என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருநெல்வேலி திருக்கோளூரில் அமைந்துள்ளது வைத்தமாநிதி பெருமாள் கோவில். இது நவதிருப்பதி கோவில்களில் எட்டாவது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகவும் அமைந்துள்ளது.
    திருநெல்வேலி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் திருநெல்வேலியிலிருந்து 37-வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள பால்குளத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் நடந்தால் வருவது திருக்கோளூர். இங்குதான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் வைத்தமாநிதி பெருமாள். இது நவதிருப்பதி கோவில்களில் எட்டாவது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகவும் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் மூலவராக வைத்தமாநிதி பெருமாளும், அவரின் வலதுபுறத்தில் குமுதவள்ளியும், இடதுபுறம் கோளூர் வள்ளிதாயாரும் அமைந்திருக் கிறார்கள். இங்கு பெருமாள் சயன கோலத்தில் வீற்றிருக்கிறார். இங்கு உச்சவராக நிக்சோப வித்தான் உள்ளார். பெருமாளின் தலைக்கு அடியில் நாழியும், அவரின் இடது உள்ளங்கை விண்னை நோக்கியும், வலது கை பூமியை நோக்கியும் உள்ள கோலத்தில் காட்சி தருகிறார்.

    இக்கோவில் கிழக்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது. குபேரன் பார்வதியை கடை கண்ணால் பார்த்ததால் சாபத்திற்குள்ளாகி, பின்பு சிவனால் பரிகாரம் பெற்று வைத்தமாநிதியை வழிபட்டார் என்று வரலாறு உண்டு. ஒவ்வொரு மாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் சுவாதி நட்சத்திரத்தன்று குளித்து, பெருமாளை முழுமனதுடன் வேண்டினால் இழந்த சொத்துக்கள், தோஷ நிவர்த்திகள் விலகும் என்பது ஐதீகம். இந்த நட்சத்திர நாளில்தான் குபேரன் திருப்பதிக்கு கடன் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

    அனைத்து மாதங்களிலும் செவ்வாய் மற்றும் சனி கிழமைகளில் நீராஞ்சனம் எனும் விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த விளக்கானது அரிசி, தேங்காய் மற்றும் நெய் ஆகிய 3-ம் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும்.

    இவ்வாறாக 3 வாரம் தொடர்ந்து ஏற்றினால் வேண்டிய வரங்கள் கிடைப்பதால் அனைத்து பக்தர்களும் அதனை திரளாக செய்து வருகின்றனர். கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும், மணமுடித்தவர்கள் குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் அமைதி நிலவவும், சொத்துக்கள் அதிக அளவில் கிடைக்கவும் வேண்டி இவ்வாறாக விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.

    மூலவரான வைத்தமாநிதியின் கோவிலுக்கு பின்புறம் யோக நரசிம்மர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். வழக்கமாக நம்பி கோவிலில் மட்டுமே பிரதோஷம் நடைபெறும். ஆனால் எங்குமில்லாத வகையில் இந்த கோவிலில் யோக நரசிம்மருக்கு நீராஞ்சன விளக்கு ஏற்றப்பட்டு பிரதோஷ விழா நடைபெறும். மேலும் மூலவருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    புரட்டாசி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் திரளான அளவில் வந்து தரிசனம் செய்வார்கள். பெருமாளுக்கு உகந்தமாதமாக இந்த புரட்டாசி மாதம் கருதப்படுகிறது-.

    அதேபோல் புரட்டாசி சனிக்கிழமையில் வைத்தமாநிதி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிறப்பு நைவேத்தியங்கள் நடைபெறும். பக்தர்கள் பலர் தங்களால் இயன்ற பொருளுதவிகளை செய்து மகிழ்கின்றனர். மேலும் சிலர் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதால் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை தங்கள் செலவில் செய்வார்கள்.

    ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு பிரதோஷங்கள் வருவது வழக்கம். ஆனாலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனி பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வேளைகளில் காலை, மதியம் மற்றும் இரவில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளில் அனைத்து பெண்களும் தங்கள் குறைகள் தீர தவறாது கலந்து கொள்வார்கள். சிறப்பு நைவேத்தியம் செய்வதற்கான நெய் மற்றும் இதர பொருட்களை பக்தர்களே காணிக்கையாக செலுத்து வார்கள். மேலும் நீராஞ்சனம் விளக்கு ஏற்றியும் வழிபடுபவர்கள் அனேகம்.

    மேலும் புரட்டாசி மாதத்தில் வரும் 5 சனி கிழமைகளிலும் கருடசேவை நடை பெறுவதுதான் மிகவும் சிறப்பம்சமாக கருதப்படுகிறது-. கருட வாகனத்தில் நடைபெறும் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வைத்தமாநிதி பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வுதான் கருட சேவையாகும். இதில் உற்சவரும் இணைந்து வீதியுலா வருவது மேலும் சிறப்பு சேர்ப்பதாகும்.

    வைத்தமாநிதி பெருமாளுக்கு ஆவணி மாதம் திருவிழா நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சி தருகிறார். இறுதிநாளான 10-ம் நாளில் தேரோட்டம் நடைபெறும். இந்த தேரோட்டத்தில் பக்தர்கள் கரகோஷங்களை எழுப்பி தேரினை வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியை காண வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தகோடிகள் கலந்து கொள்வார்கள்.

    நவத்திருப்பதி தலங்களில் ஒன்றான இந்த வைத்தமாநிதி பெருமாள் தலத்தில் தெப்பகுளம் என்பது கிடையாது. ஆனாலும் மற்ற பெருமாள் தலங்களை போல பவுத்ர உற்சவம், வசந்த உற்சவம் போன்றவை நடைபெறும்.

    ஐப்பசி மாதத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவத்தின் போது வைத்தமாநிதி பெருமாளை ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டு மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பதிகத்தை பக்தர்கள் பாடுவார்கள். ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் பவுத்ர உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவம் 7 நாட்கள் நடைபெறும். மற்ற நாட்களில் நடைபெறாத பூஜைகள் அனைத்தும் இந்த கால கட்டத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    மேலும் கார்த்திகை மாதம் நடைபெறும் சொக்கப்பனை விழாவில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். மேலும் திரளான பெண்களும் வந்து ஆர்வத்துடன் கண்டு களிப்பார்கள்.

    மார்கழி மாதத்தில் 22 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியில் கன்னிப்பெண்களும், பக்தர்களும் விரதமிருந்து வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபடுவார்கள்.
    திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 கோவில்களில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் 47-வதாக திகழ்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 கோவில்களில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் 47-வதாக திகழ்கிறது. இந்த கோவில் சங்க காலத்துக்கு முன்பே தோன்றிய பழம் பெருமையுடையது. வைணவ சான்றோர்களான ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம் இதுவாகும். முற்கால பாண்டியர்கள் குல பரம்பரையாக வழிபட்டும் திருப்பணிகள் செய்தும் வந்த தொன்மையை கொண்டது. பெரியாழ் வாரால் திருமால் ஒருவரே பரம்பொருள் என நிர்ணயம் செய்த தலமாகவும், திருப் பல்லாண்டு விளைந்த திருத்தலமாகவும் விளங்குகிறது.

    கோவிலில் உள்ள அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். 2-வது நிலையில் சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களும், அஷ்டபாலகர்களும் ஓவிய வடிவில் அருள்பாலிக்கின்றனர். இதனால் இந்த சன்னதியை ‘ஓவிய மண்டபம்‘ என்று அழைக்கிறார்கள்.

    3-வது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். இவ்வாறு பெருமாள் இந்த தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன என 3 கோலங்களிலும் காட்சி தருகிறார். மேலும் பூவநாதர், லட்சுமி நரசிம்மர், நாராயணன், லட்சுமி நாராயணன், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரையும் விமானத் தில் தரிசிக்கலாம்.

    மலைக்கோவில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் வருவது போல் இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள். இங்குள்ள உற்சவர் வியூக சுந்தர்ராஜன் என அழைக்கப்படுகிறார். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பு சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த பகுதியை ஆண்ட மன்னர்கள் போருக்குச் செல்லும்போது இவரை வேண்டி வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனால் கூடலழகருக்கு இந்த பெயர் ஏற்பட்டது எனவும் கூறுகிறார்கள்.

    பஞ்சபூத தத்துவம்

    இந்த கோவில் பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் 5 கலசத்துடன் கூடிய 5 நிலை ராஜ கோபுரம், 8 எழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் 8 பிரகாரங்களுடன் அமைந்த கோவில் இதுவாகும். ஆண்டாள் சக்கரத் தாழ்வார், நவக்கிரகம், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், மணவாள மாமுனிகள், விஸ்வஷேனர், ராமர், கிருஷ்ணன், லட்சுமி நாராயணன், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சூரிய மண்டலத்தில் சூரியன் அஷ்டாங்க விமானத்துடன் கூடிய ரதத்தில் வலம் வருவார். இந்த ரதத்தின் மாதிரி சிற்பம் கோவிலின் சுற்றுச் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பெயர் காரணம்

    ஒருமுறை மதுரையில் தொடர்ந்து மழை பெய் யவே மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தங்களை மழையில் இருந்து காத்தருளும்படி பெருமாளை வேண்டினர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார். அவை மதுரையைச் சுற்றி 4 மாடங்களாக ஒன்று கூடி மழையில் இருந்து மக்களை காத்தது. இவ்வாறு 4 மேகங்கள் ஒன்று கூடியதால் இந்த கோவில் நான்மாடக்கூடல் என்றும் கூடல் மாநகர் என்றும் அழைக்கப்படுகிறது. சுவாமியும் கூடல் அழகர் என்று அழைக்கப்படுகிறார்.

    108 திவ்ய தேசங்களில் கூடல் அழகர் கோவிலிலும், திருக்கோஷ்டி யூரிலும் மட்டுமே அஷ்டாங்க விமானத்தில் சுவாமிகள் காட்சி தருகின்றனர். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டதாகும். இதில் உள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழாது என்பது சிறப்பம்சமாகும். 8 பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் ‘ஓம்‘ நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

    தினமும் 6 கால பூஜை

    மதுரை கூடலழகர் கோவிலில் தினமும் 6 கால பூஜை நடைபெறு கிறது. காலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை. காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை. 10 மணிக்கு சுற்று கோவில் பூஜை. 12 மணிக்கு உச்சிகால பூஜை. மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை. இரவு 7 மணிக்கு சுற்று கோவில் பூஜை. இரவு 9 மணிக்கு அர்த்தசாம பூஜை.

    முக்கிய திருவிழாக்கள்

    மதுரை கூடலழகர் கோவிலில் நடை பெறும் திருவிழாக்கள் விவரம் வருமாறு:-

    சித்திரை மாதம்: தமிழ் வருட சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பெருமாள் புறப்பாடு.

    வைகாசி மாதம்: 14 நாட்கள் தேர்த் திருவிழா நடைபெறும். 9-வது திருநாளன்று அனுஷ நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெறும்.

    ஆனி மாதம்: கருட சேவை, சயனத் திருவிழா, முப்பழ விழா மற்றும் எண்ணை காப்பு விழா நடைபெறும்.

    ஆடி மாதம்: ஆடிப்பூரத் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

    ஆவணி மாதம்: திருப்பவித்திர திருவிழா மற்றும் உறியடித்திருவிழா கொண்டாடப்படும்
    .
    புரட்டாசி மாதம்: நவராத்திரி விழா 9 நாட்களும் வெகு விமரிசையாக நடைபெறும். மேலும் பவுர்ணமி அன்று தாயாருக்கு பாலாபிஷேகம், 5 கருட சேவை, 4 மாசி வீதி புறப்பாடு மற்றும் விஜயதசமி அன்று அம்பு போடுதல் விழாக்கள் பாரம் பரிய முறைப்படி நடை பெறும்.

    ஐப்பசி மாதம்: தீபாவளி அன்று மூலவ ருக்கு தைலக் காப்பு மற்றும் மணவாள மாமுனிகள் திருநட்சத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

    கார்த்திகை மாதம்: திருக்கார்த்திகை மற்றும் திருமங்கை ஆழ்வார் திரு நட்சத்தி ரத்தில் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

    மார்கழி மாதம்: திருப்பல்லாண்டு தொடக்கம், பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, ராப்பந்து வைபவங்கள் நடைபெறும்.

    தை மாதம்: கனுப்பானரி வேட்டை (அனுப்பானடிக்கு எழுந்தருளல்) மற்றும் தை மாதம் முதல் தேதியில் தாயார் பெருமாள் மாலை மாற்றுதல் போன்ற வைபவங்கள் நடைபெறும்.

    மாசி மாதம்: 12 நாட்கள் தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    பங்குனி மாதம்: பங்குனி உத்திரத்தன்று மதுரவல்லித் தாயார் திருக்கல்யாணம். வசந்த உற்சவம் 5 நாட்கள் நடைபெறும். சுக்ல பட்ச துவாதசி அன்று கஜேந்திர மோட்சம், கோவர்த்தனகிரி புறப்பாடு நடைபெறும்.

    மண்டல தரிசனம் மாங்கல்ய பாக்கியம்

    மதுரை கூடலழகர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். புரட்டாசி சனிக்கிழமை கூடலழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவார்கள்.

    கூடலழகர் கோவில் வேண்டுதல் ஸ்தலமாக திகழ்கிறது. கோவிலை 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சுற்றி வந்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
    விஷ்ணு பகவானின் 108 திவ்ய தேசங்கள் சிறப்பானவையாக போற்றப்படுகிறது. அதில் ஒரே நாளில் சுற்றி வருகின்ற தலங்களாக தென்தமிழகத்தில் உள்ள நவதிருப்பதிகள் எனப்படும் திவ்ய தேசங்கள் விளங்குகின்றன.
    விஷ்ணு பகவானின் 108 திவ்ய தேசங்கள் சிறப்பானவையாக போற்றப்படுகிறது. அதில் ஒரே நாளில் சுற்றி வருகின்ற தலங்களாக தென்தமிழகத்தில் உள்ள நவதிருப்பதிகள் எனப்படும் திவ்ய தேசங்கள் விளங்குகின்றன. தாமிரபரணி கரையில் உள்ள ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தென் திருப்பேரை, இரட்டை திருப்பதி, பெருங்குளம், திருப்புளியங்குடி, நத்தம் ஆகிய நவதிருப்பதிகளிலும் புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருட சேவைகள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

    இந்த நவ திருப்பதிகளைப் பற்றியும் சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.

    ஸ்ரீவைகுண்டம் (முதல் திருப்பதி)

    பிரம்மன், தான் தொலைத்த சுவடியைத் தேடி பூலோகம் வந்தார். இத்தலத்தில் உள்ள தாமிர பரணி தீர்த்தத்தில் நீராடி அந்த சுவடியைப் பெற்றார். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாக்களை, பிரம்மனே முன்நின்று நடத்துவதாக ஐதீகம். மூலவர் வைகுண்டநாதர் நின்ற கோலத்தில் உள்ளார். உற்சவர் கள்ளபிரான், சோரநாதர் என்று அழைக்கப்படுகிறார். தாயார் வைகுண்டவல்லி. பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதிகள் தீர்த்தமாக உள்ளன. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம்.

    நாள்பட்ட நோய், நீதிமன்ற வழக்கு, இழந்த பொருள் கிடைக்க இத்தலம் வந்து வழிபடலாம்.

    காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

    நத்தம்

    (இரண்டாம் திருப்பதி)


    இந்த ஆலயத்தின் மூலவர் விஜயாசனர் என்ற பரமபதநாதர். இவர் ஆதிசேஷன் குடைபிடிக்க அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவரின் திருநாமம் எம்இடர்கடிவான் என்ற விஜயாசனப் பெருமாள். தாயார் பெயர் வரகுணமங்கை மற்றும் வரகுணவல்லி என்பதாகும். அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரணி தீர்த்தங்கள் உள்ளன. நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

    திருப்புளியங்குடி (மூன்றாம் திருப்பதி)

    இந்த ஆலயத்தின் மூலவர் பூமிபாலகர். உற்சவரின் திருநாமம் காய்சினி வேந்தன் என்பதாகும். தாயார் பெயர் பூமகள் என்னும் நிலமகள், அலமேலு மங்கை. சேத்திர தாயார் புளியங்குடி வல்லி. இங்கு வருண-நிருதி தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. இத்தல இறைவனை வருணன், நிருதி, இந்திரன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    இத்தல இறைவனை வணங்கினால் கல்வியில் சிறப்பு அடையலாம். திருமண தடை நீங்கும். ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை, இங்குள்ள குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் கேட்டவரம் கிடைக்கும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

    தேவர்பிரான் (நான்காம் திருப்பதி)

    இரட்டை திருப்பதிகளில் ஒன்றான இந்த ஆலயத்தில் ஸ்ரீனிவாசர் என்ற திருநாமத்தில் நின்ற கோலத்தில் இறைவன் வீற்றிருக்கிறார். உற்சவமூர்த்தியான தேவர்பிரான் ஸ்ரீதேவி- பூதேவியுடன் உள்ளார். தாயார் அலமேலு மங்கை, பத்மாவதி தாயார். வருண தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தங்கள் உள்ளன. இந்திரன், வாயு, வருணன், சுப்ரப மகரிஷி ஆகியோர் இத்தல இவைனை தரிசித்து பேறு பெற்றுள்ளனர்.

    இத்தல இறைவனை வழிபட்டால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். இங்கு வழங்கப்படும் மஞ்சள் காப்பு விசேஷமானது. இதனை கையில் கட்டி, இந்த ஆலயத்தில் 45 நாட்கள் தாமிரபரணி தீர்த்தத்தில் நீராடி, இறைவனுக்கு திருமஞ்சனம் செய்தால் தொழுநோய் நீங்கும் என்பது ஐதீகம்.

    இத்தலம் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையும், பகல் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரையும் திறந்திருக்கும்.

    அரவிந்தலோசனர் (ஐந்தாம் திருப்பதி)

    இரட்டை திருப்பதிகளில் மற்றொன்றான இந்த ஆலயத்தின் மூலவர் திருநாமம் அரவிந்த லோசனர். அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த இறைவனின், உற்சவர் பெயர் செந்தாமரைக் கண்ணன் என்பதாகும். தாயார் திருநாமம் கருந்தடங்கண்ணி. சேத்திர தாயார் பெயர் துலைவில்லி தாயார். தாமிரபரணியோடு, அஸ்வினி என்ற தீர்த்தமும் இங்கு உள்ளது. வாயு, இந்திரன், வருணன், சுப்ரப மகரிஷி, அஸ்வினி சகோதரர்கள் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் திறந்திருக்கும்.

    பெருங்குளம் (ஆறாம் திருப்பதி)

    இந்த ஆலயத்தின் மூலவர் பெயர் வேங்கடவாணன். இவரை சோரநாதன், ஸ்ரீனிவாசன் என்றும் அழைப்பார்கள். நின்ற திருக்கோலத்தில் அருளும் இவரது உற்சவர் திருமேனியை மாயகூத்தர் என்று அழைக்கிறார்கள். தாயார் திருநாமம் கமலாவதி என்பதாகும். அலமேலு மங்கை என்றும் அழைப்பார்கள். இங்கு திருமலை போலவே, ஸ்ரீனிவாசர் என்ற திரு நாமத்தில் இறைவன் உள்ளார். பிரகஸ்பதி, வேதசாரன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டிருக்கிறார்கள். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    தென்திருப்பேரை (ஏழாம் திருப்பதி)


    அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் இத்தல மூலவரின் திருநாமம், மகர நெடுஞ்குலைநாதர் என்பதாகும். உற்சவமூர்த்தியின் பெயர், நிகரில் முகில் வண்ணன். தாயார் பெயர், குலைக்காது வல்லி, திருப்பரை நாச்சியார் ஆகியோர் ஆவார். சங்கு தீர்த்தம், சுக்ர புஷ்கரணி ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. சுக்ரன், வருணன், ஈசான்ய ருத்ரனர், பிரம்மன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். நம்மாழ்வார், மணவாள முனிகள் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

    தொழில் விருத்தி ஏற்பட இத்தல இறைவனுக்கு 11 நாட்கள் விளக்கு போட்டு வழிபடுவது நன்மை தரும்.

    இத்தலம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையில் திறந்திருக்கும்.

    திருக்கோளூர் (எட்டாம் திருப்பதி)

    குபேரன், தான் இழந்த பொருளை தாமிரபரணி நதியில் நீராடி திரும்பப் பெற்ற திருத்தலம் இதுவாகும். இத்தல இறைவன் வைத்தமாநிதி பெருமாள் என்றும், நித்திய பவித்திரன், நச்சியப்ப பவித்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் குமுதவல்லி, கோளூர்வல்லி என்று பெயர் பெற்றுள்ளார். நிதி தீர்த்தம், குபேர தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம் உள்ளன. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது.

    மதுரகவியாழ்வார் அவதரித்த ஊர் இதுவாகும். புதிய தொழில் தொடங்குபவர்கள, வாகனம் வாங்குபவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இத்தல நரசிம்மருக்கு பிரதோஷம் அன்று அபிஷேகம் செய்து பானகம் நைவேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். இப்படி 9 பிரதோஷ நாட்களில் வழிபட்டு வந்தால் நினைத்தது நிறைவேறும்.

    இத்தலம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    ஆழ்வார்திருநகரி (ஒன்பதாம் திருப்பதி)


    நவ திருப்பதிகளில் கடைசி தலமாக விளங்கும் இதன் மூலவர் ஆதிநாதன். ஆதிபிரான் என்றும் அழைப்பார்கள். நின்ற திருக்கோலத்தில் இத்தல இறைவன் அருளாசி வழங்குகிறார். உற்சவரின் திருநாமம் பொலிந்து நின்ற பிரான் என்பதாகும். தாயார் ஆதிநாதநாயகி, திருகுருகூர் நாயகி என்று அழைக்கப்படுகிறார். தாமிரபரணி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை உள்ளன. தலவிருட்சம் புளியமரம். பிரம்மன், நம்மாழ்வார், சங்கன், நந்தன், மதுரகவியாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். நம்மாழ்வார் அவதரித்த தலம் இது.

    இத்தலத்தின் அருகில் உள்ள அனைத்து திருப்பதிகளில் இருந்தும், நம்மாழ்வாரின் பாசுரத்தினை கேட்க இறைவன் ஓடோடி வருவார். எனவே இத்தலத்தில் வணங்கினாலே அனைத்து பாண்டிநாட்டு தலங்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இத்தலத்தில்தான் 5500 வருட பழமையான புளியமரம் உள்ளது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    தொகுப்பு:- முத்தாலங்குறிச்சி காமராசு
    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகிலுள்ள பூளவாடி எனுமிடத்தில் அமைந்துள்ளது அன்பிற்பிரியாள் அம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தல வரலாறு

    காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டு வந்ததுடன், அங்கு வருபவர் களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார்.

    அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள்.

    ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே, அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார்.

    அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள்.

    அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன் பார்வையில் பட்டாள். அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய சோழ மன்னன் அவள் மேல் காதல் கொண்டான். பின்னர் அவன், அரண்மனை ஆட்களை அனுப்பி மருதவாணனிடம் அவளை மணமுடித்துத் தரும்படி கேட்டான். மருதவாணன் சில நாட்களில் முடிவு செய்து சொல்வதாகச் சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார்.

    அரசனிடம் முடியாது என்று மறுத்தால், தனக்கும், தனது குடும்பத்துக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும் என்பதை நினைத்துக் கவலை யடைந்த மருதவாணன், தன்னையும், தனது குடும்பத்தையும் காத்தருளும்படி அங்கிருந்த சிவபெருமான் கோவிலுக்குச் சென்று வேண்டினார்.

    இந்தநிலையில், தொண்டை நாட்டைச் சேர்ந்த வணிகன் தாவளன் என்பவன் அவரிடம் வந்து, அவரது பெண்ணைத் தனக்குத் திருமணம் செய்து தரும்படி கேட்டார். மருதவாணனும், தனது பெண்ணைத் தம் குலத்தைச் சேர்ந்த வருக்கே மணமுடித்துத் தருவதென்று முடிவு செய்து, அவருக்கே மணமுடித்துத் தருவதாகச் சொல்லி உறுதிப்படுத்தும் நிகழ்வை நடத்தி முடித்து அனுப்பி வைத்தார்.

    பல நாட்கள் கடந்தும், மருதவாணனிடமிருந்து எந்தப் பதிலும் வராத நிலையில், சோழ மன்னன், மருதவாணனின் உறவினரான சோழப்பாண்டி என்பவரை அழைத்து, மருதவாணன் மகளைத் திருமணம் செய்து கொள்ள உதவும்படி வேண்டினான். சோழப்பாண்டியோ மருதவாணனின் மகளைத் தொண்டை நாட்டு வணிகர் தாவளன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கான உறுதிப்படுத்தல் நிகழ்வு நடந்து முடிந்து விட்டதால், தன்னால் ஒன்று செய்ய இயலாது என்று மறுத்துவிட்டார்.

    சோழ மன்னன், வணிகரான மருதவாணன் மகளைப் பலவந்தமாகக் கடத்தி வந்து திருமணம் செய்து கொள்வதென்று முடிவு செய்தான். அதனை அறிந்த மருதவாணன், தனது மகள் அரசனுக்குப் பொருத்தமானவள் அல்ல என்பதைத் தெரிவிக்கும் வகையில், வீட்டில் ஒரு கருப்பு பெண் நாயைக் கட்டிப்போட்டு விட்டுத் தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து வெளியேறினார்.

    அவர்கள் செல்லும் வழியில், தொண்டை நாட்டு வணிகரான தாவளன் எதிரில் வந்தார். அவரைக் கண்ட மருதவாணன், அரசன் ஆட்கள் வருவதற்கு முன்பாகத் தனது மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். தாவளனும் மருதவாணன் மகளுக்கு மாலை அணிவித்துத் திருமணம் செய்து கொண்டார். அப்போது மருதவாணன் அங்கிருந்தவர்களிடம், அரசனின் ஆட்கள் வருவதற்குள் வேறு இடத்திற்குச் சென்று விடுவோம் என்று சொல்ல, அங்கிருந்தவர்கள் அனைவரும் வேகமாகச் செல்லத் தொடங்கினர்.

    அவர்கள் சென்ற வழியில், இடையேக் காவிரி ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி ஆற்றைக் கடந்தனர். அக் கரைக்கு சென்று பார்த்த போது, அவர்களுடன் வந்த மணமகன் தாவளனையும், மணப்பெண்ணையும் காணாமல் தவித்தனர். தன் மகளின்றி தன்னால் உயிர் வாழ முடியாது என்று சொல்லிய படியே மருதவாணன் ஆற்றில் இறங்கி உயிரை விடத் துணிந்தார்.

    அப்போது, “மருதவாணரே அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். அருகிலுள்ள திருவிடைமருதூர் கோவிலுக்குச் செல்லுங்கள். அங்கு உன் மகளையும், மருமகனையும் காணலாம்” என்று ஒரு குரல் வானிலிருந்து கேட்டது. அதனைக் கேட்ட அனைவரும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்றனர்.

    அங்கு ஒரு மருத மரத்தடியில், மருதவாணன் மகளும், தாவளனும் இருந்தனர். அவர்களைக் கண்டதும் மனம் மகிழ்ந்த மருதவாணன், வரும் வழியில் மாலை மாற்றித் திரு மணம் செய்து கொண்டதால்தான் இருவரும் ஆற்றில் இறங்கிய போது, காணாமல் போய்விட்டீர்கள். இக்கோவிலில் திருமணம் செய்து கொண்டால், இனி அது போன்ற தவறுகள் நடக்காது என்று சொல்லி கோவிலில் திரு மணத்தை நடத்தி வைத்தார். அப்போதுதான், தன் மகளாகப் பிறந்தவர் பார்வதி தேவி என்பதும், மரு மகன் தாவளனாக வந்தவர் இறைவன் சிவபெருமான் என்பதும் அவருக்குத் தெரிந்தது. அதனையறிந்த அவரும் குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சிஅடைந்தனர்.

    இதற்கிடையே, மருத வாணன் வீட்டிற்குச் சென்ற சோழ மன்னன் கருப்புப் பெண் நாய் கட்டப்பட்டிருந்ததைக் கண்டு பெரும் கோபமடைந்தான். அங்கிருந்த வணிகர்கள் அனைவரையும் துன்புறுத்தும்படி ஆணையிட்டான். அவனுடைய துன்புறுத்தலைத் தாங்க முடியாத பலர் அங்கிருந்து இடம் பெயர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்றனர்.

    அதன் பிறகு பல ஆண்டுகள் கடந்து விட்டன. பிற்காலத்தில் அந்தச் சோழ மன்னன் மரபு வழியில் வந்தவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். அவர்கள், தங்கள் முன்னோர் ஒருவர் வணிகர் களுக்குச் செய்த கொடுமைகளும், துன்பங் களுமே தற்போதையத் துன்பத்துக்குக் காரணமென்பதைக் கண்டறிந்தனர். உடனே அவர்கள் வணிகர்களை அழைத்துப் பேசினர்.

    தன் முன்னோர் செய்த தவறை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்ட புதிய மன்னன், இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்யும் விழாவை ஆண்டுதோறும் தானே முன்னின்று நடத்துவதாகத் தெரிவித்தான். அதற்கு மறுப்பு தெரிவித்த வணிகர்கள், இறைவன், இறைவி திருமண விழாவினைத் தாங்களே நடத்துவோம் என்றனர். இரு பிரிவினருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    பின்னர் இரு பிரிவினரும் சமாதானமடைந்து, இத்திருமண விழாவினை யார் நடத்துவது என்பதை நாளை கோவிலில் வைத்து முடிவு செய்யலாமென்று கூறிச் சென்றனர். மறுநாள், மன்னர் குடும்பத்தினரும், வணிகர்களும் கோவிலுக்கு வந்தனர். மன்னர் குடும்பத்தினர், இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்து வைக்கும் விழாவினைத் தாங்கள் நடத்திட அருள் புரிந்திட வேண்டுமென்று அங்கிருந்த இறைவனையும் இறைவியையும் வேண்டினர். அவர்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

    அதன் பிறகு வணிகர்கள், “எங்கள் வணிகக் குலத்தில் பிறந்து, எங்கள் அன்புக்குரியவளாக இருந்த இறைவியே, உன்மேல் கொண்ட எங்கள் அன்பு பிரியாமல் இருக்க உன் திருமணத்தை நடத்தும் உரிமையை எங்களுக்கே அளிக்க வேண்டும்” என்று சொல்லி வேண்டியபடி, “அன்புப்பிரியாள் அம்மா” என்று பாசத்துடன் மூன்று முறை அழைத்தனர்.

    அப்போது, இறைவியிடம் இருந்து “ஏன் அப்பா, ஏன் அப்பா, ஏன் அப்பா” என்று மூன்று முறை பதில் வந்தது. அதனைக் கண்ட மன்னனும், இக்கோவிலில் வைகாசி மாதம் நடத்தப்பெறும் திருமண விழாவினை இனி வணிகர்களே நடத்தலாம் என்று உரிமையளித்தான்.

    பிற்காலத்தில் அங்கிருந்து இடம் பெயர்ந்த வணிகர்கள் சிலர், தாங்கள் வசித்து வந்த பூளவாடி எனுமிடத்தில் அன்புப்பிரியாள் அம்மனுக்குத் தனிக்கோவில் ஒன்றைக் கட்ட முடிவு செய்து கோவிலை நிறுவினர் என்று இந்த ஆலயம் அமையப்பெற்ற வரலாற்றைச் சொல்கிறார்கள்.

    கோவில் அமைப்பு

    சிவபெருமானின் அன்பில் பிரியாது இருக்கும் பார்வதிதேவி, தன் பக்தர்களிடமும் அன்பு கொண்டு அவர்கள் வேண்டியதை வழங்குவாள் எனும் கருத்தில், இக்கோவிலின் இறைவி, ‘அன்பிற்பிரியாள்’ என்று அழைக்கப்படுகிறார். இக்கோவில் கருவறையில், கிழக்கு திசையைப் பார்த்தபடி, வலது காலை மடக்கியும், இடது காலைக் கீழே வைத்தும் அமர்ந்த நிலையில் அன்பிற்பிரியாள் இருக்கிறார். இங்கிருக்கும் இறைவன் ‘காசி விசுவநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். இவரை ‘மருதாவாணேஸ்வரர்’ என்றும் அழைக்கிறார்கள்.

    குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கை. இதே போல் தாங்கள் செய்து வரும் வணிகம் பெருகி வாழ்வில் வளமடைய வேண்டியும் பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    அன்பிற் பெரியாள்


    திருஞானசம்பந்தர் திருவிடை மருதூர் கோவிலுக்கு வந்த போது, வழியெங்கும் லிங்கமாக இருந்ததால், அவர் அங்கே கால் வைக்க அஞ்சி நின்றார். அதனைக் கண்ட இறைவன், திருஞானசம்பந்தரை அழைத்து வரும்படி இறைவியிடம் சொன்னார். அவரும் திருஞானசம்பந்தரைக் குழந்தை போல், தனது இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்தார். இந்த அம்பிகை, இறைவனுடன் கயிலாயத்தின் மீது காட்சி தருகிறாள். இவளை ‘அன்பிற் பெரியாள்’ என்று அழைக்கின்றனர். குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் இந்த அம்மனை வழி பட்டுச் செல்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்


    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் பூளவாடி உள்ளது. திருப்பூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, தாராபுரம் நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

    தேனி மு.சுப்பிரமணி
    வேலூர் மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.
    வேலூர் மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.
    பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோவில் இது. இங்கு ஒரு “கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை- (4 நிமிடங்கள்) மட்டும் இருந்தாலே மோட்சம் கிட்டிடும்!. அத்தனை பெருமை உடையது “கடிகாசலம்’ என்று அழைக்கப்படும் சோளிங்கர்.

    லட்சுமி நரசிம்மர்

    750 அடி உயரத்தில், 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் ஒரே மலை குன்றின் மீது 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கோவில் உள்ளது. லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார். வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் 2 திருச்சுற்றுகள் கொண்டுள்ள அழகிய கோவில்.

    பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டுமே நரசிம்மர், கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் வீற்றிருக்கிறார். சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன், இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் லட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார்.

    விசுவாமித்திரர்

    விசுவாமித்திரர், ஒரு கடிகை நேரம் இம்மலையில் இருந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு பிரம்மரிஷி பட்டமும் பெற்றதாக வரலாறு உள்ளது. பக்தன் பிரகலாதனுக்கு காட்சி தந்த நரசிம்ம அவதார திருக்கோலத்தை தாங்களும் கண்டு ஆனந்தமடைய வேண்டுமென வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்துவாஜர் ஆகிய முனிசிரேஷ்டர்களோடு, விசுவாமித்திரர் இத்திருத்தலத்தில் தவமிருந்துள்ளார்.

    கடிகாசலத்தில் தவம் மேற்கொண்டிருந்த சப்தரிஷிகளுக்கு காலன், கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களை வதம் செய்வதற்காக ஆஞ்சநேயர், எம்பெருமானின் சங்கு சக்கரங்களை வேண்டிப் பெற்று அவற்றின் துணையோடு, அரக்கர்களை அழித்தார். மகரிஷிகள் எழுவரின் தவத்தினை மெச்சிய திருமாலும், திருக்கடிகைக்கு எழுந்தருளி நரசிம்ம மூர்த்தியாகக் காட்சியளித்தார்.

    ஆஞ்சநேயர்

    ஆஞ்சநேயரும் நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தோடு, சங்கு சக்கரத்தோடு பெரியமலைக்கு எதிரில் யோக ஆஞ்சநேயராக அமர்ந்துவிட்டார்.
    இம்மலையின் அருகே எதிர்திசையில் 350 அடி உயரத்தில், 406 படிக்கட்டுகள் கொண்ட, சிறிய மலையின் மீது ஆஞ்சநேயர் தியான நிலையில் அமர்ந்தபடி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.

    ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன.ஆண்டு முழுவதும் கண் மூடிய நிலையில் தியானத்தில் இருக்கும் லட்சுமி நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
    உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்மதீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன.

    பில்லி, சூனியம்

    பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலைமீது அமர்ந்து அருள் பாலிக்கும் யோக நரசிம் மரையும், யோக ஆஞ்ச நேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. இங்கு காஞ்சிபுரம் வரதராஜர் பிரம்மோற்சவத்தின் 3ம் நாள், பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளுகிறார். இந்தக்குளத்தில் நீராடினால், பிரம்மதோஷம் கூட நீங்கும் என்பது ஐதீகம்.

    நோய் தீர்க்கும் மலை


    காஞ்சீபுரத்திற்கும், திருவேங்கட மலைக்கும் இடையில் சோளிங்கர் அமைந்துள்ளது. மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம். மனஅமைதி தரும் அற்புதமான பூமி. இந்த மலையில் உள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்சினை விரைவில் குணமாகிறது. இங்குள்ள திருகுளத்திற்கு ‘அனுமத் தீர்த்தம்’ என்பது திருநாமம். ஸ்ரீ யோக நரசிம்மருக்கு சோளிங்கரை தவிர மற்ற இடங்களிலும் கோவில்கள் உண்டு. ஆனால் யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில் உள்ளது. அவர் இங்கு யோக மூர்த்தியாக மட்டுமல்லாமல், அகிம்சை மார்க்கத்தை நிலை நாட்டியவரும் ஆவார்.

    பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்திருக்கிறார்கள். சோளிங்கர் லட்சுமி நரசிம்மரை வணங்கினால் குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும். பில்லி சூன்யத்தை விரட்டலாம்.

    புதிதாக நிலம் வாங்க வேண்டும் என நினைப்பவர்களும், வீடு கட்ட ஆசைப்படு பவர்களும் கோவில் மலைப்பாதைக்கு அருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டி, வேண்டிக்கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இங்கே உள்ள நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வ தற்கு சமமானது என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.

    கல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப்பழம் தருதல், நரசிம்மருக்கும், தாயாருக்கும் வேஷ்டி புடவை சார்த்துதல், தயிர்சாதம் செய்து பிரசாதம் படைத்தல் என வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள். வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம். சோளிங்கரில் முதலில் நரசிம்மரைத் தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம். சுவாமி ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந்துள்ளார். இவரது வடிவத்தை சிவா வடிவம் என்கின்றனர். இத்தலத்து பெருமாள், ஒரே கல்லால் ஆன மலை மீது அருள்பாலிக்கும் தன்னை 1500 படிகள் ஏறி வந்து தரிசித்தாலே பலன் தந்து விடுவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

    குங்குமம்-அர்ச்சனை

    இந்த ஆலயத்தில் குறிப்பிட்ட தொகையை வழங்கினால் பிறந்த தினத்தன்று அர்ச்சனை செய்து குங்குமப் பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள். திருக்கடிகை மலை ஏறி வழிபட இயலாத மெய்யன்பர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனத்தில் நினைத்துச் சிந்தித்தாலே போதும் மோட்சம் சித்திக்கும் எனப் புகழ்ந்துரைக்கின்றனர்.

    வியாழக்கிழமைகளில் பிரம்மதீர்த்தத்தில் நீராடி நரசிம்மசுவாமியைத் துதிப்பதால் வேண்டியதெல்லாம் பெறலாம். தூய மனத்துடன் நீராடி நம்பிக்கையுடன் சோளிங்கரில் பித்ரு தர்ப்பணம், தானம், தவம் முதலியன செய்தால் அவன் பரம்பரை தழைத்தோங்கும். ஒரு போதும் வம்சம் அழியாது. அத்தீர்த்தக்கரையில் மரம்செடி முதலியன வைத்து வளர்த்தால் இம்மையிலும், மறுமையிலும் எல்லா நன்மையையும் அடைவர்.

    தினமும் காலை 8.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரைக்கும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் தான் கோவில் நடை திறந்திருக்கும். முதலில் விசுவரூபம், நித்யபடி, முதல்காலம், 2&ம் காலம், அரவணை ஆகிய முறைகளில் பூஜைகள் நடக்கிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவ பூஜைகள் நடக்கிறது.

    இக்கோவில் சென்னையிலிருந்து 100 கி.மீ., வேலூரிலிருந்து 54 கிலோ மீட்டர், அரக்கோணத்திலிருந்து 30 கிலோ மீட்டர், திருத்தணியில் இருந்து 27 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சென்னையிலிருந்து ரெயிலில் வருபவர்கள், அரக்கோணம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலை சென்றடையலாம்.

    ஸ்ரீராமரின் சங்கு-சக்கரத்தால் அரக்கர்களை அழித்த அனுமன்

    தவ முனிவர்களான அத்திரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர் என்னும் சப்தரிஷிகளும் இத்தலத்தில் தவமிருந்து பெருமாளின் நரசிம்ம அவதாரத்தைக் காண ஆசைப்பட்டனர். அதேசமயம் அனுமனும், ஸ்ரீராம அவதாரம் முடிந்து ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு செல்லும் பொழுது தானும் உடன்வருவதாக கூறியதால் அவரும் இந்த தலத்தில் வந்து காத்திருந்தார்.

    இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த சப்த ரிஷிகளுக்கு காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதைக்கண்டு அனுமன் ஸ்ரீராமனிடம் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீராமபிரான் தன்னுடைய சங்கு சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து இதைக் கொண்டு அரக்கர்களை அழிக்க உத்தரவிட்டார். அனுமனும் அப்படியே செய்தார். காலன், கேயன் என்ற அரக்கர்கள் மாண்டனர்.
    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் காவிரி நதியின் வட கரையில் ஒருபகுதியாக அமைந்துள்ளது திருவிழந்தூர். இதன் புராணப் பெயர் திருஇந்தளுர்.  கன்னித் தமிழ்பாடி இறைவனை வாழ்த்திய ஆழ்வார்கள் பலர் வாழ்ந்த தமிழ்த் திருநாட்டில் கங்கையை போல் புனிதமாகிய காவிரி கரையில் அமைந்த வைணவத் தலங்கள் பலவற்றுள் 5 அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன.

    அவைகள் முறையே திருவரங்க பட்டணம் (மைசூரில் உள்ளது), திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), அப்பால ரங்கம் (கோவிலடி), கும்பகோணம் மத்தியரங்கம், திருஇந்தளுர் பரிமளரங்கம் என்பன திருஇந்தளுர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் பாஞ்சராத்திர ஆகமத்தைச் சேர்ந்தது.

    இத்தலம் சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக் காடுகள் நிறைந்திருந்ததால் சுகந்த வனம் என்ற பெயரும் உண்டு. இந்து என்ற சொல் இந்திரனைக் குறிக்கும். தட்சனின் சாபத்தால் சந்திரனுக்கு கொடிய நோய் தோன்றவே அவன் இவ்வூரை அடைந்து இத்தலத்து எம்பெருமானின் அருளால் நோய் நீங்கப்பெற்றான்.
    அதனால்தான் அதன் நினைவாக இந்த ஊருக்கு இந்துபுரி என்றும், தான் தவம் புரிந்த திருத்தலத்தை இந்துபுஷ்கரணி என்றும் வழங்குமாறு இறைவனிடம் வேண்டியுள்ளதால் இப்பெயர்கள் அமைந்துள்ளன.

    பிரம்ம தேவனால் வெளியிடப்பட்ட வேதங்களை மதுகைடபர்கள் என்னும் அரக்கர்கள் அபகரித்துப் போக, பிரம்மா மிகவும் வருந்தி எம்பெருமானை வேண்டியுள்ளதால் பெருமாள் அந்த வேதங்களை அரக்கர்களிடமிருந்து மீட்டு வேதங்களுக்கு பரிமளத்தை கொடுத்தமையால் இறைவன் பரிமள ரெங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

    சந்திரன், பங்குனி மாதம் எம்பெருமானுக்கு பிரம்மோத்ஸவம் செய்வித்தப் படியால் இன்றும் பங்குனியில் பிரம்மோத்சவம் நடை பெறுகிறது. துலா (ஐப்பசி) மாதத்தில் காவிரியில் நீராடினால் கங்கையை விட அதிகப் புண்ணியம் வாய்ந்தது என வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே துலா பிரம்மோத்சவம் நடைபெறுகிறது.

    திருமங்கை மன்னன் தன் குழுவினருடன் பெருமாளை தரிசிக்க வந்தனர். அப்போது சன்னதி கதவுகள் திறக்கப்படவில்லை. பெருமாளும் அவருக்கு காட்சி அளிக்கவில்லை. ஆழ்வார் எவ்வளவு வேண்டியும் பெருமாள் முகம் கொடுக்கவில்லை. இதனால் ஆழ்வார் மிகவும் வருந்தி மிதமிஞ்சிய பக்தியினால் பாடியுள்ளார் (இதை நிந்தா ஸ்துதி என்பவர்) இதன் பின் பெருமாள் காட்சி கொடுத்தார், திருமங்கையாழ்வார் அருளிச்செய்த 9-ம் திருமொழியின் திருவிந்தளுர் பாசுரங்கள் பத்தில் விவரமாக காணலாம்.

    இறைவனது திருமேனி மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த பச்சை மரகதத் திருமேனியாக காண்போர் கண்ணையும் கருத்தையும் கவருவதாக அமைந்துள்ளது. இத்தலத்தை சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக் காடுகள் நிறைந்திருந்ததால் இவற்றின் நறுமணம் வீசுகிறது. இதனால் பெருமாளுக்கு சுகந்தவன நாதர் என்று மற்றொர் பெயரும் பெருமாளுக்கு உண்டு.

    மூலஸ்தான பரிமள ரெங்கநாதரின் முகாரவிந்தத்தில் சூரியனாலும், பாதாரவிந்தத்தில் சந்திரனாலும், நாபிக்கமலத்தில் பிரம்மாவினாலும் பூஜிக்கப்படுகிறார்கள். தென்புறத்தில் காவிரி தாயாரும், வடபுறத்தில் கங்கை தாயாரும் ஆராதிக் கிறார்கள். இமயனும், அம்பரிஷனும் எம்பெருமான் திருவடிகளை அர்ச்சிக்கின்றனர். உத்சவப்பெருமாள் உபய நாச்சியாருடன் சீரிய சிம்மாசனத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

    தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. தாயாரின் திருப்பெயர்கள் பரிமள ரங்கநாயகி, சுகந்தவனநாயகி,புண்டரீகவல்லி,ஸ்ரீசந்திரசாபவிமோசனவல்லி. பரிமள ரங்கநாதரின் தெற்குபக்கத்தில் ஸ்ரீசக்கரத் தாழ்வாருக்கு தனிச்சன்னதி உள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தனியாக சன்னதி உள்ளது. மிகுந்த வரப்பிரசாதி சன்னதி வெளியில் கீழவீதியில் உள்ளது. கடல் கடந்து சீதாப் பிராட்டியாரைக்கண்டு ராமனது துயர் நீக்கிய மகாவீரனான இவர் தன்னை அண்டினோரின் துயர் தீர அருள்புரிகிறார். இவருக்கு திரு மஞ்சனம் இல்லாத நாளே இல்லை.

    முக்கிய திருவிழாக்கள்

    சித்திரை மாதப்பிறப்பு பெருமாள் வீதிப்புறப்பாடு, ஆடிமாதம்- ஆண்டாள் ஆடிப்பூர உத்சவம் 10 நாட்கள், ஆவணி மாதம் ஜெயந்தி கண்ணன் புறப்பாடு உறியடி உத்சவம், பவுத்திர உற்சவம் 5 நாட்கள். கடைசி நாள் கருட வேவை.

    புரட்டாசி மாதம்

    தாயார் நவராத்திரி உற்சவம், விஜயதசமியன்று பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்புபோடுதல்.

    ஐப்பசி மாதம்:-

    மாதப்பிறப்பு, அமாவாசை ஆகிய இரண்டு தினங் களில் கருடசேவை, 22-ந் தேதியில் இருந்து துலா பிரம்மோத்சவம் 10 நாட்கள். 4-ம் திருநாள் கருடசேவை, 7-ம்திருநாள் திருக் கல்யாணம், 8-ம் திருநாள் வெண்ணைத்தாழி, 9-ம் திருநாள் தேரோட்டம்.

    கார்த்திகை மாதம்:-

    திருக்கார்த்திகை சொக்கபனை உற்சவம்.

    மார்கழி மாதம்:-


    அத்யயன உத்சவம்-வைகுண்ட ஏகாதசி உற்சவம், பகல்பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி உத்சவம் 20 நாட்கள் நடைபெறும். பகல்பத்து உற்சவம்-வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக 10 நாட்கள் நடை பெறும். இந்த நாட்களில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 2000 பாசுரங்கள் ஓதப்படும். 10-ம் நாள் பெருமாளுக்கு மோகினி அலங்காரம் ராப்பந்து உற்சவம் வைகுண்ட ஏகாதசியன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். பகல் பத்தில் பிரபந்தப் பாகரங்கள் இரண்டாயிரம் ஓதியது போக பாக்கியுள்ள 2000 பாசுரங்களும் 10 நாட்களில் ஓதப்படும். மார்கழி மாதம் 30 நாட்களிலும் விடியற்காலை தனுர் மாத பூஜை நடைபெறும்.

    தை மாதம்:-

    1-ம் நாள் சங்கராந்தி உற்சவம், 2-ம் நாள் காலை தாயார் உற்சவம், மாலை குதிரை வாகனம் புறப்பாடு, பரிவேட்டை, 3-ம் நாள் மட்டையடி உத்சவம் தாயார் அத்யான உத்சவம்.

    மாசி மாதம்:-

    மாசிமக உற்சவம், பெருமாள் காவேரி பூம்பட்டினம் சென்று சமுத்திர தீர்த்தவாரி.

    பங்குனி உற்சவம்:-

    பங்குனி பிரம்மோத்சவம்


    10 நாட்கள். உத்திரத்திற்கு தீர்த்தவாரி, 4-ம் திருநாள் கருட சேவை, 7-ம் திருநாள் திருக்கல்யாணம், 9-ம் திருநாள் திருத்தேர். திருவிழா முடிந்ததும் 5-ம் நாள் ஊஞ்சல் உற்சவம். ஸ்ரீபெருமாள் நட்சத்திரம் உத்திரம். உத்திர தினத்தன்று புனுகு தைலம் (புனுகுசட்டம்). சந்தனாதி தைலம். ஜவ்வாது, மனோரஞ்சிதம், சண்பகப்பூ. சம்மங்கி, மல்லிகை, சந்தன முல்லை, ஜாதி சந்தன முல்லை, பவள மல்லி, துளசி இந்தப் பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து பக்தர்கள் பெருமாளின் அருள் பெறலாம்.

    கோவில் வழிபாடு முறை

    முதலில் துஜஸ்தம்பத்தில் (கொடிமரம்) நமஸ்காரம் செய்துவிட்டு அப்படியே ஸ்ரீராமர் சன்னதி சென்று பெரிய பிரகாரம் சென்று ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வைகுண்ட ஏகாதசி மண்டபம் வழியாக துஜஸ்தம்பம் வழியாக பிரதட்சனமாக கருடனை தரிசித்து பிறகு கட்டகோபுரம் சென்று துவாரபாலகர் முன்பு வணங்கிவிட்டு ஆழ்வார் சன்னதி சென்று தரிசித்துவிட்டு சக்கரத்தாழ்வார் சன்னதி தரிசித்து பிறகு பன்னீர் மரத்தடியில் பெருமாள் விமான (வேதாமோத விமானம்) சேவித்த பிறகு ஸ்ரீபரிமளரங்க நாயகியை தரிசித்து உட்பிரகாரம் சென்று ஸ்ரீ ஆண்டாள்,  ஸ்ரீ சேனை முதலியார், ஸ்ரீ நரசிம்மன், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன் சேவித்துவிட்டு துவார பாலகர்கள் சேவித்து பிறகு ஸ்ரீபரிமள ரெங்கனை சேவிக்க வேண்டும்.

    புரட்டாசி வழிபாடுகள்

    திரு இந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இதனால் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
    புரட்டாசி மாதத்தில் தாயார் நவராத்திரி உற்சவம், விஜய தசமியன்று பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்புபோடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். மிகவும் பிரசித்திபெற்ற இந்த விழாக்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    பாவம் போக்கும் ஆலயம்


    சந்திரனுக்கு மற்ற தலங்களில் பாவ விமோசனம் கிடைத்தாலும் திருப்தி அடையவில்லை. தன் மீது எந்த சாபமும் ஒட்டியிருக்கக் கூடாது. என்றெண்ணி தாயாரான புண்டரீக வல்லியிடம் தன் வேண்டுகோளைச் சொல்ல பெருமாளும் தாயாரும் சேர்ந்து சந்திரன் மனக்குறையை போக்கியதாகச் சொல்கிறார்கள்.
    இதனால்தான் இங்குள்ள தாயாருக்கு சந்திரபாப விமோசனவல்லி என்ற பெயர் ஏற்பட்டது. பெண் வாரிசு பிறக்கவில்லையே என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து சாந்தி செய்தால் குறை விலகிவிடும். மற்ற தலத்திற்குச் சென்றும் - பாபம் தீரவில்லை என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து தங்களது பாபம், தங்கள் குடும்பத்தின் பாவம், முன்னோர்கள் செய்த பாபம் அனைத்தையும் விலக்கிக் கொள்ள முடியும்.
    பழமையும், புதுமையும் இணைந்தது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விட்டிலாபுரம் பாண்டுரங்கர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பழமையும், புதுமையும் இணைந்தது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விட்டிலாபுரம் பாண்டுரங்கர் ஆலயம். வடநாட்டில் பண்டரிபுரம் இருப்பது போல, இங்கு ‘தென் பண்டரிபுரம்’ என்று அழைக்கப்படுவதுதான் இந்த விட்டிலாபுரம். வட பண்டரிபுரத்திற்குச் சென்று நிறைவேற்ற முடியாத காரியங்களை, இந்த ஆலயத்தில் செய்து பலன் பெறலாம்.

    தல வரலாறு :

    விஜய நகரப் பேரரசு சிறப்புற்று இருந்த காலம். அவர்களின் பிரதிநிதிகள் பல்வேறு இடங்களில் ஆட்சிபுரிந்து வந்தனர். விட்டலராயர் என்ற மன்னன், தென் பகுதியின் பிரதிநிதியாக தாமிரபரணி நதிக்கரையில் முறப்பநாட்டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தார். அவர் பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்க விட்டலர் மீது மிகவும் பக்தி கொண்டவர். ‘தினமும் அவரை நேரில் சென்று வணங்க வேண்டும்’ என்று விருப்பம் கொண்டார். ஆனால் அலுவல் காரணமாக அவரால் வடநாடு செல்ல முடியவில்லை.

    திடீரென்று ஒருநாள் மன்னனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ‘மக்கள் அனைவருக்கும் வளமான வாழ்வு தர, இறைவனால்தான் முடியும். அதுவும் பாண்டுரங்கனால்தான் முடியும். எனவே பாண்டுரங்க விட்டலருக்கு இங்கு ஒரு கோவில் கட்ட வேண்டும்.’

    அந்த நாள் வரும் வரை பாண்டுரங்கரை நினைத்து தியானம் செய்யத் தொடங்கினார். ஒருநாள் மன்னனின் கனவில் தோன்றிய பாண்டுரங்கர், “மன்னா! தாமிரபரணி ஆற்றங்கரையில் எலுமிச்சை பழம் ஒன்று மிதக்கும். அதன் பின்னால் சென்றால் ஓரிடத்தில் அந்த பழம் சுழன்று, தண்ணீரில் அப்படியே நிற்கும். அங்கே தோண்டினால் என்னுடைய விக்கிரகம் கிடைக்கும். அப்போது தலைக்கு மேலே ஒரு கருடன் சுற்றும். அவர் வழிகாட்டுதல்படி மேற்கு பகுதிக்கு சென்று, கருடன் அடையாளம் காட்டும் இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்து வணங்கு” என்று கூறி மறைந்தார்.

    பாண்டுரங்கர் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த மன்னனுக்கு இது மகிழ்ச்சியைத் தந்தது. தாமிரபரணி நதிக்கரையில் தன் வீரர்களுடன் சென்றார். அப்போது தாமிரபரணி ஆற்றில் ஒரு எலுமிச்சை பழம் மிதந்து சென்றது. மன்னனும், படைவீரர்களும் அந்தப் பழத்தைப் பின் தொடர்ந்து சென்றனர். அது ஒரு இடத்தில் சுழன்று நின்றது. அதன் மேல் கருடன் வட்டமிட்டது. அங்கு தோண்டியபோது, பாண்டுரங்கனின் உற்சவர் திருமேனி கிடைத்தது. பின்னர் கருடன் சென்ற பாதையை பின்தொடர்ந்து, பாண்டுரங்கனை நெஞ்சோடு அணைத்தபடி நடந்து சென்றார் மன்னன்.

    தொடர்ந்து கருடன் ஓரிடத்தில் அமர்ந்து இடம் காட்டிய பகுதியில், பாண்டுரங்கனை பிரதிஷ்டை செய்து ஆலயத்தை உருவாக்கினார். ஆலயத்தைச் சுற்றி ஊர் உருவானது. மன்னனின் பெயரிலேயே ‘விட்டிலாபுரம்’ என்று அந்த ஊர் அழைக்கப்படலாயிற்று. கோவில் உருவானதும் மன்னன் தினமும் அங்கு சென்று பூஜைகளை செய்து வந்தார். வட பண்டரிபுரம் செல்ல முடியாதவர்கள், இங்கு வந்து வழிபட்டாலேயே அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்.

    இங்குள்ள மூலவர் ‘பாண்டுரங்க விட்டலர்’ என்ற திருநாமத்துடன் கிழக்குத் திசை நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். அருகில் ருக்மணி, சத்யபாமா வீற்றிருந்து அருள்கிறார்கள். மன்னன் கண்டெடுத்த உற்சவமூர்த்தி ‘பாண்டுரங்கர்’ என்ற திருநாமத்துடன், இரண்டு திருக்கரங்களை இடுப்பிலும், மற்ற இரு கரங்களில் சங்கு, சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். உற்சவரின் அருகில் ருக்மணி, சத்யபாமா, பூமாதேவி, ஸ்ரீதேவி, நீலாதேவி ஆகியோரும் வீற்றிருக்கிறார்கள்.

    கோவிலின் முன்பக்கம் முதலில் இருப்பது 16 தூண்களைக் கொண்ட மண்டபம். அடுத்து பெரிய மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம். மிக உயரமான இக்கொடிமரம் மூலவரின் அனுக்கிரகத்தை வெளிப்படுத்துகிறது. அடுத்து கருடாழ்வார் சன்னிதி மேற்கு நோக்கி உள்ளது. ஆலயத்தின் உள்ளே ருக்மணி, சத்யபாமா, சேனை முதல்வர், உடையவர்களுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. ஆலய தூண்களில் சிறு சிறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    இங்கு மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா, முற்காலத்தில் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது. இந்த கோவில் பூலோக வைகுண்டமாக போற்றப்படுவதால் இங்கு பரமபத வாசல் கிடையாது. விட்டலாபுரத்தில் நம்மாழ்வார் விக்கிரகம் எழுந்தருளிய காலத்தில் இக்கோவில் மிகச் சிறப்பாக விளங்கியுள்ளது. இசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அரங்கேற்றத்துக்கு முன்பு, பாண்டுரங்க விட்டலரை வணங்கிச் சென்று தங்களது அரங்கேற்றத்தினை நடத்துகிறார்கள்.

    இங்கு இறைவனுக்கு படைக்கப்படும் திரட்டுப்பால், பால்பாயசம் மிக விசேஷம். திருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் இக்கோவிலில் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள். கல்வி -கேள்விகளில் குழந்தைகள் சிறந்து விளங்க சில பக்தர்கள் பால்பாயசம் அளித்தும் வழிபடுகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் மன்னன் வேண்டுகோளை ஏற்று, தன் திவ்ய சொரூபத்துடன் அர்ச்சாவதாரம் கொண்டு எழுந்தருளியுள்ள திருமால், கிருதயுகத்தில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்டவர் என்று சொல்கிறார்கள். திரேதாயுகத்தில் முதலையால் துன்புற்ற கஜேந்திரனால் பூஜிக்கப்பட்டார். துவாபரயுகத்தில் பிரகஸ்பதியால் அர்ச்சரிக்கப்பட்டார். இந்த கலியுகத்தில் நமக்கும் இந்த இறைவனை வழிபட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    தடைகளை தாண்டி எழுந்த ஆலயம் :

    இந்த ஆலயத்தைக் கட்டிய மன்னன், முதலில் இதை வடஇந்திய பாணியில் உள்ள பாண்டுரங்கன் ஆலயத்தைப் போலவே கட்ட முயற்சி செய்திருக்கிறார். இதற்காக தன் படைவீரர்களை வடக்கே அனுப்பி அங்குள்ள சிற்பிகளை அழைத்து வர ஆணையிட்டார். ஆனால் அவர்கள் வருவதற்கு கால தாமதம் ஆனது. எனவே இங்குள்ள சிற்பிகளைக் கொண்டு ஆலயத்தின் உள்ளே உள்ள ருக்மணி சன்னிதியை அற்புதமாகவும், மிக வேலைப் பாட்டுடன் கட்டி முடித்தார். மூலவர் கருவறையைக் கட்ட முயன்ற போது திருவாங்கூர் மகாராஜா, விஜயநகரப் பேரரசுக்குத் கட்டவேண்டிய கப்பத் தொகையைக் கட்டாததால் அந்த மன்னன் மீது விட்டல் ராஜா படையெடுக்க வேண்டியதாயிற்று.

    இதனால் மற்ற பகுதிகளை அவசர அவசரமாக கட்டி முடித்தார். மன்னன் இந்தக் கோவிலை 1547-ல் கட்டியதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. போர்கள் பல ஏற்பட்ட காரணத்தினால் இக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்படவில்லை என்று சொல்கிறார்கள். பிரமாண்டமான இந்த ஆலயம், தற்போதும் ராஜகோபுரம் இன்றியே காட்சியளிக்கிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம் :

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் விட்டிலாபுரம் கிராமம் உள்ளது. திருநெல்வேலி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் செய்துங்கநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து டவுண் பஸ் வசதியும் உள்ளது.
    பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள திருவிடைக்கழி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில்.
    முருகப்பெருமான் பாவ விமோசனம் பெற்றது, திருப்பல்லாண்டு பாடப்பெற்ற தலம், அதைப் பாடிய சேந்தனார் முக்தி பெற்ற தலம், ஆண்டுதோறும் புரட்டாசி மாத முதல் வெள்ளிக்கிழமை பாதயாத்திரை மேற்கொள்ளப்படும் கோவில் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள திருவிடைக்கழி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில்.

    தமிழ்கடவுள் முருகப்பெருமானை தனித்துவம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாகக் கூறலாம். இந்து மதத்தினர் ஒரு காலகட்டத்தில் தங்களுக்குள் ஆறு பிரிவாக பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொருவரை கடவுளாக வரித்துக்கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். இவர்களில் முருகப்பெருமானை கடவுளாக வழிபட்ட அமைப்புக்கு ‘கவுமாரம்’ என்று பெயர். பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு திருவேரகம் என்னும் பழனி மலையேறிய பெருமானுக்கு அவரது பக்தர்கள் குன்றுதோறும் கோவில்களை கட்டி வழிபட்டனர். குன்றுகள் இல்லாத இடங்களிலும் கூட முருகப்பெருமானுக்கு சிறப்பு மிக்க பல ஆலயங்கள் அமைந்துள்ளன. அதில் ஒன்றுதான் திருவிடைக்கழி முருகப்பெருமான் கோவில்.

    முருகப்பெருமான், தான்செய்த பாவத்திற்கு விமோசனம் பெறுவதற்காக, சிவனை வழிபட்டு பேறுபெற்ற தலம் இதுவாகும். இந்தத் திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூர் மற்றும் தில்லையாடிக்கு அருகிலுள்ளது. புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை சிதம்பரத்தில் இருந்து பாதயாத்திரையாக இந்த முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபடும் வழக்கம் கடந்த 38 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

    முசுகுந்த சக்கரவர்த்தி என்னும் சோழ மன்னன் இவ்வாலயத்தைக் கட்டியதாக தலவரலாறு கூறுகிறது. ஆனால் காலத்தை சரியாக கூறமுடியவில்லை. இத்தலம் முற்காலத்தில் ‘மகிழ்வனம்’ என்றும், ‘குராப்பள்ளி’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் பல கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் வாயிலாக இந்தப் பகுதியில் பல மடங்கள் இருந்த விவரமும், அதன்மூலம் நாள்தோறும் அன்னதானம் பல ஆண்டுகள் நடைபெற்று வந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டதும் செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டில் முருகப்பெருமானுடைய பெயர் ‘திருக்குராத்துடையார்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

    தலவரலாறு :

    திருச்செந்தூர் சூரனை வதம் செய்வதற்கான பணியில் இருந்தார் முருகப்பெருமான். அப்போது சூரனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன், பித்ரு கடன் செய்ய வேண்டி போரில் இருந்து பின் வாங்கி, தரங்கம்பாடி கடலில் மீன் உருவம் எடுத்து மறைந்தான். இதையறிந்த முருகப்பெருமான், அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம் செய்தார். ஹிரண்யாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவனைக் கொன்ற முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது.

    அந்தப் பாவத்தில் இருந்து விமோசனம் அடைவதற்காக தரங்கம்பாடி அருகில் உள்ள சிவாலயத்தின் குரா மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். இதையடுத்து அவருக்கு பாவ விமோசனம் கிடைத்தது. தன் மகனான குமரனை, இந்தத் தலத்திலேயே இருந்து அருள்புரியும்படி சிவபெருமான் கேட்டுக் கொண்டார். மேலும் அவருக்கு பின்புறத்திலேயே தானும் அமர்ந்தார் என்பது தல வரலாறு. ஹிரண்யாசுரனை கொன்ற பாவம் கழிந்த தலம் என்பதால், இதற்கு ‘விடைக்கழி’ என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

    திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முருகப்பெருமான் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முருகனின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர, கந்தனின் காலடிபட்ட தலங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று முருகப்பெருமான் வள்ளி யை மணம்புரிந்த வள்ளிமலை. மற்றொன்று பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் இயற்றிய இந்த திருவிடைக்கழி என்பது சிறப்புக்குரிய விஷயமாகும்.

    முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். நவக்கிரகங்கள் இல்லாத இந்த ஆலயத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இத்தல முருகனை வழிபட்டாலேயே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகிவிடும் என்கிறார்கள்.

    இத்திருத்தலத்தில் ‘சர்வமும் சுப்ரமணியம்’ என்ற வகையில் பிரதோஷ நாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் என அனைத்து மூர்த்திகளும், வலது திருக்கரத்தில் வஜ்ரவேலுடன் சுப்ரமணிய சுவாமி சொரூபமாகவே காட்சிஅளிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னிதியில் உள்ள சிவசண்டிகேஸ்வரரும், குக சண்டிகேஸ்வரரும் தங்கள் திருக்கரத்தில் மழுவை ஏந்தாமல், வஜ்ர வேலை ஏந்திக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் 16 விநாயகர் மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக, கோவில் கொடி மரத்தின் அடியில் விநாயகர் மட்டுமே காட்சி தருவார். ஆனால், இங்குள்ள கொடி மரத்தின் கீழ் விநாயகப்பெருமானுடன் வேலவனும் காட்சி தருவது தனிச்சிறப்பு.

    கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் நான்கு எல்லைகளிலும் ஐயனார் கோவில்கள் இருப்பதும், இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    மூலவர் முருகப்பெருமான், தெய்வானை. பின்புறம் சிவலிங்கம்

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் வண்ணப் பொலிவுடன் கண்ணுக்கு விருந்தாகக் காட்சி தருகிறது. உள்ளே சென்றால் கொடிமரமும், பலிபீடமும், அடுத்து விநாயகரையும் தரிசிக்கலாம். முன்மண்டபத்தில் திருப்புகழ் பாடல்கள், வேல் விருத்தம் முதலியவை கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

    வலதுபுறம் தெய்வானை தனி சன்னிதியில் தவக்கோலத்தில் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் விநாயகர் சன்னிதி. தலவிருட்சம் ‘குராமரம்’ தழைத்துக் காட்சி தருகிறது. முருகப்பெருமான் சிவபெருமானை சிந்தித்துத் தவம் செய்த இம்மரத்தடியில் பலிபீடம் (பத்ர லிங்கம்) அமைந்துள்ளது. இதற்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. குராமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் மனமும் ஒன்றி, சாந்தமான குணத்தை அடையலாம். தனிச் சன்னிதியில் திருக்காமேஸ்வரர் சிவலிங்க வடிவில் தரிசனம் தருகிறார். கருவறையைச் சுற்றி முன்புறம் ஸ்படிக லிங்கமும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், பின்புறம் பாபநாசப் பெருமானும், வடக்கில் வசிஷ்ட லிங்கமும் காட்சி தரும் அமைப்பினை இத்தலத்தில் மட்டுமே தரிசிக்கலாம்.

    பிரகார வலம் முடித்து உள்வாசலைத் தாண்டி இடதுபுறம் செல்லும்போது சந்திரன், அருணகிரிநாதர், சேந்தனார் மூர்த்தங்களை வழிபடலாம். உட்சுற்றில் நவசக்திகளும், விநாயகரும், சுப்பிரமணியரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். அடுத்தாற்போல் நாகநாதலிங்கம், கஜலட்சுமி, வில்லேந்திய முருகர் உற்சவமூர்த்தம் ஆகியவற்றை வணங்கி தொழலாம்.

    இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ்உள்ள இவ்வாலயத்தில் தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. சிவன் மற்றும் முருகனுக்கான ஆலயங்களில் நடைபெறும் அனைத்து உற்சவங்களும் மிகவும் விமரிசையாக நடத்தப்பெறுகிறது. தில்லையில் பொன்னம்பலக் கூத்தனுக்குத் திருவாதிரை நாளில் களி நிவேதனம் செய்தவரும், திருப்பல்லாண்டு அருளி திருத்தேரினை தில்லை திருவீதிகளில் ஓடவைத்தவருமான சேந்தனார் இத்தலத்தில் திருக்குரா மரத்தின் அடியில் முக்தி பெற்றது ஒரு தைப்பூச நன்னாள். அன்றைய தினம் இவருக்கு அபிஷேக, ஆராதனை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    தில்லையில் இருந்து திருக்குராவடி :

    சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி செல்லும் 50 கிலோமீட்டர் தூர பாதயாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் புறப்படுகிறது. வெள்ளிக்கிழமை புறப்படும் பாதயாத்திரை, சனிக்கிழமை இரவு திருவிடைக்கழி முருகன் கோவிலை அடையும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் எதிரில் உள்ள மண்டபத்தில் இருந்து பால் காவடி எடுத்துச் சென்று முருகப்பெருமானுக்கு, குராமரத்தடியில் வைத்து மகா அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். இந்த பாதயாத்திரை வழிபாட்டில் கடலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, பல வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் சிதம்பரம் வருகை தந்து இங்கிருந்து பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுகின்றனர். இந்த ஆண்டுக்கான பாதயாத்திரை வழிபாடு இன்று (20-9-2019) வெள்ளிக்கிழமை சிதம்பரத்தில் தொடங்குகிறது.

    அமைவிடம் :

    சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடவூருக்கு தென்மேற்காக திருவிடைக்கழி அமைந்துள்ளது. திருக்கடவூரில் இருந்து தில்லையாடிக்குச் செல்லும் வள்ளியம்மை நினைவு வளைவு சாலைவழியாக 3 கி.மீ. தெற்காகச் சென்று மேற்காக திரும்பினால் இத்திருத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து மேற்குறிப்பிட்ட வழியாகவும், செம்பொன்னார்கோயில் வழியாகவும் இயக்கப்படும் பேருந்துகள் ஆலய வாசல் வரை செல்லும்.

    நெய்வாசல் நெடுஞ்செழியன் 
    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் என்று சொல்வார்கள். புரட்டாசி மாதத்தில் 30 நாட்களும் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் செல்வ செழிப்பு உள்பட அனைத்து பலன்களும் ஒருங்கே கிடைக்கும் என்பது ஐதீகம்.

    குறிப்பாக சனிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன்கள் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் புதன் வீடாகிய கன்னி ராசியில் சூரிய பகவான் அமர்கிறார். புதன் கிரகமானது பெருமாளை குறிக்கும். இந்த கால கட்டத்தில் உடல் வெப்பநிலை பொதுவாக அதிகரிக்கும். அதை சமப்படுத்தவே நமது முன்னோர்கள் துளசி தீர்த்தத்தை பயன்படுத்தினார்கள்.

    அசைவத்தையும் தவிர்த்தார்கள். அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றிணைந்து பயன் தரும். புரட்டாசியில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது நமது மனதையும், உடலையும் மேம்படுத்தும். இதை கருத்தில் கொண்டு உங்களுக்கு மாலைமலர் தினமும் ஒரு திவ்யதேசத்தை அறிமுகம் செய்கிறது.

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவான ஸ்ரீரங்கத்தில் அமை யப்பெற்றுள்ள ஏழு சுற்று மதில்களுக்குள் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சிறிய தீவு நகரமாக திகழ்கிறது ரெங்கநாதர் கோவில்.

    இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது. ஸ்ரீரங்கம் கோவில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதா கும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.

    ராமர் இந்த விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷ ணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந் தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்து விட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தும் முடியாததால் கலங்கினான்.

    அங்கு ஆண்டுவந்த தர்ம வர்ம சோழன் ஆறுதல் கூறி னான். அரங்கநாதரும் காவி ரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி” பள்ளி கொண்ட ருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோவில் எழுப்பி வழிபாடு செய்தான்.

    தர்மவர்ம சோழன் கட் டிய ஸ்ரீரங்கம் கோவில் காவிரியின் வெள்ளப்பெருக் கினால் மண்ணில் புதை யுண்டு மறைந்தது. பின்னர் கிளிச்சோழன் ஒரு கிளி யின் உதவியுடன் மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டு பிடித்தான். “வைகுந்தத்திலுள்ள விஷ் ணுவின் கோவில் இருந்த இடம் இதுதான். அக்கோ விலை இப்போதும் இங்கு காணலாம் என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்ப கனவில் சொல்லிக் கொண்டிருந்தது. அதன்படி விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோவில் எழுப்பினான். இக் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

    புரட்டாசி சனிக்கிழமை மூலஸ்தான சேவை

    குறிப்பாக பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி சனிக்கிழமைகளில் இக்கோ விலில் தரிசனம் செய்வது திவ்யதேச பெருமாளை வழிபட்டதற்கு சமம். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நம்பெருமாள் (ரெங்கநாதர்), தாயார் மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் மூலஸ்தான சேவை நேர விவரங்கள் தெரிவிக்கப்பட் டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    புரட்டாசி சனிக்கிழமைகள் ஆன வருகிற 21, 28-ந்தேதி மற்றும் அக்டோபர் 5, 12-ந்தேதிகளில் பெரிய சன் னதி மூலஸ்தான சேவையையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு பொங்கல் பூஜை, காலை 6.30 மணி முதல் மாலை 5 மணி வரை சேவை நேரம், மாலை 5 மணி முதல் 6.45 மணிவரை பூஜை காலம் என்பதால் சேவை இல்லை. மாலை 6.45 மணி முதல் இரவு 8.45 மணிவரை சேவை நேரம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் விஸ்வரூப சேவை கிடையாது.

    புரட்டாசி சனிக்கிழமைக ளான வருகிற 21, 28-ந்தேதி மற்றும் அக்டோபர் 12-ந் தேதி ஆகிய நாட்களில் தாயார் சன்னதி மூலஸ்தான சேவையையட்டி காலை 5.30 மணிக்கு பொங்கல் பூஜை நடக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 5.30 மணிவரை சேவை நேரம் ஆகும். மாலை 5.45 மணி முதல் மாலை 6.45 மணி வரை பூஜை காலம் என்பதால் சேவை இல்லை. இரவு 7 மணி முதல் 9 மணி வரை சேவை நேரமாகும். இரவு 9 மணிக்கு மேல் சேவை கிடையாது.

    சக்கரத்தாழ்வார் சன்னதி மூலஸ்தான சேவை நேரம் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணிவரையிலும், 12.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை பூஜை காலம் என்பதால் சேவை இல்லை. பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சேவை நேரம் ஆகும். மாலை 5.45 மணி முதல் 6.45 மணிவரை சேவை இல்லை. இரவு 7 மணி முதல் 9 மணிவரை சேவை நேரம் ஆகும். இரவு 9 மணிக்கு மேல் சேவை கிடையாது. விஸ்வ ரூப சேவை கிடையாது. சேவை நேரங்களில் 30 நிமிடம் முன்னதாகவே கதவுகள் சாத்தப்படும்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழை திருநாள் 9 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் தொடங்கியுள்ளது.

    இதில் நம்பெருமாள் அலங்காரம் வகையறா அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூலிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். எனவே இதற்கு நூலிலைத் திருவிழா என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவ்விழாவே ஸ்ரீரங்கத்தில் திருப்பவித்ர உற்சவம் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.

    பவித்ர உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்க, உபாங்க சேவை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    பவித்ர உற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 15-ந்தேதி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவை கண்டருளுகிறார். உற்சவத் தின் 9-ம் நாளான 17-ந் தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது.

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது சவுமியநாராயணர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது சவுமியநாராயணர் கோவில். இந்த கோவில் நாராயண மந்திரத்தை ராமானுஜர் வெளிப்படுத்திய ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 95-&-வது தலம், நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலத்தை பெருமாள், தேவர்களுக்கு காட்டியருளிய இடம். இந்திரன் பூஜித்த சவுமியநாராயணர் விக்கிரகம் உற்சவராக இருக்கும் ஆலயம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது சவுமியநாராயணர் கோவில்.

    இடம் தேர்வு

    பிரம்மதேவரிடம் வரம் பெற்ற இரண்யகசிபு, தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி மகாவிஷ்ணுவை வேண்டினர் தேவர்கள். இதையடுத்து திருமால், இரண்ய கசிபுவை வதம் செய்வது பற்றி ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனால் தேவர்கள், ‘இரண்யகசிபுவின் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்றனர்.

    அதன்படி இத்தலத்தை தேர்வு செய்தார் திருமால். அதற்கு ஒரு காரணம் இருந்தது. இந்தப் பகுதியில் கதம்ப மகரிஷி என்பவர் விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவம் இருந்து வந்தார். அவர் தன்னுடைய தவத்திற்கு எந்த வித தொந்தரவும் இருக்கக் கூடாது என்று வரம் பெற்றிருந்தார். எனவேதான் இந்த இடத்தை திருமால் தேர்வு செய்தார்.

    4 கோலங்கள்

    ஆலோசனை நடந்தபோது, தான் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்ய கசிபுவை வதம் செய்யப் போவதாக விஷ்ணு தெரிவித்தார். இதையடுத்து அந்த அவதாரத்தை தங்களுக்கு காட்டியருள வேண்டும் என்று தேவர்களும், கதம்ப மகரிஷியும் கோரிக்கை வைத்தனர். அதன்படி நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே, இறைவன் இத்தலத்தில் தேவர்களுக்கு தன்னுடைய நரசிம்ம அவதாரத்தை காட்டியருளினார். பின்னர் அவர்களுக்கு நின்ற, நடந்த, இருந்த, கிடந்த என நான்கு கோலங்களைக் காட்டி, இங்கு எழுந்தருளினார்.

    இந்த ஆலயத்தின் விமானம் அஷ்டாங்க விமானமாகும். இது ஓரிரு கோவில்களிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இந்த விமானத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் மூன்று தளங்களாக உள்ளது. விமானத்தின் வடபக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது விசேஷமாகும். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

    தனி சன்னதி

    இத்தல இறைவனான சவுமிய நாராயணருடன், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இருக்கிறார்கள். மேலும் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, இந்திரன் ஆகியோரும் உள்ளனர். திருமாமகள் என்ற பெயரில் தாயா ருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் சந்தான கிருஷ்ணன் என்ற பெயரில் கிருஷ்ணன் வீற்றிருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

    இத்தல இறைவனை பெரியாழ் வார், திருமங்கையாழ்வார், திருமழிசை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்து வழிபட்டுள்ளனர்.

    விளக்கு வழிபாடு

    இந்த ஆலயத்தில் விளக்கு நேர்த்திக் கடன் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அந்த விளக்கில் காசும், துளசியும் வைத்து சிறு பெட்டியில் வைத்து மூடி வீட்டின் பூஜை அறையில் வைக்கிறார்கள்.

    இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருள்வதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், மாசி தெப்ப திருவிழாவின் போது, இந்த விளக்குடன், மற்றொரு நெய் விளக்கை தீர்த்தக் கரையில் ஏற்றிவைத்து வழி படுகின்றனர். அந்த நேரத்தில் புதியதாக வேண்டுதல் செய்ய வரும் பக்தர்கள், இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.

    புரட்டாசி சனியில் சிறப்பு தழுகை

    புரட்டாசி சனிக்கிழமைகளில் சவுமிய நாராயணர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சனிக்கிழமை சவுமிய நாராயணருக்கு திருமஞ்சனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சனிக் கிழமைகளில் பக்தர்கள் சிறப்பு தழுகை (சர்க்கரைப் பொங்கல்) செய்து சவுமிய நாராயணரை தரிசிப்பார்கள். பின்னர் தழுகையை குடும்பத்தின ருக்கும், கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கும் கொடுப்பார்கள். வசதி படைத்தவர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கு வார்கள். புரட்டாசி சனிக் கிழமைகளில் மட்டும் உலக நன்மைக்காக சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது.

    தினமும் 4 கால பூஜை

    சவுமிய நாராயணர் கோவிலில் தினமும் காலை 7 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சையும் இரவு 7.30 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. சித்திரை, ஆடி, மாசி மாதங்களில் நடைபெறும் விழாக்களின் 4&வது நாளில் தங்க கருட சேவை நடைபெறும்.

    காரைக்குடியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பத்தூர் சென்று, அங்கிருந்து 6 கிலோமீட்டர் சென்றால் திருக்கோஷ் டியூரை அடையலாம்.
    கீழக்காட்டூர் தலத்து இறைவன் ‘வஜ்ரதம்பேஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். இறைவனின் மற்றொரு பெயர் ‘வைரநாதர்.’ இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆசை என்பது அனைவருக்கும் வருவதுதானே.

    உமாதேவிக்கு கயிலாயத்தில் பொழுது போகவில்லை. பந்து விளையாட ஆசைப்பட்டாள். அவள் தன் ஆசையை சிவபெருமானிடம் சொல்ல. அவர் நான்கு வேதங்களையும் ஒரு பந்தாக்கி உமாதேவியிடம் கொடுத்தார்.

    தன் தோழிகள் லட்சுமி, சரஸ்வதியுடன் பந்து விளையாடத் தொடங்கினாள், பார்வதி. நேரம் போனதே தெரியவில்லை. அஸ்தமான நேரம் வந்தும் ‘அம்மையின் விளையாட்டிற்கு இடையூறு வந்து விடுமே’ என்றெண்ணிய சூரியன் மறையாது ஸ்தம்பித்து நின்றான்.

    நிலைமையை உணர்ந்த சிவபெருமான் தேவி பந்தாடும் இடத்திற்கு வந்தார். அவர் வந்ததை கூட கவனிக்காமல் தேவி தன் தோழிகளுடன் பந்தாடிக் கொண்டிருந்தாள்.

    சிவபெருமானுக்கு கோபம் ஏற்பட்டது. பந்தை எட்டி உதைத்தார். அது அந்தரத்தில் நின்றது. பார்வதியை பூலோகத்தில் பசுவாகப் பிறக்கக் கடவது என சபித்தார்.

    சாபம் பெற்ற பார்வதி, பூலோகம் வந்து பசுவாக அவதரித்தாள். அங்குள்ள கொன்றைக் காட்டில் சரக்கொன்றை மர நிழலில் சுயம்புலிங்கமாக இருந்த புற்றின் மீது பாலைச் சொரிந்து வழிபட்டாள். ஒரு நாள் பசுவின் கால் குளம்பு புற்றின் மீதுபட பசுவாக இருந்த தேவி சாப விமோசனம் பெற்று சுய உருவம் அடைந்தாள்.

    சிவபெருமான் உமாதேவியை தேவர்கள் புடை சூழ மணந்து கொண்டு பசுபதீஸ்வராய் காட்சி தந்தார்.

    இந்தச் சம்பவம் நடந்த தலம் ‘பந்தநல்லூர்’ என தற்போது அழைக்கப்படும் ‘பந்தனை நல்லூர்’ ஆகும்.

    இறைவனின் திருமணத்தைக் காணவேண்டும் என்று புறப்பட்ட இந்திரன், அவசரத்தில் ஆன்மார்ந்த மூர்த்தியை எடுத்துவர மறந்துவிட்டான். எனவே பந்தநல்லூருக்கு மேற்கே உள்ள கீழக்காட்டூர் என்ற பெயர் கொண்ட கருப்பஞ்சோலைக்கு சென்று தனது வஜ்ராயுதத்தை நட்டு அதில் சுவாமியை ஆவாஹனம் செய்து பூஜித்தான். அவனது பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் வெளிப்பட்டு அருளாசி வழங்கினார். இந்திரனின் வேண்டுகோளின்படி, எப்போதும் வஜ்ராயுதத்தில் எழுந்தருளிப்பதாக உறுதி தந்தார்.

    அப்போது அருகே இருந்த கரும்பு ஒன்று முற்றி முதிர்ந்து அதன் சாறு தரையில் வடிந்தது. அந்தக் கரும்பு சாற்றில் இருந்து உமாதேவி தோன்றி இந்திரனுக்கு அருள்பாலித்தாள்.

    இந்த சம்பவம் நடந்த இடம் தஞ்சை மாவட்டம் கீழக்காட்டூர். அன்று முதல் இத்தலத்து இறைவன் ‘வஜ்ரதம்பேஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். இறைவனின் மற்றொரு பெயர் ‘வைரநாதர்.’ இறைவி ‘இட்சுரநாயகி’ என அழைக்கப்படுகிறாள். இறைவியின் இன்னொரு பெயர் ‘கரும்பாயி.’

    ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நான்கு புறமும் திருமதில் சூழ கீழ்புறத்திலும் தென்புறத்திலும் வாசல் கதவுகள் உள்ளன. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் பலிபீடமும் நந்திதேவரை அடுத்து முன் மண்டபத்தில் இடதுபுறம் நால்வர் திருமேனிகள் உள்ளன. அடுத்து மகா மண்டபம் உள்ளது. மண்டபத்தின் வாசலில் விநாயகரும், பிரம்மாவும் அருள்பாலிக்க, அம்மன் இட்சுர நாயகி தென்புறம் நோக்கி அருள்பாலிக்கிறாள்.

    தேவக்கோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தியும், வடக்கே துர்க்கை திருமேனிகளும் உள்ளன. உட்பிரகாரத்தில் கிழக்கே விநாயகர், சுப்ரமணியர், கஜலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். கோவிலின் தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் மண்ணியாறு.

    இங்கு தினசரி நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன். விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, திருவாதிரை நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    தங்களது திருமணத்தைக் காணவந்த இந்திரனுக்கு அருள்புரிந்த இத்தலத்து இறைவனும் இறைவியும் தங்களை நாடி வந்து துதிப்போரின் திருமணத்தையும் அவர்தம் மக்களின் திருமணத்தையும் குறையின்றி நடத்தி வைக்கிறார்கள் என அனைவரும் நம்புகின்றனர்.

    ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    தஞ்சை மாவட்டம் திருப்பணந்தாள் - வைத்தீஸ்வரன் கோவில் பேருந்து தடத்தில் திருப்பனந்தாளில் இருந்து 5 கி.மீ தொலைவில் கீழக்காட்டூர் உள்ளது.
    சக்கரத்தாழ்வார் பரிபூரண சக்தியோடு அமர்ந்திருக்கும் தலம், பிரம்மன் வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கிய பூமி என பல்வேறு சிறப்புக்கள் கொண்டதாக, மதுரை மாவட்டத்தில் உள்ள திருமோகூர் திருத்தலம் விளங்குகிறது.
    அமிர்தத்தை தேவர்களுக்கு அளிக்க மோகினி அவதாரம் எடுத்த தலம், புராண கால வரலாறு கொண்ட கோவில், விஸ்வகர்மா எழுப்பிய கோவில், சங்க காலத்திலும், பாண்டிய மன்னர்கள் காலத்திலும் சிறப்புற்று விளங்கிய தலம், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம், நின்ற, கிடந்த கோலம் கொண்ட திருக்கோவில், சக்கரத்தாழ்வார் பரிபூரண சக்தியோடு அமர்ந்திருக்கும் தலம், பிரம்மன் வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கிய பூமி என பல்வேறு சிறப்புக்கள் கொண்டதாக, மதுரை மாவட்டத்தில் உள்ள திருமோகூர் திருத்தலம் விளங்குகிறது.

    புராண வரலாறு :

    கிருத யுகத்தில் துர்வாசரை மதிக்காத குற்றத்திற்காக சாபம்பெற்ற இந்திரன், விமோசனம் பெற்ற தலம், திருமோகூர் திருத்தலம் ஆகும். திருப்பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட அமிர்தத்தைப் பருக அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அதைத் தடுக்க விரும்பிய திருமால், மோகினி வடிவம் எடுத்து, அசுரர்களை திசை திருப்பி, தேவர்கள் அமிர்தம் பருக வழிவகுத்தார். இறைவன் மோகினி வடிவம் எடுத்த தலம் இது என்பதால், ‘மோகினியூர், மோகியூர், மோகன சேத்திரம்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், தற்போது மோகூர் என்று வழங்கப்படுகிறது.

    துவாபர யுகத்தின்போது, இந்தத் தலத்தில் புலஸ்தியருக்கு மோகினி வடிவில் இறைவன் காட்சி தந்து அருளியதாக புராண வரலாறு சொல்கிறது. இங்கு பிரம்மதேவன் தவம் இயற்றியதை பிரமாண்ட புராணத்தில் அறியமுடிகிறது. சங்க காலத்திலேயே இத்தலம் பழையன் என்ற சிற்றரசனின் ஊராகத் திகழ்ந்திருக்கிறது. மோரியர் படை மோகூரைத் தாக்கிய போது, பழையனுக்குத் துணையாக கோசர்கள் நின்று வெற்றி தேடித் தந்தனர். கி.பி. 8, 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாடிப் பரவிய தலம் இது.

    ஆலய அமைப்பு

    கிழக்கு நோக்கிய பிரமாண்ட திருக்கோவில் ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. இடது புறம் மிகப்பெரிய திருப்பாற்கடல் தீர்த்தம். அதன் எதிரே, பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது.

    இந்த ஆலயம் ஸ்ரீதேவி - பூதேவி சமேத காளமேகப்பெருமாள், மோகனவல்லித் தாயார், பள்ளிகொண்ட பெருமாள், ஆண்டாள், கருடாழ்வார், அனுமன், நவநீத கிருஷ்ணர் ஆகிய சன்னிதிகளைக் கொண்டுள்ளது. மூலவர் காளமேகப் பெருமாள் கருவறையைச் சுற்றி இரண்டு திருச்சுற்று மதில்கள் உள்ளன. 108 திவ்ய தேசங்களில் இது 46-வது தலமாக விளங்குகிறது. பாண்டியர்கள், விஜயநகர மன்னர், நாயக்கர்கள், மருதுபாண்டியர்கள் என பல்வேறு மன்னர்கள், இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை வரலாறு கூறுகின்றது. பாண்டிய வளநாட்டில் தென்பகுதியில் அமைந்த ஊராக திருமோகூர் விளங்குகின்றது.

    நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்த தலம் இது. காளமேகப்புலவர் தனிப்பாடலில் புகழ்ந்துள்ளார். அஷ்ட பிரபந்தம் எனும் சிற்றிலக்கியம், அழகிய மணவாள தாசர் எனும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், வடமொழிப் புராணங்கள், பெரும் புலவர்கள் பாடல்கள் என இத்தலத்திற்கு எண்ணற்ற பக்தி இலக்கியங்கள் நிறைந்துள்ளன. இதுதவிர, திருமோகூர் புராணமும் இத்தலத்தைப் புகழ்கின்றது.

    கருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக உயர்ந்த பீடத்தில் உயரமான வடிவில் காட்சியருள்கிறார், காளமேகப்பெருமாள். ரதி, மன்மதன், வில்லேந்திய ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோரது சிலை வடிவங்கள் கருவறையைச் சுற்றி அமைந்துள்ளன. இங்குள்ள கருடன் பெரிய வடிவில் எழிலான தோற்றத்தில் காட்சி தருகிறார்.

    காளமேகப்பெருமாள் கோவில்

    இவ்வாலயத்திற்கு மன்னர்கள் திருப்பணி செய்த விவரங்களைக் கூறும் கல்வெட்டு நிறைய உள்ளன. பிற்கால பாண்டிய ராஜசடையவர்மன் சுந்தர பாண்டியர் காலத்துக் கல்வெட்டு (கி.பி.1251 - 1271), முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் (கி.பி.1268 - 1311) ஆகியோரது கல்வெட்டுகளில் காளமேகப்பெருமாள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த விஜயநகர மன்னனான வீரப்பிரதாப சதாசிவநாயனார் கல்வெட்டுகள், அவர் பல கொடைகள் வழங்கிய செய்தியை சொல்கின்றன. இந்த ஆலயத்தின் தல மரம் வில்வம். தல தீர்த்தம் திருப்பாற்கடல்.

    இந்தக் கோவிலில் தமிழ் வருடப் பிறப்பு, நம்மாழ்வார் தோன்றிய வைகாசி விசாகம், பத்துநாள் பிரம்மோற்சவம், ஆனியில் முப்பழ உற்சவம், புரட்டாசி நவராத்திரி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, மாசியில் கஜேந்திர மோட்சம், பங்குனி உத்திரம் என ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நிறைந்துள்ளன.

    ஆலய சிறப்பு

    * இத்தலத்து தாயார் மோகனவல்லி, விழாக் காலங்களில் கூட வீதி உலா வருவதில்லை. எனவே இந்த தாயாரை ‘படி தாண்டாப் பத்தினி’ என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

    * பொதுவாக, பள்ளிகொண்ட பெருமாள் சன்னிதியில் திருமாலின் பாதத்தில் கைகளால் வருடும் நிலையில் திருமகள் காட்சியளிப்பார். ஆனால் இங்கு திருமகளும், பூமகளும் திருமாலின் பாதங்களுக்கு அருகே சிறு குழந்தைகள் அமர்ந்திருப்பது போல் காலை முன்புறமாக நீட்டி அமர்ந்திருப்பது அரிய கோலமாகும்.

    * வேண்டிய வரம் அருளும் நாதனாக, இத்தலத்தில் காளமேகப்பெருமாள் வீற்றிருக்கிறார். இருப்பினும் இங்குள்ள சக்கரத்தாழ்வாரே பக்தர்களின் நம்பிக்கை பெற்றவராக இருக்கிறார். இவருக்கு பின்புறம் யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். நோய்கள், ஏவல், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை என அனைத்து இடர்களும் நீங்கும் என்பதால், இந்த சக்கரத்தாழ்வாரை வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டத்தில், மதுரை - மேலூர் சாலையில் ஒத்தக்கரையின் அருகே 1 கிலோமீட்டர் தொலைவில் திருமோகூர் உள்ளது. மதுரைக்கு வடகிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

    பனையபுரம் அதியமான் 
    ×