search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில்
    X
    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில்

    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில்

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது சவுமியநாராயணர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது சவுமியநாராயணர் கோவில். இந்த கோவில் நாராயண மந்திரத்தை ராமானுஜர் வெளிப்படுத்திய ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 95-&-வது தலம், நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலத்தை பெருமாள், தேவர்களுக்கு காட்டியருளிய இடம். இந்திரன் பூஜித்த சவுமியநாராயணர் விக்கிரகம் உற்சவராக இருக்கும் ஆலயம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது சவுமியநாராயணர் கோவில்.

    இடம் தேர்வு

    பிரம்மதேவரிடம் வரம் பெற்ற இரண்யகசிபு, தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி மகாவிஷ்ணுவை வேண்டினர் தேவர்கள். இதையடுத்து திருமால், இரண்ய கசிபுவை வதம் செய்வது பற்றி ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனால் தேவர்கள், ‘இரண்யகசிபுவின் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்றனர்.

    அதன்படி இத்தலத்தை தேர்வு செய்தார் திருமால். அதற்கு ஒரு காரணம் இருந்தது. இந்தப் பகுதியில் கதம்ப மகரிஷி என்பவர் விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவம் இருந்து வந்தார். அவர் தன்னுடைய தவத்திற்கு எந்த வித தொந்தரவும் இருக்கக் கூடாது என்று வரம் பெற்றிருந்தார். எனவேதான் இந்த இடத்தை திருமால் தேர்வு செய்தார்.

    4 கோலங்கள்

    ஆலோசனை நடந்தபோது, தான் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்ய கசிபுவை வதம் செய்யப் போவதாக விஷ்ணு தெரிவித்தார். இதையடுத்து அந்த அவதாரத்தை தங்களுக்கு காட்டியருள வேண்டும் என்று தேவர்களும், கதம்ப மகரிஷியும் கோரிக்கை வைத்தனர். அதன்படி நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே, இறைவன் இத்தலத்தில் தேவர்களுக்கு தன்னுடைய நரசிம்ம அவதாரத்தை காட்டியருளினார். பின்னர் அவர்களுக்கு நின்ற, நடந்த, இருந்த, கிடந்த என நான்கு கோலங்களைக் காட்டி, இங்கு எழுந்தருளினார்.

    இந்த ஆலயத்தின் விமானம் அஷ்டாங்க விமானமாகும். இது ஓரிரு கோவில்களிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இந்த விமானத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் மூன்று தளங்களாக உள்ளது. விமானத்தின் வடபக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது விசேஷமாகும். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

    தனி சன்னதி

    இத்தல இறைவனான சவுமிய நாராயணருடன், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இருக்கிறார்கள். மேலும் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, இந்திரன் ஆகியோரும் உள்ளனர். திருமாமகள் என்ற பெயரில் தாயா ருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் சந்தான கிருஷ்ணன் என்ற பெயரில் கிருஷ்ணன் வீற்றிருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

    இத்தல இறைவனை பெரியாழ் வார், திருமங்கையாழ்வார், திருமழிசை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்து வழிபட்டுள்ளனர்.

    விளக்கு வழிபாடு

    இந்த ஆலயத்தில் விளக்கு நேர்த்திக் கடன் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அந்த விளக்கில் காசும், துளசியும் வைத்து சிறு பெட்டியில் வைத்து மூடி வீட்டின் பூஜை அறையில் வைக்கிறார்கள்.

    இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருள்வதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், மாசி தெப்ப திருவிழாவின் போது, இந்த விளக்குடன், மற்றொரு நெய் விளக்கை தீர்த்தக் கரையில் ஏற்றிவைத்து வழி படுகின்றனர். அந்த நேரத்தில் புதியதாக வேண்டுதல் செய்ய வரும் பக்தர்கள், இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.

    புரட்டாசி சனியில் சிறப்பு தழுகை

    புரட்டாசி சனிக்கிழமைகளில் சவுமிய நாராயணர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சனிக்கிழமை சவுமிய நாராயணருக்கு திருமஞ்சனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சனிக் கிழமைகளில் பக்தர்கள் சிறப்பு தழுகை (சர்க்கரைப் பொங்கல்) செய்து சவுமிய நாராயணரை தரிசிப்பார்கள். பின்னர் தழுகையை குடும்பத்தின ருக்கும், கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கும் கொடுப்பார்கள். வசதி படைத்தவர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கு வார்கள். புரட்டாசி சனிக் கிழமைகளில் மட்டும் உலக நன்மைக்காக சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது.

    தினமும் 4 கால பூஜை

    சவுமிய நாராயணர் கோவிலில் தினமும் காலை 7 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சையும் இரவு 7.30 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. சித்திரை, ஆடி, மாசி மாதங்களில் நடைபெறும் விழாக்களின் 4&வது நாளில் தங்க கருட சேவை நடைபெறும்.

    காரைக்குடியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பத்தூர் சென்று, அங்கிருந்து 6 கிலோமீட்டர் சென்றால் திருக்கோஷ் டியூரை அடையலாம்.
    Next Story
    ×