என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    மார்கழி மாதத்தில் வரும் “ பௌர்ணமி” தினத்தின் சிறப்புகளும், இன்று விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகளை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    புரட்டாசி மாதம் எப்படி பெருமாளின் வழிபாட்டிற்குரிய ஒரு மாதமாக இருக்கிறதோ, அதே போன்று மார்கழி மாதமும் சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இரு மூர்த்திகளையும் வழிபடுவதற்குரிய சிறந்த மாதமாக இருக்கிறது. அதிலும் மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் இந்த இரு தெய்வங்களையும் வழிபடுவதால் சகல நன்மைகளும் உண்டாகும்.

    மார்கழி பௌர்ணமியான இன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் விருப்பத்தை பொறுத்து சிவன் கோவிலுக்கோ அல்லது விஷ்ணு கோவிலுக்கோ சென்று வழிபட வேண்டும். இன்று விரதமிருக்க விரும்புபவர்கள் சாப்பிடாமல் இருப்பதை காட்டிலும் மூன்று வேளையும் பால், பழங்கள் சாப்பிட்டு விரதமிருக்கலாம். மாலையிலும் சிவன் அல்லது விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். பொதுவாக மார்கழி பௌர்ணமி தினத்தில் காலையில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டவர்கள், மாலை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதும், காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டவர்கள் மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் சாலாச் சிறந்ததாகும்.

    மார்கழி பௌர்ணமி தினத்தில் இந்த முறையில் வழிபடுபவர்களுக்கு உடல், மனம், ஆன்மாவினால் செய்த பாவங்கள் இறைவனின் அருளால் நீங்கும். மனோதிடம் பெருகும். மனதில் சிறந்த சிந்தனைகளும், எண்ணங்களும் எப்போதும் தோன்றும். பெருமாளின் அருட்கடாட்சம் கிடைத்து வீட்டில் வளங்கள் பெருகும். மனதில் இருக்கின்ற பயங்கள், கவலைகள் போன்றவை நீங்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    திருப்பாவை பாடி மார்கழி நோன்பு இருந்து ரங்கநாதரை ஆண்டாள் திருமணம் செய்து கொண்டாள். ஆண்டாள் இருந்த விரதத்தை இப்போதும் கன்னிப் பெண்கள் அனுஷ்டித்தால் நல்ல கணவர் கிடைப்பார்.
    அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யப்படும் செயல்கள் நல்ல பலன்களைக் கொடுக்கும். மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.
    மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். அதுபோல திருவாதிரை தினத்தன்று களி நிவேதனம் செய்து நடராஜரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும். ஆண்டாள் இயற்றிய பிரபந்தங்கள் இரண்டு. ஒன்று திருப்பாவை. மற்றொன்று நாச்சியார் திருமொழி.

    மார்கழி நோன்பு இருக்கும் பெண்கள் அதிகாலையில் பாடுவதற்காக திருப்பாவையை ஆண்டாள் இயற்றினார். திருப்பாவையில் மொத்தம் 30 பாடல்கள். நோன்பு இருந்த ஒவ்வொரு நாளும் ஒரு பாடலாக 30 பாடலை ஆண்டாள் பாடினார். வேதங்களின் முடிவுப் பகுதியாகிய உபநிஷதங்களின் நுட்பமான பொருட்களை திருப்பாவை எடுத்துச் சொல்வதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    திருப்பாவையில் உள்ள 30 பாடல்களில் முதல் 5 பாடல்கள் மார்கழி நோன்பு பற்றியும், அடுத்த 10 பாடல்கள் தோழிகள் அதிகாலையில் எழுப்பப்படுவது பற்றியும், அதற்கு அடுத்த 10 பாடல்கள் கண்ணனை கண் விழிக்க செய்யும், கடைசி 5 பாடல்கள் பாவை நோன்பு பயன்கள் பற்றியும் சொல்கிறது.
    திருப்பாவையின் 30 பாடல்களையும் கற்பவர்கள் எப்போதும் திருமால் அருளால் பூ உலகிலும், வான் உலகிலும் இன்ப வாழ்க்கை வாழ்வார்கள். எல்லா நலன்களும் கிடைக்கும். அதோடு வாழ்வாங்கு வாழ்ந்து பின்பு மோட்சத்தையும் அடைவார்கள்.

    கன்னிப் பெண்கள் தாங்கள் விரும்பும் கணவனை அடைய நோன்பு இருப்பது வழக்கம். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் நேரத்தில் (அதிகாலை 4 மணி முதல்) கன்னிப் பெண்கள் தங்கள் தோழியருடன் சென்று குளித்து, நல்ல கணவர் வேண்டும் என்று வழிபடுவதே இந்த நோன்பின் முக்கிய அம்சமாகும். மார்கழி மாதம் 30 நாளும் இந்த நோன்பை கடை பிடிப்பது விசேஷம் என்பதால் இதை மார்கழி நோன்பு, பாவை நோன்பு என்று கூறுகிறார்கள்.

    திருப்பாவை பாடி மார்கழி நோன்பு இருந்து ரங்கநாதரை ஆண்டாள் திருமணம் செய்து கொண்டாள். ஆண்டாள் இருந்த விரதத்தை இப்போதும் கன்னிப் பெண்கள் அனுஷ்டித்தால் நல்ல கணவர் கிடைப்பார்.

    அந்த எளிய பரிகார விரதம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

    கன்னிப் பெண்கள் தினமும் அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து நீராடி திருப்பாவை படிக்க வேண்டும். மார்கழி முதல் தேதியில் ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்ற பாடலை பாட வேண்டும். இப்படி திருப்பாவையின் 30 பாடலையும் பாட வேண்டும். மார்கழியில் 29 நாட்களே இருப்பதால் கடைசி நாள் (மார்கழி 29-ந்தேதி ஜனவரி 13 போகி தினத்தன்று) மட்டும் கடைசி 2 பாடல்களை பாட வேண்டும்.

    நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் தன் திருமணம் எப்படி நடந்தது என்பது பற்றிய கனவை எழுதியுள்ளார். “வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து” என்று தொடங்கும் அந்த பாசுரங்களை மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் படித்தால் உடனே திருமணம் நடக்கும்.

    வாரணம் ஆயிரம் பாடி முடித்ததும் பெருமாள், ஆண்டாள் படம் மீது பூ தூவி வழிபட வேண்டும். இதனால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து நல்ல கணவர் கிடைக்க அருள்வாள். திருமணத் தடைகள் இருந்தால் விலகி விடும்.

    நல்ல குணமுள்ள கணவர் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என நினைப்பவர்கள் மார்கழி மாதம் விரதமிருந்து கண்ணனை மனமுருகி வேண்டினால் நிச்சயம் நிறைவேறும்.
    பிறந்த வீட்டில் எப்படி சந்தோசமாக வாழ்கிறார்களோ அதே சந்தோசத்தை தருகிற அளவுக்கு புகுந்த வீடும், கணவரும் அமைய வேண்டும் என்பது இன்றைய காலப் பெண்களின் பெருங்கனவாக இருக்கிறது. நல்ல குணமுள்ள கணவர் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என நினைப்பவர்கள் மார்கழி மாதம் விரதமிருந்து கண்ணனை மனமுருகி வேண்டினால் அது நிச்சயம் நடைபெறும் என்பது தெய்வீக நம்பிக்கை.

    எல்லா செல்வங்களும் நிறைந்து நாடும் நாட்டு மக்களும் தன்னிறைவோடு இருக்க மார்கழி மாத விரதம் கடைபிடிக்கப்பட்டாலும் ஆயர் குலப் பெண்கள் தங்களுக்கு வரும் வாழ்க்கைத் துணை சிறப்பானதாக அமைய கண்ணனின் துதி பாடி நோன்பு இருந்தனர். மார்கழி மாதத்தில் இந்த விரதத்தை ஆயர்குலப் பெண்கள் மேற்கொண்டதால் மார்கழி விரதம் என்ற பெயர் இதற்கு வந்து விட்டது.

    எம்பெருமான் கண்ணனை நினைத்து ஆண்டாள் பாடிய திருப்பாவை, சிவனை நினைத்து மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை, இதோடு திருப்பள்ளியெழுச்சி உள்ளடக்கிய பாடல்களை மார்கழி மாதத்தில் பெண்கள் மனமுருகிப் பாடி இறைவனைத் துதிக்கிறார்கள். திருப்பாவையில் 30 பாடல்களும், திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி இரண்டும் சேர்த்து 30 பாடல்களும் இருக்கின்றன.

    பனி விழும் மாதம் மார்கழி. இந்த மாதத்தில் அனைவரும் அதிகாலையில் எழுந்து ஆறு, குளத்திற்கு சென்று நீராடிவிட்டு பகவானின் நாமத்தை கூறியபடியும், திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களை பாடியபடியும் வீதிகள்தோறும் நடந்து செல்வார்கள்.

    கோவிலுக்கு சென்றும் வழிபடுவர். வீட்டில் இருப்பவர்கள் குளித்துவிட்டு வீட்டின் வாசலை தெளித்து பெருக்கி, பெரிய கோலங்கள் போடுவர். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் ஒசோன் வாயு கீழே வெளிப்படுகிறது.

    அது வியாதிகளை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. ஓசோன் நம்மீது பட்டு உடல் ஆரோக்கியம் பெறுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இதனால் தான் மார்கழி மாதத்தில் பொழுது விடியும் நேரத்தில் நீராடி நோன்பு நோற்கும் முறை உருவானது.

    பூஜையறையில் ஆண்டாள், பெருமாள் படங்களை வைத்து காலையும் மாலையும் மலர்தூவி வழிபாடு செய்ய வேண்டும். மார்கழி முதல் நாளில் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளே என்ற பாடலோடு தொடங்குவது சிறப்பான பலன்களைத் தரும். ஒவ்வொரு துதிப் பாடல்களையும் மூன்று முறை பாடப்படவேண்டும். 
    விரத காலத்தில் உண்ணாமல் இருப்பதும், அவசியமானால் மிக எளிமையான உணவை எடுத்துக் கொள்வதும் அவரவர் உடல், மன நிலைக்கு ஏற்றபடியானது.
    அமாவாசை, சதுர்த்தி, பவுர்ணமி, முன்னோர் திதி என எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி வந்தாலும் நாம் அனைவரும் விரதம் இருப்பது இயற்கை. விரதம் என்று சொன்னால் பலருக்கும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தெரியும். விரதம் அல்லது நோன்பு என்பதற்கு உண்ணாமல் இருப்பது என்பது மட்டும் அர்த்தம் அல்ல.

    உரிய முறையில் வழிபாடுகள் செய்வது என்பதுதான் சரியான பொருள். அப்படி பூஜைகள் செய்யும்போது புலனடக்கம் தேவை என்பதால்தான் உணவில் கட்டுப்பாடுகள் கூறப்பட்டன. எல்லாவிரதங்களிலுமே பொதுவான பல விஷயங்கள்தான் தொடக்கம் முதல் முடிக்கும் வரை கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தப் பொதுவான விதிகளோடு எந்தக் கடவுளுக்கான விரதமோ அந்த தெய்வத்திற்கான வழிமுறையும் துதிகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.

    விரதங்களைக் கடைபிடிக்கும் முறைப் பற்றித் தெரிந்து கொண்டு எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து எண்ணற்ற நற்பலன்களைப் பெறுங்கள். எந்த ஒரு விரதமானாலும், முதல் நாளே வீட்டைக் கழுவி தூய்மைப்படுத்துங்கள். பூஜைகளின்போது கோலம் இரு இழைகளால் அமையவேண்டும் என்பது பொதுவான விதி!

    விரத தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடி தூய ஆடையினை அணிந்து அவரவர் வழக்கப்படி குங்குமம், திருநீறு, சந்தனம் அணியுங்கள். வழிபடப் போகிற தெய்வ உருவங்கள், படங்களை நன்றாகத் துடைத்து சந்தனம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள். (சில தெய்வங்களை குறிப்பிட்ட மலர் அல்லது இலையால் அர்ச்சிப்பது கூடுதல் பலன்தரும். உதாரணமாக, துர்க்கைக்கு செவ்வரளிப்பூ). அனைத்து பூஜைகளுக்குமே தூய்மையான நீரும், பூவும் அவசியம். முதல் நாளே தனியாக நீரெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா நோன்புகளுக்குமே ஆரம்பமாக பிள்ளையாரை பூஜிக்க வேண்டும்.

    மஞ்சளில் பிடித்து வைத்து வழிபடுவது நல்லது. விரதம் நிறைவடைந்த பின் அல்லது மறுநாள் அந்த மஞ்சள் பிள்ளையாரை நீரில் கரைத்துவிட வேண்டும். விரதத்திற்காக வைக்கப்படும் கலசத்தினை ஆரம்பத்திலேயே சரியான இடத்தில் வைத்துவிடவேண்டும். ஒருமுறை வைத்துவிட்டால், விரத வழிபாடுகள் நிறைவடைந்த பிறகே கலசத்தினை நகர்த்தலாம்.

    அதற்கு முன் நகர்த்தக் கூடாது. ஆணோ பெண்ணோ விரதம் கடைப்பிடிப்பவர் யாராக இருந்தாலும், குடும்பத்துப் பெரியவர்களிடமோ, பெற்றோரிடமோ ஆசிபெற்றும் வாழ்க்கைத் துணையின் அனுமதியோடும் விரதத்தினை மேற்கொள்வது நல்லது. இதனால் விரதகாலத்தில் பிறரால், எதிர்பாராத மனவருத்தங்கள் வராமல் இருக்கும்.

    விரத காலத்தில் உண்ணாமல் இருப்பதும், அவசியமானால் மிக எளிமையான உணவை எடுத்துக் கொள்வதும் அவரவர் உடல், மன நிலைக்கு ஏற்றபடியானது. அதேசமயம் ஏகாதசி விரதம் போன்ற விரதங்களில் உணவருந்தாமல் இருப்பது அவசியம். எனவே உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற விரதத்தினை அனுசரிப்பதே நல்லது.

    விரதம் இருக்கும் சமயத்தில் இயன்றவரை இறை சிந்தனையுடன் இருப்பது அவசியம். விரதம் இருக்கும் தினங்களில் முடிந்தவரை பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். விரதகாலத்தில் எவர்மீதும் கோபப்படுவதோ, வீண்விவாதங்கள் செய்வதோ கூடாது. பூஜைக்கு உரிய தெய்வத்தின் துதிகள், பாடல்களை அன்று முழுவதுமே கேட்பது, படிப்பது, சொல்வது நல்லது.

    தெரியாதவர்கள் அந்தக் கடவுளின் பெயரையே திரும்பத்திரும்ப சொன்னாலும் போதும். விரதம் இருப்பது நிச்சயம் பலன்தரும் என்பதை முழுமையாக நம்புங்கள். அதே சமயம் பலனை எதிர்பார்த்து மட்டுமே அனுசரிக்காமல் மனப்பூர்வமாக பக்தியுடன் கடைப்பிடியுங்கள். விரதம் இருப்பதோடு உங்களால் இயன்ற உதவியினை வசதியில் குறைந்தவர்களுக்குச் செய்யுங்கள்.
    தாயை விட சிறந்த தெய்வமில்லை காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; ஏகாதசியைவிட சிறந்த விரதமில்லை என்பது ஏகாதசியின் பெருமையை நமக்கு எடுத்துச் சொல்கிறது.
    ஞானேந்திரியங்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்), கர்மேந்திரியங்கள் (கை, கால், வாக்கு, பிறப்புறுப்பு, கழிவு உறுப்பு) மனம் என்னும் பதினொன்றையும் ஒன்றி ணைத்து கடவுளைக் குறித்து செய்யும் விரத வழிபாடு ஏகாதசி விரதம்.

    ஏகாதசி என்ற சொல்லுக்கு ஸ்ரீமந்நாராயணருக்குரிய பதினோராவது நாள் என்பது பொருள். இதை முப்பத்து முக்கோடி தேவர்களும் கடைபிடிப்பதால் முப்பத்து முக்கோடி ஏகாதசி என்றும் குறிப்பிடுவர்.

    பலர் ஏகாதசி விரதத்தால் நன்மை பெற்றுள்ளனர். எட்டு வயது முதல் தொடங்கி எண்பது வயது வரை ஏகாதசி விர தம் மேற்கொள்ளலாம். உடல் மட்டுமின்றி உள்ளமும் இதனால் நன்மை பெறுகிறது. செரிமான உறுப்புகளுக்கு அதிக வேலை கொடுக்காமல் ஓய்வு கிடைப்பதால் வயிறு சுத்தமாகிறது என்ற உண்மையை உணர்ந்தே மக்கள் விரதம் இருக்கின்றனர்.

    தாயை விட சிறந்த தெய்வமில்லை காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; ஏகாதசியைவிட சிறந்த விரதமில்லை என்பது ஏகாதசியின் பெருமையை நமக்கு எடுத்துச் சொல்கிறது. அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தை இவ்விரதம் அளிக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், பண்டரிபுரம் விட்டலன், குரு வாயூர் அப்பன், துவாரகை கிருஷ்ணர் கோவில்களில் ஏகாதசிக்கு குவியும் பக்தர்களின் எண்ணிக்கையை அளவிட முடியாது. ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இவற்றில் மூன்று மிகவும் சிறப்புமிக்கவை.

    ஆனி மாத சயன ஏகாதசி, கார்த்திகை மாத உத்தான ஏகாதசி, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி. இந்த நாட்களில் பெருமாளை தரிசிப்பது சிறப்பு. இதிலும் வைகுண்டஏகாதசியே மிக விசேஷம்.

    ஓராண்டின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலனை வைகுண்ட ஏகாத சியன்று விரதமிருந்தால் பெற முடியும் என்கிறது விஷ்ணு புராணம். சாதாரண ஏகாதசி நாட்களில் விரதமிருக்க இய லாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருப்பது அவசியம். அன்று அதிகாலையில் கோவில்களில் நடக்கும் சொர்க்கவாசல் வைபவத்தை தரிசிக்க வேண்டும். அதிலும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங் கத்தில் தரிசிப்பது மிகச்சிறப்பு.
    பூலோகத்தில் முதன் முதலில் சொர்க்க வாசல் திறந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கான புராண நிகழ்வு என்னவென்றால், தேவர்களுக்கு இடையூறு செய்த அசு ரர்களான மது, கைடபரை அழிக்க முற்பட்டார் மகா விஷ்ணு. ஆனால் அவர்கள் சரணடைந்தனர். காரணம் இருவரும் விஷ்ணுவின் காதில் இருந்து தோன்றியவர்கள். தங்களின் அருட்சக்தியால் உருவான எங்களை கொல்லாமல், என்றென்றும் வைகுண்டத்தில் தங்கியிருக்கும் பாக்கியத்தை அருள வேண்டும் என வேண்டினர்.

    விஷ்ணுவும் சம்மதித்தார். மேலும் அவரிடம், சுவாமி, வைகுண்ட ஏகாதசி நன்னாளில் ஸ்ரீரங்கத்தின் வடக்கு வாசல் வழியே தாங்கள் எழுந்தருளும் போது தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் பாவம் நீங்கி முக்தி இன்பத்தை அடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என வைகுண்ட ஏகாதசி திருவிழா 21 நாட்கள் கொண்டாடப்படும். ஸ்ரீரங்கத்தில் தினமும் காலை 9.15 மணி முதல் பகல் 1 மணி வரை பாசுரங்களை அபிநயத்துடன் ஆடிப்பாடும் அரையர் சேவையுடன் நம்பெருமாளை பக்தர்கள் தரிசிக்கலாம். பகல்பத்து உற்சவத்தின் பத்தாம் நாளன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.

    அடுத்தநாள் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படும். பரமபத வாசல் என்றும் பெயர் கொண்ட இதனைக் கடக்க அதிகாலை 3.45 மணிக்கு ரத்தின அங்கியுடன் பெருமாள் கருவறையில் இருந்து கோலாகலமாகப் புறப்படுவார்.

    நாழிகேட்டான் வாசல், கொடிமரம், ராஜமகேந்திரன் சுற்று வழியாக வந்து அதி காலை 5 மணிக்கு பரமபத வாசலைக் கடந்து அருள்பாலிப்பார்.
    இதை தரிசிக்க கோவில் வளாகத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ரங்கா... ரங்கா... என திருநாமங்கள் முழங்கியபடி பெருமாளுடன் சொர்க்கவாசலைக் கடப்பர். அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்கும்.

    இதற்கு எப்படி விரதமிருக்க வேண்டும் எனத் தெரியுமா?

    ஏகாதசிக்கு முதல் நாள் தசமியன்று பகல் ஒருவேளை உண்ண வேண்டும். ஏகாதசியன்று எதுவும் சாப்பிடக் கூடாது. மறுநாள் துவாதசியன்று சூரிய உதயத்துக்குள் குளித்து, பெருமாளை வணங்கி, துளசி தீர்த்தம் குடித்து விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டபின் ஓய்வெடுக்க வேண்டும்.

    தசமி துவங்கி விரதம் முடியும் வரை ஸ்தோத்திரங்கள், சகஸ்ரநாமம், நாராயண ஜபம் செய்ய வேண்டும். கோவில்களில் செய்வது இன்னும் சிறப்பு.
    ஏகாதசியன்று தண்ணீர் குடிக்கலாம். துளசி இலை களை சாப்பிடலாம். முதியோர்கள், நோயாளிகள், பசி தாங்க இயலாதவர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஏகாதசியன்று சாப்பிட் டாலும், அதற்கு முன்னதாக பெருமாளை மனதார வழிபட்ட பின் சாப்பிடலாம் என்ற விதிவிலக்கும் உண்டு.

    விரதமிருக்க வாய்ப்பில்லா தவர்கள் பெருமாளுக்கு படைக்கப்பட்ட பழம், பால் சாப்பிடலாம். பகல் பொழுதில் கோவிலில் அல்லது வீட்டு பூஜையறையில் இருந்தபடி விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களைப் பாடலாம். மற்றவர்கள் கோவிந்தா... நாராயணா... என்ற திருநாமங்களை மட்டுமே ஜபித்த நிலையில் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கலாம்.

    நாமும் வைகுண்ட ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட்டு, பாவம் நீங்கி பலன் பெறுவோம்.
    இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ளலாம்.
    பொதுவாகவே திங்கட்கிழமை அன்று, சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம். இந்த நாளை ‘சோமவாரம்’ என்றும் அழைப்பார்கள். ‘சோம’ என்பது சந்தி ரனைக் குறிப்பதாகும். சந்திரனுக்குரிய திங்கட்கிழமை தினத்தில் சிவபெருமானை வணங்குவது கூடுதல் பலனைத் தரும். ஒரு முறை சாபத்தால், தேய்ந்துகொண்டே சென்ற சந்திரன், தன்னுடைய சாபத்தில் இருந்து மீள சிவபெருமானை நினைத்து விரதம் இருந்தான். இதையடுத்து தன்னுடைய சடைமுடி மீது சந்திரனை சூடிக்கொண்ட சிவன், அவனுக்கு சாப விமோசனம் அளித்தார். சந்திரனின் சாபம் நீங்க, அவனது மனைவி ரோகிணியும் இந்த விரதத்தை மேற்கொண்டாள். இந்த சோமவார விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் கிடைப்பதுடன், கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நோய்கள் விலகும்.

    ஒருமுறை சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினர். அதில் பார்வதியே வெற்றிபெற்றார். ஆனால் சிவபெருமான், தானே வெற்றிபெற்றதாக கூறினார். இதனால் கோபமடைந்த பார்வதி, அந்த வழியாகச் சென்ற முனிவர் ஒருவரை அழைத்து நியாயம் கேட்டார். அதற்கு அந்த முனிவர், ‘ஆட்டத்தைப் பார்க்காமல் தீர்ப்பு கூற முடியாது’ என்று சொல்ல, பார்வதியும் சிவனும் மீண்டும் விளையாடினர். அப்போதும் பார்வதியே வெற்றிபெற்றார். ஆனால் முனிவரும் கூட ‘சிவபெருமானே வெற்றிபெற்றார்’ என்று சொன்னார்.

    இதனால் ஆத்திரம் கொண்ட பார்வதி தேவி, துர்க்கையாக மாறி முனிவருக்கு சாபம் கொடுத்தார். இதனால் தொழு நோய் பாதிக்கப்பட்டு முனிவர் அவதிப்பட்டார். இதனால் அவர் தற்கொலை செய்துகொள்ள துணிந்தார். அப்போது ஒரு பெண், முனிவரை தடுத்து நிறுத்தினாள். அவரது கதையைக் கேட்டவள், பின்னர் “நான் ஒரு தேவலோகப் பெண். இந்திரனின் சாபத்தால், பூலோகத்தில் பிறந்தேன். இங்கு சோமவார விரதத்தை மேற்கொண்டதால் எனக்கு விமோசனம் கிடைத்து, தற்போது தேவலோகம் சென்று கொண்டிருக்கிறேன். நீங்களும் சோம வார விரதம் மேற்கொண்டால், உங்களுடைய சாபமும் நீங்கும்” என்று கூறிச் சென்றாள். அதன்படி முனிவரும் விரதம் மேற்கொண்டு நோயில் இருந்து விடுபட்டார்.

    விரதம் இருக்கும் முறை

    சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். சோம வார தினத்தில், ராகு காலத்துக்கு முன்பாகவே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்ட வேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.

    கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமத்தால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும். பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி - பரமேஸ்வரனாக நினைத்து வணங்க வேண்டும். அவர்களுக்கு ஆடை தானமும், அன்னதானமும் அளித்து, அட்சதையை அவர்களிடம் கொடுத்து ஆசி பெற வேண்டும்.

    இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ, அல்லது 12 ஆண்டுகளோ கடைப் பிடிக்கலாம். அதுவும் முடியவில்லை என்றால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை களிலாவது இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால், முற்பிறவி பாவங்களும், தீராத நோய்களும் நீங்கும்
    இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம்.
    படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கே இருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும் இந்த பைரவ வழிபாடு இல்லங்களில் திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது.
    வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர்.

    அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூஜை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர்.

    ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் சிறப்பாக செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூஜையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும் நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.

    வழிபாட்டிற்கு உகந்த நேரம்

    பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்.
    சபரிமலை சென்று திரும்பி வந்ததும் தினமும் விளக்கு ஏற்றிய இடத்தின் அருகில் தேங்காய் உடைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷத்தை சொல்ல வேண்டும்.
    பரசுராமன் பிரதிஷ்டை செய்த விக்கிரகத்தில் ஸ்ரீ ஐயப்பன் சென்று ஐக்கியமானவர் என்பது ஐதீகம். இருமுடி கட்டுடன் சரணம் முழங்கி மலையேறும் போது அதன் பொருள் அறிந்து செல்ல வேண்டும். தன் தாய் பந்தள ராணியின் நோய் நீங்கப்புலிப்பாலுக்காக தயார் செய்து தான் இருமுடி கட்டு. அமைச்சர், ஐயப்பன் மீது காட்டிய வஞ்சனையின் தண்டனையாக 41 நாள் விரதம் மேற்கொண்டது தான் பிற்காலத்தில் 41 நாள் விரதமாக பழக்கத்திற்கு வந்தது.

    சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் நீராடி முடித்ததும் கன்னி ஐயப்பமார்களுக்கு விருந்து கொடுத்து உபசரிப்பார்கள். இந்த விருந்தில் ஐயப்பனே நேரில் வந்து உணவு உட்கொள்வதாக நம்பப்படுகிறது.

    பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலை முறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

    60 ஆண்டுகளுக்கு முன்பு வரை சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றவர் சில நூறு பேர் மட்டுமே. வாகன வசதி வந்த பிறகு தான் சபரிமலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து இன்று பல கோடி ஆகிவிட்டது.

    ஒரு ஐயப்ப பக்தர் மாலை அணிந்ததில் இருந்து அவர் சபரிமலை சென்று திரும்பும்வரை தினமும் வீட்டு வாசலில் விளக்கு ஏற்ற வேண்டும். அந்த விளக்கு குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது எரிய வேண்டும். சபரிமலை செல்லும் பக்தருக்கு இந்த விளக்கு வழி காட்டுவதாக ஐதீகம் உள்ளது. சபரிமலை சென்று திரும்பி வந்ததும் தினமும் விளக்கு ஏற்றிய இடத்தின் அருகில் தேங்காய் உடைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷத்தை சொல்ல வேண்டும். அதன் பிறகே வீட்டுக்குள் செல்ல வேண்டும்.
    ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கவேண்டுமென்றால், கன்னிசாமியாக இருந்தாலும் குருசாமியாக இருந்தாலும் கட்டாயம் 41 நாள்கள் விரதம் இருக்க வேண்டும்.
    ஐயப்பனுக்கு மாலை அணிந்து மண்டல விரதம் இருப்பது, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அற்புத ஆன்மிக அனுபவம். சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணியும் பலரும் அவரவர் போக்கில் மாலை அணிந்து, ஐயப்பனை தரிசிக்கச் செல்கிறார்கள். ஆனால் அப்படிச் செல்லக்கூடாது. ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கவேண்டுமென்றால், கன்னிசாமியாக இருந்தாலும் குருசாமியாக இருந்தாலும் கட்டாயம் 41 நாள்கள் விரதம் இருக்க வேண்டும். ஒரு மண்டலம் என்பது 48 நாள்கள். சிலர் 56 முதல் 60 நாள்கள் வரையிலும்கூட அதாவது கார்த்திகை முதல் நாளிலிருந்து ஜனவரி 15 -ம் தேதி மகர ஜோதி வரை விரதம் இருப்பது மிகவும் நல்லது. இதை விடுத்து, திடுதிப்பென நண்பர்கள் அழைக்கிறார்கள், அதிகாரி அழைக்கிறார் என மாலை அணிந்து ஒரு வாரத்தில், மூன்று நாட்கள் மட்டும் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

    மாலையணிந்து விரதமிருந்து சபரிமலைக்குச் செல்ல முடிவுசெய்தால் தனது தாய், தந்தை மற்றும் குருவிடம் ஒரு வாரம் முன்பாகவே தகவல் தெரிவித்து, அனுமதி வாங்கிய பிறகே மாலை அணிய வேண்டும். குறிப்பாகக் கோவிலிலோ, தாயார் முன்னிலையிலோ மாலை அணிவது நல்லது.

    மாலையைத் தேர்வு செய்யும்போது துளசி மணி மாலைதான் ஐயப்பனுக்கு உகந்தது. அவரவர் வசதிக்கேற்ப துளசி மணி மாலையை வாங்கி அணியலாம். செம்பிலோ வெள்ளியிலோ, மணிகளைக் கட்டினால் நம் ஆயுள் முழுவதுக்கும் அந்த மாலையைப் பயன்படுத்தலாம்.

    பொதுவாக ஒவ்வொரு முறை சபரிமலை செல்லும்போதும் ஒரே மாலையை அணிந்து செல்வது சிறப்பு.  அந்த மாலை தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று வரும்போது அது  ராஜ முத்திரையைப் போல மகத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு, ஐயப்பனை மலர்களால் அலங்கரித்து தூப தீபங்களைக் காண்பிக்கவேண்டும். இதைத் தொடர்ந்து 108 முறை சுவாமி ஐயப்பனின் சரண கோஷத்தைச் சொல்லி பூஜை செய்யவேண்டும்.

    விரதம் இருப்பதைப் பொறுத்த வரை சைவ உணவை அவரவரின் உடலுக்குத் தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம். ஒரேயடியாக  சாப்பிடாமல் இருந்து உடலை வருத்திக் கொள்ளத்தேவையில்லை. இச்சையுடன் கிடைப்பதையெல்லாம் சாப்பிடவும் கூடாது. புலனடக்கத்தில் நாம் எப்படி இருக்கிறோம். நம் மனம் எந்த அளவு வலிமையுடன் இருக்கிறதென்பதை மாலை அணிந்திருக்கும்போது நாம் அறிந்து கொள்ளலாம்.  

    தற்கால வாழ்க்கைமுறைச் சூழலில் பலரும் தன் சொந்த ஊரில் இருந்து புலம் பெயர்ந்து நகரம் சார்ந்த வாழ்க்கையை வாழ்கின்றோம். அலுவலகப் பணிகளின் காரணமாக மாலையில் சிலரால் உரிய நேரத்தில் வீடு திரும்பமுடியாது. அதனால் எப்போது வீட்டுக்கு வருகிறோமோ அப்போது நாம் குளித்து பூஜை செய்தால் போதுமானது.

    கன்னிசாமிகள் கண்டிப்பாக கருப்பு வண்ண உடையையே அணிய வேண்டும். காலில் காலணிகள் இல்லாமல் நடந்து பழக வேண்டும். எப்போதும் மனம், வாக்கு, செயல் மூன்றிலும் ஐயப்பனை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும். எல்லோரிடமும் கனிவாக நடந்து கொள்ளவேண்டும் சுடு சொற்கள் சொல்லக்கூடாது. மனம், உடல் இரண்டையும் தூய்மையாக வைத்துக்கொண்டு வேண்டினால் நிச்சயம் நம் எண்ணம் பலிக்கும். ஏனென்றால் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக ஐயப்பன் திகழ்கிறார்.
    கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.
    குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை. அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை செய்த நாள் என்பதால், இந்த நாளுக்கு ரம்பா திருதியை நாள் என்று பெயர். தேவலோகத்தில் உமையவளுக்குத் தோழிகளாக இருக்கும் அரம்பையர்கள், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது தோன்றியதாகப் புராணம் சொல்கிறது.

    இவர்கள் தாங்கள் என்றும் இளமை மாறாத கன்னியர்களாகத் திகழ வேண்டும்; தங்களுக்கென்று தனி உலகம் வேண்டும் என்று சிவபெருமானை வேண்டினார்கள்.

    சிவபெருமானும் அவர்களுக்காக ஓர் உலகத்தைப் படைத்தார். அது “அப்சரஸ் லோகம்’ எனப்பட்டது. அந்த உலகத்தில் பாற்கடலில் தோன்றிய அறுபதாயிரம் அப்சரஸ் பெண்களும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு தலைவியாக இருந்தவள் ரம்பை.

    அரம்பையர்கள் சிவ பூஜையினை மேற்கொள்பவர்களாகத் திகழ்ந்ததுடன் உமையவளுக்கும் தோழியராகவும் இருந்தார்கள். இவர்களில் ரம்பை, அலம்புசை, மனோகரை, ஊர்வசி, கலாநிதி, கனகை, மேனகை, திலோத்தமை, சந்திரலேகை என்பவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள். இவர்களை அப்சகணம் என்று சொல்வர்.

    இந்த அழகான அப்சரஸ்கள் பல வகையான இசைக் கருவிகளை மீட்டியபடி இனிய குரலில் பாடுவார்கள். ஆடல் கலையில் வல்லவர்கள். “பாற்கடலில் தோன்றிய இவர்களை வழிபட்டால் மகிழ்ச்சியும் செல்வமும் இளமைத் தோற்றமும் கிட்டும் என்று புராணம் சொல்கிறது.

    ரம்பாதிருதியை அன்று விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால், அரம்பயைர்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத் தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழி வகுப்பார்கள்.

    கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.

    திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர். வாரணாசியில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில் திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள் பெற்றனர்.

    திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களிலும் பல அரம்பையர்கள் வழிபாடு செய்து அருள் பெற்றதாக தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன.

    கார்த்திகை அமாவாசையில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வது சிறப்பான நன்மைகளை வழங்கும். இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.
    கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தில்தான், சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றினார் என்று புராணங்கள் சொல்கின்றன. இதனால் கார்த்திகை பவுர்ணமி சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது. அது போலவே கார்த்திகை மாத அமாவாசை தினமும் சிறப்புக்குரிய ஒரு நாள்தான். ஏனெனில் இந்த நாளில்தான், திருப்பாற்கடலில் இருந்து லட்சுமி தேவி வெளிப்பட்டாள் என்கிறார்கள். இந்த தினத்தில் லட்சுமியோடு, நம்முடைய முன்னோர்களையும் வழிபாடு செய்து வந்தால், சிறப்பான பலன்களைப் பெற முடியும்.

    வீட்டின் எல்லா அழகான பகுதிகளிலும் லட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. எனவே கார்த்திகை அமாவாசை அன்று, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வீட்டை அழகாக வைத்திருப்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள், புறம்பேசாதவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள் ஆகியோரிடம் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். நிறைந்து நிற்கும் நெல் வயல், சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், மகிழ்ச்சியான வீடு என இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் எல்லாம் லட்சுமி இருக்கும் இடங்கள்தான். எனவே நமது வீட்டையும் சுற்றுப்புறத்தையும் அழகாக வைத்திருந்தாலே அன்னை மகாலட்சுமியின் அருளோடு முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

    இந்த லட்சுமி வழிபாட்டோடு, கார்த்திகை அமாவாசையில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வது சிறப்பான நன்மைகளை வழங்கும். ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு, மறைந்த உங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு, கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் கிடைக்கும். இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.

    கார்த்திகை அமாவாசை நாளில் ஆறு குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் புனித நீராடினால் கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். இந்த நாளில் அனைத்து வித பாவங்களையும் போக்கும் பூஜைகளையும், வழிபாட்டையும் செய்யலாம். கார்த்திகை அமாவாசை நாளில் விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்தால் மேலும் சிறப்பு. பசு, காகம் ஆகியவற்றுக்கு உணவளித்த பிறகு ஆதரவற்ற மக்களுக்குத் தானமளித்தால் புண்ணியம் பல மடங்கு பெருகும். இந்த நாளில் விரதமிருந்து அரச மரத்தைச் சுற்றி வந்து வழிபட்டால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது.
    சிரவண மாத கிருஷ்ண பட்ச துவிதியை திதி கிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள் என புராணங்கள் கூறுகின்றது.  அதனை அசூன்ய சயன விரதமாக அனுஷ்டிக்க வேண்டும். அனைத்து வைணவத் தலங்களிலும் முக்கியமாக சயன  கோலத்தில் இருக்கும் தலங்களில் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.  அசூன்யம் என்றால் சூனியம் இல்லாதது என்று பொருள். சயனம் என்றால் படுக்கையில் படுத்தல். நல்ல தூக்கம் மட்டுமல்ல நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது. இது ஒரு வித்தியாசமான விரதம்.

    இதன் மூலமாக நமக்கு நிம்மதியான தூக்கமும், நிறைவான வாழ்க்கையும் , தம்பதிகளிடையே அன்யோன்யமும் குடும்பத்தார் இடையே சினேகித உறவும், நட்பும் நல்ல முறையில் விளங்கும். அசூன்ய சயன விரத நாளில் விடியற்காலை எழுந்து வழக்கமாக பூஜைக்கு எப்படி தயாராவது போலவே தயாராக வேண்டும். அவசியம் அன்று திருமால் ஆலய தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக பள்ளிகொண்ட பெருமாள் சேவை தரும் ஆலய தரிசனம் சாலச் சிறந்தது.

    மாலை பூஜையறையில் விளக்கேற்றி கிருஷ்ணர் - ராதை அல்லது மஹாவிஷ்ணு மஹாலஷ்மி இணைந்த  விக்ரகம் அல்லது படத்தை ஒரு பலகையில் கோலமிட்டு வைத்து ஆவாகனம் செய்ய வேண்டும். அதனைப்  பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இப்பூஜையை தனியாகச் செய்வதைவிட, தம்பதிகளாக அமர்ந்து செய்வது உத்தமம்.  ரங்கநாத அஷ்டகம் கிருஷ்ணாஷ்டகம் மற்றும் பெருமாளுக்குரிய தோத்திரப் பாடல்களைப் பாடி அர்ச்சனை செய்ய வேண்டும்.  ஏலக்காய், குங்கும பூ போட்டு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை அல்லது பாய், தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் கிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் சயனிக்க வைக்க வேண்டும்.

    அப்போது தாலாட்டுப்பாட வேண்டும்.

    “மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
    ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்
    பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்
    மாணிக்குறளனே தாலேலோ!
    வையம் அளந்தானே தாலேலோ!”

    என்று பாடி, பள்ளி அறையைச் சாத்திவிட்டு இரவு பகவான் சிந்தனையோடு படுத்து உறங்க வேண்டும்.  மறுநாள் காலை எழுந்து, முறையாகப்  புனர் பூஜை செய்து, கிருஷ்ணர், மஹாலக்ஷ்மி விக்கிரஹம்படம், தக்ஷிணை, வெற்றிலை பாக்கு பழம் புஷ்பம் வைத்து தானம் செய்து விட வேண்டும். இந்த விரதத்தை எல்லோரும் கடைப் பிடிக்கலாம்.
    ×