என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    இன்று விநாயகரை விரதமிருந்து முறையாக ஆனைமுகனை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவல், பொரி, கடலை வைத்து வழிபட்டால் கவலைகள் தீரும்.
    ‘வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றது. எனவே தான் ‘மூல கணபதி’ என்று சொல்கின்றோம். கணங்களுக்கெல்லாம் அதிபதியாவதால் தான் அவரைக் கணபதி என்று சொல்கின்றோம். அந்தக் கணபதிக்கு உகந்த திதி சதுர்த்தி திதியாகும்.

    ஆவணி மாதம் வரும் ‘சதுர்த்தி’ திதியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்றழைக்கின்றோம். அன்றைய தினம் விரதமிருந்து முறையாக ஆனைமுகனை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவல், பொரி, கடலை வைத்து வழிபட்டால் கவலைகள் தீரும். கனவுகள் நனவாகும். இல்லத்து பூஜையறையில் விநாயகர் படம் வைத்து, விநாயகர் அகவல் மற்றும் துதிப்பாடல் பாடி வழிபட்டால் வெற்றிக்கனியை விரைவில் எட்டிப்பிடிக்க முடியும்.

    அந்தத் திருநாள் ஆவணி மாதம் 6-ந் தேதி சனிக்கிழமை (22.8.2020) வருகின்றது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்குக் கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கே எதில் கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் காட்சி தருபவர் பிள்ளையார். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். சாணத்திலும் காட்சி கொடுப்பார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்கிரகம் வைத்தும் வழிபாடு செய்யலாம். ஆலயத்திற்குச் சென்றும் வழிபாடு செய்யலாம்.

    தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழுநம்பிக்கையோடு நாம் வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும். ‘சதுரம்‘ என்றால் நான்கு பக்கங்களும் பூர்த்தியாகிய அமைப்பாகும். எனவே வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக நாம் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கட் கிழமை, வெள்ளிக்கிழமையாகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்த திதியாகும்.

    ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள் கொடுப்பவர் ஆனைமுகப் பெருமானாகும். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரதமிருந்து அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பும் மேலோங்கும். தொழில் வளம்பெருகும். மக்கட்பேறு கிட்டும். காரிய வெற்றி உண்டாகும். புத்திக்கூர்மை ஏற்படும். நல்ல வாழ்க்கை அமையும்.

    கனவுகளை நனவாக்கும் கற்பக மூர்த்தியாக சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் காட்சி தருகின்றார். அருகிலிருக்கும் கீழச்சிவல்பட்டியில் சுகம் தரும் சுந்தர விநாயக ராகக் காட்சி தருகின்றார். கோட்டையூரில் சொற்கேட்ட விநாயகராக விளங்குகின்றார். மதுரையில் முக்குறுணி விநாயகராகவும், வன்னி மரத்தடி விநாயகராகவும், விருத்தாசலத்தில் ஆழத்துப் பிள்ளையாராகவும், பி.அழகாபுரியில் கலங்காதகண்ட விநாயகராகவும், வெயில் உகந்த விநாயகராகவும் விளங்குகின்றார். திருவெண்காட்டில் பெரிய வாரணப் பிள்ளையாராகவும், திருக்கடையூரில் கள்ளவாரணப் பிள்ளையாராகவும் காட்சி தருகின்றார். இவ் வாறாக நாடெங்கிலும் செல்வ விநாயகராகவும், சித்தி விநாயகராகவும், காட்சி தரும் ஆனைமுகப் பெருமானை ஆவணி சதுர்த்தியில் பூவணிந்து வழிபட்டால் தேவைகள் பூர்த்தியாகும். செல்வ வளம் பெருகும்.

    -ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்
    ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வருகிற வளர்பிறையில் நான்காம் நாளான சுக்ல பட்ச சதுர்த்தி நாளை, ‘விநாயகர் சதுர்த்தி’யாகக் கொண்டாடுகிறோம்.
    சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன், தன் தவத்தின் பலனாக பல வரங்களைப் பெற்றிருந்தான். அதில் ‘மனிதர்கள், விலங்குகள், ஆயுதங் களால் தனக்கு ஆபத்து நேரக்கூடாது’ என்ற வரமும் ஒன்று. இந்த கஜமுகாசுரனின் வதத்திற்கான உருவாக்கப்பட்டவரே, விநாயகர் என்று சொல்லப்படுகிறது. ஒரு முறை சிவபெருமான், உலக உயிர்களுக்கு படியளப்பதற்காக சென்றுவிட்டார். தனிமையில் இருந்த பார்வதிதேவி, சந்தனத்தை எடுத்து அதில் ஒரு உருவத்தை செய்தாள். அதற்கு உயிர் கொடுத்தபோது அது அழகிய பாலகனாக உருவெடுத்தது.

    அந்த பாலகனை காவல் வைத்து விட்டு, நீராடுவதற்காகச் சென்றாள் பார்வதிதேவி. அந்த நேரம் பார்த்து சிவபெருமான் அங்கு வந்தார். சிவனை, யார் என்று தெரியாத காரணத்தால் உள்ளே அனுமதிக்க மறுத்தான், அந்த பாலகன். தன்னுடைய இருப்பிடத்திற்குள், தன்னையே அனுமதிக்காத சிறுவனின் மீது கோபம் கொண்டார், சிவபெருமான். பாலகனுக்கும் ஈசனுக்கும் இடையே போரே மூண்டுவிட்டது. ஒரு கட்டத்தில் பாலகனின் தலையை துண்டித்துவிட்டார், சிவபெருமான்.

    அப்போது அங்கு வந்த பார்வதிதேவி, தான் உருவாக்கிய பாலகனை அழித்துவிட்டதை எண்ணி வருந்தினாள். இதையடுத்து அந்தச் சிறுவனுக்கு தான் உயிர் கொடுப்பதாக சிவபெருமான் உறுதியளித்தார். அதன்படி பூத கணங் களிடம், ‘வடக்கில் தலை வைத்திருக்கும் உயிரினத்தின் தலையைக் கொண்டு வாருங்கள்’ என்று உத்தரவிட்டார். அதன்படி கிடைத்த யானையின் தலையை, அந்த பாலகனுக்குப் பொருத்தினார். மேலும் அவனை வழிபட்ட பிறகே பிற தெய்வங் களை வணங்க வேண்டும் என்றும், அவனை வழிபடுபவர்களுக்கு காரியத் தடைகள் அகலும் என்றும் அருளினார்.

    விநாயகர் என்பதற்கு, ‘தனக்கு மேலே ஒரு தலைவன் இல்லாதவர்’ என்று பொருள். யானைத் தலை வந்ததை அடுத்து, ஒரு ஆவணி மாத சதுர்த்தி நாளில், கஜமுகாசுரனை அழிக்க விநாயகர் அனுப்பி வைக்கப்பட்டார். கஜமுகாசுரனுக்கும், விநாயகருக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தன்னுடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து அதையே அந்த அசுரனை அழிக்க ஏவினார், விநாயகர். அதனால் அந்த அசுரனின் அகந்தை அழிந்தது. அவன் மிகப்பெரிய மூஞ்சுறு எலியாக உருவெடுத்தான். விநாயகர், அதனை தன்னுடைய வாகனமாக மாற்றிக்கொண்டார்.அன்று முதல் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு வேறு சில கதைக் காரணங்களும் சொல்லப்படுகின்றன. இருப்பினும் இன்றைய தினத்தில் விநாயகரை வழிபட்டால் தீராத வினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பதுஐதீகம்.

    விரதம் இருப்பது எப்படி?

    ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வருகிற வளர்பிறையில் நான்காம் நாளான சுக்ல பட்ச சதுர்த்தி நாளை, ‘விநாயகர் சதுர்த்தி’யாகக் கொண்டாடுகிறோம். பார்வதி தேவியே கடைப்பிடித்த மகிமை மிக்க விரதம் இது என்பது இதன் சிறப்பை எடுத்துரைப்பதாகும். விநாயகர் சதுர்த்திஅன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, பூஜையறையில் கோலமிட வேண்டும். விநாயகர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, அதன் முன்பாக தலைவாழை இலை ஒன்றை விரித்து வைக்க வேண்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி, பச்சரிசியின் மீது களிமண்ணால் செய்த பிள்ளையாரை வையுங்கள். களிமண்ணால் செய்த பிள்ளையார் தான் விசேஷம். அருகம்புல், எருக்கம்பூ போன்றவற்றை பிள்ளையாருக்கு சாத்துங்கள்.

    பின் சந்தனம், குங்குமம் வைத்து விளக்கேற்றி, தூப- தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்யுங்கள். அதன்பிறகு விரதம் இருப்பவர், முதல் நாளில் இருந்து செய்து வழிபட்ட பிள்ளையாரை ஆற்றிலோ, கடலிலோ கொண்டு போய் விட்டு விட்டு வந்த பின் உணவருந்த வேண்டும். அல்லது வேறு ஒருவர் மூலமாகவும், விநாயகரை ஆற்றிலோ, கடலிலோ கரைக்கக் கூறி விட்டு விரதம் இருப்பவர் விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த விரதத்தை மேற்கொள்வதால், புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.
    முருகனை வழிபடுவதிலும் அவருக்கான வழிபாடுகள், விரதங்களை கடைப்பிடிப்பதில் நேர்மையான மற்றும் முழுமையான அர்பணிப்பு உணர்வும் இருக்குமாயின் இந்த பலன்களை நாம் பெறுவது நிச்சயம் என்கின்றன சாஸ்திரங்கள்.
    நம்முடைய இந்து வேத மரபில் முருகனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவரை வழிபடுவதிலும் அவருக்கான வழிபாடுகள் , விரதங்களை கடைப்பிடிப்பதில் நேர்மையான மற்றும் முழுமையான அர்பணிப்பு உணர்வும் இருக்குமாயின் இந்த பலன்களை நாம் பெறுவது நிச்சயம் என்கின்றன சாஸ்திரங்கள்.

    குறிப்பாக கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபடுபவர்கள் பக்தர்கள் வேண்டும் வரங்களை மனதார வழங்குகிறான் கந்தன் என்பது நம்பிக்கை. கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் திருமணத்தடை ஏதும் இருப்பின் நிச்சயம் விலகும்.

    மேலும் தொழில் வாழ்க்கையில் மற்றும் உறவுகளில் ஒருவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஏதும் பிளவு ஏற்பட்டால் , கந்த சஷ்டி விரதம் இருந்தால் அவர்களின் உறவு மேம்படும். மேலும் கந்த சஷ்டியின் 2 ம், 3 ம் மற்றும் 4 ம் நாளில் விரதம் இருந்து வணங்கினால் உங்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய கோளாறுகள் விலகும்.

    நேர்மறை ஆற்றல்களின் பால் நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். கந்தர் சஷ்டியின் 5 ம் மற்றும் 6 ம் நாள் முருகனை வழிபட்டால் ஆன்மீக ரீதியான நற்பயன்களும் , பொருளாதார வளர்ச்சியும் மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றமும் ஏற்படும்.

    கந்த சஷ்டியின் ஆறு நாட்களும்  மது, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை பழங்களை எடுத்து கொள்வது நலம். மேலும் சிவன் மற்றும் பார்வதியை கந்த சஷ்டி விரத நாட்களில் முருகனோடு சேர்த்து வழிபடுவது கூடுதல் சிறப்பு.

    முருக பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பாக தவறாமல் விளக்கு ஏற்ற வேண்டும். மேலும் முருகனின் திருவுருவச் சிலையை வைத்திருந்தால். அதற்கு புனித நீர் மற்றும் பால் கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

    பின் திருவுருவச்சிலைக்கு புத்தாடை அணிவித்து அலங்கரிக்கலாம். தவறாமல் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து, உங்கள் குறைகளை முருகனின் மனம் உருகி சொல்ல அனைத்தும் சுபமாய் நிகழும் கந்தனின் அருளால்.
    குரு பலம் கூடி வந்தால்தான் திருமணம் முடியும். பொதுவாக கல்யாணக் கனவுகள் நனவாக, வியாழக்கிழமை விரதமிருந்து குரு பகவானை வழிபடுவது நல்லது.
    திருமண வயது வந்தும் சிலருக்கு திருமணம் முடிவாகாமல் தாமதப்படலாம். ‘வாழ்க்கைத் துணை அமையவில்லையே, வயதாகிக் கொண்டே போகின்றது, வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே’ என்று கவலைப்படுபவர்கள், பலன்தரும் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் மேற்கொண்டால் இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    திருமணஞ்சேரி வழிபாடு, தித்திக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும். சிறுவாபுரியில் உள்ள வள்ளிமணவாளப் பெருமான், தெய்வானையை முருகப்பெருமான் மணந்த இடமான திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டாலும் இல்லறம் நல்லறமாக முடியும்.

    இதுபோன்ற திருமணம் முடித்து வைக்கும் திருத்தலம் ஏராளமாக உள்ளது. நமது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தின் பலம் பார்த்து, அதற்குரிய தலத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால் மணமாலை சூடும் வாய்ப்பு விரைவில் வரும்.

    குரு பலம் கூடி வந்தால்தான் திருமணம் முடியும். எனவே, குருவிற்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம். வானவருக்கு அரசனான வளம் தரும் குருவுக்கு, பட்டமங்கலம், குருவித்துறை போன்ற இடங்களில் ஆலயங்கள் உள்ளன. பொதுவாக கல்யாணக் கனவுகள் நனவாக, வியாழக்கிழமை விரதமிருந்து குரு பகவானை வழிபடுவது நல்லது.
    ஆவணி மாத அமாவாசை தினமான இன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் எத்தகையது என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    ஆவணி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். தர்ப்பணம் விடுவதற்கு தொடங்கும் முன்பு குலதெய்வத்தை வணங்க வேண்டும்.

    பின்பு இந்த தர்ப்பணம் சடங்கு நன்றாக அமைய தேவர்களின் நாயகனாகிய மஞ்சளில் விநாயகரை பிடித்து வழிபட வேண்டும். அல்லது மானசீகமாக வழிபடலாம். பின்பு உங்கள் தாய்வழி மற்றும் தந்தை வழி முன்னோர்களை மனதில் நினைத்து, வேதியர்கள் கூறும் மந்திரங்களை திரும்ப கூறி, அரிசி பிண்டத்தில் கருப்பு எள் போட்டு, அதில் தூய்மையான நீரை சிறிது விட வேண்டும். கருப்பு எள் சனி பகவானின் ஆதிபத்தியம் கொண்டது. இதை இச்சடங்கில் பயன்படுத்துவதால் ஆயுள் காரகனாகிய சனி பகவானின் அருளாசி ஒருவருக்கு கிடைக்கின்றது.

    வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

    ஆவணி மாதம் சுப மற்றும் தெய்வீக காரியங்கள் செய்வதற்கான சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் வீட்டில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
    ஆடி வெள்ளி, புரட்டாசி சனி, கார்த்திகை சோமவாரம் வரிசையில் ஆவணி ஞாயிறும் குறிப்பிடத்தக்க விரத நாளாகும்.ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுக்கலாம்.
    தமிழ் மாதங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தது.அனைத்து மாதங்களிலும் விரதம்,வழிபாடு செய்வதற்கு  உகந்த நாட்களும் கிழமைகளும் உள்ளன. ஆடி வெள்ளி, புரட்டாசி சனி, கார்த்திகை சோமவாரம் வரிசையில் ஆவணி ஞாயிறும் குறிப்பிடத்தக்க விரத நாளாகும்.ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுக்கலாம்.அதிலும் ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு,காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். தேக ஆரோக்கியத்திற்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து தொடங்குவது மிகவும் விசேஷம் என சொல்லப்படுகிறது.

    இதற்கு காரணம் ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு என்பதால், நமக்கு ஆத்மபலத்தைத் தருகிறார் சூரியன்.  இதனை சிறப்பிக்க தான் ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். குரு‌ஷேத்திர போரில், மனம் சஞ்சலப்பட்டு  இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க,கீதையை உபதேசம் செய்த  கிருஷ்ணர், இம்மாதத்தில் தான் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெறுகிறது.

    மேலும் சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே ஞாயிறுக்கிழமை விரதம் வழக்கப்படுத்தப்பட்டது.

    தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொண்டு, சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெற்றால்,குறையொன்றும் இல்லாத வாழ்க்கை தான். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில்ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட எதிரிகளை வெல்லும் மன திடத்தை தருவார் ஆதித்யன்.

    அகத்தியரின் வழிகாட்டுதலின்படி, ராமர் ஆதித்ய ஹிருதயம் என்ற அற்புதமான மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ததால் தான் எளிதில் ராவணனை வென்றார் என்கின்றன புராணங்கள். ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரிய பகவானை  முறைப்படி சூரிய நமஷ்காரம் செய்து வணங்கினால்,சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம் என்பது நம்பிக்கை.

    ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்ய முடியாவிட்டாலும்,காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி “ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா” எ ன்று கூறி மூன்று முறை வணங்கினாலே போதும், தன்னுடைய ஆயிரம் பொற்கரங்களால் ஆயிரம் பலன்களை அள்ளித்தருவான் ஆதவன்.
    சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.
    பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னி ராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில்தான் நிகழ்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும் கன்னி ராசியில் புகுகிறது.

    புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.

    ஆகவேதான் புரட்டாசி சனிக் கிழமைகள் அன்று விரதம் மேற்கொள்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவத்தை விலக்குவது நல்லது. இயலாதவர்கள் சனிக்கிழமை அன்று மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கலாம்.
    சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும்.

    மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். அன்றும் அசைவத்தைத் தவிர்க்க வேண்டும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
    ஆடி கடைசி வெள்ளியான இன்று விரதம் இருந்து அருள் தரும் அம்மனை தரிசனம் செய்யுங்கள். அவளின் சந்நிதியில் நின்று, உங்கள் கஷ்டங்களையெல்லாம் சொல்லி முறையிடுங்கள்.
    ஆடி கடைசி வெள்ளியான இன்று விரதம் இருந்து அருள் தரும் அம்மனை தரிசனம் செய்யுங்கள். அவளின் சந்நிதியில் நின்று, உங்கள் கஷ்டங்களையெல்லாம் சொல்லி முறையிடுங்கள். இனி உங்களுக்கு எல்லா சத்விஷயங்களையும் தந்து அருள்வாள் அம்பிகை.

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதம் முழுக்கவே அம்மனைத் தரிசிப்பது மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம். கோடை முடிந்து அடுத்த காலம் தொடங்கும் வேளையில், உடற்சூடு சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கக் கூடும் என்பதால்தான், இந்த ஆடி மாதத்தில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

    மேலும் இந்த மாதத்தில், அம்மனுக்கு கூழ் வார்க்கும் வைபவமும் நடைபெறும். வேப்பிலைக்காரியின் சந்நிதியில் நின்றுவிட்டு வரும் போது, அந்த வேப்பிலையின் நறுமணம் நமக்குள் புகுந்து, நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் என்கிறார்கள்.

    அதுமட்டுமின்றி, இந்த ஆடி மாதத்தில்தான், எங்கு பார்த்தாலும் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதும் நடக்கிறது. சக்தி மிக்க சக்தியின் ஆடி மாதத்தில், மறக்காமல் அம்மனை தரிசனம் செய்வது இரட்டிப்புப் பலன்களை வழங்கும் என்பது உறுதி.

    இதோ... ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இன்றைய நாளில், விரதம் இருந்து மறக்காமல் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள். அம்பிகையை கண்ணாரத் தரிசியுங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் துக்கங்களையும் கவலைகளையும் அவளிடம் சொல்லி முறையிடுங்கள். இனி உங்கள் வாழ்வில், எல்லா சத்விஷயங்களையும் தந்து அருள்பாலிப்பாள் அன்னை பராசக்தி.

    முடிந்தால், அருகில் உள்ள புற்றுக்கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். அங்கே உள்ள கிராம தேவதை அல்லது கிராம அம்மனை தரிசித்து வேண்டிக் கொள்ளுங்கள். புற்றுக்குப் பால் வார்த்து, பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வீட்டின் திருஷ்டியெல்லாம் கழிந்துவிடும். முன்னேற முடியாமல் இருந்த தடைகள் அனைத்தும் தகர்ந்துவிடும். வாழ்விலும் உங்களின் இல்லத்திலும் ஒளியேற்றித் தந்தருள்வாள் தேவி. 
    ஸ்வர்ணாகர்ஷண பைரவரை விரதம் இருந்து வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனதில் மகிழ்ச்சியை பெறலாம்.
    எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிட சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.

    மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரை பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடிந்து, இனி என்னால் யாருக்கும் எந்த கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பது தான்.

    வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது. தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 தெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும். இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.

    நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களை கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லா பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

    மாதந்தோறும் வரும் கிருத்திகை முருகனுக்கு உரிய நாள். கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை மற்றும் ஆடி மாதம் வரும் கிருத்திகை மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
    சிவபெருமானின் அருளால் ஆடி கிருத்திகை தினத்தில் சூரனை அழிக்க முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தார். அந்தக் குழந்தைகளை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்தனர்.

    கார்த்திகைப் பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் கார்த்திகை நட்சத்திரமாக மாறினார்கள். முருகக் கடவுளை ஆராதித்தவர்களுக்கு நட்சத்திரப் பட்டம் கிடைத்தது. அதுமட்டுமின்றி, கிருத்திகை நட்சத்திர நாளில், முருகப் பெருமானை வழிபடும் வழக்கமும் ஏற்பட்டது என விவரிக்கின்றன ஞானநூல்கள்.

    இதன் காரணமாகத்தான், முருகக் கடவுளுக்கு 'ஆறு எண்' என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆறுமுகங்களைக் கொண்டிருக்கிறான் அழகுக் குமரன். அப்பன் சிவனாரின் மந்திரம் ஐந்தெழுந்து நமசிவாயம் எனில், மால் மருகனின் மந்திரம் ஆறெழுத்து ‘சரவணபவ’. ஆறுமுகத்துடன் ஆறிரு கரங்கள் என்றும் காட்சி தருகிறான் கந்தவடிவேலன்.

    சூரனை அழித்து, தேவர்களைக் காத்த ஆறுமுகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. மூன்று கிருத்திகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தை கிருத்திகை விசேஷம். அதேபோல், கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரமும் சிறப்பு வாய்ந்தது. இதேபோல, ஆடி மாதத்தில் வருகிற கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

    பொதுவாகவே, ஆடிக் கிருத்திகை தினத்தன்று அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படும். இந்தநாளில், விரதம் இருந்து முருக தரிசனம் மேற்கொள்வார்கள் பக்தர்கள்.

    ஆடி தேய்பிறை அஷ்டமி தினத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய பைரவர் விரத வழிபாடு முறையையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    ஆடி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து பைரவரை வழிபட ஒரு சிறந்த தினமாகும். தேய்பிறை அஷ்டமி அன்று விரதம் இருந்து ராகு காலத்தில் பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலில் இருக்கின்ற சந்நிதிக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, செவ்வாழை நைவேத்தியம் செய்து, தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது.

    மேற்கண்ட முறையில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுபவர்களுக்கு சிறிது காலத்திலேயே எப்படிப்பட்ட பணக்கஷ்டங்களும் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாமல் காக்கும். பொருட்கள் களவு போகாமல் பாதுகாக்கும். வருமானம் பெருகும். பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். துஷ்ட சக்திகளினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். உங்களுக்கு செய்யப்படும் மாந்திரீக ஏவல்கள், செய்வினை தந்திரங்கள் பலிக்காமல் போகும். கொடிய நோய்கள் அனைத்தும் சிறிது சிறிதாக குணமாகும்.
    சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக் கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வணங்கலாம்.
    நவக்கிரகத்தில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர், சனீஸ்வர பகவான். இவர் ‘கர்மக் காரகன்’, ‘ஆயுள்காரகன்’ என்று அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் கடுமையான துன்பத்தையும், அளவற்ற நன்மையையும் தருபவர் இவரே. ஒருவரின் கர்ம வினையை முழுமையாக அனுபவிக்க உதவுபவர். கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். ஒருவரின் வாழ்வில் ஏற்படும் எல்லா சம்பவங்களையும் தனக்குள் பதிவு செய்பவர். மனிதர்களின் அனைத்து கர்ம வினைகளும், சனி கிரகத்தில்தான் பதிவாகி இருக்கும். இவர் கர்ம வினையை நிகழ்த்த உதவி செய்பவர்களாகவும், சனியின் பிரதிநிதிகளாகவும் ராகுவும், கேதுவும் செயல்படுகிறார்கள்.

    சனி பகவானுக்கு, ‘மந்தன், முடவன், கிழவன், நீலன், அந்தகன், காரி, சவுரி’ என பல பெயர்கள் உள்ளன. மனித உறவுகளில் இவர் சித்தப்பா முறையை குறிப்பிடுவார். உடல் உறுப்புகளில், கால்கள், வெளியே தெரியும் படியான நரம்புகள், இடங்களில் அசுத்தமான இடங்களைக் குறிப்பார்.

    துலாம் ராசிக்காரர் ஒருவருக்கு, அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. அதனால்தான் சனி துலாம் ராசியில் உச்சம் அடைகிறார். இவரை ‘கர்ம வினை அதிகாரி’ என்றும் கூறலாம். ஜாதகத்தில் சனியின் வலிமை பூர்வ ஜென்ம வலிமைக்கு ஏற்பவே இருக்கும்.

    9-ம் இடம் என்னும் பாக்கிய ஸ்தானம் வலுப்பெற்றவர்களது ஜாதகத்தில், சனி வலிமையாக இருப்பார். சனி கொடுத்தால் யாராலும் தடுக்க முடியாது. அடி முட்டாள்களைக் கூட மிகப்பெரிய பட்டம், பதவிகளில் அமர வைக்கும் சக்தி படைத்தவர் சனீஸ்வரன். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, மிகப் பெரிய ராஜதந்திரியைக் கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த ஒரே கிரகம் சனியாகும்.

    ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால், அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் ‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்று சொல்கிறார்கள்.

    சனீஸ்வரருக்கு திசா புத்திகளுடன், அந்தர பலத்துடன் கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 1, 2, 12, ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்டக சனியாகவும், ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.

    நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும், அலுவலகத்தில் ஏதாவது பிரச்சினை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும், வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத் தனங்கள் செய்தாலும், எந்த கிரக திசா புத்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் அது சனீஸ்வரரால்தான் நடக்கிறது என்ற தவறான எண்ணம் மக்களிடையே இருக்கிறது.

    ஜனன ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர்களுக்கு, தன் தசா காலத்தில், தான் நின்ற இடத்திற்கு ஏற்ப ஏராளமான நற்பலன்களை சனி பகவான் வாரி வழங்குவார். உயர் பதவி, தொழில், அந்தஸ்து என எட்டாத உயரத்தில் ஏற்றி விடுவார். வலிமை இழந்தவர்களுக்கு நீசத் தொழில், வறுமை, சிறை தண்டனை கொடுத்து பாவ, புண்ணியங்களை உணர்த்தி வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுப்பார். ஒரு ஜாதகத்தில் சனி அமர்ந்த இடத்தை வைத்தே பூர்வ ஜென்ம, பாவ, புண்ணிய பலனை கூறிவிட முடியும். மேலும் சனி ஒளியற்ற கிரகம் என்பதால், தன்னுடன் இணைந்த கிரகத்தின் ஒளிக்கு ஏற்ப நன்மை, தீமைகள் இருக்கும்.

    பொதுவாக அசுப கிரகங்கள் தரும் பலன்களில் ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும் என்பதால், நன்மை வந்தாலும் அந்த நன்மையை அனுபவிக்க முடியாத சிரமமும் இருக்கும். சர்க்கரை ஆலை அதிபருக்கு சர்க்கரை வியாதியை தருவார். சர்க்கரை வியாதி இல்லாதவருக்கு சர்க்கரை வாங்க பணம் இல்லா நிலையை தருவார்.

    சனி தசை, புத்தி அந்தர காலங்களிலும் கோச்சார பாதிப்பு காலங்களிலும் எளிய பரிகாரமாக, சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக் கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வணங்கலாம். பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், தொழிலாளிகள், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவி நல்ல பலன் தரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு வன்னி மர சமித்துகளால் ஹோமம் செய்து வழிபடலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்வதும் சிறப்பான பலன்களைத் தரும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    ×