என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    குருவுக்கு உரிய பூஜைகளும், பரிகாரங்களும் செய்தால் திருமண யோகத்தை வெகுவிரைவில் முடிக்க முடியும். குரு பெயர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் மேஷ ராசிக்காரர்கள் முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
    குரு பகவான் கடந்த 29-ந்தேதி அதிகாலை தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். தனுசு ராசியானது குரு பகவானின் சொந்த வீடாகும். இதனால் இந்த ஆண்டு குரு பார்க்கும் இடங்களில் பலம் அதிகமாகும். சுப நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்க வாய்ப்புள்ளது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் திருமண யோகம் எந்த அளவுக்கு தேடி வரும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    குரு பகவான் மேஷ ராசியில் 9-வது இடத்துக்கு வந்துள்ளார். இது அதிக வெற்றிகளை தேடி வரும். இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் தேடி வர வாய்ப்புள்ளது. மேஷ ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன் காரணமாக வாரிசுகளுக்கு நல்ல முறையில் திருமணத்தை செய்து கொடுக்க முடியும் என்ற உற்சாகம் உண்டாகும்.

    குருவுக்கு உரிய பூஜைகளும், பரிகாரங்களும் செய்தால் திருமண யோகத்தை வெகுவிரைவில் முடிக்க முடியும். குரு பெயர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் மேஷ ராசிக்காரர்கள் முருகப்பெருமானை வழிபட வேண்டும். குறிப்பாக திருச்செந்தூர் முருகன் தலம் குரு அம்சத்துக்குரிய தலமாக திகழ்வதால் திருச்செந்தூருக்கு சென்று வழிபட்டு வந்தால் கைமேல் பலன் உடனடியாக கிடைக்கும்.

    சென்னையில் இருப்பவர்கள் சிறுவாபுரி முருகனை வழிபட்டால் சுப காரியம் கைகூடுவதை அனுபவப்பூர்வமாக உணரலாம். மற்ற மாவட்டங்களில் இருப்பவர்கள் தங்கள் பகுதியில் மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபடலாம். பொதுவாக மேஷ ராசிக்கு உரியவர்கள் ராமேசுவரம் சென்று வழிபட வேண்டும் என்று குறிப்புகள் உள்ளன. ஆனால் தற்போதைய குரு பகவானின் நகர்வு காரணமாக முருகன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலங்களுக்கு சென்று வருவது நல்லது.

    மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அருமையான பலன்களை வாரி வழங்கும் வகையில் உள்ளது. மனமகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. திருமண வயதில் உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலையில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மதிப்பு உண்டாகும். உறவினர்களின் ஆதரவு தேடி வரும்.

    ஆனால் இந்த பலன்களை பெற பெண்கள் குருவின் அருளை ஒவ்வொரு வியாழக்கிழமையும் தேடி செல்ல வேண்டும். தசாபுத்திக்கு ஏற்ற வழிபாடு செய்ய வேண்டும் என்பதால் வியாழன் தோறும் மேஷ ராசி பெண்கள் குரு வழிபாட்டை செய்வது நல்லது. சிவாலயங்களுக்கு செல்லும்போது தட்சிணாமூர்த்தியை தவறாமல் வழிபட வேண்டும். அர்ச்சனை செய்ய வேண்டியது அவசியமாகும்.

    வியாழக்கிழமைகளில் சீரடி சாய்பாபாவை உரிய முறையில் வழிபடுவதும் மேஷ ராசி பெண்களுக்கு கை கொடுக்கும். அதோடு ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவது நல்லது. பவுர்ணமி நாட்களில் வீட்டின் அருகில் அம்மன் ஆலயங்களுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

    மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கிருத்திகை ஆகிய 3 நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லையில் உள்ள உச்சிஷ்ட மகா கணபதி ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேரளா மாநிலம் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அந்த ஆலயத்தில் உள்ள சக்கரத்தில் அமர்ந்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது. பொதுவாக மேஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் விநாயகர் மற்றும் முருகரை அதிகம் வழிபட வேண்டும். விநாயகர் அருளை பெற பிள்ளையார்பட்டிக்கு சென்று வரலாம்.

    இக்கோவிலில் உள்ள வலம்சுழி விநாயகர் மிகவும் விசேஷமானவர். மூலவர் குடவரைக்குள் 6 அடி உயரம் கொண்டு, இரண்டு கைகளுடன் காட்சி அளிக்கிறார். விநாயகரின் வலது கையில் சிவலிங்கம் காட்சியளிக்கிறது. இவர் வடக்கு திசையை நோக்கி வீற்றிருக்கிறார். விநாயகரின் துதிக்கை வலம்புரியாக உள்ளதும், அவர் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருப்பதும், இடது கரத்தை கடிஹஸ்தமாக தொடையில் வைத்திருப்பதும் இவரது சிறப்பு தோற்றமாகும்.

    இந்த கோவிலுக்கு ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது. அதாவது, கஜமுகாசுரனைக் கொன்ற விநாயகர், அந்த பாவம் தீர, ஈசனை இத்தலத்தில் பூஜிப்பதாக புராணக் கதைகள் கூறுகின்றன. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினால் கல்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப நலம் போன்ற சகல பாக்கியங்களும் கிட்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இந்த கோவிலுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. 1,600 ஆண்டுகளுக்கு முன் குடைவரைக் கோவிலாகக் கட்டப்பட்ட பிள்ளையார்பட்டி ஆலயம், ஒன்பது நகரத்தார் ஆலயங்களுள் ஒன்றாகும். மேலும் விநாயகப் பெருமான் ஓங்கார வடிவில் அருள்புரியும் அற்புதத் தலம் இது. இந்த கோவில் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட முதல் குடவரைக் கோவில் என்றும் கருதப்படுகிறது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் சங்கடகர சதுர்த்தி மிகச் சிறப்பாக பூஜிக்கப்படுகிறது. மேலும் ஆவணி மாதம் 10-ம் நாள் சதுர்த்தி திருவிழா நடைபெறும். ஒன்பது நாட்களுக்கு முன்பாகவே காப்புகட்டி கொடி ஏற்றம் செய்து திருவிழா தொடங்கும். சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி, ஆலய உட்பிரகாரத்தை வலம் வருவார். ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்த கொள்வார்கள்.

    மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமாள் திருவீதி உலா வருவார். அன்று சிவகாமசுந்தரியின் ஊடலை நீக்க நடராஜர் செய்யும் முயற்சிகள் காண கண்கொள்ளா தவையாக இருக்கும். இதனை ஏராளமான பக்தர்கள் திரளாகக் கண்டு மகிழ்வர். பிள்ளையார் பட்டிக்குச் செல்ல காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தூரமும், மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரமும், திருப்பத்தூரில் இருந்து 9 கி.மீ. தூரமும் பயணம் செய்ய வேண்டும். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கு கோவிலைச் சுற்றிலும் விடுதிகள் உள்ளன. சிவகங்கை, திருப்பத்தூர் காரைக்குடி ஆகிய ஊர்களிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு பஸ் வசதிகள் உள்ளன.

    விநாயகர் தவிர திருச்செந்தூர் சென்று முருகனை வழிபடுவதும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும். குறிப்பாக சஷ்டி திதி நாட்களில் வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். சஷ்டி தினத்தன்று உங்கள் பகுதியில் உள்ள முருகன் ஆலயத்துக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடுங்கள். இந்த பரிககாரம் நிச்சயமாக திருமணத்தை கைகூடச் செய்யும்.

    முடிந்தவர்கள் தானதர்மங்கள் செய்யலாம். மேஷ ராசியில் பிறந்த பெண்கள் ஆலய வழிபாடு முடிந்த பிறகு திருநங்கைகளுக்கு உதவி செய்வது மிகவும் நல்லது. இதனால் குடும்பத்தில் செல்வ செழிப்பு உண்டாகும். திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை வழிபட விரும்புபவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்வது நல்லது. முன்பு திருச்செந்தூரில் கோவிலுக்கு சொந்தமான தங்கும் அறைகள் அதிகம் இருந்தன. தற்போது சீரமைப்பு பணிகள் காரணமாக அவை குறைந்து விட்டது. தனியார் விடுதிகளில்தான் தங்கும் நிலை உள்ளது. அதை கவனத்தில் கொண்டு முன்னேற்பாடு செய்து செல்லுங்கள்.

    வியாழக்கிழமை திருச்செந்தூரில் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. முருகப்பெருமானை வழிபட்ட பிறகு திருச்செந்தூர் ஆலய பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இன்னொரு விஷயத்தையும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். திருச்செந்தூருக்குச் சென்று கடலில் நீராடி முருகனை தரிசிக்கும் முன்பு அருகிலுள்ள மூவர் (மவுன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமி) சமாதிக்கு சென்று வணங்க வேண்டும். அதன்பிறகே முருகரை காண செல்ல வேண்டும்.

    பரிகாரம் செய்பவர்கள் மூவர் சமாதிக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். அங்கு விளக் கேற்றுவது நன்மை தரும். மூலவரை தரிசனம் செய்து விட்டு மறக் காமல் பஞ்சலிங்கத்தையும் வழிபடுங்கள். தரிசனம் முடித்து பிரகாரம் வந்து வலமிருந்து இடமாகச் சென்று மேதா குரு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும். சூரசம்ஹார போரில் இங்கிருந்து முருகருக்கு குரு ஆலோசனை வழங்கியதால் இது குருவின் இருப்பிடம் ஆகும். ஆலங்குடி போன்று குருப்பெயர்ச்சிக்கு இங்கும் பெரிய விஷேசமாக இருக்கும். இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ஆமை வாகனத்தில் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி அருள்புரிகின்றார்.

    செல்வம், ஆன்ம பலம் செழிக்க இவரை அவசியம் வணங்குதல் வேண்டும். பின் வெளிப்பிரகாரம் வந்து மீண்டும் வலமிருந்து இடமாகப் பிரகாரம் சுற்றினால் ராஜகோபுரம் நோக்கி விநாயகர் வீற்றிருப்பார் அவரை தரிசித்து கடந்து சென்றால் சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் அவரை தரிசித்து அருகில் சகஸ்ர லிங்கமாய் அருள்பாலிக்கும் சிவபெருமானை தரிசித்து விட்டு வந்த வழியே திரும்பி பிரகாரம் வர வேண்டும்.

    அங்கே பெருமாள் நாராயணன் சன்னதி உண்டு. பெருமாளை தரிசித்து விட்டு வெளியே வருகிற வழியில் கொடிமரம் அருகே முருகருக்கு நன்றி சொல்லி அருகில் கல்யாண விநாயகரை வணங்கி தரிசனத்தை முடிக்கலாம்!

    ஆதித்ய குருஜி
    பல்வேறு பிரச்சனைகள் தீர பரிகாரங்கள் உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரங்கள் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க வல்லது.
    * வீட்டில் ஸ்படிக லிங்க வழிபாடு, ஸ்ரீ யந்திர வழிபாடு ஒருவரை விரைவில் செல்வ நிலையை அடைய உதவும். தினமும் ஸ்ரீ சூக்தம் படித்தோ அல்லது கேட்டோ வருவது அதிக பலன் தரும்.

    * செம்பு மற்றும் வெள்ளி அதிகம் உடலில் படும் படி செய்து வரவும். இரண்டும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. செம்பு மோதிரம் அல்லது கை வளையம் மற்றும் இடது கை ஆட்காட்டி விரலில் வெள்ளி மோதிரம் (கற்கள் எதுவும் இல்லாத சாதாரணமான ஒன்று) அணிவது தான் அகர்ஷ்னா முறைகளில் ஒன்று. வலது கை சுண்டு விரலில் செம்பு மோதிரம் அணியவும்.

    * சுத்தமான மலை தேன் மற்றும் குங்குமம் எப்போதும் சுவாமி அறையில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். வியாபாரிகள் சுத்த தேன் நிறைந்த பாட்டில் தங்கள் மேஜையில் மற்றும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து வரலாம்.

    * வட கிழக்கு மூளையில் துளசி செடி வைத்து தினமும் அதை சுத்தமாக பராமரித்து வரலாம். மேலும் வியாழன் அன்று மட்டும் அதற்கு சுத்தமான பாலை வார்த்து வரவும்.

    * மேற்கு பார்த்த வீடு கடை உள்ளவர்கள் வாயிலில் மஞ்சள் துணி கட்டி வைக்கலாம். மற்ற திசை உள்ளோர்கள் சிகப்பு துணி அல்லது ரிப்‌பன் கட்டலாம்.

    * குளிக்கையில் தினசரி வில்வ இலையை போட்டு குளித்து வரலாம். வில்வ இலையை கொதிக்க வைத்து குளிக்கும் நீரில் கலந்து குளிக்க நலம் மிகும்.

    * ஏழை எளியோர், தானம் கேட்போர் (பிச்சை) ஆகியோருக்கு மஞ்சள் லட்டு மற்றும் மஞ்சள் வாழை வாங்கி கொடுக்கவும். தினசரி முடிந்தாலும் செய்யலாம். காளை மாட்டிற்க்கு வெல்லம் கொடுத்து வரலாம்.
    திருவதிகை திருத்தலம் திருமண வரம் தரும் மிகச் சிறந்த தலமாகத் திகழ்கிறது. அதற்கு அடிப்படையாக, இத்தலத்து அம்பிகை அருள்பாலிக்கும் கோலத்தை குறிப்பிடுகிறார்.
    திருவதிகை திருத்தலம் திருமண வரம் தரும் மிகச் சிறந்த தலமாகத் திகழ்கிறது. அதற்கு அடிப்படையாக, இத்தலத்து அம்பிகை அருள்பாலிக்கும் கோலத்தை குறிப்பிடுகிறார். அம்பாள் இத்தலத்தில் சுவாமிக்கு வலது புறத்தில் இருக்கிறார். எந்த ஒரு தலத்திலும் சுவாமிக்கு வலப்புறத்தில் அம்பாள் இருந்தால் அது சக்தி பீடமாக கருதப்படும். அந்த வகையில் திருவதிகை திருத்தலத்தை சக்தி பீடம் என்றும் சொல்கிறார்கள்.

    தட்சன்யாகத்தில் விழுந்து உயிரை மாய்த்த அம்பிகை உடலை எடுத்து சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடிய போது, அம்பாளின் உடல் பாகங்கள் சிதறி விழுந்த இடங்கள்தான் சக்தி பீடங்களாக மாறின. அதை உணர்த்தும் வகையில் சக்தி பீடங்களில், அம்பாளின் எந்த பாகம் விழுந்தது என்ற வரலாறு இருக்கும்.
    அந்த வகையில் திருவதிகை தலத்தில் அம்பிகையின் தொடைப்பகுதி விழுந்ததாக சொல்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் வகையில் இத்தலத்து அம்பிகையான பெரியநாயகி இடது தொடையில் கை வைத்தப்படி நின்ற கோலத்தில் இருப்பதை காணலாம்.

    வீராட்டனேசுவரருக்கு வலது பக்கத்தில் அம்பாளுக்கு தனி ஆலயம் உள்ளது. இங்கு பெரிய நாயகிக்கு திரிபுர சுந்தரி என்ற பெயரும் உண்டு. கிழக்கு நோக்கி சுமார் 8 அடி உயரத்தில் அம்பாள் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். அவளது நான்று கரங்களில் ஒரு கரத்தில் நீலோற்பவம், மற்றொரு கையில் தாமரை வைத்துள்ளார்.

    கீழ்பக்க கரங்களில் ஒன்று அபயமாகவும், மற்றொரு கை தொடை மீது வைத்தபடியும் உள்ளது. ஆலய அர்ச்சகர் சீனிவாச குருக்கள் அந்த காட்சியை காண்பித்த போது உண்மையிலேயே சிலிர்ப்பு ஏற்பட்டது. அந்த அளவுக்கு பெரிய நாயகி மிக, மிக சக்தி வாய்ந்தவளாகத் திகழ்கிறாள்.

    அம்பிகை முன்பு தரையில் ஸ்ரீசக்கரம்

    பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சக்கரம் சமீபத்தில் நிறுவப்பட்டதாகும். ஸ்ரீசக்கரத்தில் அம்பிகை உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே பெரியநாயகிக்கு வழிபாடு நடத்தப்படும் போது இந்த ஸ்ரீசக்கரத்தில் குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கேட்கும் வரத்தை தருபவளாக இத்தாய் போற்றப்படுகிறாள். அதனால் தான் இந்த அம்பிகைக்கு அபயாம் பிகை, வரதாம்பிகை என்றும் பெயர்கள் உள்ளது.

    திருமணம் ஆகாதவர்கள் ஒரு கிலோ மஞ்சள் வாங்கி அரைத்து அபிஷேகம் செய்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்தால் விரைவில் மனதுக்கு ஏற்றப்படி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இது தவிர இந்த பெரியநாயகி அம்மனுக்கு மிகப்பெரிய மாலையை காலடி வரை தொங்க விட்டு வழிபடும் பழக்கமும் உள்ளது. இந்த மாலை வழிபாட்டுக்கு நிலை மாலை என்று பெயர்.

    ஆடி மாதம் பெரிய நாயகிக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகிறது. தனி கொடி மரம், பலி பீடத்துடன் இத்தலத்தில் ஆட்சி நடத்தும் அம்பிக்கையை மனம் குளிர வழிபட்டால், மனம் போல் வாழ்வு அமையும்.

    திரிபுரசுந்தரி அம்மன் ஆலயத்தில் நின்று அம்பிகையை எவ்வளவு நேரம் நின்று தரிசனம் செய்தாலும், திரும்பிச் செல்ல மனவே வராது. அவ்வளவு அழகும், அமைதியும் இந்த அம்மனிடம் குடி கொண்டுள்ளது. அடுத்தத் தடவை இந்த தலத்துக்கு செல்லும் போது இந்த உண்மையை நீங்களே அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள். 
    உங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தரும்படி உள்ளதோ அதைச் சாந்தி செய்யக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து பலன் பெறுங்கள்.
    உங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தரும்படி உள்ளதோ அதைச் சாந்தி செய்யக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து பலன் பெறுங்கள். தீய பலன்களைத் தரும் கிரகத்தின் தசை, புத்தி நடைபெறும் சமயங்களிலும் இதைச் செய்யலாம்.

    1. சூரிய பகவான் - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும். இதை 7 ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

    2. சந்திர பகவான் - வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும். சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

    3. செவ்வாய் பகவான் - தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.

    4. புதன் பகவான் - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.

    5. குரு பகவான் - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

    6. சுக்ர பகவான் - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

    7. சனி பகவான் - ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

    8. கேது பகவான் - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

    9. ராகு பகவான் - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும். இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி) அன்று செய்யவும்.
    நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
    திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும். ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்சினை காத்துக் கொண்டு இருக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும். இதன் மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

    ஆரத்தி, திலகம்: விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும் போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.

    வாழை மரம்: விசேஷங்களின்போது குலை தள்ளி பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.

    வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்: வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம்.

    வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

    உப்புக்குளியல்: வாரம் ஒரு முறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

    எலுமிச்சம்பழம்: வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும் போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

    கடல் நீர்: வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

    அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

    பித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்று பொருள்.
    பித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்று பொருள்.

    பித்ருதோஷம் என்பதை இரண்டு வகைகளில் விவரிக்கலாம். ஜோதிடம் சார்ந்த ஒன்று. அதைச் சாராத ஒன்று. உலகின் எந்த ஒரு புனிதமதமோ அல்லது புனிதநூலோதாயையும், தந்தையையும் சிறப்பித்துத்தான் சொல்லுகின்றன. ஆனால் என்னுடைய மேலான இந்துமதம்மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தி, தெய்வத்தையே நான்காமிடத்தில் நிறுத்தி பெற்றவர்களை முதலிடத்தில் வைத்துச் சிறப்பிக்கிறது.

    இந்துமதம், நாம் இந்த பூமிக்கு வருவதற்கு ஆதாரமாக இருந்து, நமக்கு உடல் கொடுத்த தாயையும், தந்தையையும் தெய்வத்திற்கும் முன்னே வைத்து முதலில் வணங்கச் சொல்கிறது. உடலும், உயிரும் கொடுத்த தாய்,தகப்பனை அவர்கள் உயிருடன் இருக்கும் போதும் மதித்து வணங்கி, அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகும் அவர்களை வருடாவருடம் நினைத்துப் போற்றி பசியாற்ற வேண்டியதே ஒரு இந்துவின் தலையாயக் கடமை.

    தாயும், தந்தையும் நமக்கு முதன்மையானவர்கள் என்றால் அவர்கள் இருவரும் இந்தப் பூமியில் பிறப்பதற்குக் காரணமான தாத்தாவும், பாட்டியும் முதன்மைக்கு முதலானவர்கள் ஆகிறார்கள். அந்த தாத்தா,பாட்டிக்கு உடல் கொடுத்த, அவர்கள் இந்த உலகில் பிறக்க காரண மானமுப்பாட்டன்-முப்பாட்டி அவர் களுக்கும்முதலானவர்கள் ஆகிறார்கள். இப்படியே இந்தச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டே சென்றால்இதில் ஏதோ ஒருமுனை நிறுத்தப்பட்டு அது ஆதி முதல்வரான பரம் பொருளிடம் போய் நிற்கும்.

    இந்துமதத்தில் மட்டுமே உள்ள சிறப்பான “குலதெய்வ வழிபாடு”உண்மையில் நம் குலத்திற்கு,நம் குடும்பத்திற்கு எல்லாமுமாய் இருந்து, நமக்கு உடல் கொடுத்த ஒரு முப்பாட் டன்அல்லது முப்பாட்டியை வழிபடுவது தான். அவர்கள் நமக்குத் தந்த இந்த வாழ்க்கைக்கு நன்றி செலுத்துவது தான். என்றோ ஒருநாள் அவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்தியஇடத்திற்குச் சென்று, நாம் வந்த இடத்தை நினைவு கூறுவதுதான்.

    மதம் எனும் நமது வாழ்வியல் விதிப்படிசூரிய னும்சந்திரனும் தாய் தந்தையராகக் கருதப்படு கிறார்கள். ஒவ்வொரு உயிரும் இவர்களது ஒளியால்தான் உண்டானது. தாயும் தந்தையும் இணைந்ததால், சேர்ந்ததால் நாம் பிறந்தோம். எனவே சூரியனும் சந்திரனும் இணையும், சேரும் ஒவ்வொரு மாத அமாவாசையன்றும் பெற்றோரை நினைக்கச் சொன்னது நமது மதம். இந்து மதம் விஞ்ஞானரீதியிலானது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

    அமாவாசை தினத்தன்று,சிறுவனான எனது மகனை அருகில் வைத்துக் கொண்டு என் தாய், தந்தையருக்குவிரதமிட்டு நான் வழிபடும்போது அதில் ஒரு கலாச்சாரக்கடத்தலும், என்னுடைய சுயநலமும் கலந்திருக்கிறது. “என் தாய், தந்தையை நான் மறக்காமல் இருப்பதைப் போல,மகனே... என் மறைவுக்குப் பிறகு, நீ என்னை மறந்து விடாதே” என்று மறைமுகமாக என் மகனுக்கு நான் எடுத்துச் சொல்வதே அது.

    இந்த வழிபாட்டைமுறையாகச்செய்யாதவர்கள், பித்ருக்களுக்குஉணவளித்துவழிபடத்தவறியவர்கள், பூமி தனது ஒருபாதிச்சுற்றை முடித்து வடக்கிருந்துதெற்காய்த் திரும்பும், உத்தராயணம்எனப்படும்,ஒருவருடத்தின் பாதி அமைப்பில் முதலில் வரும் ஆடிமாத அமாவாசையன்று, நதிக்கரையிலோ கடற்கரையிலோ முன்னோர்களை வழிபட்டு அவர்களை திருப்திப்படுத்தும் தர்ப்பணம் செய்யலாம் என்றும் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
    இதுவே நமது பெற்றோரையும், அவர்களுக்கு மூத்தோரையும் நினைத்து நாம் வழிபடும் முறை.

    இனி ஜோதிடப்படி பித்ருதோஷம் என்பதற்கு வருவோம். ஜோதிடப்படி சூரியனே தந்தை சந்திரனே தாய் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். இங்கு சூரியன் பிதுர்க்காரகன் என்றும் சந்திரன் மாதுர்க்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்கள். மூல ஒளியான சூரியனாலேயே நாமும் நாம் வாழும் பூமியும் பிறந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

    சூரியன் எனும் செம்பொருளையே சிவம் என்ற பெயரில் நமது மூல நூல்கள் குறிப்பிடுகின்றன. சூரியன் எனும் முதன்மையான ஆண்மைச் சக்தியையே தந்தையாகவும், அதற்கு துணைநிற்கும் சந்திரன் எனும்பெண்மைச் சக்தியையேதாயாகவும் உருவகப்படுத்தி அம்மையப்பனாக நாம் வழிபடுகிறோம்.

    நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களிலும் ஒளிக்கிரகங்கள் எனப்படும் இந்தச் சூரியனும், சந்திரனுமே ஒரு ஜாதகத்தின் முதன்மையானவர்கள். ஜாதகத்தில் சூரிய, சந்திரர்களின் வலிமை முக்கியமானது எனும் நிலையில் இந்த இருவருடன் இருட்டுகளான ராகு, கேது, சனி ஆகியவை இணைந்து அவர்களைப் பலமிழக்கச் செய்யும் நிலையே ஜோதிடப்படி பித்ருதோஷம் எனப்படுகிறது.

    ஒரு ஜாதகத்தில் சூரியனை வைத்தே அந்த ஜாதகத்தின் உயிராகக் கருதப்படும் லக்னம் கணிக்கப்படுகிறது. அதேபோல அந்த உயிர் இயங்கத் தேவைப்படும் உடலானது சந்திரன் இருக்கும் இடத்தை. வைத்து ராசி என்று சொல்லப்படுகிறது. சூரியனும், சந்திரனும் தாய், தந்தையரைக் குறிப்பிடுவது போல, ராகு, தந்தையின் முன் னோர்களையும், கேது தாயின் முன்னோர்களையும் குறிக்கும் கிரகங்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் உயிராகிய சூரியனுடனோ உடலாகிய சந்திரனுடனோ இணைந்து அவர்களைப் பலவீனப்படுத்துவது பித்ருதோஷமானது.

    மேலும் ஒரு ஜாதகத்தின் சென்ற பிறவி நன்மைகளையும், அதனால் உண்டாகும் இப்பிறவி பாக்கியங்களையும் குறிப்பிடும் ஐந்து, ஒன்பதாம் இடங்களில் இந்த சாயாக்கிரகங்கள் அமர்வதும் பித்ருதோஷம்தான் என்றும் விளக்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த தோஷத்தைப் பற்றி இன்றைய ஜோதிடர்களால்பலவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன. நம்முடைய முன்ஜென்மத்தில் நாம் பிறருக்குச் செய்த நன்மை, தீமைகளும் நம்முடைய முன்னோர்கள் செய்த நன்மை தீமைகளும், பெற்ற பாராட்டுகளும்,முக்கியமாக சாபங்களும் சில இடங்களில் நம்பமுடியாத அளவிற்கு விவரிக்கப்படுகின்றன.

    ஜோதிடம் எனப்படுவது ஒரு பரிபூரண காலவியல் விஞ்ஞானம் என்பதில் உறுதியாக இருக்கும் எளியஜோதிடனான நான் மேற் கண்ட கருத்துக்களுக்குள் செல்ல விரும் பாமல், இந்த பித்ருதோஷத்தை என் சிற்றறி வுக்குஎட்டியவாறுவிவரித்துச் சொல்ல விரும்புகிறேன். இங்கே பித்ருதோஷவிளக்கங்களைப் பொறுத்தவரை,பயமுறுத்தல்களும், பரிகாரங்களுமே அதிகமாகத் தென்படுகிறது. பித்ருதோஷம் எனப்படுவது சூரிய சந்திரனுடன் ராகு இணைவதால் உண்டாகும் தோஷம் என்று சொல்லப்படுவதன் மறைமுகமான காரணம், சூரியன் தன்னுடைய சுபத்துவத்தையும் அந்த ஜாதருக்கு நன்மைகள் தரும் வலுவை இழப்பதாலும்தான் என்பதே உண்மை.

    ஆனால் ஒரு ராசியில் ராகுவும், சூரியனும் சேர்ந்திருப்பதாலேயே சூரியன் வலுவிழந்து விடுவது இல்லை. இதற்கு உதாரணமாக சூரியனும், ராகுவும் இணைந்த எத்தனையோ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்அதிகாரிகளையும், அரசாங்கத்தில் உயர்நிலையில் இருப்பவர் களையும் என்னால் காட்ட முடியும். ஒளிக்கிரகங்களான சூரிய, சந்திரர்களுடன், ராகு-கேதுக்கள் இணைவதாலேயே ஒரு மனிதனுக்கு நல்லவை நடக்காமல் போய் விடுவ தில்லை. சர்ப்பக்கிரகங்கள் ஐந்தாமிடத் தில் இருப்பதாலேயே ஒருவருக்கு குழந்தை பிறக்காமல் போய் விடுவதும் இல்லை.

    ராகு-கேதுக்கள் எத்தனை டிகிரியில் அவர்களை நெருங்கி வலுவிழக்கச் செய்திருக்கிறார்கள். அல்லது குறிப்பிட்ட தூரம் விலகி நின்று ராகு,சூரியனின்வலுவை ஏற்று அந்த ஜாதகருக்கு நன்மை செய்யப் போகிறாரா? அல்லது வேறுவகைகளில் அந்த ராகு-கேதுக்களுக்கோ, சூரிய-சந்திரர்களுக்கோசுபத்துவம் ஏற்பட்டு அவர்கள் வலிமை இழக்காமல் இருக்கிறார்களா என்பதை துல்லியமாகக்கணித்தபிறகேபித்ருதோஷம்கணக்கிடப்பட்டுச்சொல்லப்பட வேண்டும்.

    ஆனால் இங்கேசூரியனுடன் ராகு சேர்ந்து விட்டாலே, இது பித்ரு தோஷம், உடனே காசிக்கு போ,ராமேஸ்வரம் போ இந்தப் பரிகாரத்தை செய் என்றுதான் பலன் சொல்லப்படுகிறது. ஒரு ஜாதகத்தில், எந்த அமைப்பால்இந்த ஜாதகருக்கு திருமணம், புத்திரபாக்கியம், வேலைவாய்ப்பு போன்றவைகள் நடக்கவில்லை என்பதைக் கணிக்கத் தடுமாறும் அல்லது கணிக்கத் தெரியாத, அனுபவக்குறைவால் ஜோதிட ஞானம் முழுமையாக கை வராத ஒரு மேலோட்டமான ஜோதிடருக்குபரிகாரம் சொல்ல பயன்படும் ஆயுதமாகவே இந்த பித்ருதோஷம் உபயோகப்படுகிறது.

    நமது மூலநூல்களில் இது கடுமையான தோஷம் என்றோ, இதற்கு இந்த பரிகாரம்தான் செய்ய வேண்டும் என்றோ எந்த இடத்திலும் குறிப்பாக சொல்லாதபோதுநிகழ்காலஜோதிடர்கள் இந்த அமைப்பைப் பற்றி பெரிய பீதியைக்கிளப்பத் தேவையில்லை. உண்மையில்சூரியனும்,சந்திரனும் அந்த ஜாதகத்திற்கு எந்த ஆதிபத்தி யத்தைக் கொண்டவர்கள்? ராகு-கேதுக்கள்சுபத் துவம்அடைந்திருக்கிறார்களா இல்லையா? அவர்கள் எத்தனை டிகிரியில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கணித்தபிறகே பித்ருதோஷம் சொல்லப்பட வேண்டும்.

    ஒரு முறையான ஜோதிடர், கிரகங்களின் அமைப்பையும் அந்த ஜாதகத்தில் உள்ள தடைகளையும் தெளிவாகக் கணக்கிட்டு, தடையை ஏற்படுத்துகின்ற கிரகத்தை துல்லியமாகக் கணித்து, அதற்குரிய முறையான தெய்வஸ்தலங்களுக்கு அந்த ஜாதகரை அனுப்பி, பரம்பொருளின் அருள் கிடைக்கச் செய்து, அவரின் குறைகளை நீக்கித் தரவேண்டும். அதுவே முழுமையான ஜோதிடரின் கடமை.

    அதைவிடுத்து தோஷம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லையா? பித்ரு தோஷம் என்று சொல்லிவிடு. இந்த ஊருக்கு போ. அந்த ஊருக்கு போ. இந்த ஹோமத்தைச் செய், அந்த ஹோமத்தைச் செய் என்று சொல்லி அனுப்பிவிட்டு அதைச் செய்தாலும் எனக்குப் பலன் இல்லையே என்று மறுபடியும் ஜாதகர்திரும்பி வந்ததும், உன் தலையெழுத்து அவ்வளவுதான். உன் கர்மாவைத்தீர்க்க முடியாது என்று ஒரு அரைகுறை ஜோதிடர் சொல்வதால்தான் இந்த தெய்வீக சாஸ்திரம் களையிழந்து போகிறது.

    பரம்பொருள் அனுமதித்தால் இதைப்பற்றி “முறையான பரிகாரங்கள்” என்ற தலைப்பில் எல்லாம் வல்ல மேலான அருட்சக்தியை விளக்கி விரைவில் மாலைமலரில் எழுதுகிறேன். தாய், தந்தையருக்கு முறைப்படியான கடமைகளைச் செய்யாததால்தான்இந்த தோஷம் ஏற்படுகிறது என்பதிலும் கருத்துவேறுபாடு உள்ளது. அதிலும் எந்த தோஷமாக இருந்தாலும் அது முறையாக, தெளிவாகக் கணிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

    எந்த தோஷமாக இருப்பினும் அனைத்தும் பரம்பொருளின் கருணைக்கு உட்பட்டதே. அவனின் திருத்தலங்களுக்குச் சென்று மனமுருகி வேண்டினாலே அனைத்தும் சித்திக்கும்.

    எல்லாம் அவன் செயல்.
    தோஷங்கள் விலகவும், ஏழ்மை நீங்கவும் தீபாவளி அன்று முதலில் சூரிய உதயத்திற்கு முன்னர், எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
    தோஷங்கள் விலகவும், ஏழ்மை நீங்கவும் தீபாவளி அன்று முதலில் சூரிய உதயத்திற்கு முன்னர், எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேண்டும். அந்த வாளியில் மஞ்சள், சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். தீபாவளி தினத்தன்று கங்கை அம்மன் தூய்மையான தீர்த்தங்களில் தோன்றுகிறாள். இதனால் கங்கையை நாம் நம் இல்லத்தில் இருந்தபடியே பூஜிப்பதாகவும் ஐதீகம்.

    இதன் பயனாக தூய்மையான தண்ணீருக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது. அதில் நீராடுவதால் உடலில் இருக்கும் தோஷங்கள் நீங்குகிறது. விடிவதற்குள் அதிகாலையில் குளித்து விட வேண்டும் சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம். இதனால் ஸ்ரீமகாலட்சுமி யும், திருமாலும் நம் மேல் கருணை காட்ட மாட்டார்கள் என்று ஒரு கருத்து உண்டு. எனவே தோஷங்கள் விலக வேண்டுமானால் அதிகாலை 5 மணிக்கெல்லாம் குளித்து விடுங்கள்.

    அதுபோல, நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். இது ஏழ்மையை விரட்டும்.

    துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு

    பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும். அதனால்தான் சில ஆலயங்களில் வெடி வெடிப்பார்கள். இதனால் துஷ்ட சக்திகள் விலகும்.

    தோஷத்தை நீக்கும் மஞ்சள்

    தீபாவளி தினத்தன்று புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும்.

    வாழ்வை வெளிச்சமாக்கும் தீப ஒளி

    தீப திருநாள் அன்று இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். வீடு முழுவதும் தீபம் ஏற்றுவது மிக சிறந்தது. இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

    ஸ்ரீராமர், வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய தினம், ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதி. இந்த நாளை, “தீயாஸ்” என்று சொல்லி அகல் விளக்கு ஏற்றி கொண்டாடினார்கள். அயோத்தி மக்கள், இத்திருநாளை தீபாவளி என்றும் சொல்கிறார்கள்.

    ஸ்ரீராமர் அயோத்திக்கு வந்த பிறகுதான் அயோத்தியே வெளிச்சத்தில் ஜொலித்தது. வெற்றியின் சின்னம் என்று ஜொலிக்கும் தீப ஒளியை சொல்வார்கள். அந்த தீப ஒளி, நம் இல்லத்திலும் ஜொலித்தால், காரிய தடை என்கிற இருள் நீங்கி, நம் வாழ்க்கையில் முன்னேற்றம் என்கிற வெளிச்சத்தை தந்திடும்..

    அதேபோல, மாலையில் வாசலில் இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபாவளி அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார். அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய தீபம் ஏற்றினால், தமது பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தனது சகோதரிகள் போலவே நினைத்து, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது.

    அதேபோல, இனிப்பை நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்க வேண்டும். இதனால் ஸ்ரீமகாலட்சுமியின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
    மாலையில் வடதிசையை நோக்கி குபேரனையும், ஸ்ரீ மகாலட்சுமியையும் பூஜிக்க வேண்டும். குபேரனின் ஆசியும் அருளும் கிடைக்கும்.

    அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் கேதார கௌரி விரதம்

    கேதார கௌரி விரதம் என்ற கேதாரரேஸ்வரரை வேண்டி, பெண்கள் நோண்பு எடுப்பார்கள். இதனால் அனைத்து செல்வ வளங்களும் கிடைக்கும். இந்த நோண்பின் பயனால்தான் பார்வதிதேவி, ஈசனின் இடது பாகத்தை பெற்றாள்.

    தீபாவளியை நம் முன்னோர்கள் சொன்னது போல சாஸ்திரபடி கடைபிடியுங்கள். உங்கள் வாழ்க்கைஜொலிக்கும். எப்போதும் வெற்றிதான்.
    அரசு வேலை மற்றும் வேலை கிடைக்க வேண்டுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலனை காணலாம்.
    (1) அனுமனை, பைரவரை வழிபடுங்கள். சுந்தர காண்ட பாராயணம் செய்யலாம். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். பைரவருக்கு 27 மிளகுகளை கருப்பு துணியில் கட்டி நல்லெண்ணை அல்லது இலுப்பெண்ணை விட்டு விளக்கேற்றலாம். சனிக்கிழமை காலை 6-7 அல்லது இரவு 8-9 செய்வது சிறப்பு.

    (2) தினசரி காலை சூரியனை சூரியன் உதிக்கும் நேரம் பார்த்து வழிபட்டு வரவும்.

    (3) 14 முக ருத்திராட்சம் அணியலாம்.

    (4) சனிக்கிழமை அன்று ஊர வைத்த எள்ளை மதியம் 1-2 க்குள் எருமைக்கு வழங்கி வரவும்.

    (5) அரச மரத்திற்க்கு தொடர்ந்து 43 நாட்கள் வேரில் நீர் விட்டு வரவும். அரச மரம் கடவுள் ரூபம். தொடக்கூடாது. மேலும் அரச மரம் அருகில் அசுததும் செய்வது,துப்புவது போன்றவை பெரும் கேடாய் கண்டிப்பாக விளைவிக்கும்.
    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மாவிளக்கு ஏற்றி வழிபடும்போது கோமதி அம்மன் தங்களது வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பக்தர்களின் மாவிளக்கு வழிபாடு மிகவும் பிரதானமான வழிபாடாக இருக்கிறது. குழந்தை மற்றும் திருமண பாக்கியம், நோய் நொடியில்லாத வாழ்வு என பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற கோமதி அம்மன் சன்னதியில் கொடிமரத்தின் முன்பு பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.

    அதுமட்டுமின்றி தலைவலி, கால் வலி, கை வலி, உடல் வலி உள்ளிட்டவற்றால் அவதிப்படக்கூடிய பக்தர்கள், அதிலிருந்து விடுபட மாவிளக்கு ஏற்றுகிறார்கள். அவர்களுக்கு எந்த பகுதியில் வலி ஏற்பட்டு அவதிப்படுகிறார்களோ, அந்த பகுதியில் மாவிளக்கை ஏற்றி வழிபடுகிறார்கள். அப்படி மாவிளக்கு ஏற்றி வழிபடும்போது கோமதி அம்மன் தங்களது வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
    பல்வேறு மகத்துவங்கள் கொண்டது திருவதிகை வீட்டானேசுவரரின் திரிபுர சம்ஹாரம். இந்த காட்சியை கண்டால் அனைத்து விதமான தடைகளும் விலகி, எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.
    ஒவ்வொரு தலத்துக்கும் ஒரு புராண நிகழ்வு வரலாறு இருக்கும். அந்த வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில், அந்த புராண சம்பவம் மீண்டும் ஒரு தடவை நிகழ்த்தி காட்டப்படும். அந்த வகையில் பண்ருட்டி-திருவதிகையில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடத்தப்படும் “திரிபுர சம்ஹாரம்” நிகழ்ச்சி மிகவும் மகிமை வாய்ந்தது. தேவர்களுக்கும், மக்களுக்கும் தொல்லைக் கொடுத்த மூன்று அசுரர்களின் மூன்று ஊர்களை சிவபெருமான் சம்ஹாரம் செய்ததே “திரிபுரசம்ஹாரம்” என்று அழைக்கப்படுகிறது.
    இதன் பின்னணியில் உள்ள வரலாறு வருமாறு:-

    சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார். வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன.

    இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார்.

    இச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின. இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதைக் கண்டார்.

    தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்தார். திரிபுரவாதிகள் திருவதிகைக்கு தெற்கேயும், ஈசன் திருவதிகையிலும் இருந்தனர். அசுரர்கள் மூவரும் ஈசன் தங்களை அழிக்கும் போது தாங்கள் பெற்ற வரத்தினால் கோட்டைகள் மூன்றும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அழிக்கும் வேலை பகலாகவோ அல்லது இரவாகவோ இருக்கக் கூடாது. மிக முக்கியமாக ஈசனுக்குக் கோபம் இருக்கக் கூடாது போன்ற கட்டுபாடுகளுடன் வரம் பெற்றிருந்தனர்.

    திரிபுரவாதிகளும் ஈசனும் போர் புரியும்போது கொடுத்த வரத்தினால் ஈசன் புன்னகை கொண்டிருந்தார். இதை கண்ணுற்ற அசுரர்கள் ஈசனுக்குக் கோபம் வரவழைக்க ஈசனின் இடபாகம் அமர்ந்த தேவியை தருமாறு கேட்டனர். ஈசன் புன்னகைத்துக் கொண்டே தேவியை நோக்கினார். கேட்டவர்க்கு கேட்டதைக் கொடுத்து விடும் ஈசன் எங்கே தன்னையும் கொடுத்து விடுவாரோ என்று பயந்து அம்பிகை ஈசனுக்கு வலபுரம் வந்து விட்டார்.

    (இத்திருக்கோவிலில் அம்பாள் சன்னதி வலதுபுறம் உள்ளது குறிப்பிடத்தக்கது.) இந்நிகழ்ச்சி நடந்த இடம் திருவதிகைக்கு மேற்கே வீரப்பெருமாநல்லூர் எனும் ஊர் என்பர்.

    தேவியைக் கேட்டவுடன் கோபம் கொண்ட ஈசன் சிரித்தேன் எரித்தேன் என்று அம்பு தொடுத்தார். தேவர்களின் செருக்கு அடங்கப் புன்னகையும், சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும், சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார்.

    அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின. இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை. சிவபெருமான் முப்புரவாசிகளில் இருவரை வாயிற்காப்பவனாக (துவாரபாலகர்), நியமித்தார். அவர்களில் ஒருவர் சங்கநாதம் வாசித்துக் கொண்டும், மற்றொருவர் யாழ் வாசித்துக் கொண்டும் இருப்பதை திரிபுரசம்கார மூர்த்தி சன்னதி வாசலில் காணலாம். ஒருவரை குடமுழா முழக்குபவராக தமது அருகில் இருக்கும்படி அருளி மறைந்தார்.

    அசுரர்களின் கோட்டை எரிந்தும் எரியாமலும் வேகாமல் நின்ற பகுதி ’வேகாகொள்ளை’ என இன்றளவும் கூறப்படுகிறது. இது இச்சரித்திரத்திற்கு ஒரு சான்றாக அமைகிறது. இந்த வேகாகொள்ளை என்னும் ஊரில் சூளைகள் வேகாமல் நின்று போவதும் இன்று வரை கண்கூடாக அதிசயமாகக் காண முடிகிறது.
    இப்படி பல்வேறு மகத்துவங்கள் கொண்டது திருவதிகை வீட்டானேசுவரரின் திரிபுர சம்ஹாரம். சமீப ஆண்டுகளாக திருவதிகை திருத்தலத்தில் திரிபுரசம்ஹார பிரம்மோற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது.

    திரபுர சம்ஹாரம் காட்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவதிகையில் திரள்வார்கள். முப்புரம் எரிக்கப்படும் காட்சியை பார்த்தால் முக்தி பலன் கிடைக்குமாம். அது மட்டுமல்ல இந்த பிறவியில் எந்த எதிரிகளாலும் நமக்கு துன்பம் வராதாம். அசுரன் எனும் எதிரியை சிவபெருமான் அழிப்பதால், முப்புரமெரித்த காட்சியைக் கண்டால் அனைத்து விதமான தடைகளும் விலகி, எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.

    சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் தீர்த்தங்கள் இருக்கிறது. இந்த தீர்த்தங்களில் நீராடினால் கிரக தோஷம், நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
    சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் ‘சந்திர தீர்த்தம்‘ இருக்கிறது. இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

    கௌண்டின்னிய தீர்த்தம்

    சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

    கங்கை, கோதாவரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ‘’பாவகரி நதி’’ என்னும் பெயரும் உண்டு.

    சந்தன மகாலிங்கம் தீர்த்தம்

    இச்சதுரகிரியின் மேல் ‘காளிவனம்‘ என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும். இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும். இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய ‘திருமஞ்சனப் பொய்கை’ உண்டு.

    பிரம்ம தீர்த்தம்


    காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட ‘பிரம்மதீர்த்தம்‘ ஒன்று சதுரகிரி மலைக்காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட ‘பொய்கைத் தீர்த்தம்‘’, ‘’பசுக்கிடைத் தீர்த்தம்‘’, ‘குளிராட்டித் தீர்த்தம்‘ போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோவிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள். பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம், செடி, கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன

    கன்னியாகுமரி பகவதி அம்மன் தேவி கன்னி தெய்வமாக இருப்பதால் திருமணமாகாத கன்னிப் பெண்கள் அம்மனை வேண்டி பலன் பெறுகிறார்கள்.
    கன்னியாகுமரியில் கன்னி தெய்வமாக வீற்றிருக்கும் அன்னை பகவதி அம்மன் மிகவும் சக்திவாய்ந்த கடவுளாக நம்பப்படுகிறார். இங்கு வீற்றிருக்கும் அம்மன் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அம்மனை வேண்டினால் நினைத்த நல்ல காரியங்கள் ஈடேறும், நோய், நொடிகள் நீங்கும், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் பூஜைகளில் திரளாகப் பங்கேற்கிறார்கள்.

    தேவி கன்னி தெய்வமாக இருப்பதால் திருமணமாகாத கன்னிப் பெண்கள் அம்மனை வேண்டி பலன் பெறுகிறார்கள்.

    சுயம்வர அர்ச்சனை

    திருமணம் ஆகாத பெண்கள், விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கோவிலில் சுயம்வர அர்ச்சனை நடத்தப்படுகிறது. கோவில் அலுவலகத்தில் பணம் செலுத்தி விட்டு இந்த சுயம்வர அர்ச்சனையை தொடங்க வேண்டும். தொடர்ந்து 11 வாரங்கள் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு இந்த அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் திருமணம் விரைவில் கைகூடும் என்கிறார்கள். தமிழகம், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து இந்த சுயம்வர அர்ச்சனையை செய்து பலன் பெறுகிறார்கள்.

    கன்னிகா போஜனம்


    பெண்கள் தோஷம் நீங்க கன்னிகா போஜனம் என்ற பூஜையும் நடத்தப்படும். கோவிலின் தெற்கு பக்கம் உள்ள மண்டபத்தில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பூஜை நடைபெறும். 11 சிறுமிகளை வரவழைத்து இந்த பூஜையை நடத்துவார்கள். அவ்வாறு பூஜையில் பங்கேற்கும் சிறுமிகளுக்கு, தோஷம் நீங்க பூஜை நடத்துபவர்கள் பாவாடை, தாவணி, பூ, வளையல் மற்றும் வெற்றிலை, பாக்குடன், தட்சணையும் சேர்த்துக் கொடுப்பார்கள். இவ்வாறு பூஜை செய்யும் போது அந்த தோஷம் நீங்கும் என்கிறார்கள்.

    பட்டு சாத்துதல்

    அம்மனை வேண்டி பலன் பெறும் பக்தர்கள், அம்மனுக்கு விளக்கு போடுதல், புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் ஆகியவை மூலம் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகிறார்கள். மேலும் வழக்கமான அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகளிலும் தங்கள் பங்களிப்பை காணிக்கையாக அளிக்கிறார்கள்.

    துலாபார நேர்ச்சை

    பகவதி அம்மன் கோவிலில் கேரள முறைப்படி பூஜைகள் நடைபெறுவதால் இங்கு துலாபார நேர்ச்சை வழிபாடும் இடம்பெற்று உள்ளது. இதற்காக இந்த கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் பெரிய தராசு தொங்கவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்ற இந்த துலாபாரத்தின் ஒரு பகுதியில் அமர்ந்துகொள்ள மற்றொரு பகுதியில் பக்தர்களின் எடைக்கு எடையாக வாழை பழம், சீனி போன்றவை துலாபார நேர்ச்சையாக வழங்குகிறார்கள். ஏராளமான பக்தர்கள் துலாபார நேர்ச்சை செலுத்த தினசரி இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.
    ×