என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
    • இக்கோவில் அம்மன் பரிமளநாயகி.

    மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் செய்யும் புண்ணியங்கள் மற்றும் பாவங்களுக்கு ஏற்ப அவர்களின் வாழ்நாளில் நற்பலன்கள் மற்றும் தண்டனைகளை ஈசன் வழங்குகிறார். அதே நேரத்தில் எதிர்பாராத வகையில் தன்னை அறியாமல் தனது பக்தர்கள் செய்யும் பாவங்களை அவர்களுக்கு தகுந்த நேரத்தில் சுட்டிக்காட்டி மீண்டும் அந்த பாவத்தை அவர்கள் செய்யாமல் தடுக்கிறார். இதன் மூலம் தீய வினைகளில் இருந்து தனது பக்தர்களை காக்கும் ஈசன் வினை தீர்க்கும் ஈசன் என்று அழைக்கப்படுகிறாா்.

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே விற்குடியில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவில் பக்தர்கள் தீய வினைகளை தீர்த்து வைப்பதாக நம்பப்படுகிறது.

    சுயம்பு லிங்கம்

    விற்குடி வீரட்டானேஸ்வரர் கோவில் மூலவர் வீரட்டானேஸ்வரர். தாயார் ஏலவார்குழலி, பரிமள நாயகி. தல விருட்சம் துளசி ஆகும். கோவில் தீர்த்தமாக சக்கர தீர்த்தம், சங்குதீர்த்தம் ஆகிய குளங்கள் உள்ளன. கோவில் அமைந்துள்ள ஊர் திருவிற்குடி என அழைக்கப்பட்டு காலப்போக்கில் தற்போது விற்குடி என அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.

    இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் ராஜகோபுரம் 5 நிலைகளை உடையது. இதன் எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. இது படித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம்.

    நாகலிங்க சிற்பம்

    இக்குளத்தில் தீர்த்தக்கரையில் விநாயகர் கோவில் உள்ளது. கோபுர வாசலை கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலது புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச்சிற்பம் அழகாக உள்ளது. வெளிப்பிரகாரத்தில் பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள்பிரகாரத்தில் வலமாக வரும் போது மகாலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பள்ளியறை, பைரவர், சனிகவான், தனிக்கோவில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், ஞானதீர்த்தம் என அழைக்கப்படும் கிணறு, பிடாரி முதலிய சன்னதிகள் உள்ளன.

    இக்கோவிலில் சலந்தரனைச் சம்ஹாரித்த மூர்த்தி ஜலந்த்தரவதமூர்த்தி என அழைக்கப்படுகிறாா். இக்கோவிலில் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளது. தினமும் 4 கால பூஜைகள் இந்த கோவிலில் நடக்கிறது.

    சொந்த வீடு

    மேலும் இக்கோவிலில் வந்து வழிபடுவோருக்கு விரைவில் சொந்த வீடு கட்டி குடியேறும் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் புதிய வீடு கட்டிக்கொண்டிருக்கும் போது தடை ஏற்பட்டால் விற்குடி வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபட்டு இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தடைகள் நீங்கி விரைவில் நல்ல முறையில் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் என கூறப்படுகிறது. மேலும் முன்னோர்களின் சாபத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால்

    தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    இக்கோவில் அம்மன் பரிமளநாயகி. பிருந்தை என்ற சொல்லுக்கு துளசி என்பது பொருள். கற்பிற்சிறந்த அப்பெண்மணியின் நினைவாக, துளசி தான் இங்கு தல விருட்சம். இந்த கோவில் வாஸ்து தோஷ நிவர்த்தி தலமாகவும் போற்றப்படுகிறது.

    ஜலந்தராசூரன்

    ஒரு முறை இந்திரன், தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்துக்கு வந்தார். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவம் எடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார். இதனால் கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தார். அப்போது சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர், சிவன் என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினார்.

    அப்போது கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியை பாற்கடலில் தெளித்தார் சிவன். அதில் ஒரு அசுர குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரன் என்பதால் இந்த குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.

    வரம் வாங்கினான்

    அவன் பெரியவன் ஆனதும் 3 உலகும் ் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும், தனக்கு சாகாவரமும் வேண்டும் என பிரம்மனிடம் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அப்போது ஜலந்தராசூரன், தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும், என பிரம்மனிடம் வரம் வாங்கினான். இதனால் இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன்பு வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும் என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன் என் மனைவியின் கற்பின் திறனால் எனக்கு அழிவு வராது என சவால் விட்டான்.

    ராமாவதாரம்

    இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், திருமாலே தாங்கள் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். சிவன் கூறியபடி திருமால் செய்ய தனது கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என பிருந்தை நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்தநேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம், நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீங்களும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும், என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது.

    சக்கரத்தை பெற்றார்

    பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீக்குளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது. இந்த துளசியால் மாலை தொடுத்து திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது. அசுரனை அழிக்க காரணமாக இருந்த சக்கரத்தை சிவனிடம் திருமால் கேட்டார். அதை பெறுவதற்காக ஆயிரம் தாமரைகளால் சிவனை பூஜித்தார். சிவனின் திருவிளையாடலால் 2 பூ குறைந்தது. திருமால் தன் இருகண்களையும் எடுத்து, சிவனை பூஜிக்க மகிழ்ந்த சிவன் சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் குடமுழுக்கு கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி நடந்தது. விற்குடி வீராட்டானேஸ்வரர் ேகாவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

    பிருந்தையின் சாபத்தால் சீதையை பிரிந்த ராமா்

    கற்பிற்சிறந்த பிருந்தையை ராமர் ஏமாற்ற இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிருந்தையின் கணவர் ஜலந்தராசூரனை சிவன் வதம் செய்தாா். இதனால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்த பிருந்தை தான் தனது கணவனை இழந்து தவிப்பது போல நீங்களும்(திருமால்) உங்கள் மனைவியை இழந்து தவிப்பீர்கள் என சாபம் அளித்து விட்டு தீக்குளித்து உயிர் துறந்தாள். இதனால் ராமாவதாரம் எடுத்த விஷ்னு தனது மனைவி சீதையை பிரிந்து தவித்தார் என புராண வரலாறு கூறுகிறது. இதன்மூலம் கற்பிற்சிறந்த பெண்ணின் சாபம் கடவுளையும் விட்டு வைக்கவில்லை என்பது தெளிவாகிறது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள விற்குடியில் வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து நாகை- கங்களாஞ்சேரி- திருவாரூர் சாலையில் உள்ள விற்குடி பிரிவு சாலைக்கு சென்று அங்கிருந்து 2 கி.மீட்டர் தொலையில் உள்ள இக்கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் நாகப்பட்டினத்துக்கு வந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 24 கி.மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

    • நெல்லையப்பர் கோவில் பல கட்டங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது.
    • நெல்லையப்பர் கோவில் தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன.

    நெல்லையில் உள்ள டவுனில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது. கலைநயத்துடன் கட்டப்பட்டு உள்ள இந்த கோவிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்துக்கு மேலாக ஒரு வெள்ளைநிற நந்தி படுத்திருக்கிறது. அடுத்து உள்ளே சென்றால் சுமார் 9 அடியில் விநாயகர் வீற்றிருக்கிறார்.

    மூலவரை சுற்றி 3 பிரகாரங்கள் இருக்கின்றன. முதல் பிரகாரத்தில் எல்லா கோவில்களை போல தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் உள்ளன. கோவிந்தபெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருக்கிறார்.

    2-வது பிரகாரம் சற்று பெரியது. இங்கு ஏழிசை சுரங்கள் இசைக்கும் தூண்கள் உள்ளன. அவற்றை தட்டிப்பார்த்தால் சுரங்களின் ஒலி கேட்கும். இந்த பிரகாரத்தில் தான் தாமிரசபை உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலட்சுமி, சனீ்ஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

    3-வது பிரகாரம் மிகவும் பெரியது. 3 யானைகள் கூட இதில் சேர்ந்து நடக்கலாம். அவ்வளவு அகலம் கொண்டது. இந்த பிரகாரத்தில் இருந்து அம்மன் மண்டபம் வழியாக அம்மன் சன்னிதிக்கு செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், அய்யப்பன், வடிவு அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோருக்கு தனி சன்னிதிகள் இருக்கின்றன. கோவிலின் மிகப்பெரிய உள்தெப்பம் இருக்கிறது.

    இந்த 3-வது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சன்னதி உள்ளது. ஆறுமுகமாய், மயில் வாகனனாய் வள்ளி, தெய்வானையுடன் சந்தனக்காப்பில் நின்று அருள்புரிகிறார் முருகன். இந்த கோவிலில் உள்ள விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்றும், முருகப்பெருமான் ஆறுமுகப்பெருமான் என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவிலில் சிவபெருமான் நெல்லையப்பராக காட்சி அளிக்கிறார். அன்னை காந்திமதி அம்பாள் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். நெல்லையப்பர் கோவில் இரு மூலவரை கொண்ட துவிம்மூர்த்தி என்ற வகை கோவில் ஆகும். இரு மூலவர்களாக சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயன கோலத்திலும் அருகருகே தனித்தனி சன்னிதிகளில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

    தமிழ்நாட்டில் உள்ள முக்கிமான 5 சிவசபைகளில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி கோவில் தாமிர சபையை கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. சிவபெருமான் நடனமாடிய 5 முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோவில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பு.

    வியப்பை ஏற்படுத்தும் கோபுரங்கள்

    நெல்லையப்பர் கோவிலில் தெற்கு பிரகாரத்துக்கு நடுவே தட்சணாமூர்த்தி சன்னதிக்கு முன்னதாக சங்கிலி மண்டபம் எனும் அற்புதமான கலை நுட்பத்துடன் கூடிய பகுதி அமைந்துள்ளது. அதை ஒட்டி நடுகோபுரமும் கொள்ளை அழகு. பிரகார மண்டபத்தில் உயரமாக பெரிய கல்தூண்கள் அந்த இடத்தையே அழகூட்டி காட்டுகின்றன.

    கோவிலில் உள்ள தெற்கு பிரகாரம் சுமார் 387 அடி நீளம் கொண்டதாகவும், சுமார் 42 அடி அகலம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கோவிலுக்கு திருப்பணி செய்தவர்களும், மன்னர் பெருமக்களும் சிலையாக காட்சி தருகின்றனர்.

    இதைபோல் மேற்கு பிரகாரமும் பிரமிக்கத்தக்கது. இது சுமார் 285 அடி நீளம் கொண்டதாகவும், சுமார் 40 அடி அகலம் கொண்டதாகவும் அமைந்து பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. இதன் நடுவே மேலகோபுரம் அமைந்துள்ளது. இங்கே உள்ள சுதை வடிவிலான பிள்ளையார் நம்மை கொள்ளை கொள்கிறார். சுமார் 387 அடி நீளமும் 42 அடி அகலமும் கொண்டு அமைந்திருக்கிறது வடக்கு பிரகாரம். இந்த பிரகாரத்தில் நின்றசீர் நெடுமாறன் அரங்கம் அமைந்துள்ளது. மேலும் சுவாமிக்கு அபிஷேகத்திற்கு எடுக்கப்படும் ஆறுகால தீர்த்தக்குண்டம் இங்கே உள்ளது.

    அடுத்து ஈசான மூலையில் யானை கூடம் அமைந்துள்ளது. கிழக்கு பிரகாரம் சுமார் 295 அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் அமைந்துள்ளது. இதன் வடக்கு பக்கம் 78 தூண்களுடன் சோமவாரம் மண்டபம் அமைந்துள்ளது.

    நெல்லையப்பர் சன்னதியை ஒட்டி நுழைவாயில் கோபுரமும், அதேபோல் காந்திமதி அம்பாள் சன்னதியை ஒட்டி நுழைவாயில் கோபுரமும் அமைந்துள்ளது. இந்த சிறப்புமிக்க 2 கோபுரங்களும் பார்க்கவே அவ்வளவு வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    அற்புதம் மிக்க இசைக்கல்வெட்டு

    இந்த கோவிலில் கிழக்கு நோக்கிய சன்னிதி வாயிலின் இருபக்கமும் துவார பாலகர்கள் காவல்புரிய, உள்ளே கருவறையில் வெட்டுப்பட்ட லிங்கத்திருமேனியாய் காட்சி அளிக்கிறார் நெல்லையப்பர். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த நெல்லையப்பர் கோவில் பல கட்டங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது. தற்போது இருக்கும் நிலை வரை நின்றசீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இங்கு வேறு எங்கும் காண முடியாத அற்புதம் மிக்க இசைக்கல்வெட்டு ஒன்று உறைந்து கிடக்கிறது. அது கம்பி வேலியிட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் தாளலயம் பற்றியும், தாளத்தில் உள்ள அங்கங்கள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

    சீர் கொண்டு செல்லும் அம்பாள்

    பெண்கள் திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு சீர் கொண்டு செல்வது போல் காந்திமதி அம்பாளும் தனது திருக்கல்யாணத்தின் போது சீர் கொண்டு செல்கிறாள்.

    ஐப்பசி பிரம்மோற்சவத்தின் முதல் 10 நாட்கள் அம்பாள் சிவனை மணக்க வேண்டி தவமிருபார். 10-ம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருள்வார். 11-ம் நாள் மகாவிஷ்ணு தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று அம்பாளை மனம் செய்வார். திருக்கல்யாணத்தின்போது அம்மன் சீர் கொண்டு செல்கிறார். அப்போது பக்தர்கள் மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

    பெருமை சேர்க்கும் மண்டபங்கள்

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பெருமை சேர்க்கும் வகையில் பல மண்டபங்கள் உள்ளன.

    அவைகளின் விவரங்கள்:-

    ஆயிரம் கால் மண்டபம்

    இந்த மண்டபம் 520 அடி நீளமும் 63 அடி அகலமும், ஆயிரம் தூண்களையும் கொண்டுள்ளது. மண்டபத்தின் உச்சிஷ்ட கணபதி நம்மை ஈர்க்கும் தோற்றமுடையது. திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம் கீழ்ப்பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.

    ஊஞ்சல் மண்டபம்

    96 தத்துவங்கள் தெரிவிக்கும் விதமாக 96 தூண்களை உடையது இந்த மண்டபம். திருக்கல்யாண வைபவம் முடிந்த பின் சுவாமி அம்பாள் ஊஞ்சலில் அமர்ந்த கோலமும், ஆடி மாத வளைகாப்பு திருவிழாவும் இந்த மண்டபத்தில் தான் நிகழும். இங்குள்ள யாளி சிற்பங்கள் சிறப்புடையவை.

    சோமவார மண்டபம்

    இந்த மண்டபம் சுவாமி கோவிலில் வட பக்கத்தில் அமைந்துள்ளது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நிகழும் மண்டபம். தற்பொழுது நவராத்திரிக்கு இங்கு வைத்து பூஜை நிகழ்கிறது. இந்த மண்டபம் 78 தூண்களை உடைய பெரிய மண்டபம் ஆகும்.

    சங்கிலி மண்டபம்

    சுவாமி கோவிலையும் அம்மன் கோவிலையும் இணைப்பதால் இந்த மண்டபம் சங்கிலி மண்டபம் என பெயர் பெற்றுள்ளது. 1647-ம் ஆண்டு வடமலையப்ப பிள்ளையன் அவர்களால் கட்டப்பட்டது. இந்த மண்டபத் தூண்களில் வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன் சிலைகள் கண்ணை கவரும்.

    மணிமண்டபம்

    இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி ஒன்று தொங்குவதால் மணிமண்டபம் என்று பெயர் பெற்றது. நின்றசீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது இந்த மண்டபம். ஒரே கல்லில் சுற்றி சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூணை தட்டினாலும் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். சுவரங்கள் மாறுபட்டு வரும். மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான, சரியான சுவரம் கிடைக்கும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. தமிழ்நாட்டின் இசைத்தூண்கள் அமைந்துள்ள திருக்கோவில்களில் காலத்தால் முற்பட்ட இசை தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

    வசந்த மண்டபம்

    100 தூண்களை உடைய இந்த மண்டபத்தில் கோடைகாலத்தில் வசந்த விழா நடைபெறும். சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்த சோலைவனம் 1756-ம் ஆண்டு திருவேங்கிட கிருஷ்ண முதலியார் அவர்களால் அமைக்கப்பட்டது.

    சிறப்பு பெற்ற சிற்ப தூண்கள்

    நெல்லையப்பர் கோவில் தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன. ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு மறுபக்கம் தன் பெரிய பிள்ளைக்கு சோறு ஊட்டும் அன்புத்தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், மனைவியை வெளியே அழைத்து செல்லும் அக்கால கணவன்-மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனுக்கும் தன் குழந்தை என்றால் கொள்ளை பிரியம் தான் என்பதை உணர்த்தும் சிற்பம், குழந்தை கண்ணனை கொல்ல வந்து கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கி கையில் குழந்தையுடன், வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன் போன்ற ஒரு சிற்பங்கள் அவற்றில் செய்யப்பட்டுள்ள நுண்ணிய வேலைபாடுகள் காண்போரின் மனதை கொள்ளை கொள்ள செய்யும்.

    இந்த சிற்பங்களில் எலும்பு, நரம்பு, நகம் தெரிகிறது. அச்சிலைகள் அணிந்துள்ள அணிகலன்களின் வடிவங்கள், கை, கால், முட்டிகள், கண்களில் தெரியும் ஒளி என அவை சிலைகள் அல்ல உயிருடன் வந்த கலை என்ற எண்ணம் நமக்கு தோன்றும்.

    • இங்குள்ள இறைவன், ‘வசிட்டேசுவரர்’, ‘கருவேலநாதர்’, ‘கருணாசாமி’ என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார்.
    • இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்று கரந்தை கருணாசாமி கோவில் என்றழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகும். பல்லவர் கால கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோவில், திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிட பெற்ற சிறப்புடைய தலமாகும்.

    முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜசோழன் காலத்திய கல்வெட்டுகள், இக்கோவிலில் காணப்படுகிறது. கரிகாலச்சோழனுக்கு கருணை பாலித்த இக்கோவிலில் இறைவனை சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும் கருணாசாமி, கருந்திட்டை மகாதேவன் என்றும் அழைக்கப்படுகிறார்.

    தஞ்சையின் வடதிசையில் உள்ள நகரப்பகுதி 'கருத்திட்டைக்குடி' என்று அழைக்கப்படுகிறது. தற்போது 'கரந்தட்டான்குடி' என்றும், 'கரந்தை' என்றும் அழைக்கப்படும் இந்த ஊர், வெண்ணாற்றிற்கு தெற்கிலும், வீரசோழ வடவாற்றிற்கு வடக்கிலுமாக இரு ஆறுகளுக்கு இடையே அமைந்த வளமான பகுதியாகும். தஞ்சைக்கு எவ்வளவு பழமை உண்டோ, அதனைவிட அதிக பழமை இந்த ஊருக்கு உண்டு. கரந்தையின் கிழக்குப்பகுதி மையத்தில் திகழும் பழம்பெரும் கலைச்சிறப்புமிக்கதாக கருணாசாமி கோவில் விளங்குகின்றது. இங்குள்ள இறைவன், 'வசிட்டேசுவரர்', 'கருவேலநாதர்', 'கருணாசாமி' என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார். இறைவியின் திருநாமம், 'பெரியநாயகி', 'திரிபுரசுந்தரி' என்பனவாகும். 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோவில், ஒரு அற்புத சமய கலைச் சின்னமாகும். இங்குள்ள மூலவர் சிவலிங்கம், வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்பட்ட சிறப்பு கொண்டது என்கிறார்கள்.

    சப்தரிஷிகளில் ஒருவராக திகழ்பவர், வசிஷ்ட ரிஷி. கற்பின் இலக்கணமாக திகழும் அருந்ததி, இவரது மனைவியாவார். இவர்கள் இருவருக்கும் சிற்ப உருவங்கள் காணப்படும் ஒரே கோவிலாக இந்த ஆலயம் உள்ளது. தென்முக குருவாக அருளும் தட்சிணாமூர்த்தியும், அவரது வலப்புறம் குருபத்தினியான அருந்ததியோடு வசிஷ்ட மகரிஷியும் அமர்ந்து இருபெரும் குருக்களாக ஞானமும், செல்வமும், அன்பும், அருளும் ஒருங்கே வாரி வழங்கிடும் அற்புத திருக்கோவில் இது. பங்குனி மாதத்தில் காலை சூரியனின் ஒளி, மூலவரின் சிவலிங்க திருமேனியில் தொடர்ந்து மூன்று நாட்கள் விழும் சிறப்புக்குரிய ஆலயம். இந்தக் கோவிலில் நடைபெறும் ஏழூர் பல்லக்கு திருவிழா, வெட்டிவேர் பல்லக்கு முதலிய சிறப்பு உற்சவங்கள், திருவிழாக்கள், தஞ்சாவூர் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இக்கோவிலின் கருவறை, விமான கட்டிடக்கலை, கருவறை சுவர்களில் காணப் பெறும் மிகச்சிறந்த சிற்பங்கள் போன்றவை, சோழர் கால வரலாற்றில் புதிய அரிய பல தகவல்களை தருகின்றன. கோவிலில் மூன்று வாசல்கள் உள்ளன. ஒன்று கிழக்கு திசையில் குளத்தை நோக்கி அமைந்துள்ளது. கரந்தை மக்கள் வந்து வழிபட்டுச் செல்ல தெற்கு நோக்கிய கோபுர வாசலாய் மற்றொன்று உள்ளது. மற்றொரு வாசல் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாசல்களை ஒட்டியுள்ள மகாமண்டபம் பிற்காலத்து திருப்பணியாகும். இதன் தரையில் ஒருவர் விழுந்து வணங்குவது போன்ற சிற்பமும் அதையொட்டி ஒரு கல்வெட்டும் உள்ளன.

    கோவிலின் கிழக்கு முகப்பில் மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. தஞ்சையில் உள்ள மிகப்பெரிய கோவில் குளங்களுள் இதுவும் ஒன்றாகும். சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால் சோழ மன்னனுக்கு, கருங்குஷ்டம் என்னும் தோல் நோய் இருந்துள்ளது. அவர் அந்த நோயை தீர்க்க பல்வேறு சிகிச்சை முறைகளை கையாண்டும் பலன் கிடைக்காமல் போனது.

    இந்த நிலையில் அவரது கனவில் தோன்றிய கடவுள் கருணாசாமி, 'இந்தக் கோவில் குளத்தில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) புனித நீராடி வழிபட்டால் கருங்குஷ்டம் தோல் நோய் தீர்ந்து விடும்' எனறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கரிகால் சோழன் இந்தக் குளத்தில் ஒரு மண்டலம் புனித நீராடி கருணாமூர்த்தியை வழிபட்டுள்ளார். இதனால் அவருக்கு தோல் நோய் நீங்கியது.

    அன்று முதல் இந்தப் பகுதி 'கருந்தட்டான்குடி' என்று அழைக்கப்பட்டு, தற்போது 'கரந்தை' என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து 48 நாட்கள் இந்த குளத்தில் புனித நீராடி கருணாசாமியை வழிபாடு செய்தால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருமணம், உயர்கல்வி, ஞானம், உயர் பதவிகள், ஆட்சித்திறமை, செல்வம், பகை வெல்லுதல், ஆற்றல் ஆகியவற்றை வேண்டுவோருக்கு, வேண்டியதை அருளிடும் இந்த தெய்வீக திருத்தலத்திற்கு அனைவரும் ஒருமுறை தவறாமல் சென்று கருணாசாமியின் அருளைப் பெறுவோம்.

    ஆரூண், பிள்ளையார்பட்டி.

    • இது ஒரு பழமையான திருக்கோவில் என்பது மட்டும் ஆதாரப்பூர்வமாக தெரிகிறது.
    • நந்தியோடு இணைத்து செய்யப்படும் பிரதோஷம் இங்கு பிரதானம்.

    புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் உள்ளது, நெய் நந்தீஸ்வரர் திருக்கோவில். இவ்வாலயத்தின் பிரதான தெய்வமாக மீனாட்சி அம்மன் சமேத சொக்கலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இருப்பினும் இங்குள்ள நந்தியே சிறப்புக்குரியது என்பதால், நந்தியின் பெயரிலேயே இவ்வாலயம் புகழ்பெற்று விளங்குகிறது.

    தல வரலாறு

    இந்த ஆலயம் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பிரார்த்தனை தலமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்பகுதிக்குச் சென்ற பாண்டியர்கள், தங்களின் இஷ்ட தெய்வமான மீனாட்சி - சொக்கநாதரை, பிரதோஷ வேளையில் வழிபடுவதற்காக இந்தக் கோவிலை உருவாக்கியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இந்த ஆலயத்தின் வரலாறு சரியாக கிடைக்கப்பெறவில்லை. என்றாலும் இது ஒரு பழமையான திருக்கோவில் என்பது மட்டும் ஆதாரப்பூர்வமாக தெரிகிறது.

    சோழர்களும் இந்த ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். கொடும்பாளூரில் இருந்து தஞ்சாவூர் கோவிலுக்கு இரண்டு நந்திகள் கொண்டுவரப்பட்டன. அதில் பெரிய நந்தி தஞ்சாவூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், சிறிய நந்தி வேந்தன்பட்டியில் வைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் வேந்தன்பட்டி நந்தியை 'தம்பி நந்தி' என்றும் சொல்கிறார்கள். இங்குள்ள நந்தீஸ்வரர், தஞ்சாவூர் நந்தீஸ்வரருக்கு தம்பியாக கருதப்படுவதால் இந்தப் பெயர் வந்ததாம்.

    இந்த ஆலயத்திற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது இவ்வூரில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த பக்தர் ஒருவர், நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார். நந்தியை புனிதம் என்று கருதிய அந்த பக்தர், அதனை தீர்த்தக் குளத்திற்குள் வைத்துவிட்டார். ஒரு முறை அந்த பக்தருக்கு கடுமையான வயிற்றுவலி உண்டானது. நோய் குணமாக மானசீகமாக சிவபெருமானை பிரார்த்தித்தார். ஒரு நாள் அவரை மாடுகள் விரட்டுவது போல கனவு வந்தது. சிவாலயத்தில் நந்தியை பிரதிஷ்டை செய்யாததுதான் அனைத்திற்கும் காரணம் என்று கருதிய அந்த பக்தர், உடனடியாக நந்தி ஒன்றை ஆலயத்திற்குள் பிரதிஷ்டை செய்தார். அதற்கு நெய் அபிஷேகமும் செய்தார். அவரின் வயிற்றுவலி நீங்கியது. இதையடுத்து இத்தல நந்திக்கு, நெய் அபிஷேகத்தை பிரதான அபிஷேகமாக செய்யும் வழக்கம் உருவானது.

    இங்கு வரும் பக்தர்கள் தங்களின் எந்த வேண்டுதலாக இருந்தாலும், அது நிறைவேறியதும் நந்தி பகவானுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். அந்த வகையில் ஒரு நாளைக்கு பல லிட்டர் கணக்கில் நந்திக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. வீட்டில் சிறிதளவு நெய் கீழே கொட்டினாலும், ஈக்களும், எறும்புகளும் மொய்க்கத் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆலயத்தில் அவ்வளவு நெய் கொண்டு அபிஷேகம் செய்த போதிலும் ஒரு ஈயோ, எறும்போ வருவதில்லை. ஆரம்ப காலத்தில் அபிஷேக நெய்யை கோவிலில் தீபம் ஏற்ற பயன்படுத்தியுள்ளனர். அப்படி பயன்படுத்தப்பட்ட நெய், ரத்தம் போல சிவப்பமாக மாறியதாம். எனவே அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக பயன்படுத்தாமல், ஆலயத்திற்குள் அமைக்கப்பட்ட கிணற்றுக்குள் கொட்டி விடுகின்றனர். இந்த கிணற்றிலும் ஈக்கள், எறும்புகள் மொய்ப்பதில்லை என்பது அதிசயமாகவே இருக்கிறது.

    நந்தியம்பெருமானுக்கு ரிஷபம் என்ற பெயரும் உண்டு. ஆகையால் இது ரிஷப ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. ஜாதகத்திலோ, அவ்வப்போது நிகழும் கிரகப் பெயர்ச்சிகளிலோ பாதிக்கப்படும் ரிஷப ராசிக்காரர்கள், தோஷ நிவர்த்திக்காக இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். நந்திக்கு முக்கியத்துவம் உள்ள கோவில் என்பதால், சுவாமி-அம்பாள் தவிர நந்திக்கும் தனியாக அர்ச்சனை செய்யும் நடைமுறை இங்கு காணப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள் அவை நோயின்றி வாழவும், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய பொருட்களை விற்பனை செய்வோர் வியாபாரம் செழிக்கவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். நோயால் அவதிப்படும் கால்நடைகள் குணமாக, நந்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பெற்றுச் சென்று கால்நடைகளுக்கு புகட்டுகின்றனர்.

    இந்த ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் அன்று, நந்தியின் அருகில் பிரதோஷ நாயகரை எடுத்தருளச் செய்து, இருவருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்யும் நடைமுறை உள்ளது. பின் பழங்கள், பூக்கள், இனிப்பு பலகாரங்கள், போன்றவற்றைக் கொண்டு நந்தியை அலங்காரம் செய்கிறார்கள். அதன்பிறகு பிரதோஷ நாயகர் தன்னுடைய சன்னிதிக்கு எழுந்தருள்வார். வைகாசி விசாகத்தை ஒட்டி மூன்று நாள் விழா இவ்வாலயத்தில் நடக்கிறது. அப்போது காவடி தூக்கியும், பூக்குழியில் இறங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    மூலவரான சொக்கலிங்கேஸ்வரருக்கு இடதுபுறம் மீனாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. இந்த அன்னையை வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடந்தேறும். இத்தல அம்பாளுக்கு மஞ்சள், குங்குமம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தும் பக்தர்கள், மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாலய பிரகாரத்தில் விநாயகர், சூரியன், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.

    இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், ஐப்பசி மாத பவுர்ணமியில் அன்னாபிஷேகம், சித்ரா பவுணர்மி வழிபாடு, வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நிகழ்வுகள் வெகுவிமரிசையாக நடைபெறுகின்றன. சிவபெருமானுக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக நடைபெறும் என்றாலும், நந்தியோடு இணைத்து செய்யப்படும் பிரதோஷம் இங்கு பிரதானம். அதுவும் சனிக்கிழமை வரும் மகா பிரதோஷம் என்றால், ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் இரட்டிப்பாக இருக்கும்.

    அமைவிடம்

    புதுக்கோட்டையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும், திருமயத்தில் இருந்து 34 கிலோமீட்டரிலும், பிள்ளையார்பட்டியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, வேந்தன்பட்டி திருத்தலம்.

    • சுவாமி கூடல் அழகர் என்று அழைக்கப்படுகிறார்.
    • 108 திவ்ய தேசங்களில் 47-வது கோவிலாக இது விளங்குகிறது.

    மதுரை நகரில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தப்படியாக மிகவும் பழமை வாய்ந்தது கூடலழகர் பெருமாள் கோவில். முன்னொரு காலத்தில் மதுரையில் ஒருமுறை தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழையில் இருந்து தங்களை காக்கும் படி பெருமாளை வேண்டினர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார். அவை மதுரையைச் சுற்றி 4 மாடங்களாக ஒன்று கூடி மழையில் இருந்து மக்களை காத்தது. இவ்வாறு 4 மேகங்கள் ஒன்று கூடியதால் இந்த கோவில் நான்மாடக்கூடல் என்றும் கூடல் மாநகர் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதலால் சுவாமியும் கூடல் அழகர் என்று அழைக்கப்படுகிறார்.

    பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 47-வது கோவிலாக இது விளங்குகிறது. பெரியாழ்வார் பல்லாண்டு, பல்லாண்டு என்று பாடல் பாடிய திருத்தலம் ஆகும். மேலும் தமிழகத்தில் மதுரை கூடலழகர் கோவிலிலும், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் மட்டுமே அஷ்டாங்க விமானத்தில் சுவாமி காட்சி தருகிறார். 8 பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் 'ஓம் நமோ நாராயணா' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

    மேலும் கோவிலில் உள்ள அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். 2-வது நிலையில் சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களும், அஷ்டபாலகர்களும் ஓவிய வடிவில் அருள்பாலிக்கின்றனர். இதனால் இந்த சன்னதியை 'ஓவிய மண்டபம்' என்று அழைக்கிறார்கள்.

    3-வது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். இவ்வாறு பெருமாள் இந்த தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன என 3 கோலங்களிலும் காட்சி தருகிறார். மேலும் பூவநாதர், லட்சுமி நரசிம்மர், நாராயணன், லட்சுமி நாராயணன், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரையும் விமானத்தில் தரிசிக்கலாம். 125 அடி உயரம் கொண்ட இந்த விமானத்தில் 10 அடியில் கலசம் உள்ளது. மேலும் இந்த விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பது சிறப்பம்சமாகும்.

    மலைக்கோவில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் வருவது போல் இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள். இங்குள்ள உற்சவர் வியூக சுந்தர்ராஜன் என அழைக்கப்படுகிறார். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பு சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த பகுதியை ஆண்ட மன்னர்கள் போருக்குச் செல்லும்போது இவரை வேண்டி வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனால் கூடலழகருக்கு இந்த பெயர் ஏற்பட்டது எனவும் கூறுகிறார்கள்.

    பஞ்சபூத தத்துவம்

    இந்த கோவில் பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் 5 கலசத்துடன் கூடிய 5 நிலை ராஜகோபுரம், 8 எழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் 8 பிரகாரங்களுடன் அமைந்த கோவில் இதுவாகும். ஆண்டாள் சக்கரத்தாழ்வார், நவக்கிரகம், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், மணவாள மாமுனிகள், விஸ்வஷேனர், ராமர், கிருஷ்ணன், லட்சுமி நாராயணன், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சூரிய மண்டலத்தில் சூரியன் அஷ்டாங்க விமானத்துடன் கூடிய ரதத்தில் வலம் வருவார். இந்த ரதத்தின் மாதிரி சிற்பம் கோவிலின் சுற்றுச் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மண்டல தரிசனம்

    மாங்கல்ய பாக்கியம் மதுரை கூடலழகர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். புரட்டாசி சனிக்கிழமை கூடலழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவார்கள். கூடலழகர் கோவில் வேண்டுதல் ஸ்தலமாக திகழ்கிறது. கோவிலை 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சுற்றி வந்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    தினமும் 6 கால பூஜை

    மதுரை கூடலழகர் கோவிலில் தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை. காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை. 10 மணிக்கு சுற்று கோவில் பூஜை. 12 மணிக்கு உச்சிகால பூஜை. மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை. இரவு 7 மணிக்கு சுற்று கோவில் பூஜை. இரவு 9 மணிக்கு அர்த்தசாம பூஜை.

    • இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2006-ம் ஆண்டு நடந்தது.
    • சுமார் ரூ.1 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    மதுரை நகரில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தப்படியாக மிகவும் பழமை வாய்ந்தது கூடலழகர் பெருமாள் கோவில். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2006-ம் ஆண்டு நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனது குறித்து அரசுக்கு கோவில் நிர்வாகம் தெரிவித்தது. அதை தொடர்ந்து தற்போது பதவி ஏற்றுள்ள தி.மு.க. அரசு மதுரையில் முதன் முதலாக கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவு வெளியிட்டது. அதன்படி சுமார் ரூ.1 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் அனைத்தும் டி.வி.எஸ்.நிறுவனம் ஏற்று கொண்டதாக கூறப்படுகிறது.

    கும்பாபிஷேகத்தையொட்டி முதலில் கோவிலில் உள்ள கோபுரங்களுக்கு பாலாலய பூஜை கடந்த ஆண்டு நடந்தது. அதில் ராஜகோபுர பணிகளை மட்டும் மீனாட்சி அம்மன் கோவில் முன்னாள் தக்கார் கருமுத்து கண்ணன் செய்து தருவதாக தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து ராஜகோபுரம், விமானம், மேல் தளம் உள்ளிட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. அந்த பணிகள் தற்போது முடிந்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக கோவிலில் உள்ள சுமார் 19 உபசன்னதிகளில் உள்ள 40 சுவாமிகளுக்கு பாலாலயம் நடத்த முடிவு செய்தது.

    அதற்காக கோவிலின் தெற்கு பிரகாரத்தில் 14 நவ குண்டம் அமைக்கப்பட்டு யாக சாலை பூஜைகள் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. 4 கால பூஜைகள் இன்று (வியாழக்கிழமை) முடிந்த உடன் காலை 7.45 மணி முதல் 8.45 மணிக்குள் பாலாலயம் நடைபெறும். 19 சன்னதிகளில் வேலைகளை செய்வதற்காக அதில் உள்ள சுவாமியின் சக்தியை யாகசாலையில் பூஜையில் வைக்கப்பட்டுள்ள மரப்பலகையில் உள்ள சுவாமியின் மீது அந்த சக்தி இறக்கப்படும். அதன்பின்னர் அந்த பகுதியில் திருப்பணி வேலைகள் தொடங்கும்.

    எனவே கோவிலில் மூலவரை தவிர மற்ற சன்னதிகள் அனைத்தும் சாத்தப்பட்டு இருக்கும். இந்த பணிகள் விரைவில் முடிவடையும் பட்சத்தில் வருகிற ஆவணி மாதம் கோவிலில் கும்பாபிஷேகத்தை நடத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்காக கோவிலில் அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

    • இக்கோவிலில் உள்ள பெருமாள் பக்தர்களால் அழகர் என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
    • கோவிலுக்கு வெளியே தென்புறத்தில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் வரலாற்று சிறப்பு மிக்க சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசர்களான அச்சுத தேவராயர் மற்றும் ராமதேவராயர் ஆகிய மன்னர்களால் கலைச்சிற்ப நுணுக்கத்துடன் இந்த கோவில் அமைக்கப்பட்டது. இக்கோவிலில் உள்ள பெருமாள் பக்தர்களால் அழகர் என்று அன்போடு அழைக்கப்பட்டு, வணங்கப்பட்டு வருகிறார்.

    தாடிக்கொம்பு அருகே வடக்கு நோக்கி செல்லும் குடகனாறு ஆற்றங்கரையில் அமர்ந்து மண்டூக முனிவர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது தவத்திற்கு இடையூறு செய்யும் விதமாக தாளாசூரன் என்ற அரக்கன் பல்வேறு இடையூறுகளை செய்து வந்தான். இதனால் மதுரையை அடுத்த அழகர்மலையில் உள்ள திருமாலிருஞ்சோலை கள்ளழகரை நோக்கி தனது தவத்திற்கு உதவி செய்ய வேண்டி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தால் ஈர்க்கப்பட்ட திருமாலிருஞ்சோலை அழகர், மண்டூக முனிவருக்கு இடையூறு செய்த தாளாசூரன் என்ற அரக்கனை வதம் செய்து முனிவரின் தவத்தை தொடர உதவி செய்தார். பின்னர் முனிவரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அவரும் கள்ளழகர் இப்பகுதியில் வாசம் செய்து இப்பகுதியில் வாழும் மக்களை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முனிவரின் வேண்டுதலை ஏற்று தாடிக்கொம்பு பகுதியிலேயே கள்ளழகர் என்ற சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி, வீற்றிருப்பதாக புராண வரலாறு கூறுகிறது.

    இந்த கோவிலில் சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாளுடன் நின்றகோலத்தில் எழுந்தருளி உள்ள மூல சன்னதியும், சவுந்தரவல்லி தாயாருக்கு என தனி சன்னதியும், ஆண்டாளுக்கென்று ஒரு தனி சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. இதுதவிர பரிவார மூர்த்திகளான நம்மாழ்வார், இரட்டை விநாயகர், ஹயக்ரீவர், தன்வந்திரி பெருமாள், லட்சுமி நரசிம்ம பெருமாள், வேணுகோபால சுவாமி, ராம பக்த ஆஞ்சநேயர், சொர்ண ஆகர்ஷண பைரவர், விஸ்வக்சேனர் ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. மேலும் கோவிலுக்கு வெளியே தென்புறத்தில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    கல்விக்கு ஹயக்ரீவர், உடல்நலத்திற்கு தன்வந்திரி பெருமாள், கடன்களில் இருந்து மீள லட்சுமி நரசிம்மர், திருமண தடை நீங்க ஆண்டாள், ரதி, மன்மதன், குழந்தை பாக்கியம் கிடைக்க வேணுகோபால சுவாமி, பொருளாதார சிக்கல்கள் நீங்க சொர்ண ஆகர்ஷண பைரவரை பக்தர்கள் வணங்கினால் தங்களது வேண்டுதல் நிறைவேறும். அனைத்தும் நிறைவேற திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் சவுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு சகல வரங்களையும் அளிக்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குகிறது.

    புகழ்பெற்ற இசை தூண்கள்

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் மூலஸ்தானத்தின் பின்புறம் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார், சவுந்தரவல்லி தாயார். சவுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்பு தனது வேண்டுதல்களை சவுந்தரவல்லி தாயாரிடம் சமர்ப்பித்தால் அவர் மூலமாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் 14 தனித்தனி தூண்களும், 2 இசை தூண்களும் உள்ளன. இந்த தூண்கள் யாவும் சிறந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த தூண்கள் ஒரே கல்லினால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூண்களில் சக்கரத்தாழ்வார், வைகுண்டநாதர், ராமர், ஊர்த்தவ தாண்டவர், இரண்ய யுத்தம், மன்மதன், உலகளந்த பெருமாள், கார்த்தவீரிய அர்ச்சுனன், மகாவிஷ்ணு, அகோர வீரபத்திரர், தில்லை காளி, இரண்ய சம்ஹாரம், ரதி ஸ்ரீ வேணுகோபாலன் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர நின்ற நிலையில் விநாயகரும் எழுந்தருளியுள்ளார். இதுதவிர புகழ்பெற்ற 2 இசை தூண்களிலும் தட்டினால் ஏழு ஸ்வரங்கள் எதிரொலிக்கிறது.

    பொக்கிஷ காவலர் சொர்ண ஆகர்ஷண பைரவர்

    சிவப்பெருமானின் ஒரு அவதாரமாக இருப்பவர் பைரவர். பெரும்பாலும் வைணவ திருத்தலங்களில் பைரவர் எழுந்தருள்வது கிடையாது. ஆனால் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வடகிழக்கு மூலையில் பெருமாளின் பொக்கிஷ காவலராகவும், சேத்திர பாலகராகவும் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்திலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் ராகு கால நேரத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வழிபடுவதன் மூலம் வராக்கடன்கள் வரப்பெறுவதுடன், இழந்த சொத்துகள் மீளபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறும் பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், இளநீர், தேன் மற்றும் அரளிப்பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை காணிக்கையாக அளித்து வழிபாடு செய்கின்றனர்.

    ஞானசக்தி அருளும் ஹயக்ரீவர்

    கல்வியின் கடவுள் சரசுவதி. அந்த சரசுவதிக்கு ஆசானாக திகழ்ந்தவர் ஹயக்ரீவர். இவர் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் முதலாவதாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவரை திருவோண நட்சத்திரம் மற்றும் புதன்கிழமைகளில் ஏலக்காய் மாலை சாத்தி, தேன் மற்றும் துளசியுடன் பிரார்த்தனை செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு ஞானசக்தி ஏற்படுவதுடன் அவர்களின் கல்வி வளர்ச்சிகளும் மேன்மை அடையும்.

    தும்பிக்கை ஆழ்வார்

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், ராஜகோபுரத்தில் உள் நுழைந்த உடன் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ள விஸ்வக் சேனரை வணங்கி ஆலயத்துக்குள் பிரவேசம் செய்ய வேண்டும்.

    அதைத்தொடர்ந்து பரிவார சன்னதிகளில் தென்பகுதியில் முதலாவதாக நம்மாழ்வார் எழுந்தருளி உள்ளார். இவரை அடுத்து தும்பிக்கை ஆழ்வார் என்று வைணவத்தில் அழைக்கப்படும் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.

    • கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
    • கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தில் எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.

    ஆலயம் அனைத்துமே அதிசயங்கள் நிறைந்ததாக இருப்பது வியப்புக்குாியது. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆலயத்தைப் பற்றியும் படிக்கும் போதும், கேட்கும்போதும், கண்களால் காணும் போதும் ஒரு விஷயத்தால் நாம் ஈர்க்கப்படுவோம். சில விஷயம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இன்னும் சில நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அப்படி நம்மை அதிசயிக்க வைக்கும் ஆலயங்களில் ஒன்றுதான், மகாராஷ்டிராவில் வீற்றிருக்கும் திரிம்பகேஸ்வரர் திருக்கோவில்.

    நாசிக் நகரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திரிம்பக் என்ற இடம். இங்குதான் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான திரிம்பகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. பிரம்மகிரி, நீலகிரி, கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு நடுவில், பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் பில்வ தீர்த்தம், விஸ்வநந் தீர்த்தம், முகுந்த தீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் உள்ளன.

    கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலையின் மீதுள்ள இந்த ஆலயத்தினை சூழ்ந்த பகுதிகள் மிகவும் ரம்மியமான, ஆன்மிக வாழ்வுக்கான அமைதியான சூழலாக இருப்பதால், பல சித்தர்களும், ரிஷிகளும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற இடமாக இதனைப் போற்றுகின்றனர். இக்கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடிய நீரூற்று ஒன்று உள்ளது. கோவிலின் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தில் எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.

    பிற ஜோதிர் லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. ஆனால், இத்தலத்தில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்கள் போன்ற அமைப்புடன் உள்ளது தனித்துவமான அம்சமாகும்.

    இந்தப் பகுதியில் வாழ்ந்த கவுதம ரிஷி என்னும் முனிவர் தன் மனைவியோடு இருந்த கடுமையான தவத்தின் பயனாக, இங்கு சிவன் தன் ஜடாமுடியில் இருந்த கங்கையின் சில துளியை விழச் செய்ததாகவும், அதுவே இங்கு எப்போதும் நீரூற்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதோடு ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் சுயம்பு வடிவில் இங்கு தங்கியதாகவும் கூறப்படுகிறது.

    திரிம்பகேஸ்வரர் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது. மேலேயுள்ள மண்டபத்திலிருந்து திரியம்பகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். மும்மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கப் பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது. ஆவுடையார் உரல் போன்று நடுவே பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது. இத்தல இறைவனை வணங்கினால் வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான், சிம்ம ராசியில் வரும் போது, இத்தலத்தில் கும்பமேளா பெருவிழா கொண்டாடப்படுகின்றது.

    இக்கோவிலில் நடக்கும் அதிசயத்திற்கு ஆன்மிக ரீதியாகப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இங்கு நடக்கும் அதிசயத்திற்கான காரணங்கள் இதுவரை அறிவியல் ரீதியாகப் புலப்படவில்லை.

    • இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டு வரலாற்று பெருமை கொண்டது.
    • சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் குடமுழுக்கு நடந்துள்ளது.

    தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டத்தில் வெண்ணாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது மாறநேரி கிராமம். 2 ஆயிரம் ஆண்டு வரலாற்று பெருமைகளை சுமந்து நிற்கும் இந்த ஊரில் 1,200 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சிவாலயம் அமைந்து உள்ளது.

    நிருபகேசரி ஈஸ்வரம் என்று முற்காலத்திலும், பசுபதீஸ்வரர் கோவில் என்று தற்காலத்திலும் இந்த சிவாலயம் அழைக்கப்பெறுகிறது. இந்த சிவாலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    வரலாற்றில் நீங்கா இடம்

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேரிவாயில் என்று அழைக்கப்பெற்ற இந்த ஊர் பல்லவர் ஆட்சி காலமான கி.பி. 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் மாறநேரி என்ற பெயர் மாற்றத்தை அடைந்தது. தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டு குறிப்புகள் ஆகியவற்றை தொகுத்து நோக்கும்போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலம் தொட்டு இந்த ஊர் வரலாற்றில் நீங்கா இடம் பெற்று வந்துள்ளது.

    சேரன் செங்குட்டுவன், சங்கால சோழ அரசர்கள், பல்லவ அரசர்களான நந்திவர்மன், நிருபதுங்கவர்மன், முத்தரைய மன்னன் சுவன்மாறன், ராஜராஜ சோழன், முதற்குலோத்துங்கன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்களுடனும், அவர்தம் மரபு மன்னர்களுடனும் நெருங்கிய தொடர்புடைய ஊர் என்பதும், பல வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடந்தேறின என்பதும் அறிய முடிகிறது.

    பல பெயர்கள்

    நேரிவாயில் என்றும், மாறநேரி என்றும், நந்திபுரம் என்றும் தீன சிந்தாமணி சதுர்வேதிமங்கலம் என்றும் பல பெயர்கள் இவ்வூருக்கு பல்வேறு காலகட்டத்தில் திகழ்ந்தன என்றாலும், மாறநேரி என்ற பெயரே நிலைத்த பெயராக விளங்குகிறது.

    நந்திவர்மபல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்கபல்லவன் தன் பெயரால் நிருபகேசரி ஈஸ்வரம் என எடுத்ததே இவ்வூர் சிவாலயமாகும். இக்கோவில் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

    தற்போது இந்த கோவில் சிவகாமசுந்தரி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு கற்கோவிலாக விளங்கியுள்ளது. பல்லவ மன்னருக்கு பின்பு வந்த பல அரச மரபினர் காலங்களிலும் இந்த கோவிலில் பல திருப்பணிகள் நடந்துள்ளது.

    சிதிலமடைந்த கோவில்

    காவிரி மற்றும் வெண்ணாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல முறை இந்த ஊரும், கோவிலும் பாதிப்புக்கு உள்ளாயின என்பது கல்வெட்டு சாசனங்கள் மூலம் அறியப்படும் செய்தியாகும். மேலும் வடபுலத்து கொள்ளையர்களின் படை எடுப்பு காலங்களிலும் இந்த கோவிலுக்கு பல ஊறுகள் நிகழ்வுற்றன. பல்வேறு பேரழிவுகளை சந்தித்தபோதும் பழமையின் எச்சங்கள் பலவற்றை சுமந்த வண்ணம் இந்த கோவில் விளங்குகிறது.

    மூலவர் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம் ஆகிய பகுதிகள் மட்டுமே கருங்கற் கட்டுமானமாகவும் மற்ற அனைத்து பகுதிகளும் செங்கற கட்டுமானமாகவும் இருந்தன. பரிவார தெய்வங்களாக கணபதி பெருமானும், முருகப்பெருமானும் தனித்தனி சிற்றாலயங்கள் பிரகாரத்தில் அமைந்திருந்தன. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் குடமுழுக்கு நடந்துள்ளது.

    திருப்பணி

    மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள கோவில் நிர்வாகம், திருப்பணி குழுவினர், மாறநேரி கிராமத்தார்கள் மற்றும் சிவபக்தர்கள் விரும்பினர். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டனர். மத்திய மந்திரியாக ஜி.கே.வாசன் இருந்தபோது 13-வது நிதி ஆணையத்தின் மூலம் பசுபதீஸ்வரர் கோவில் திருப்பணிக்காக ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுடன் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த உபயதாரர்கள் பலர் அளித்த நன்கொடையின் வாயிலாக சுமார் ரூ.1½ கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு 30-ந் தேதி திருப்பணிகள் தொடங்கப்பட்டன.பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த திருப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. பழமை மாறாமல் கருங்கற்களை கொண்டு இந்த கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. சிவகாமசுந்தரி சமேத பசுபதீஸ்வரர் கோவில், மகாலட்சுமி, ரங்கநாதசுவாமி ஆகிய சாமிகள் தனித்தனி சன்னதிகளுடன் காட்சி அளிக்கின்றன. பரிவார தெய்வங்களாகிய விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளும் தனிசன்னதியுடன் காட்சி அளிக்கின்றன. மேலும் சரஸ்வதி, விஷ்ணு துர்க்கை, சிவதுர்க்கை, ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளிட்ட சாமிகளும் உள்ளன.

    சிவகாமசுந்தரி சமேத பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூதலூர் அல்லது திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் கோவிலுக்கு செல்லலாம். டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.திருச்சியில் இருந்து திருவெறும்பூர், மாறநேரி வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கும், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து மாறநேரிக்கும், தஞ்சையில் இருந்து பூதலூர் வழியாக மாறநேரிக்கும், கல்லணையில் (தோகூர்) இருந்து மாறநேரிக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • கி.பி.1485-ல் பனை ஓலை வேய்ந்த சிறு ஆலயத்தை உருவாக்கி வழிபாடு நடத்தினர்.
    • இன்றுள்ள ஆலயம் 1972-ம் ஆண்டு அருட்பணியாளர் ஜோசப்ராஜ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் பழம்பெருமை வாய்ந்த புனித ஆரோபண அன்னை ஆலயம் அமைந்துள்ள இடம் தான் மாத்திரவிளை என்று அழைக்கப்படும் அன்றைய பட்டங்காடு. மாதாவின் அன்பையும், அரவணைப்பையும் உணர்ந்த மக்கள் இவ்விடத்தை மாதா யாத்திரை செய்யும் விளை என்று அழைப்பார்கள். அது மருவியே நாளடைவில் மாத்திரவிளை என பெயர் பெற்றது.

    புனித தோமாவின் வருகை

    புனித தோமா இயேசுவின் சீடர்களில் ஒருவர். இவர் இயேசுவின் உயிர்ப்புக்கு பின் இந்தியாவுக்கு வந்து இறை போதனைகளிலும், சிற்பக்கலைகளிலும் ஈடுபட்டு வந்தார்.

    இவரது வருகைக்கு பிறகு தான், இவரது போதனையால் நம்பிக்கை பெற்ற மக்கள் சிலர் சிலுவையை மையமாக வைத்து வழிபட தொடங்கினார்கள். கி.பி.1435-க்கு முன் இந்த தோமையார் வழி கிறிஸ்தவர்கள் திறந்த வெளி ஜெபக்கூடம் அமைத்து சுற்றிலும் தீப்பந்தங்கள், விளக்கு தூண்கள் அமைத்து வழி பட்டனர்.

    ஆலயம்

    கி.பி.1485-ல் பனை ஓலை வேய்ந்த சிறு ஆலயத்தை உருவாக்கி வழிபாடு நடத்தினர். கி.பி.16-ம் நூற்றாண்டில் புனித பிரான்சிஸ் சவேரியார் குமரிக்கு வந்தார். சவேரியார் ஊர்-ஊராக சென்று கிறிஸ்தவத்தை போதித்தார். இதனால் உற்சாகமடைந்த மாத்திரவிளை வட்டாரப்பகுதி மக்களும் வழிபாட்டில் முன்னேற்றம் அடைகின்றனர். கி.பி.1555-ல் தென்னை ஓலையால் கூரை வேயப்பட்ட கற்சுவர் ஆலயமாக உருவாக்கி வழிபாடு நடத்தினார்கள்.

    16-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசு சேரநாட்டில் தங்களது அரசை நிலைநாட்டுகிறது. இந்த கால கட்டத்தில் தான் தென்னை ஓலையால் வேயப்பட்ட ஆலயம் தீக்கிரையாக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் உள் பீடத்தில் வைக்கப்பட்டு இருந்த மாதா சொரூபம் எங்கும் காணப்படவில்லை. அந்த சமயம் எங்கும் கொள்ளை நோய் பரவியது. ஒரு நாள் காலை வேளையில் காணாமல் போன மாதா சொரூபம் ஆலய சுவர்களின் உள்ளே நடுப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு மக்கள் திகைப்புற்றனர். அன்றைய நாளில் இருந்து கொள்ளை நோயின் வேகம் குறைய தொடங்கியது. எனவே மீண்டும் ஆலயப்பணி தொடங்கப்பட்டு கி.பி. 1615-ல் ஓட்டுக்கூரையிலான சுண்ணாம்பு சாந்து பூசப்பட்ட கற்சுவர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.

    வேத சாட்சி

    திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் சிறை அதிகாரியாக இருந்த நட்டாலம் நீலகண்டர், டச்சுப்படை தளபதி டிலனாயின் அறிவுரையால் தேவசகாயம் என்று பெயரில் கிறிஸ்தவரானார். அவர் மதம் மாற காரணமாக இருந்ததாக மாத்திரவிளை,மாங்கோடு பகுதியை சேர்ந்த மரிய அருளப்பன், முத்தப்பன், ஞானப்பிரகாசம், மரிய செபஸ்தியான், சாமியப்பன், ராயன் என்பவர்கள் மரத்தில் தூக்கிலிடப்பட்டனர். இந்த மண்ணின் மைந்தர்கள் அன்றே வேத சாட்சியாக உயிர் தியாகம் செய்து மாத்திரவிளை மண்ணுக்கு புகழ் சேர்த்திருக்கிறார்கள்.

    அவர்களின் நினைவாக டிலனாய் தான் வழிபட்டு கொண்டிருந்த மாதா சொரூபத்தை மக்களிடம் வழங்கினார். அந்த சொரூபத்தை தேரில் வைத்து மக்கள் வழிபட்டனர். 1752-ல் சிறிய கோபுரத்துடன் ஆலயத்தை மக்கள் உருவாக்கினார்கள். 1780-ம் ஆண்டிற்கு பின் இவ்வாலயம் ஒரு பணித்தளமாக உயர்ந்து காரங்காடு பங்கின்கீழ் செயல்பட தொடங்கியது. 1825-ம் ஆண்டு அழகிய கோபுரத்துடன் இணைந்த பெரிய ஆலயமானது.

    தனி பங்கு

    1886-ல் ஒரு பங்கு தளமாக உயர்ந்து, முளகுமூட்டின் கிளை பங்காக செயல்பட தொடங்கியது. பரலோக அன்னை என்ற பெயருடன் விளங்கிய இவ்வாலயத்தை 1906-ல் கொல்லம் மறை மாவட்ட ஆயர் பென்சிகர் தனி பங்காக உயர்த்தினார். முதல் பங்குத்தந்தை வின்சென்ட் பெர்னாண்டஸ். ஆலயத்தில் உள்ள புனித ஆரோபண அன்னை சொரூபம் பன்னிரு விண்மீன் முடிசூட ரோமிலிருந்து கொண்டு வரப்பட்டது. இன்றுள்ள ஆலயம் 1972-ம் ஆண்டு அருட்பணியாளர் பெனடிக்ட் அலெக்சாண்டர் காலத்தில் ஆயர் ஆரோக்கியசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு, அருட்பணியாளர் ஜோசப்ராஜ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 1984 டிசம்பர் 30-ந்தேதி ஆயர் ஆரோக்கியசாமி அர்ச்சித்தார்.

    புனித ஆரோபண அன்னையின் விழா திருக்கொடியேற்ற நிகழ்ச்சியானது ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி நடைபெறும். 15-ந்தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது. அதன் இறுதியில் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது. இந்த விழாவில் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்ட மக்களும் பங்கேற்பார்கள். இந்த பங்கின் கீழ் 37 அன்பியங்கள், 1,500 குடும்பங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அற்புதமான சிறு குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார் அரங்கநாதர்.
    • அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அருகே இருக்கிறது, திருமால்பாடி என்ற கிராமம். இங்கு அரங்கநாதப் பெருமாளாக, திருமால் காட்சி தரும் திருக்கோவில் அமைந்திருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிலை வடிவமாக அருள்புரிந்து வரும் திருமால், இந்த திருமால்பாடியில் குளிர்ந்த ஏரிக்கரையின் மீது அமைந்த குன்று ஒன்றில், அனந்த சயன கோலத்தில், அடியாளர்களுக்கும், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கும் அருள்பாலித்து வருகிறார்.

    பல்வேறு புராணங்களை எழுதியவரும், வேதங்களை தொகுத்து வழங்கியவருமான வேதவியாசரின் மகன் சுகபிரம்ம ரிஷி. இவர் கிளி முகம் கொண்டவர். அந்த புராண காலத்தில் இப்பகுதி விரஜாபுரி என்று அழைக்கப்பட்டது. வைகுண்டத்தில் பிரவாகம் கொண்டு பாயும் புண்ணிய நதியின் பெயர் விரஜை. இதன் பெயரில் அமைந்த இடம்தான் விரஜாபுரி. இங்குள்ள குன்றின் மீது சுகபிரம்ம மகரிஷி, திருமாலை நோக்கி தவம் இயற்றினாா். பல ஆண்டுகளாக அவர் இருந்த தவத்தின் பயனாக, இந்த திருத்தலத்தில் தேவர்களுடன் கூடிய அரங்கநாதனாக, சுகப்பிரம்ம ரிஷிக்கு திருமால் தரிசனம் தந்தார்.

    மேலும் வேண்டிய வரம் கேட்கும்படியும் கூறினார். அப்போது தனக்கு 'முக்திப்பேறு வேண்டும்' என்று கேட்டார் சுகப்பிரம்ம ரிஷி. அதற்கு அரங்கநாதர், "இத்தலத்திற்கு அருகில் உள்ள தீர்க்காசலம் என்னும் நெடுமலையில் தவம் புரிந்து வா. என்னுடைய ராம அவதாரத்தின் போது, லட்சுமணன், அன்னை சீதாபிராட்டி, அனுமன் புடைசூழ காட்சி தந்து, முக்திப்பேறு அருள்வேன்" என்று கூறி மறைந்தார். இக்குன்றில் தவத்தை முடித்து, அரங்கநாதரின் கட்டளைப்படி நெடுமலையை அடைந்து, அங்கு மீண்டும் திருமாலைக் குறித்து தவமிருந்தார். பின்னர் ராமச்சந்திர பிரபுவைக் கண்டு, வணங்கி, முக்தி நிலையை எய்தினார் சுகப்பிரம்ம ரிஷி.

    இந்த புராண பின்னணியை மனதில் கொண்டு, கி.பி.1136-ம் ஆண்டு பராந்தக சோழனின் மகன் விக்கிரம சோழனால், இக்குன்றில் அரங்கநாதருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அது முதல் அடியார்களின் குறைகளை நீக்கி அற்புதமாக அருள்பாலித்து வருகின்றார் அரங்கநாயகி உடனாய அரங்கநாத பெருமாள்.

    குளிர்ந்த ஏரி நீரில் பட்டு வீசும் தென்றலும், பூஞ்சோலைகளும் பசுமையான வயல்வெளிகளும் சூழ, அற்புதமான சிறு குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார் அரங்கநாதர். 108 திவ்ய தேசங்களை நினைவூட்டும் 108 படிகளைக் கடந்து இந்த குன்றின் மேல் உள்ள இறைவனைக் காணச் செல்ல வேண்டும். படிகளைக் கடந்து மேலே சென்றதும், மேற்குப்புறமாக வசந்த மண்டபம் காணப்படுகின்றது. அடுத்ததாக, மூன்று நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. முன் மண்டபத்தின் இருபுறமும் கருங்கல் திண்ணைகள். உள்ளே மகா மண்டபத்தில் நேராக தென்திசையை பார்த்தபடி வீர ஆஞ்சநேயர் தரிசனம் அளிக்கின்றார்.

    சற்று இடதுபுறம் திரும்பினால், தாயார் அரங்கநாயகியின் சன்னிதியை தரிசிக்கலாம். இந்த தாயார் அலங்கார ரூபத்தில், சர்வ மங்களங்களையும் அருளும் சக்தியாக திருவருள் பொழிகின்றாள். அவருக்கு அருகில் நரசிம்மரது தரிசனத்தைக் காணலாம். மகாமண்டபம் கடந்து, பெரிய அந்தராளத்தை அடைந்தால், கருவறையில் ஒய்யாரமாக சயனித்திருக்கும் அரங்கநாதப் பெருமாளை கண்குளிரக் கண்டு தரிசிக்கலாம். 15 அடி நீளமுள்ள ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது, மரக்காலை தலைக்கு வைத்தபடி, அனந்த சயனத்தில் பெருமாள் படுத்திருக்கிறார். அவரது தலையின் பக்கத்தில் ஸ்ரீதேவியும், கால் அருகில் பூதேவியும் அமர்ந்துள்ளனர்.

    அரங்கநாதரின் திருப்பாதங்களின் அருகே பிரகலாதனும், சுகபிரம்ம ரிஷியும் தவக்கோலத்தில் உள்ளனர். பரந்தாமனின் திருமுகமோ பக்தர்களை பார்த்தபடி இருப்பது சிறப்பு. தலைக்கு கீழே இரண்டு விரல்களையும் உள்ளே மடக்கி, மூன்று விரல்களை வெளியில் காட்டியபடி, 'நான் மூவுலகங்களையும் அளந்தவன்' என்று உரைக்கும் தொனியில் காட்சி தருகிறார், அரங்கநாதர். பக்தர்களை பார்த்தபடி இருக்கும் இவரது திருமுகம், பக்தர்களின் மனக் குறைகளை அகற்றி அருள்பாலிக்கும் திறனை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. சிலை வடிவில் உள்ள இந்த அரங்கநாதரின் முன்பாக, உற்சவ மூர்த்தங்களாக ஸ்ரீதேவி, பூதேவி உடனான சங்கு - சக்கரம் ஏந்திய திருமால் சேவை சாதிக்கின்றார்.

    அரங்கனின் தரிசனத்தை முடித்ததும், ஆலய பிரகாரத்தை வலம் வருகையில் ஆண்டாளை தரிசனம் செய்யலாம். சன்னிதிக்கு வெளியே தனிச் சன்னிதியில் அரங்கநாதரைப் பார்த்து இருகரங்களையும் கூப்பி தரிசித்த நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார் இருக்கிறார்.

    ஆலயத்தின் வடக்குப்புறம் சிறு வாசல் ஒன்று உள்ளது. அதில் சில படிகள் வழியாக கீழே இறங்கினால் சுனை வடிவில் உள்ள தல தீர்த்தத்தை காணலாம். இந்த தீர்த்தமானது, 'நாரத தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. பாறை மீது நின்றபடி கீழே உள்ள ஏரியையும், சுற்றியுள்ள இயற்கை அழகையும் கண்டு ரசிப்பது பெருமகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும். வானர கூட்டங்கள் இங்கு பெருமளவில் உள்ளன. இந்த அரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசலும் அமைந்துள்ளது.

    இங்கு சோழர் காலக் கல்வெட்டுகள் பெருமளவில் காணப்படுகின்றன. கி.பி.1140-ல் முதலாம் குலோத்துங்கன், கி.பி. 1135-ல் சகலலோகச் சக்கரவர்த்தி ராஜநாராயண சம்புவராயர், கி.பி. 1529-ல் வீரசிங்கதேவரின் மகனான அச்சுத தேவமகாராயர் ஆகியோரால், இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்தக் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட அநேக வைணவ நிகழ்வுகளும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இத்தல மூலவரான அரங்கநாதரையும், தாயார் அரங்கநாயகியையும் வழிபாடு செய்து வருபவர்களுக்கு திருமண பாக்கியம் , குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும் என்பது நம்பிக்கை. அப்படி தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், மூலவருக்கு திருமஞ்சனம் செய்வித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இது தவிர அரசு வேலை, வேலையில் இடமாற்றம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காகவும் இந்த அரங்கநாதரை வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது வளத்தி என்ற ஊர். இங்கிருந்து தேசூர் செல்லும் சாலையில் சென்றால் அருந்தோடு என்ற கிராமம் வரும். இந்த கிராமத்தின் அருகில்தான் திருமால்பாடி திருத்தலம் உள்ளது.

    -பழங்காமூர் மோ.கணேஷ்.

    • கோவிலின் முன் பகுதியில் கருட கம்பம் அமைந்துள்ளது
    • இந்த கோவில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா வெள்ளிரவெளியில் புகழ்பெற்ற கரியகாளியம்மன் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கரியகாளியம்மன் பரிவார மூர்த்திகளுடன் வடதிசை நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி வருகிறார். இந்த கோவிலானது வெள்ளிரவெளி, மயிலம்பாளையம், தேவனம்பாளையம், புளியங்காடு, பாப்பாவலசு, ரங்கநாயக்கனூர், வடுகபாளையம் ஆகிய 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்டது.

    கோவிலின் முன் பகுதியில் கருட கம்பம் அமைந்துள்ளது. கோவிலின் இடது புறத்தில் வடக்கு முகமாக கருப்பண்ணசாமி சன்னதி அமைந்துள்ளது. கோவில் உட்பிரகாரத்தில் கொடிக்கம்பமும், சிம்ம வாகனத்துடன் பலி பீடமும், வடமேற்கே 3 பெரிய குதிரை மற்றும் காளை சிலைகள் அமைந்துள்ளன. தென்மேற்கு மூலையில் கிழக்கு முகமாக விநாயகர் சன்னதியும், அர்த்தமண்டபத்தில் விநாயகரும், கருவறையில் கரியகாளியம்மனும் எழுந்தருளியுள்ளனர். கோவில் தலவிருட்சமாக வில்வ மரம் உள்ளது.

    இங்கு அம்மனிடம் வந்து மனமுருக வேண்டினால் வேண்டுவன நிறைவேறும் என்பது அனைத்து ஊர் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதேபோல் திருமண தடை உள்ளவர்கள் அம்மனை வணங்கினால் அவர்களுக்கு நிச்சயம் திருமணம் நடைபெறும் என்பதும் கண்கண்ட உண்மை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நல்ல காரியங்கள் தொடங்கும் முன் கோவிலில் பூ போட்டு அம்மன் உத்தரவு கேட்பதும், இந்த கோவிலின் தனிச்சிறப்பாக உள்ளது.

    7 ஊர் திருவிழா

    இந்த கோவிலின் தேர் 200 வருடங்களுக்கு முன்பு பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு ஸ்கை லார்க் நாவுக்கரசு குடும்பத்தினர், ஆண்டவர் ராமசாமி குடும்பத்தினர், கே.பழனிச்சாமி குடும்பத்தினர், சென்னியப்பா டெக்ஸ் சென்னியப்பன், கோவிந்தராஜ் குடும்பத்தினர், திருமால் டெக்ஸ் முருகேசன் குடும்பத்தினர், சந்த்ரு பிராசஸ் சதாசிவம் குடும்பத்தினர் இணைந்து ஏற்படுத்திய கரியகாளியம்மன் சேவா டிரஸ்ட் சார்பில் கோவிலுக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் வழங்கப்பட்டு, கோவில் கோபுரம் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இவர்களுடன் 7 ஊர் பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை செலுத்தினர். இதை தொடர்ந்து தேர் கமிட்டி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தேர் மற்றும் குண்டம் திருவிழாவை மாங்குட்டை ஈஸ்வரன், கோவில் தர்மகர்த்தா மோகன்குமார் தலைமையிலும், வெள்ளிரவெளி நாட்டாமைக்காரர் பழனியப்ப முதலியார், புள்ளிக்காரர் ஆறுமுகம், தேர் கமிட்டியுடன் சேர்ந்து 7 ஊர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    மாவிளக்கு ஊர்வலம்

    தற்போது 12-ம் ஆண்டு குண்டம், தேர்த்திருவிழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது. கொடியேற்றம் நேற்றுமுன்தினம் நடந்தது. நேற்று காலை அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து வெள்ளிரவெளி, மயிலம்பாளையம், தேவனம்பாளையம், புளியங்காடு, பாப்பாவலசு, ரங்கநாயக்கனூர், வடுகபாளையம் ஆகிய 7 ஊர்களை சேர்ந்த பெண்கள் கரியகாளியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது இளைஞர்களின் பெருஞ்சலங்கை ஆட்டமும் நடந்தது.

    பின்னர் பெண்கள் மாவிளக்குடன் கோவிலை சுற்றி வந்து அம்மனை வழிபட்டனர். முன்னதாக கோவிலில் சிறப்பு யாக பூஜை நடந்தது. அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையில் பொங்கல் வைத்து, அம்மை அழைப்பு நடந்தது. மேலும் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக கோவிலின் முன் குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு இதற்கான சிறப்பு பூஜைகளும் நடந்தது.

    குண்டம், தேரோட்டம்

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. காலை 5 மணி முதல் பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர். இதில் சுற்றுவட்டார ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குகிறார்கள். குண்டத்திற்கு பின் காலை 10.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. தேர் வடம் பிடிக்கப்பட்டு மேற்கு திருப்பி நிறுத்தப்பட்ட பின் மீண்டும் மாலையில் வடம் பிடிக்கப்பட்டு மாரியம்மன் கோவில் அருகில் நிறுத்தப்படுகிறது. இரவு தங்கலுக்கு பின் 2-வது நாளாக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தேரோட்டம் தொடங்கி தேர் நிலையை சென்றடைகிறது.

    வருகிற 24-ந்தேதி காலை 9 மணிக்கு மண்டப கட்டளையும், இரவு 8 மணிக்கு முத்துப்பல்லக்கு நடக்கிறது. 25-ந்தேதி மாலை 6 மணிக்கு மண்டப கட்டளையும், இரவு 8 மணிக்கு மாரியம்மனுக்கு அபிேஷகமும், 26-ந்தேதி மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மறுஅபிேஷக பூஜை, பொன்னூஞ்சல் நடக்கிறது. 28-ந்தேதி காலை 9 மணிக்கு கருப்பண்ணசாமிக்கு அடசல் பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

    தயார் நிலை

    தேரோட்டத்தையொட்டி தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பக்தர்கள் நெரிசல் இன்றி குண்டம் இறங்குவதற்கு வசதியாக கோவிலின் முன் பகுதியில் மூங்கில் கம்புகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. குண்டம் மற்றும் தேரோட்டம் ஆகியவை நடப்பதால் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×