search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garuda Seva"

    • நேற்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • சாப விமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்கவிடப்பட்டது.

    மதுரை:

    சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மதுரை சித்திரை திருவிழா நடந்து வருகிறது. கடந்த 12-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. கடந்த 21-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், மறுநாள் தேரோட்டமும் நடந்தது.

    பின்னர் தீர்த்தவாரியுடன் நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா நிறைவு பெற்றது.

    இதற்கிடையில் அழகர்கோவிலில் சித்திரை பெருவிழாவையொட்டி அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த 21-ந் தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. அன்றைய தினம் காலை 6.02 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் `பச்சைப்பட்டு' உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது 10 லட்சத்திற்கும் அதிகமான கூட்டம் கூடியதால் மதுரை நகரமே ஸ்தம்பித்தது.

    பின்னர் வழி நெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் அன்று மாலையில் அண்ணா நகர் பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்கு இரவு 11 மணி அளவில் வந்து சேர்ந்தார்.

    அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து நேற்று காலையில் வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

     சாப விமோசனம்

    அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதற்காக அங்கு சிறிய குளம் ஏற்படுத்தப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. அதில் பூக்களை மிதக்கவிட்டனர். குளத்தில் மண்டூக முனிவரின் உருவச்சிலை ஒன்று இருந்தது. அதன் அருகில் நாரை ஒன்றும் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பூஜைகள் முடிந்து கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்கவிடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.
    • மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வு.

    மதுரை:

    மதுரை சித்திரை திருவிழாவின் சிகரநிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நேற்று காலை நடந்தது. இதற்காக கடந்த 21-ந்தேதி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு பெருமாள் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

    கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட இடங்களை கடந்து நேற்று முன்தினம் (22-ந்தேதி) மூன்று மாவ டிக்கு வந்தார்.

    அங்கு கள்ள ழகரை பக்தர்கள் எதிர் கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

    பின்னர் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு நள்ளிரவு 12 மணியளவில் திருமஞ்சனமாகி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து நேற்று அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அங்கிருந்து அதிகாலை 3 மணி அளவில் தங்க குதிரையில் அமர்ந்தபடி வைகை ஆற்றுக்கு வந்தார். பின்னர் அதிகாலை 6.02 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். இதனை காண 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.

    சுமார் ஒரு மணி நேரம் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்னர் மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.

    இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெரு மாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர். வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு இன்று காலை திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏகாந்த சேவை, பக்தி உலாத்துதல் நடந்தன.

    அதனைத் தொடர்ந்து கள்ளழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் சர்க்கரை தீபம் எடுத்து வழிபட்டனர்.

    பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் தேனூர் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பின்னர் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மாலை 3.30 மணியளவில் அனுமன் கோவிலில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபாடு நடத்துகின்றனர்.

    இரவில் கள்ளழகர் மீண் டும் ராமராயர் மண்டகப்ப டிக்கு வருகிறார். அங்கு இரவு 11 மணி முதல் நாளை (25-ந்தேதி) காலை வரை விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதா ரம், மோகன அவதாரம் ஆகிய திருக்கோலங்களில் அழகர் காட்சி அளிக்கிறார்.

    நாளை காலை 6 மணிக்கு மோகன அவதார கோலத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்தில் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார்.

    நாளை இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் ராமநாதபு ரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி 26-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அதே கோலத்தில் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழி யாக 27-ந்தேதி காலை அழ கர்மலையில் உள்ள இருப்பிடம் போய் சேருகிறார்.

    • பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நாளை காலை 5.15 மணிக்கு கருடசேவை நடக்கிறது.

    சென்னை:

    சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கான சித்திரைமாத பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாளில் தர்மாதி பீடத்தில் அருள்பாலிப்பதுடன், புன்னைமர வாகனத்தில் வீதி உலா நடந்தது. இன்று பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷ வாகன வீதி உலா மற்றும் சிம்ம வாகன வீதி உலாவும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு கருடசேவை நடக்கிறது.

    வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சூரிய பிரபை, சந்திர பிரபை, தொடர்ந்து வருகிற 27-ந்தேதி நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு சேவையும் நடைபெறுகிறது. 6-ம் நாள் திருவிழாவான வருகிற 28-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். காலை 7 மணி அளவில் தேரோட்டம் வடம் பிடிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது.
    • வீதி உலாவும் 3-ம் நாளில் கருட சேவையும் நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நின்ற திருக் கோலத்தில் வேங்கட கிருஷ்ணன் என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். மேலும் தனது தேவியார் ருக்மணி பிராட்டி, மகன் பிருத் யும்னன், பேரன் அனிருத்தன், தம்பி சாத்யகி என குடும்ப சகிதமாக இக்கோவிலில் அருள் பாலிக்கிறார். குருஷேத்திரப் போரில் தன் முகத்தில் ஏற்பட்ட காயங்களும் உற்சவர் பார்த்த சாரதிபெருமாளுக்கு காணப்படுகிறது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் சித்திரை மாதமும், இங்கு மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் ஆனிமாதமும் விமரிசையாக நடைபெறுகிறது.

    அதன்படி பார்த்த சாரதி பெருமாளுக்கான சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நாளை காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல் நாளில் புன்னைமர வாகன வீதி உலாவும், 2-ம் நாள் விழாவில் பரமபதநாதன் திருக் கோலத்தில் சேஷ வாகன வீதி உலா மற்றும் சிம்ம வாகன வீதி உலாவும் 3-ம் நாளில் கருட சேவையும் நடைபெறுகிறது.

    4-ம் நாளில் சூரிய பிரபை, சந்திர பிரபை, 5-ம் நாள் நாச்சியார் திருக் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெறு கிறது. 6-ம் நாள் அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணா பிஷேகம் நடைபெற இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 7-ம் நாளான ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்த ருள்கிறார். காலை 7 மணி அளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. 8-ம் நாள்திருவிழாவான 30-ந் தேதி செவ்வாய்கிழமை வெண்ணெய்த் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை. 9-ம் நாள் திருவிழாவில் காலை 6.15 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், அன்று இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது.

    10-ம் நாளான மே-2ந்தேதி கொடி இறக்கத்துடன் பிரம்மோற் சவ விழா நிறைவடைகிறது.

    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.
    • திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    போரூர்:

    பிரசித்தி பெற்ற வட பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. கடந்த 3 நாட்களாக தினசரி காலை மற்றும் மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன.

    இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி முருகன்கோவிலில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து ஏராளமான பெண்கள், ஆண்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பால் குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இன்று இரவு 7மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சாமி புறப்பாடு நடக்கிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 27-ந்தேதி வரை 3 நாட்களும் இரவு 7 மணிக்கு திருக்குளத்தில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

    பாரிமுனை, ராசப்பா செட்டி தெருவில் உள்ள கந்தக்கோட்டை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    குன்றத்தூர் முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.

    மேலும் 3 பெருமாளும் கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் வளாகத்தை சென்றடைந்தனர். மற்ற கோவில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும். ஆனால் இங்கு மட்டும் 3 கருட சேவை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாலையில் 3 பெருமாளுக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் அலங்கார திருமஞ்சனமும், திருப்பாவை சாற்று முறை தீர்த்த பிரசாத விநியோகமும் நடைபெறுகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தங்கவேல், தங்கக் கீரிடம், வைர ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடு முறை மற்றும் பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து இருந்தனர். இதனால் பொது வழியில் மூலவரை தரிசிக்க பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 108 வைணவ திவ்ய தலங்களில் 45-ம் திவ்ய தேசமாகும்.
    • நின்ற நாராயணப்பெருமாள்' நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள் திருநின்ற நாராயண பெருமாளை வேண்டி வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறும்.

    திருமணத் தடை உள்ளவர்கள் பெருமாளையும், தாயாரையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாற்றி வழிபடுகின்றனர். சிலர் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்தும், புளியோதரை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்தோற்சவம், ஆனி பிரமோற்சவம், ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசி கருட சேவை, பங்குனி திருக்கல்யாண உற்சவம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

     தல வரலாறு

    இந்த கோவிலில் மூலவராக திருநின்ற நாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். செங்கமலத்தாயார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோயிலில் கொடிமரம் உள்ளது. பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன. ஸ்ரீரங்கம், அழகர்கோவில் போன்று இங்கும் சோமசந்திர விமானம் உள்ளது.

    திருத்தங்கல்லில் உள்ள `தங்காலமலை' என்ற குன்றின் மீது திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. கோயிலை கட்டியவர் குறித்து விபரம் எதுவும் இல்லை.

    இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 45-ம் திவ்ய தேசமாகும். 2 நிலைகளாக உள்ள இந்த கோயிலில் முதல் நிலை கோயிலில் மூலவரான 'நின்ற நாராயணப்பெருமாள்' நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என திருநாமங்கள் உள்ளன. 2-ம் நிலை கோவிலில் செங்கமலத்தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    • ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலிருந்து சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவித்த மாலையை சீனிவாசபெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது.
    • மாலையில் நெல்லை பாரதி கலைக்குழுவினரின் பக்தி பரதநாட்டியம், பெருமாள் திருவீதி உலா, கருட சேவையும் நடைபெற்றது.

    உடன்குடி:

    புன்னைநகர் வனத்திருப்பதி சீனிவாசபெருமாள், ஆதிநாராயணர், சிவனணைந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று மூலவர் உற்சவர் திருமஞ்சனம், மூலவர் புஷ்ப அலங்காரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலிருந்து சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவித்த மாலையை சீனிவாசபெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் திருவாராதனம் தளிகை சாத்துமுறை கோஷ்டி, மாலையில் நெல்லை பாரதி கலைக்குழுவினரின் பக்தி பரதநாட்டியம், பெருமாள் திருவீதி உலா, கருட சேவையும் நடைபெற்றது. தொடர்ந்து வான வேடிக்கையும் நடந்தது. காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் ராஜகோபாலின் மகன் சரவணன் உத்தரவின் பேரில் கோவில் மேலாளர் வசந்தன் செய்திருந்தார்.

    • புரட்டாசி 3-வது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
    • விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலை நம்பி கோவில் உள்ளது.

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை களில் கருட சேவை விழா நடப்பது வழக்கம்.

    அதன்படி புரட்டாசி 3-வது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம், சிறப்பு தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.

    இதையடுத்து மாலையில் கருட சேவை நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களி லிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் குடும்பத்தோடு மலைப் பாதையில் நடந்து கோவிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்க ளுக்கு அன்ன தானமும் வழங்கப்பட்டது. திருக்கு றுங்குடி வனச்சரகர் யோகேஷ்வரன் தலைமையில் வனப் பகுதியில் களக்காடு, திருக்குறுங்குடி, மேலகோதை யாறு வனச்சர கங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழி யர்களும், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையில் திருக்குறுங்குடி, ஏர்வாடி, களக்காடு போலீசார் 30-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • திருப்பதியில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது.
    • பவுர்ணமியையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) குரு பூர்ணிமா பவுர்ணமியையொட்டி கருட சேவை நடக்கிறது.

    உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பவுர்ணமியையொட்டி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 82,999 பேர் சாமி தரிசனம் செய்தனர். 38,875 பக்தர்கள் முடீ காணிக்கை செலுத்தினர்.

    ரூ.4.27 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • மாட வீதி உலா நடந்தது.
    • தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    நவதிருப்பதி கோவில்களில் 9-வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்த வைகாசி மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று வருசாபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வருசாபிஷேகம் நேற்று நடந்தது.

    அதனை முன்னிட்டு கோவிலில் காலை 5 மணிக்கு விஸ்வரூபம், காலை 7 மணிக்கு ஹோமம் நடந்தது. காலை 8.30 மணிக்கு பூர்ணாகுதி, காலை 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், காலை 10 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், பகல் 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    மாலை 5 மணிக்கு சாயரட்சை நடந்தது. இரவு 7 மணிக்கு சுவாமி பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் மாட வீதி உலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர், நிர்வாக அதிகாரி அஜித், உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    • 24 கருட சேவை விழா நேற்று நடைபெற்றது.
    • கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிகளில் வலம் செல்லும் வைபவம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை சார்பில் 89 ஆம் ஆண்டு கருட சேவைப் பெருவிழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 8-ந் தேதி தொடங்கியது.

    தொடர்ந்து, 24 கருட சேவை விழா நேற்று நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து, 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா இன்று காலை நடைபெற்றது.

    இதில், வெண்ணாற்றங்க ரை நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல வீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் கோயில் தெரு ஜனார்த்தனப் பெருமாள், கரந்தை யாதவக் கண்ணன், கீழ வீதி வரதராஜப் பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமிப் பெருமாள், மகர்நோம்பு சாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய கோவில்களிலிருந்து காலை புறப்பாடு நடைபெற்றது.

    இதையடுத்து, அந்தந்த கோவில்களிலிருந்து கொடிமரத்து மூலைக்குச் சென்றடைந்து, பின்னர், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிகளில் வலம் செல்லும் வைபவம் நடைபெற்றது.

    இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இந்த விழா நாளை (ஞாயிற்றுக்கி ழமை) விடையாற்றியுடன் முடிவடைகிறது.

    • பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது.
    • சுவாமி வீதி உலா நடந்தது.

    ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. இதில் முதலாவது திருப்பதியான கள்ளபிரான் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கும்பாபிசேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு வைகாசி மாத திருவோண நட்சத்திரத்தில் இந்த ஆண்டு கள்ளபிரான் சுவாமி கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது.

    இவ்விழாவை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம் , காலை 8 மணிக்கு கும்ப தீர்த்தம் வைக்கப்பட்டு காலை 9 மணிக்கு ஹோமம், காலை 9.30 மணிக்கு பூர்ணாகுதி, காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்கனம், காலை 11 மணிக்கு தீபாராதனை நாலாயிர திவ்ய கோஷ்டி, பகல் 12 மணிக்கு சாத்துமுறை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு உற்சவர் கள்ளபிரான் சுவாமி வாகனத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் கள்ளபிரான் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு சுவாமி வீதி உலா நடந்தது. முக்கியவீதிகள் வழியாக சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு, நாராயணன், ராமானுசம், சீனு, ஸ்தலத்தார்கள்ராஜப்பாவெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜீத் உள்பட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×