என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    கேரளா மாநிலம் ஆலப்புழாவில் உள்ள மண்ணாறசாலை நாகராஜா கோவிலில் நாகதோஷம் நீங்கவும், குழந்தை வரம் கிடைக்கவும் சிறப்பான பரிகாரங்கள் செய்யப்படுகிறது.
    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு என்ற இடத்தில் மண்ணாறசாலை நாகராஜா கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறப்புமிக்க திருத்தலமாக விளங்கி வருகிறது.

    மண்ணாறசாலை நாகராஜா கோவிலில் முக்கிய வழிபாடு ‘உருளி கவிழ்த்தல்’. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், இந்தக் கோவிலுக்கு வந்து நாகராஜாவையும், சர்ப்ப யக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது. இதற்காக பல நாடுகளில் இருந்து ஜாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை - வழிபாடுகளில் பங்கேற்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

    நாக தோஷத்தால், அற்ப ஆயுளும், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், மனநிலை பாதிப்பு, துஷ்ட சக்திகளில் தொல்லை போன்றவை ஏற்படலாம். இதனை தீர்க்க நாக தோஷ வழிபாடு அவசியமாகிறது. இது தவிர செல்வ செழிப்புக்கு- தெய்வீகத் தன்மை நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட வேண்டும். அதே போல் கல்வி மற்றும் சுபீட்சமான வாழ்வுக்கு பட்டு சாத்தியும், தானியம், திவ்ய ஆபரணங்கள் பூட்டியும் வழிபடலாம். உடல் நலம் பெற- உப்பு வைத்து வழிபடலாம்.

    விஷத்தன்மை நீங்க -மஞ்சள். ஆரோக்கிய வாழ்வு பெற - நல்ல மிளகு, கடுகு, சிறு பயறு. சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு - தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்கள். நீண்ட ஆயுள் பெற - நெய். நினைத்த காரியம் கை கூடுவதற்கு - பால், கதலிப்பழம், நிலவறை பாயசம். குழந்தை பாக்கியம் பெற- மஞ்சள் பொடி. விவசாயம் செழிக்க - பயிர் செய்யும் தானியங்களில் முதன்மையானது என்று தனித்தனியாக நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.

    இந்த ஆலயத்திற்குச் செல்ல ஆலப் புழாவில் இருந்து ஏராளமான பஸ்வசதிகள் இருக்கின்றன.
    பசுவை வழிபடுவதால் தோஷங்கள் விலகும். குழந்தைக்கு ஏற்படும் தோஷத்தை போக்க கோமுக சாந்தி செய்ய வேண்டிய முறையை அறிந்து கொள்ளலாம்.
    பசுவை வழிபடுவதால் தோஷங்கள் விலகும். ரேவதி, ஆயில்யம், கேட்டை ஆகியனவற்றின் 4-ம் பாதத்தின் கடைசி 4 நாழிகைகள், மகம், அசுவினி, மூலம் முதல் பாதத்தின் முதல் இரு நாழிகைகளிலும் பிறந்த குழந்தைகள் தோஷம் உடையவர்களாக இருப்பர்.

    இத்தோஷம் விலக, மிகவும் சாதுவான கறவைப் பசுவின் பின் இரு கால்களுக்கு இடைவழியே குழந்தையைக் கொடுத்து மடியை தடவியபடி முன்கால் வழி குழந்தையை எடுத்து முகத்தில் பதியவைத்து எடுக்க வேண்டும்.

    இதன் தத்துவம் என்னவெனில் அக்குழந்தையை அந்தப் பசு ஈன்றதாகப் பொருள். இவ்வாறு செய்தால் தோஷம் குழந்தையைப் பாதிக்காது. இதனை கோமுக சாந்தி என்பர்.

    எவர் ஒருவருக்குக் குலதெய்வம் தெரியாமல் சிரமப்பட்டுக் கொண்டு குலதெய்வ தோஷத்திற்கும் முன்னோர் கடனுக்கும் ஆளாகி இருக்கிறார்களோ! அவர்கள் வேத அங்க முறைப்படி ஆறு மாத காலம் ஜென்ம நாளில் கோ பூஜை செய்கிறார்களோ அவர்களுக்கு குலம் காக்கும் குலதெய்வம் தெரிந்து தோஷங்களும் அகன்று சுபிட்சமான வாழ்வு உண்டாவது உறுதி. 
    கோமாதாவை வணங்குவதால் தெய்வங்கள் அனைவரையும், மகரிஷிகள், தபஸ்விகளைத் தரிசித்த பலன் ஏற்படும். பில்லி சூன்யங்கள் விலக அமாவாசை அன்று கோமாதாவிற்கு அகத்திக்கீரை தரலாம்.
    கோமாதாவை வணங்குவதால் தெய்வங்கள் அனைவரையும், மகரிஷிகள், தபஸ்விகளைத் தரிசித்த பலன் ஏற்படும். பில்லி சூன்யங்கள் விலக அமாவாசை அன்று - அகத்திக்கீரை தரலாம். அப்போது பில்லி சூன்யங்கள் என்னை விட்டு உன்னிடம் சேர வேண்டும் என்று வேண்டாமல் என்னை விட்டு விலக வேண்டும் என்று கூறுதல் வேண்டும்.

    திருமணம் ஆகாத பெண்கள் பசுவை அரச மரத்தின் கீழ் நிற்க வைத்து அருகம்புல், அகத்திக்கீரை கொடுத்து காமேஸ்வரி மந்திர மூலத்தை ஜபம் செய்திட எந்த வயது ஆனாலும் திருமணத் தடை அகன்று மணமேடை ஏறும் பாக்கியம் கிடைத்துவிடும். பசுவிற்கு மாலை அணிவித்து அதை எடுத்து தன் கழுத்தில் போட்டுக் கொண்டு அரச மர வலம் வருதல் வேண்டும்.

    அகத்திகீரையை 1 நாள் வீட்டில் வைத்திருந்து சனிக்கிழமையில் பசுவுக்கு கொடுத்து வணங்கி அதன் கோமய நீரை மஞ்சள் நீருடன் கலந்து வீட்டில் தெளிக்க பில்லி சூன்யங்கள் விலகிவிடும்.

    விலங்கு இனங்களில் அம்மா என்ற ஓசையை ஆசையாய் எழுப்புவது பசு மட்டுமே. ஆகவே அதனுள் இறைசக்திகள் நிறைந்துள்ளன. பசு இல்லாத ஒரு வீட்டில் காலையில் ஒரு பசு தற்செயலாக வந்து நின்றால் அவ்வீட்டிற்கு நல்ல செய்தி வரப்போகிறது என்று பொருள் கொள்வர். உடனே அதற்கு அகத்தி கீரை, வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசுவைக் கண்டால் மகா லட்சுமியைக் கண்டதாக பொருளாகிறது. தீட்டு, துர் மந்திரக்கட்டு இவைகள் அகன்றிட புதன்கிழமை பசுவுக்கு அகத்திக் கீரை தர வேண்டும்.

    ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்து இறந்தால் மீண்டும் புத்திர சோகம் அகன்று குழந்தை பிறக்க கோவந்தனம் செய்து கீரை தரலாம். நல்ல சுத்தமான அகத்திக்கீரைகளையே கொடுக்க வேண்டும். பழுத்துவிட்ட மஞ்சள் நிற கீரைகளைத் தந்தால் அதற்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, அது நமக்கு பாவமாகி விடும். ஆவுக்குத் தரும் அகத்திக்கீரை பாவங்கள் பொடியாகித் தொலையுமே! என்பது வாக்கு.

    யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
    யார்வர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்றுரை தானே...!
    திருமந்திரம்.

    என்ற பாடலில் பசுவிற்கு கீரை கொடுத்தல் பற்றி கூறப்பட்டுள்ளது.
    பித்ரு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை முறையாக செய்து வந்தால் முன்னோர்களின் ஆசி முழுவதும் நமக்கு கிடைக்கும்.
    பித்ரு வழிபாட்டின்போது கவனிக்க வேண்டியவை :

    நம் முன்னோர்கள் இறந்த நேரம் மற்றும் திதிகளை குறித்து வைத்து அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது.

    பித்ருக்களுக்கு தர்ப்பணங்கள் செய்யும்போது காலை 7 மணிக்குள் செய்துவிட வேண்டும். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தின்போது தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. தர்ப்பணங்களை முறைப்படி சரியான நேரத்தில் செய்தால் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம் நதிகளின் கரைகளில் கொடுத்தால் அதற்கு அதிக சக்தி உண்டு. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது பல யாகங்களை செய்வதை விட மேலானதாகும். ஒரு ஆண்டிற்கு ஒருவர் 96 முறை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

    அமாவாசை மற்றும் சூரிய சந்திர கிரகணங்களில் பித்ருகளுக்கு செய்யும் தர்ப்பணங்களுக்கு மிகுந்த பலன் உண்டு. அமாவாசையன்று அன்னதானம் செய்வது மிகவும் நல்லது.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் வெங்காயம், பூண்டு மற்றும் வாசனை திரவியங்களை தவிர்க்க வேண்டும். ஒருவருடம் நாம் பித்ருபூஜை செய்ய தவறிவிட்டால் பித்ருக்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என கூறப்படுகிறது.

    ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணங்களுக்கு மிகவும் சக்தி உண்டு. இந்த நாளில் பித்ருக்களை சாந்தப்படுத்தினால் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம். இந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க முன்னோர்களின் ஆசி முழுவதும் நமக்கு கிடைக்கும்.

    திருவாதிரை, புனர்பூச நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால் 12 வருடங்கள் பித்ருக்களை திருப்திப்படுத்த முடியும்.
    குலசை முத்தாரம்மனை தரிசிப்பதன் மூலம் நாகதோஷம், தாலி தோஷம் நீங்குகிறது. திருமணம் கைகூடுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கிறது.
    குலசை முத்தாரம்மன் வேண்டி வரும் பக்தர்களை காத்து ரட்சித்து வருகிறார். ஞானமூர்த்தீஸ்வரருடன் அம்பாளை ஒரே பீடத்தில் அருட்காட்சி தருகிறாள். இந்த அம்சம் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இந்த கோலத்தில் அம்பாளை தரிசிப்பதன் மூலம் நாகதோஷம், தாலி தோஷம் நீங்குகிறது. திருமணம் கைகூடுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கிறது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு முன் மண்டபத்திற்கு மேற்கு பக்கம் நவக்கிரகங்கள் உள்ள தனி கோவில் உள்ளது. நவ கிரகங்களை வழிபட்டால் பல்வேறு பலன்கள் கிடைக்கிறது.

    சூரியன்: உடல் ஆரோக்கியம் வழங்கும்
    சந்திரன்: புகழ், கீர்த்தியை கொடுக்கும்
    செவ்வாய்: தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும்
    புதன்: அறிவு வளத்தை பெருக்கும்
    குரு: மதிப்பையும், மரியாதையையும் கூட்டும்
    சுக்ரன்: அழகையும், ஆற்றல் மிகுந்த பேச்சையும் தரும்
    சனி: ரோகத்தை தவிர்க்கும். இழப்பை ஈடுசெய்யும்
    ராகு: பயத்தை போக்கும்
    கேது: பாரம்பரியத்தை வளர்க்கும்
    சந்திரன் தோஷம் (திங்கட்கிழமை) உள்ளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகார முறையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரரோ ஞானத்தையே திருமேனியாகக் கொண்டவர் உலக உயிர்களுக்கு ஞானம் அருள்பவர். இங்கே அம்பாளின் ஆற்றலை பெற்று சக்தி மயமாக சுவாமியும், சுவாமி ஆற்றலைப் பெற்று சக்தி சிவமயமாகவும் அமர்ந்து இருப்பதால் பரிவர்த்தனை யோகத்தில் நவகிரக நாயகி அருள்பாலிக்கிறாள்.

    சந்திரன் மாத்ரு காரகன். தாய்வழி உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள், தாயின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படுவதால், தாய் வழி சொத்தில் இழுபறி, புகழ், கல்வி, பதவி உயர்வுகளின் தடை போன்ற பாதிப்புகள் தோன்றலாம்.

    சந்திரதோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

    சந்திர தோஷம் இருந்தால் திங்கட்கிழமை காலை குலசேகரபட்டினம் கடலில் குளித்து விட்டு வரும் வழியில் உள்ள சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மாளை தரிசித்து விட்டு முத்தாரம்மனுக்கு இடது பக்கம் உள்ள துர்க்கைக்கு நெய் விளக்கு ஐந்து தீபம் ஏற்றுங்கள்.

    முத்தாரம்மனுக்கு கற்கண்டு சாதம் படைத்து அங்கு இருக்கும் பக்தர்களுக்கு தானம் செய்யுங்கள். பின்பு முத்தாரம்மனை தரிசித்தால் சந்திரதோஷம் உங்களை சங்கடப்படுத்தாமல் ஒடும்.
    திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் திருவந்திபுரம் தேவநாதசாமியை வேண்டிக் கொள்கின்றனர்.
    கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கெடிலம் ஆற்றங்கரை யோரத்தில் அமைந்துள்ளது.
    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்ய பெற்ற திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்த திருக்கோவில் பல்வேறு காலங்களில் அரசர்கள் பலரால் அவ்வப்போது கட்டப்பெற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள்.

    இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    புரட்டாசி மாதம் வரக்கூடிய நான்கு சனிக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேவநாதசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
    திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பொது மக்கள் மொட்டையடித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.

    திருவந்திபுரம் தேவநாதசாமி திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று கருதப்படுகிறார். எனவே திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது. அதன்படி பக்தர்கள் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டாலும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    தசராத் திருவிழாவின் போது குலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசனம் செய்வதால் என்னென்ன பிரச்சனைகள் தீர்ந்து நன்மைகள் உண்டாகும் என்று அறிந்து கொள்ளலாம்.
    தசராத் திருவிழாவின் போது குலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசனம் செய்வதால் என்னென்ன பயன்கள் உண்டாகும்?

    முதல் நாள் துர்க்கை அம்மன் திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அம்பாளைத் தரிசிப்பதால், ராகு தோஷம் நீங்கும். கன்னிப் பெண்களுக்குத் திருமணம் நிச்சயம் நடந்தேறும்.

    இரண்டாம் நாள் விசுவகர்மேசுவரர் தோற்றத்தில் காட்சி தரும் அம்பாளைத் தரிசனம் செய்வதால், தொழிலில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும்.

    மூன்றாம் நாளில் பார்வதி திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அன்னையைத் தரிசிப்பதால், மிகுந்த நலன் உண்டாகும். உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், அது தீரும்.

    நான்காம் நாளில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம் கொண்டிருக்கும் அம்பாளைத் தரிசனம் செய்தால் நன்மக்கட்பேறு கிடைக்கும்.

    ஐந்தாம் நாள் நவநீதகிருஷ்ணர் தோற்றத்தில் காட்சியளிக்கும் அன்னையைத் தரிசித்தால் வாழ்நாள் கூடும். அதாவது உங்கள் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

    ஆறாம் நாள் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் அம்பாளைத் தரிசனம் செய்தால், எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும்.

    ஏழாம் நாளில் ஆனந்த நடராஜராகக் காட்சிதரும் அன்னையைத் தரிசித்தால், வீடு பேறு கிட்டும். சொந்த வீடு கட்டி சந்தோஷமாக வாழலாம்.

    எட்டாம் நாள் அலைமகளாகக் காட்சிதரும் அம்பாளைத் தரிசனம் செய்தால் பொருள் குவியும். செல்வம் கொழிக்கும்.

    ஒன்பதாம் நாள் கலைமகள் தோற்றத்தில் அருள் புரியும் அன்னையைத் தரிசித்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    இது போன்ற காரணங்களால் தான் தசரா விழாவிற்குப் பக்தர்கள் கூட்டம் இங்கு திரண்டு வருகிறது.
    திருப்பதிசாரம் திருவாழ்மார்பனை வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும், குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    திவ்யதேசங்கள் எனப்படும் 108 வைணவ தலங்களில் குமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் உள்ள மூலவர் வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். நம்மாழ்வாரின் தாய், நம்மாழ்வாரை ஈன்ற 41-ம் நாள் (வைகாசி விசாகத்தன்று நம்மாழ்வார் பிறந்தார்) குருகூரிலுள்ள ஆதிநாதன் சன்னதியில் இட்டார். அந்த குழந்தை மெல்லத்தவழ்ந்து கோவிலிலுள்ள புளியமரப் பொந்திற்குள் புகுந்தது.

    இதைக் கண்டு அனைவரும் வியந்தது நிற்க, பொந்தில் இருந்து குழந்தை யோக முத்திரையுடன் பத்மாசன யோகத்தில் அமர்ந்து மதுரகவி ஆழ்வாருக்கு திருவாய்மொழி அருளியதாக தல புராணம். இந்த இடத்தில்தான் ஆஞ்சநேயரின் பிரார்த்தனைக்கு இணங்க அகஸ்தியர் ராமாயணம் அருளியதாகவும் சொல்லப்படுகிறது. பெற்றோர்கள் இம்சையில் இருந்து விடுபட, பாவங்களில் இருந்து குடும்பத்தைக் காப்பாற்ற வறுமையில் இருந்து தப்ப, ஆரோக்கியத்தை குலைக்கும் நோய்களில் இருந்து விலக திருப்பதி சாரம் வந்து நம்மாழ்வாரை ஆட்கொண்ட திருக்குறளப்பன் சன்னதியில் மனமுருகி பிரார்த்தனை செய்தால் போதும்.

    திருவாழ்மார்பனை வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும், குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    திருப்பதிசாரம் கோவிலுக்கு செல்ல நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. ரெயிலில் வருபவர்கள் அங்கிருந்தே கோவிலுக்கு செல்ல ஆட்டோ, கார் வசதியும் உள்ளது. இல்லாவிட்டால் அண்ணா பஸ்நிலையம் வந்து பஸ்சில் சென்று திருவாழ்மார்பனை தரிசிக்கலாம்.

    கோவில் போன்: 04652- 282495.
    ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் பிரதி மாதம் சுவாதி நட்சத்திரம், மூல நட்சத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது.
    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் ஒன்றியம், இஞ்சிமேடு கிராமத்தில், ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ வரதராஜபெருமாள் தனி சன்னதி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதி, கல்யாண லட்சுமி நரசிம்மர் சன்னதி, ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் தனி சன்னதிகள் உள்ளன.

    இதுபோல் 5 நிலை கொண்ட ராஜகோபுரம், சக்கரத்தாழ்வார் சன்னதி, அலமேலு மங்கை தாயார் சன்னதி, நாகதோஷம் நீங்கும் சன்னதி ஆகியவை கட்டும் கட்டிட திருப்பணிகள் நடந்து வருகிறது. ஸ்ரீ ரங்கசடகோப கட்டிட திருப்பணிகள் மற்றும் கொடி மரம் ஏற்பாடு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீரங்க சடகோப கைங்கரிய சபா நிர்வாகி E.N. வரதராஜன் என்ற பாலாஜியின் முயற்சியால் திருப் பணிகள் நடந்தது.

    தோஷங்கள் நீங்கும் திருத்தலம்

    பிரதி மாதம் சுவாதி நட்சத்திரம், மூல நட்சத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது. இதில் திருமணத்தடை, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் பல்வேறு நன்மைக்காகவும் யாகம் நடத்தப்படுகிறது.

    பிரதிமாதம் உத்திரம் நட்சரத்தில் கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் வியாபாரம், திருமணநாள், பிறந்த நாள், குழந்தை வரம், பெயர் சூட்டுதல், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் முன்பதிவு செய்து கொண்டு கோ பூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம்.

    முக்கிய திருவிழா

    இந்த கோவிலில் புத்தாண்டு திருவிழா, தைமாத திருவிழா, திருப்பாவாடை அன்னக்கூடை திருவிழா, பவுத்திர உற்சவம், திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, கருடசேவை, கிருஷ்ணஜெயந்தி ஆகிய முக்கிய விழாக்களாக நடக்கின்றன. மேலும் இந்த கோவிலில் உள்ள ராமர், லட்சுமணர், சீதாதேவி சன்னதியில் பரத்வாஜ் முனிவரால் வழிபாடு செய்யப்பட்ட திருத்தலம். ராமர், லட்சுமணர் வைத்திருக்கும் வில்லில் மேல்புறத்தில் நரசிம்மர் திருஉருவம் உள்ளதால், வணங்கி செல்லும் பக்தர்களுக்கு நன்மைகள் நடக்கிறது.

    பெருந்தேவி தாயார் சிறப்பு

    பல்வேறு கோரிக்கைகளை பெருந்தேவி தாயாரிடம் வைத்து மண் அகல்விளக்கில் தீபம்ஏற்றி 48 நாள் மஞ்சள் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் நடக்கும்.

    இஞ்சிமேட்டை சேர்ந்த ஸ்ரீ சடகோபராமாஜர் தேசிகன், ஸ்ரீரங்க சடகோப யதீந்த்ர தேசிகன் அகோபலி மடத்தின் 34-வது பட்டம் மற்றும் 42-வது பட்டம் வகித்தார்கள். ஆன்மிக பணிகள் செய்தார்கள்.

    அமைவிடம்


    வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள சின்னகொழப்பலூரில் இறங்கி இஞ்சிமேட்டிற்கு செல்ல லாம்.

    ஆரணி-வந்தவாசி சாலையில் உள்ள சட்டதாங்கல் கூட்ரோடு பெரணமல்லூர் வழியாக இஞ்சிமேட்டிற்கு செல்லலாம்.

    சென்னையில் இருந்து 148, 208, 422, 341, 130, 247 காஞ்சீபுரத்திலிருந்து மேல்மலையனூர் செல்லும் வழி, வந்தவாசி-பெங்களூரு அரசு பஸ்சில் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லலாம்.
    வியாபாரம், தொழில் நிறுவனங்களில் கீழ்கண்ட வாஸ்து கடைபிடித்தால் வெற்றி பெறலாம் என்று ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
    வியாபாரம், தொழில் நிறுவனங்களில் கீழ்கண்ட வாஸ்து கடைபிடித்தால் வெற்றி பெறலாம் என்று ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அது பற்றி பார்ப்போம்:-

    பூஜை இடம்:- கடை மற்றும் தொழில் நிறுவனங்களில் ஈசான்ய மூலையில் கடவுள் படங்களையோ அல்லது விக்ரகத்தையோ வைக்கக் கூடாது. தென்மேற்கு, தென் கிழக்கு,வடமேற்கு ஆகிய திசைகளில் ஒன்றில் அவற்றை வைத்து தினமும் வழிபட்டு வியாபாரத்தைத்தொடங்க வேண்டும்.

    வாசற்படி:- கடைகளில் வாசற்படியை கடையின் முழு அகலத்திற்கு அமைக்கலாம். கிழக்கு பார்த்த கடையில் படிகளை வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும். மேற்கு பார்த்த கடைகளில் படிகளை வட மேற்கில் அமைக்க வேண்டும். தெற்கு பார்த்த கடையில் தென் கிழக்கு மூலையில் படிகளை அமைக்கலாம். வடகிழக்கு அல்லது கிழக்கு பார்த்த கடைகளில் வட்டம் அல்லது அரை வட்டம் வடிவமும் கடை தோற்றம் அல்லது படிகள் அமைக்கக் கூடாது.

    கதவுகள்:- கடையில் இரண்டுக்கும் மேற்பட்ட ஷட்டர்கள் இருக்கும் போது கீழே கொடுக்கபட்ட விதிகளின் படி அவற்றைக்கையாள வேண்டும்கிழக்கு பார்த்த கடைகளில் வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். தென் கிழக்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். இதற்கு எதிர்மாறாக அமைக்கக் கூடாது. இரண்டு ஷட்டர்களும் வேண்டுமானால் திறந்திருக்கலாம்.

    கிழக்கு பார்த்த கடை:- தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். காசாளர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்க வேண்டும். பணபெட்டி காசாளரின் இடது பக்கம் இருக்க வேண்டும். தென் கிழக்கு மூலையில் கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி காசாளரின் வலது புறம் இருக்க வேண்டும். காசாளர் வடகிழக்கு வட மேற்கு ஆகிய இரண்டு திசைகளிலும் அமரக் கூடாது.

    மேற்கு பார்த்த கடை :- வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும். அவரது இடது கைபுறம் பணபெட்டியை வைக்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்தால் பணபெட்டி அவரது வலது புறம் அமைய வேண்டும் வடமேற்கு மூலையிலோ அல்லது தென் கிழக்கு மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ அமரக்கூடாது.

    வடக்கு பார்த்த கடை:- வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். காசாளர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டியை வலது புறம் அமைக்க வேண்டும். வடக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் அமரக் கூடாது.

    தெற்கு பார்த்த கடை: - வடகிழக்கு மூலையை நோக்கி தாழ்வாக தரை அமைக்க வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமரவேண்டும். அவருடைய வலதுபுறம் பண பெட்டி இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டி இடதுபுறம் இருக்க வேண்டும். தென் கிழக்கு அல்லது வட மேற்கு மூலையில் அமரக் கூடாது.

    தெற்கு பார்த்த கடைகளில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். இந்த நியதிக்கு எதிர்மாறாகச் செய்யக் கூடாது. மேற்கு பார்த்தகடைகளில் மேற்கு, வடமேற்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். தென் மேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது. வடக்கு பார்த்த கடைகளில் வடக்கு, வடகிழக்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது. 
    திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு வந்து செய்ய வேண்டிய பரிகாரத்தை செய்தால் மூன்று ஜென்மமாக இருந்து வந்த தோஷங்கள் விலகி சகலவிதமான பாக்கியத்தையும் பெறுவார்கள்.
    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில். இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 79-வது ஸ்தலமாக திகழ்கிறது.

    பிரம்மனின் கபாலம், சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொள்ள இங்குள்ள குறுங்குடிவல்லித் தாயாரால் அம்ருதபிஷையிட்டு, சாபம் நீங்கப் பெற்ற தலம் இது. இக்கோவிலில் இருந்து  கி.மீ. தூரத்தில் திருப்பாற்கடல் என்ற ஓடை பாய்கிறது. அதன் கரையில், திருப்பாற்கடல் நம்பி சன்னதி இருக்கிறது.

    இந்த தலத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் ஒரு குன்று இருக்கிறது. அக்குன்றின் மேல் மலை நம்பி சன்னதி இருக்கிறது. உடையவரை குருவாக ஏற்று உபதேசம் பெற்றதால், இந்த சேத்திரத்துப் பெருமாள் வைஷ்ணவ நம்பி என்ற நாமத்தைப் பெற்றார். இந்த தலத்திலிருந்து  கி.மீ. தூரத்தில் திருப்பாற்கடல் ஆறு ஓடுகிறது. அதன் நடுவில் உள்ள திருப்பரிவட்டப் பாறையில் உடையவர் சன்னதி இருக்கிறது.

    பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருத்தலம் இது. கொடிய பாவம் செய்து, அதன் காரணமாக குழந்தை குட்டிகளோடு சொல்லவொண்ணாத் துன்பத்தை அடைந்து கொண்டிருக்கும் அனைவரும் இந்த திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு வந்து செய்ய வேண்டிய பரிகாரத்தை செய்தால் மூன்று ஜென்மமாக இருந்து வந்த தோஷங்கள் விலகி சகலவிதமான பாக்கியத்தையும் பெறுவார்கள்.
    ×