு கூட்டல் பொருட்கள் விற்பனையில் சாதித்த விஜயா மகாதேவன் தன்னுடைய வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அவரைத் தொடர்ந்து இன்றைய சூழலில் வேளாண் சார் தொழில்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து, தமிழ்நாடு வேளாண் கல்லூரியின் வணிக மேம்பாடு துறையின் தலைமை செயல் அலுவலர் ஏ.வி. ஞானசம்பந்தம் அவர்கள் விரிவாக விளக்கிப் பேசினார்.
மேலும் கோவை நபார்டு வங்கி அதிகாரி திருமலா ராவ், விவசாயிகள் தொழில் துவங்க நபார்டு வங்கியின் மூலம் வழங்கப்படும் கடன உதவித் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து சிறுதானியத்தின் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டும் பி.வி.ஆர் புட்ஸ் நிறுவனர் சுபத்ரா அவர்கள் பேசுகையில் "சிறுதானிய விற்பனையில் துவக்கத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தோம். ஆனால் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று சிறுதானியங்கள் குறித்து எடுத்துக் கூறினோம்.
முக்கியமாக கோவையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் குறித்தும், கேன்டீனில் அவர்களுக்கு சிறுதானிய உணவுகளை வழங்குவது குறித்தும் எடுத்துரைத்தோம்.
உலகத்தில் அதிகளவில் பால் உற்பத்தி இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனால் அதில் இருந்து தயாரிக்கும் வே புரோட்டீன் எனும் பொருளை நாம் இறக்குமதி செய்கிறோம்.
ஏன் அந்தப் பொருளை நாமே உற்பத்தி செய்யக் கூடாது. தொழில் துவங்க நினைப்பவர்கள் உங்களுக்கான துறையை முதலில் தேர்ந்தெடுங்கள், பின் அதற்கான தகவல் மையங்களுக்கு சென்று கற்றுக் கொள்ளுங்கள்."எனக் கூறினார்
அடுத்ததாக முருங்கை மதிப்புகூட்டு பொருட்களின் ஆன்லைன் விற்பனையில் சாதித்து வரும் பெண் விவசாயி பொன்னரசி, ஜீரோவில் தொடங்கி லட்சங்களில் வருமானம் ஈட்டும் தாய் ஹெர்பல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி. அர்ச்சனா, ஐடித் துறையிலிருந்து கால்நடை தீவனப் பொருட்கள் தயாரிப்பு மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டி வரும் ஆர்.பி. கேட்டல் பீட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி. அன்னபூரணி, உள்ளிட்ட வேளாண் சார் தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு சாதனையாளர்கள், வேளாண் வல்லுனர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இதுமட்டுமின்றி இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக சிறப்பாக செயல்படும் தொழில் முனைவோர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மண் காப்போம் விருதுகள் வழங்கப்பட்டது.
- மண் காப்போம் அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழாவில் வழிகாட்ட வருகிறார்.
- "Eco Green Unit" நிறுவனத்தின் மூலம் 25-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறார்.
"பசியில் இருப்போருக்கு மீன்களை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள்" என்றொரு பழமொழி உண்டு.
இதை உண்மை என நிரூபிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் "Eco Green Unit" நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.கே பாபு.
இதுவரையில் 17,000-க்கும் மேற்பட்ட வேளாண் சார்ந்த தொழில் முனைவோர்களை உருவாக்கி இருக்கிறார்.
கோவை பொள்ளாச்சியில் அமைந்துள்ள சேத்துமடை இவரது சொந்த ஊர். நம்மாழ்வார் அவர்களின் உந்துதலாலும், ஊக்கத்தாலும் இயற்கை விவசாயத்தின் மீது இவருக்கு ஈர்ப்பு வந்துள்ளது. 1998-ஆம் ஆண்டு வெறும் மூன்று நபர்களுடன் பாக்கு தட்டு தயாரிக்கும் தொழிலை தொடங்கியிருக்கிறார்.
அதனை தொடர்ந்து வேளாண் சார்ந்த பல பொருட்களை இவர் ஒவ்வொன்றாக தயாரித்து சந்தைப்படுத்தி வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று 160 பணியாளர்களுடன் இயங்கும் "Eco Green Unit" நிறுவனத்தின் மூலம் 25-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறார்.
மேலும் இந்நிறுவனத்தின் சேவையை 14 மாநிலங்கள் 7 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்து கடல் கடந்து தன் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
வேளாண் பொருள் உற்பத்தி, வேளாண் கருவிகள் கண்டுபிடிப்பு மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் என ஏராளமான செயல்பாடுகளை இவரின் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.
இது குறித்து அவரிடம் கேட்ட போது,"பாக்கு தட்டு தயாரிப்பதில் தொடங்கியது எங்கள் தொழில் வாழ்வு. பின் பாக்கு தட்டு தயாரிக்கும் இயந்திரத்தை நான் தான் கண்டுபிடித்தேன்.
வெகு சமீபத்தில் வாழை பட்டையிலிருந்து டீ கப் தயரிக்கும் இயந்திரத்தை நிறுவியிருக்கிறோம். இது போலவே வாழை நார் பிரித்தெடுக்கும் இயந்திரம், சாணத்திலிருந்து பூந்தொட்டி தயாரிக்கும் இயந்திரம், மூங்கிலில் இருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் சாதனங்கள் என இதுவரையில் 5-க்கும் அதிகமான உபகரணங்களை நாங்கள் கண்டுப்பிடித்து உள்ளோம். இவற்றை வெற்றிகரமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.
இது போல் 17,000-த்திற்கும் மேற்பட்டோரை தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறோம்.. இயந்திரங்கள் விநியோகம், பயிற்சி, பொருட்கள் உற்பத்தி, தொழில் விரிவாக்கம், சமூகம் சார்ந்த வளர்ச்சி திட்டங்களை வகுத்தல் என பல தளங்களில் எங்கள் நிறுவனம் செயல்படுகிறது" என்றார்.
இந்தத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கி வரும் இவரின் அனுபவ பகிர்வையும் வேளான் தொழில்கள் சார்ந்த வழிகாட்டுதல்களையும் கோவையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று மண் காப்போம் இயக்கம் நடத்தும் "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா"விலும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.
இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- ஒவ்வொரு நிலையத்திலும் 2 மாணவர்கள் இடம்பெற்று இருந்தனர்.
- அருங்காட்சியகத்திற்கு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.
கோவை
சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் சார்பில் 78 செல்வாக்கு மிக்க இந்திய ஆளுமைகளுக்கு 'வாழும் மெழுகு அருங்காட்சியகம்' அமைக்கப்பட்டு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
நம் பாரதத்தின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் வாழும் மெழுகு அருங்காட்சியகத்தை அமைத்து இருந்தனர். பொதுவாக மெழுகு அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட மனிதரின், அசலான தோற்றத்தில் மெழுகுச் சிலைகள் செய்து வைக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் இந்த வாழும் மெழுகு அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலைகள் இல்லாமல், மாணவர்களே நம் பாரத தேசத்தின் புகழ்பெற்ற நாயகர்கள் போன்று வேடமணிந்து இருந்தனர். இதில் மொத்தம் 40 நிலையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு நிலையத்திலும் 2 மாணவர்கள் இடம்பெற்று இருந்தனர். இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நபர்கள் அரசியல், விளையாட்டு, பாரம்பரிய நடனக் கலை, மற்றும் கல்வி என அனைத்து துறைகளையும் சேர்ந்த வாழ்ந்து மறைந்த மற்றும் நம் காலத்தில் வாழ்கின்ற ஆளுமைகளாக இருந்தனர்.
குறிப்பாக அம்பேத்கர், நேரு, சுபாஷ் சந்திர போஸ், இந்திரா காந்தி ஆகிய தேசத் தலைவர்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போன்ற இசைத்துறை கலைஞர்கள், ஜி.டி. நாயுடு, சி.வி. ராமன், ஹோமி பாபா, எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற விஞ்ஞானிகள் மற்றும் வேலு நாச்சியார், ராணி மங்கம்மாள் ஆகிய பெண் சாதனையாளர்கள் என 78 புகழ்பெற்ற இந்திய ஆளுமைகளின் தோற்றத்தில் மாணவர்கள் உடையணிந்து இந்த அருங்காட்சியகத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
அருங்காட்சியகத்தை பார்வையிடும் பார்வையாளர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒவ்வொரு நிலையத்திற்கும் முன் ஒரு பொத்தான் அமைக்கப்பட்டு இருந்தது. அதை அழுத்தினால் அந்த நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் செல்வாக்கு மிக்க இந்தியர்கள் குறித்த குறிப்புகளை மாணவர்கள் சொல்லும் படியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் அருங்காட்சியகத்திற்கு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக 'கரடி டேல்ஸ் பதிப்பகத்தின்' உரிமையாளரும், எழுத்தாளருமான ஷோபா விஸ்வநாத் கலந்து கொண்டார். இந்நிகழ்வு குறித்து அவர் கூறுகையில் "இந்த வாழும் அருங்காட்சியகம் படைப்பாற்றல் மற்றும் கற்றலின் மதிநுட்பமான வெளிப்பாடாக இருந்தது. இந்தப் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஈர்க்கக்கூடிய முயற்சியால் வரலாறு உயிர்ப்பிக்கப்பட்டு இருந்தது.
நம் பாரதத்தின் அடையாளங்களாக இருக்கும் நாயகர்கள் போன்று விரிவான விவரங்களுடன் வேடமணிந்து இருந்தது அவர்களின் அர்ப்பணிப்பை கண்கூடாகத் காட்டியது. மேலும் உரையாடும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு இருந்ததால், இந்த அனுபவம் கற்றுக்கொள்ளவும், ஈடுபாட்டை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்தது. என்னைப் பொறுத்த வரையில் ஆழ்ந்த கற்றல் ஆற்றலுக்கு ஒரு உண்மையான சான்றாக இது இருந்தது" என அவர் கூறினார்.
- ஈஷாவில் நேற்று எளிய மற்றும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டனர்.
- முதற்கட்டப் பயிற்சிகள் தென்னிந்தியாவில் கோவையில் நடைப்பெற்று வருகிறது.
கோவை ஈஷா யோக மையத்திற்கு ஜெர்மனியின் விமானப்படை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ், அவரது மனைவி மற்றும் பிற அதிகாரிகள் வருகைப் புரிந்திருந்தனர்.
மேலும், இந்திய விமானப் படை வீரர்களுடன் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈஷாவில் நேற்று எளிய மற்றும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டனர்.
ஈஷா யோக மையத்திற்கு வருகைப் புரிந்திருந்த பன்னாட்டு விமானப்படை வீரர்களில் ஆண்கள் சூர்ய குண்டத்திலும், பெண்கள் சந்திர குண்டத்திலும் நீராடினர்.
பின்னர், தியானலிங்கம் மற்றும் ஆதியோகியை அவர்கள் தரிசனம் செய்தனர். மேலும், விமானப்படை வீரர்கள் 'ஆதியோகி திவ்ய தரிசனம்' எனும் வீடியோ இமேஜிங் நிகழ்ச்சியையும் கண்டு வியந்தனர்.
ஈஷாவில் இவ்வீரர்கள் எளிய மற்றும் சக்தி வாய்ந்த 'நாடி சுத்தி, யோக நமஸ்காரம்' என்ற யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். இப்பயிற்சிகள் மிகவும் அழுத்தமான சூழல்களில் அவர்களின் நெகிழ்வுத் தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.
இந்திய விமானப் படையின் மூலம் முதல் முறையாக 'தரங் சக்தி' எனும் பன்னாட்டு விமானப்படை பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் இந்திய விமானப்படை வீரர்களுடன் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப் படை வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இதன் முதற்கட்டப் பயிற்சிகள் தென்னிந்தியாவில் கோவையில் நடைப்பெற்று வருகிறது. இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக பன்னாட்டு விமானப்படை வீரர்கள் ஈஷா யோகா மையத்திற்கு வருகைப் புரிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாபெரும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற உள்ளது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார் பங்கேற்றுப் பேச உள்ளார்.
ஈஷா மண் காப்போம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளை தொழிலதிபர்களாக உருவாக்கும் பொருட்டு இந்தப் பயிற்சி கருத்தரங்கு நடைபெறுகிறது.
விவசாயம் சார்ந்து வெற்றிகரமாக நடைபெறக் கூடிய தொழில்கள் குறித்த விழிப்புணர்வையும், அது சார்ந்த வழிகாட்டுதல்களையும் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் வழங்கும் நோக்கத்தில் மண் காப்போம் இயக்கம் சார்பில் 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா - கனவு மெய்ப்பட வேண்டும்' எனும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சி புதிய வேளாண் தொழில் முனைவோர்களை உருவாக்கவும், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையிலும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில் எவ்வாறு விவசாயம் சார்ந்த தொழில் துவங்குவது, அதனை பிராண்டிங் செய்வது குறித்த யுக்திகள், பொருட்களை பேக்கிங் செய்வதில் உள்ள தொழில்நுட்பங்கள், எவ்வாறு சந்தைப்படுத்துவது மற்றும் சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களையும், அரியத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
மேலும் விவசாயம் சார்ந்து தொழில் துவங்க அரசு சார்பில் என்ன மாதிரியான உதவித் திட்டங்கள் இருக்கின்றது என்பது குறித்தும் இந்த நிகழ்ச்சியில் நிபுணர்கள் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
குறிப்பாக வேளாண் வணிக வாய்ப்புகள் குறித்து தமிழ்நாடு வேளாண் கல்லூரியின் வணிக மேம்பாடு துறையின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அலுவலருமான திரு.ஞானசம்பந்தம் அவர்கள் பேச உள்ளார்.
மேலும் சிறுதானியங்கள் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டும் பிவிஆர் பூட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சுபத்ரா, இதுவரை 17,000 தொழில் முனைவோர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ள S.K. பாபு, ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு ஆன்லைன் மூலம் விற்பனையில் சாதித்த முருங்கை விவசாயி பொன்னரசி, தனது 50-வது வயதில் தொழில் துவங்கி மூலிகை மதிப்பு கூட்டல் தொழிலில் வென்ற விஜயா மகாதேவன் உள்ளிட்ட பல்வேறு சாதனையாளர்களும், நிபுணர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனுள்ள தலைப்புகளில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- வங்கதேச தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா விரைந்து செயல்பட சத்குரு வலியுறுத்தல்.
- நாம் உறுதியாக நின்று விரைந்து செயல்படாவிட்டால், பாரதம் மஹா-பாரதமாக இருக்க முடியாது.
வங்கதேசத்தில் இந்து மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து சத்குரு தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில்," வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்துக்களை பாதுகாப்பது நம் பொறுப்பு. இதில், நம் பாரத நாடு விரைந்து செயல்பட வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து சத்குருவின் எக்ஸ் பதிவில் கூறுகையில், "
இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் வங்கதேசத்தின் வெறும் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. நம் அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்காக நாம் உறுதியாக நின்று விரைந்து செயல்படாவிட்டால், பாரதம் மஹா-பாரதமாக இருக்க முடியாது.
இந்த நாட்டின் அங்கமாக இருந்தது துரதிர்ஷ்டவசமாக அண்டை நாடாகிவிட்டது. ஆனால் நிஜத்தில் இந்த நாகரிகத்தைச் சேர்ந்த இம்மக்களை, இத்தகைய அதிர்ச்சியான கொடுமைகளிலிருந்து பாதுகாப்பது நம் பொறுப்பு" என்றார்.
மேலும், இது தொடர்பாக அவர் பகிர்ந்த மற்றொரு எக்ஸ் பதிவில் "நம் அண்டை நாட்டின் துரதிர்ஷ்டவசமான நிதர்சனம். மதத் தீவிரவாதம் நம் அன்பான பாரதத்தை ஒருபோதும் ஆட்டிப்படைக்காதவாறு நாம் உறுதி செய்வோம்" எனப் பதிவிட்டு உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்