search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகர்
    X
    விநாயகர்

    இன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் வெற்றிகள் தேடிவரும்

    இன்று விநாயகரை விரதமிருந்து முறையாக ஆனைமுகனை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவல், பொரி, கடலை வைத்து வழிபட்டால் கவலைகள் தீரும்.
    ‘வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றது. எனவே தான் ‘மூல கணபதி’ என்று சொல்கின்றோம். கணங்களுக்கெல்லாம் அதிபதியாவதால் தான் அவரைக் கணபதி என்று சொல்கின்றோம். அந்தக் கணபதிக்கு உகந்த திதி சதுர்த்தி திதியாகும்.

    ஆவணி மாதம் வரும் ‘சதுர்த்தி’ திதியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்றழைக்கின்றோம். அன்றைய தினம் விரதமிருந்து முறையாக ஆனைமுகனை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவல், பொரி, கடலை வைத்து வழிபட்டால் கவலைகள் தீரும். கனவுகள் நனவாகும். இல்லத்து பூஜையறையில் விநாயகர் படம் வைத்து, விநாயகர் அகவல் மற்றும் துதிப்பாடல் பாடி வழிபட்டால் வெற்றிக்கனியை விரைவில் எட்டிப்பிடிக்க முடியும்.

    அந்தத் திருநாள் ஆவணி மாதம் 6-ந் தேதி சனிக்கிழமை (22.8.2020) வருகின்றது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்குக் கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கே எதில் கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் காட்சி தருபவர் பிள்ளையார். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். சாணத்திலும் காட்சி கொடுப்பார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்கிரகம் வைத்தும் வழிபாடு செய்யலாம். ஆலயத்திற்குச் சென்றும் வழிபாடு செய்யலாம்.

    தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழுநம்பிக்கையோடு நாம் வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும். ‘சதுரம்‘ என்றால் நான்கு பக்கங்களும் பூர்த்தியாகிய அமைப்பாகும். எனவே வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக நாம் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கட் கிழமை, வெள்ளிக்கிழமையாகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்த திதியாகும்.

    ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள் கொடுப்பவர் ஆனைமுகப் பெருமானாகும். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரதமிருந்து அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பும் மேலோங்கும். தொழில் வளம்பெருகும். மக்கட்பேறு கிட்டும். காரிய வெற்றி உண்டாகும். புத்திக்கூர்மை ஏற்படும். நல்ல வாழ்க்கை அமையும்.

    கனவுகளை நனவாக்கும் கற்பக மூர்த்தியாக சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் காட்சி தருகின்றார். அருகிலிருக்கும் கீழச்சிவல்பட்டியில் சுகம் தரும் சுந்தர விநாயக ராகக் காட்சி தருகின்றார். கோட்டையூரில் சொற்கேட்ட விநாயகராக விளங்குகின்றார். மதுரையில் முக்குறுணி விநாயகராகவும், வன்னி மரத்தடி விநாயகராகவும், விருத்தாசலத்தில் ஆழத்துப் பிள்ளையாராகவும், பி.அழகாபுரியில் கலங்காதகண்ட விநாயகராகவும், வெயில் உகந்த விநாயகராகவும் விளங்குகின்றார். திருவெண்காட்டில் பெரிய வாரணப் பிள்ளையாராகவும், திருக்கடையூரில் கள்ளவாரணப் பிள்ளையாராகவும் காட்சி தருகின்றார். இவ் வாறாக நாடெங்கிலும் செல்வ விநாயகராகவும், சித்தி விநாயகராகவும், காட்சி தரும் ஆனைமுகப் பெருமானை ஆவணி சதுர்த்தியில் பூவணிந்து வழிபட்டால் தேவைகள் பூர்த்தியாகும். செல்வ வளம் பெருகும்.

    -ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்
    Next Story
    ×