search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஐயப்பன்
    X
    ஐயப்பன்

    கார்த்திகை மாதமும்.... சிறப்பு வாய்ந்த ஐயப்பன் விரதமும்...

    ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கவேண்டுமென்றால், கன்னிசாமியாக இருந்தாலும் குருசாமியாக இருந்தாலும் கட்டாயம் 41 நாள்கள் விரதம் இருக்க வேண்டும்.
    ஐயப்பனுக்கு மாலை அணிந்து மண்டல விரதம் இருப்பது, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அற்புத ஆன்மிக அனுபவம். சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணியும் பலரும் அவரவர் போக்கில் மாலை அணிந்து, ஐயப்பனை தரிசிக்கச் செல்கிறார்கள். ஆனால் அப்படிச் செல்லக்கூடாது. ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கவேண்டுமென்றால், கன்னிசாமியாக இருந்தாலும் குருசாமியாக இருந்தாலும் கட்டாயம் 41 நாள்கள் விரதம் இருக்க வேண்டும். ஒரு மண்டலம் என்பது 48 நாள்கள். சிலர் 56 முதல் 60 நாள்கள் வரையிலும்கூட அதாவது கார்த்திகை முதல் நாளிலிருந்து ஜனவரி 15 -ம் தேதி மகர ஜோதி வரை விரதம் இருப்பது மிகவும் நல்லது. இதை விடுத்து, திடுதிப்பென நண்பர்கள் அழைக்கிறார்கள், அதிகாரி அழைக்கிறார் என மாலை அணிந்து ஒரு வாரத்தில், மூன்று நாட்கள் மட்டும் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

    மாலையணிந்து விரதமிருந்து சபரிமலைக்குச் செல்ல முடிவுசெய்தால் தனது தாய், தந்தை மற்றும் குருவிடம் ஒரு வாரம் முன்பாகவே தகவல் தெரிவித்து, அனுமதி வாங்கிய பிறகே மாலை அணிய வேண்டும். குறிப்பாகக் கோவிலிலோ, தாயார் முன்னிலையிலோ மாலை அணிவது நல்லது.

    மாலையைத் தேர்வு செய்யும்போது துளசி மணி மாலைதான் ஐயப்பனுக்கு உகந்தது. அவரவர் வசதிக்கேற்ப துளசி மணி மாலையை வாங்கி அணியலாம். செம்பிலோ வெள்ளியிலோ, மணிகளைக் கட்டினால் நம் ஆயுள் முழுவதுக்கும் அந்த மாலையைப் பயன்படுத்தலாம்.

    பொதுவாக ஒவ்வொரு முறை சபரிமலை செல்லும்போதும் ஒரே மாலையை அணிந்து செல்வது சிறப்பு.  அந்த மாலை தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று வரும்போது அது  ராஜ முத்திரையைப் போல மகத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு, ஐயப்பனை மலர்களால் அலங்கரித்து தூப தீபங்களைக் காண்பிக்கவேண்டும். இதைத் தொடர்ந்து 108 முறை சுவாமி ஐயப்பனின் சரண கோஷத்தைச் சொல்லி பூஜை செய்யவேண்டும்.

    விரதம் இருப்பதைப் பொறுத்த வரை சைவ உணவை அவரவரின் உடலுக்குத் தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம். ஒரேயடியாக  சாப்பிடாமல் இருந்து உடலை வருத்திக் கொள்ளத்தேவையில்லை. இச்சையுடன் கிடைப்பதையெல்லாம் சாப்பிடவும் கூடாது. புலனடக்கத்தில் நாம் எப்படி இருக்கிறோம். நம் மனம் எந்த அளவு வலிமையுடன் இருக்கிறதென்பதை மாலை அணிந்திருக்கும்போது நாம் அறிந்து கொள்ளலாம்.  

    தற்கால வாழ்க்கைமுறைச் சூழலில் பலரும் தன் சொந்த ஊரில் இருந்து புலம் பெயர்ந்து நகரம் சார்ந்த வாழ்க்கையை வாழ்கின்றோம். அலுவலகப் பணிகளின் காரணமாக மாலையில் சிலரால் உரிய நேரத்தில் வீடு திரும்பமுடியாது. அதனால் எப்போது வீட்டுக்கு வருகிறோமோ அப்போது நாம் குளித்து பூஜை செய்தால் போதுமானது.

    கன்னிசாமிகள் கண்டிப்பாக கருப்பு வண்ண உடையையே அணிய வேண்டும். காலில் காலணிகள் இல்லாமல் நடந்து பழக வேண்டும். எப்போதும் மனம், வாக்கு, செயல் மூன்றிலும் ஐயப்பனை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும். எல்லோரிடமும் கனிவாக நடந்து கொள்ளவேண்டும் சுடு சொற்கள் சொல்லக்கூடாது. மனம், உடல் இரண்டையும் தூய்மையாக வைத்துக்கொண்டு வேண்டினால் நிச்சயம் நம் எண்ணம் பலிக்கும். ஏனென்றால் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக ஐயப்பன் திகழ்கிறார்.
    Next Story
    ×