என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப்பேறு உண்டாகும். திருமண தடைகள் நீங்கும்.
    நவராத்திரியின் 9 நாட்களும் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாட்கள், காலை, மாலை, இரவு என எந்நேரத்திலும், தேவியை வழிபடலாம். அதிலும்,  இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

    ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை, 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும். நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

    நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரயின், 9 நாட்களும், தினமும் பகலில், 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

    ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டு பெண் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.

    தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை, ஏழைகளுக்கு  அளிக்க வேண்டும். நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

    நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால், அம்பாள் மனமகிழ்ந்து வருவாள். நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும். கொலு வைத்திருப்பவர்கள் ,அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால், அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.
    வாஸ்து குறிப்புக்களின் மூலம் ஒருவரின் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க முடியும். வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகளை பார்க்கலாம்.
    பலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வாஸ்து குறிப்புக்களின் மூலம் ஒருவரின் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க முடியும். இங்கு அப்படி ஒருவரின் வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்கவும். இதனால் அந்த பெட்டியானது திறக்கும் போது வடக்கு நோக்கி இருக்கும். பொதுவாக வடக்கு குபேரனின் சாம்ராஜ்யம். இந்த திசையை நோக்கி ஒவ்வொரு முறை திறக்கும் போதும், குபேரன் அப்பெட்டியில் செல்வத்தை நிரப்ப வழி செய்வாராம்.

    எப்போதும் வீட்டின் வடகிழக்கு பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். மேலும் வீட்டின் இந்த திசையில் மாடிப் படிக்கட்டுக்களை வைக்க வேண்டாம் மற்றும் மிகவும் கனமான இயந்திரங்களையும் இப்பகுதியில் வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.

    வீட்டில் உள்ள குழாயில் எப்போதும் நீர் வடிந்தவாறு இருந்தால், உடனே அதை சரிசெய்யுங்கள். இல்லாவிட்டால், அதிலிருந்து வெளியேறும் நீரைப் போல், வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறும்.

    பணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடியை வைப்பதால், பெட்டியில் உள்ள பணம், மீண்டும் பெட்டியில் பிரதிபலித்து, செல்வ நிலையை இரட்டிப்பாக்கும்.

    உங்கள் வீட்டில் இருந்து பணம் அதிகம் வெளியேறுவது போன்று நீங்கள் உணர்ந்தால், வீட்டில் தென்மேற்கு பகுதியில் கனமான பொருளை வையுங்கள்.

    வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற வண்ணத்தைப் பூசுவதன் மூலமும், வீட்டின் செல்வ நிலையை மேம்படுத்தலாம்.

    வீட்டில் நாற்காலி அல்லது சோபாவை வடக்கு நோக்கி அமருமாறு தெற்கு பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலமும் செல்வ வளம் அதிகரிக்கும்.

    நீங்கள் தங்கும் வீட்டின் முன் உயரமான கட்டிடங்களோ அல்லது கோவிலோ இருந்தால், அவை வீட்டில் உள்ள செல்வ வளத்தை குறைக்கும். ஒருவேளை அந்த உயரமான கட்டிடம் அல்லது கோவிலின் நிழல் வீட்டில் படாதவாறு இருந்தால், அந்த வீட்டில் குடியேறலாம். இல்லையெனில் அந்த வீட்டில் தங்குவதைத் தவிர்த்திடுங்கள்.

    வீட்டின் மையப் பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். எப்போதுமே வீட்டின் மையப்பகுதி ப்ரீயாக இருந்தால் தான் அந்த வீட்டில் செல்வம் கொட்டும்.

    வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை மிகவும் அழுக்குடன் இருந்தால், பின் வீட்டில் உள்ள செல்வம் பறந்து போகும்.

    வீட்டில் மீன் தொட்டியை வடகிழங்கு பகுதியில் வைப்பதன் மூலம் வீட்டின் செல்ல வளத்தை அதிகரிக்கலாம்.

    வீட்டின் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடிய நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை கடிகாரம் ஓடாமல் அப்படியே இருந்தால், வீட்டின் வருமானமும் அதிகரிக்காமல் அப்படியே இருக்கும்.

    குடும்பத் தலைவர் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
    ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றியும், உரிய பரிகாரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    அமாவாசை அன்று, ஆறு, குளம், கடல் என்று புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இப்படி நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபடாவிட்டால், நமக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டு, நம் வாழ்க்கையிலும் சரி, நம் சந்ததியினரின் வாழ்க்கையிலும் சரி பல வகையான பிரச்னைகள் தோன்றி வேதனைப்படுத்தும். எனவே, அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது மிகவும் உத்தமம். அதனால் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும். முன்னோர் வழிபாடு முறைப்படி செய்யாதவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றியும், உரிய பரிகாரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    ”இந்த உலகத்தில் நாம் வந்து பிறந்து இந்த வாழ்க்கையை அனுபவிப்பதற்கு முதற் காரணம் நம்மைப் பெற்றவர்கள்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. நம்மை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு அவர்கள் உயிரோடு இருக்கும்போதே நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சிறிதளவாவது அவர்கள் மனம் குளிரும்படி செய்திருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அதில் நாம் ஏதாவது குறையோ அல்லது தவறோ செய்து, அதற்குள் அவர்கள் அமரராகி விட்டால், அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய ‘பித்ரு கடன்’களை வருடா வருடம் நாம் தவறாமல் செய்யவேண்டியது நமது தலையாய கடமையாகும்.

    அதாவது நமக்கு 365 நாள்கள் என்பது நமது பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். எனவே, அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நாம் உணவளிக்க வேண்டும். அதாவது நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்குச் செய்யவேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்கள் இறந்த திதியில் ஒரு புரோகிதரை அழைத்து முறைப்படி செய்து நம் முன்னோர்களுக்கு பிண்டம் (உணவு) அளிக்கவேண்டும்.

    அப்படி நாம் செய்யத் தவறிவிட்டால், நம் பித்ருக்களின் மனம் வருத்தம் அடையும். அந்த வருத்தமே நமக்கு பித்ரு தோஷத்தை ஏற்படுத்துகிறது. பித்ரு தோஷம் நமக்கு மட்டுமல்லாமல், நம் சந்ததியினருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. நமக்குப் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் மூலமாக பித்ரு தோஷம் இருப்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

    இதை நாம் கவனிக்காமல் இருந்து விட்டோம் என்றால் நாம் நம் வாழ்க்கையில் அநேக துன்பங்களை சந்திக்க நேரிடும். அது தொடர்கதையாக நம் வாழ்க்கையிலும் நம் குழந்தைகளின் வாழ்க்கையிலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்போதுதான் நாம் நம் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஜோதிடரை நோக்கிப் போகிறோம். அது எந்த அமைப்பில் இருக்கும் என்பது பற்றியும் அதற்கு என்ன பரிகாரம் என்பது பற்றியும் இங்கு பார்ப்போம்.

    பரிகார கோயில்கள்

    * குருவானவர் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ, அல்லது குருவானவர் ராகு, கேது சேர்க்கை பெற்று ராசியிலும், நவாம்சத்திலும் இருந்தால் தோஷம்.

    * சூரியன், சந்திரன் செவ்வாயின் ராசி அல்லது செவ்வாயின் நவாம்ச வீட்டில் இருந்து அது பாதக ஸ்தானம் பெற்றால் தோஷம்.

    * கடகம், சிம்மம் லக்னத்துக்கு பாதக ஸ்தானம் பெற்று, அதில் கொடிய பாவி இருந்தால் பித்ரு தோஷம் வரும்.

    * சூரியன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ அல்லது சந்திரன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ பித்ரு தோஷம் தந்தை வழியிலோ, தாய் வழியிலோ ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

    * 6-ம் வீட்டுக்கு உடையவர் 9-ம் வீட்டில் இருந்தாலும் அல்லது 9-ம் வீட்டுக்கு உடையவர் 12 -ம் வீட்டில் இருந்தாலும் தந்தையும் அவரது முன்னோர்களும் மகிழ்ச்சியாக இல்லை என்பதால் பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கும்.

    * சந்திரன் 6-ம் வீட்டில் இருந்தாலும், அல்லது 6-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டாலும் தாயும் அவரது முன்னோர்களும் ஜாதகரிடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

    பரிகாரம் : அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால், அன்றைய தினம் சிராத்தம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனென்றால் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

    மேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு ‘பித்ரு பூஜை’ செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல செளபாக்யங்களும் வந்து சேரும்”.
    நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு வருபவர்கள், ஒப்பிலியப்பன் ஸ்தலத்தில் உள்ள பெருமாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைத்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
    ஆயிரம் ஆண்டுகள் கடந்து மிளிரும் அழகுடன் சுத்தானந்த விமானத்துடன் கூடிய கருவறையில் திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்ற நின்ற திருக்கோலத்துடன் கிழக்கு திசை நோக்கி சுமார் 9 அடி உயரத்தில் ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) எழுந்தருளியிருக்கிறார். திருவிண்ணகரம் என அழைக்கப்பட்ட இத்தலத்தினை இன்றைய காலக் கட்டத்தில் பக்தர்கள் தென்னக திருப்பதி என்றும் உப்பிலியப்பன் கோயில் என்றும் அழைக்கின்றார்கள்.

    இத்தலத்திலுள்ள பூமி நாச்சியார் சமேத உப்பலியப்பனை பசு நெய் தீபம் இட்டு துளசி பத்திரம் கொண்டு வழிபட வாழ்வில் வளமும், நலமும் நிறையும் என்பது ஐதீகம்.

    திருப்பதி போக இயலாதவர்கள் இங்கு வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப் பெற்ற திருத்தலம் இது.

    இத்தலம் சிறந்த பிரார்த்தனைத் தலமாகப் போற்றப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு வருபவர்கள், இத்தலத்தில் பெருமாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைத்தால் விரைவில் திருமணம் நடைபெறும். மேலும் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பம், தொழில் செழிக்க இத்தலத்தில் ஏற்றப்படும் கோடி தீப விளக்குக்கு இயன்ற உதவி செய்தால் பயன்கிடைக்கும் என்று நம்புகிறார்கள். 
    திருக்கோளூர் ஸ்தலத்து வைத்தமாநிதி பெருமாளை நேரிடையாக சந்தித்து மனமுருகி பிரார்த்தனை செய்தால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பலன் உண்டாகும்.
    திருநெல்வேலி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் திருநெல்வேலியிலிருந்து 37-வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள பால்குளத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் நடந்தால் வருவது திருக்கோளூர். இங்குதான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் வைத்தமாநிதி பெருமாள்.

    இக்கோவில் கிழக்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது. குபேரன் பார்வதியை கடை கண்ணால் பார்த்ததால் சாபத்திற்குள்ளாகி, பின்பு சிவனால் பரிகாரம் பெற்று வைத்தமாநிதியை வழிபட்டார் என்று வரலாறு உண்டு. ஒவ்வொரு மாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் சுவாதி நட்சத்திரத்தன்று குளித்து, பெருமாளை முழுமனதுடன் வேண்டினால் இழந்த சொத்துக்கள், தோஷ நிவர்த்திகள் விலகும் என்பது ஐதீகம். இந்த நட்சத்திர நாளில்தான் குபேரன் திருப்பதிக்கு கடன் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

    அனைத்து மாதங்களிலும் செவ்வாய் மற்றும் சனி கிழமைகளில் நீராஞ்சனம் எனும் விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த விளக்கானது அரிசி, தேங்காய் மற்றும் நெய் ஆகிய 3-ம் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும்.

    இவ்வாறாக 3 வாரம் தொடர்ந்து ஏற்றினால் வேண்டிய வரங்கள் கிடைப்பதால் அனைத்து பக்தர்களும் அதனை திரளாக செய்து வருகின்றனர். கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும், மணமுடித்தவர்கள் குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் அமைதி நிலவவும், சொத்துக்கள் அதிக அளவில் கிடைக்கவும் வேண்டி இவ்வாறாக விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.

    மதுரகவி யாழ்வாரின் அவதார தலமிது. தர்மம் நித்தியவாசம் செய்யும் புனித பூமி இது. நம்மாழ்வாரின் பாசுரங்கள், இதன் மகிமையை பறைசாற்றுகின்றன.
    ஒரு தடவை குபேரன் பார்வதி தேவியிடம் மரியாதை இல்லாமல் நடக்க, பார்வதி தேவி குபேரனை சபித்துவிட்டார். இதனால் குபேரனை சுற்றி சூழ்ந்து கொண்டிருந்த எல்லாவகை செல்வங்களும் அவனை விட்டு விலகிவிட்டன. உடனே குபேரன் இந்த கோளூருக்கு வந்து திருமாலின் கருணைக்காக நீண்ட நாட்களாக தவம் புரிந்தான்.

    பகவானும் பார்வதி தேவியின் சாபத்தை போக்கி நவநிதிகளை மீண்டும் குபேரனுடன் இணைய வைத்தார். தர்மதேவதை இங்கு தங்கி தினமும் திருமாலை வழிபட்டு கொண்டிருந்தாள். இதனை கெடுப்பதற்காகவே அதர்மம் இங்கு வந்து வலிய சண்டை போட்டது. இதில் அதர்மம் தோல்வியடைந்து ஓடிவிட்டதால் இந்த தலத்திற்கு அதர்ம பிசுனம் என்று ஒரு பெயரும் உண்டு. இங்கு பொருளை இழந்தவர்கள் வேண்டினால் மீண்டும் அப்பொருளை பெறும் வகையில் அருளியதால் இது ஒரு பிரார்த்தனை தலமாக உள்ளது. இது அங்காரக கிரக தலமாக போற்றப்படுகிறது.

    நல்லவர்களின் கோபத்திற்கு ஆளாகி மனக்கஷ்டம் படுபவர்களும் இந்த தலத்து வைத்தமாநிதி பெருமாளை நேரிடையாக சந்தித்து மனமுருகி பிரார்த்தனை செய்தால் வறுமை இருக்காது. காரியத்தடைகள் விலகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பலன் உண்டாகும். 
    இறந்தவர்களின் திதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்களும் புரட்டாசி மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம்.
    ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒரு ராசிக்குள் பிரவேசிக்கிறார். ராசி சக்கரத்தின் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது. நம்முடைய மறைந்த முன்னோர்கள், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், பித்ருக்கள் விடுதலையாகி தங்கள் உறவுகளை நாடி வீடுகளுக்கு வருகின்றனர்.

    புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவார்கள். இதையே, ‘மகாளய பட்சம்’ என்பர். ‘பட்சம்’ என்றால், ‘15 நாட்கள்’ எனப் பொருள். ‘மகாளயம்’ என்றால் ‘கூட்டமாக வருதல்’ என்று அர்த்தம். மறைந்த முன்னோர்கள் மொத்தமாக கூடும் காலமான 15 நாட்களையே ‘மகாளய பட்சம்’ என்கிறோம். (சில சமயங்களில் 16 நாளாக மாறுபடும்).

    இந்த கால கட்டங்களில் முன்னோர்களை வழிபட்டால், சகல பாவங்களிலும் இருந்து விமோசனம் கிடைக்கும். அதன் காரணமாகவும் இதற்கு மகா- ளயம் என்று பெயர். இறந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைந்து இறைவனை அடைந்து பிறவா நிலையை அடையச் செய்வது அவர்களின் வாரிசுகளுடைய கடமை. எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பிறவா நிலையை அடைய வேண்டும் என்பதே ஒவ்வொரு ஆத்மாவின் நோக்கமாக இருக்கும். பூமியில் வாழும் அனைவரும் ஜாதி, மத வேறுபாடு இன்றி அவர்களுடைய முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய தங்களால் இயன்ற முன்னோர் வழிபாட்டை செய்ய வேண்டும்.

    முறையான முன்னோர் வழிபாடே இறந்தவர்களின் ஆத்மாவை பிறவா நிலைக்கு அழைத்து செல்லும். வாரிசுகளின் உதவியின்றி ஆத்மா சாந்தியடைவது எளிதல்ல. ஒரு ஆத்மாவை சாந்தியடையச் செய்ய உதவுபவர்களுக்கே புண்ணிய பலன் மிகும். ஒருவர் சிரமம் இன்றி வாழ்கிறார் என்றால் முன்னோர் வழிபாட்டை முறையாக செய்பவர் என பொருள். அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும்.

    அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும். அவற்றை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    ‘தர்ப்பணம்’ என்ற சொல்லுக்கு ‘திருப்திப்படுத்துதல்’ என்று பொருள். பித்ருக்கள் தர்ப்பணம் செய்யும் போது தர்ப்பையின் மேல் விடும் எள்ளும், அரிசியும், நீரும் பல நாட்கள் உட்கொள்ளக் கூடிய உணவாகும். அதனால் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்.

    முன்னோர்களின் பசி, தாகத்தை தீர்க்கக் கூடிய புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாளை (சனிக்கிழமை) வருகிறது. அன்று அமாவாசை தர்பணங்களை செய்ய வேண்டும். எல்லா கிழமைகளிலும் வரும் அமாவாசையை விட சனிக்கிழமைகளில் வரும் அமாவாசை தர்ப்பணத்திற்கு வலிமை அதிகம்.

    தர்ப்பணத்தின் மூலம் பசி தாகத்தை தீர்க்காதவர்களை, முன்னோர்களின் ஆன்மா சாபம் இட்டுச் செல்லும். இது வருடக்கணக்கில், தலைமுறையாக தொடரும்போது ஜாதகத்தில் கடுமையான தோஷமாக பிரதிபலிக்கும்.

    அது குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும். இதனால் குடும்பத்தில் அகால மரணங்கள், மனக்கோளாறுகள், கணவன் - மனைவி பிரிவு, குழந்தை இல்லாமை, வறுமை, திருமணத் தடை ஏற்படுத்தும்.

    கடுமையான பித்ரு தோஷத்தை தில ஹோமம், தர்ப்பணம், அன்னதானம் செய்வதால் மட்டுமே தீா்க்க முடியும். ஒவ்வொரு மாதம் அமாவாசை வழிபாடு, அன்னதானம் செய்ய முடியாதவா்கள் புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளுக்கு அன்னதானம், தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும். இறந்தவர்களின் திதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்களும் புரட்டாசி மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம்.

    எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள், ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். புண்ணியத் தலங்களில் கடலில் அல்லது நதியில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்யலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை, வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்தமாகத் தெளித்தால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

    ஆண் வாரிசு இன்றி பெற்றோருக்கு திதி கொடுக்க முடியாத பெண்கள், அருகில் உள்ள சிவன் கோவிலில் மோட்ச தீபம் இட்டு ஆத்ம சாந்திக்கு வழிபாடு செய்யலாம். தர்ப்பணத்தின் போது மூன்று தலை முறை முன்னோர்களின் பெயரை சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். இறந்த முன்னோர்களில் பெற்றோர்கள் வசுக்களாகவும், தாத்தா - பாட்டி (பெற்றோர்களின் பெற்றோர்கள்) ருத்திரர்களாகவும், கொள்ளு தாத்தா, கொள்ளு பாட்டி (தாத்தாவின் பெற்றோர்கள்) ஆதித்யர்களாகவும் இருப்பார்கள். அதனால் அவர்கள் வசு, ருத்ர, ஆதித்ய ரூபத்தில் வழிபட்டு பித்ரு பூஜை செய்ய வேண்டும்.

    தந்தை வழி மூதாதையர் 6 பேர், தாய் வழி மூதாதையர் 6 பேர் என மொத்தம் 12 பேருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    பித்ரு வர்க்கம் என்பது ஆண்கள் வழியில் தந்தை, தாத்தா (தந்தையின் தந்தை), தாத்தாவின் தந்தை. பெண்கள் வழியில் தாயார், தந்தையின் தாயார், கொள்ளுபாட்டி (தந்தையின் பாட்டி). மாத்ரு வர்க்கம் என்பது ஆண்கள் வழியில் தாத்தா (தாயின் தந்தை), தாயின் தந்தையின் தந்தை, தாயின் தாத்தாவின் தந்தை. பெண்கள் வழியில் பாட்டி (தாயின் தாயார்), தாயின் பாட்டி, தாயின் கொள்ளுப் பாட்டி ஆகியோர்.

    இவர்கள் 12 பேர் தவிர, சாந்தியடைய சிரமப்படும் ஆத்மாக்களான மனைவி, மகன் மற்றும் மகள் (18 வயதிற்கு மேல்), தாயின் சகோதர-சகோதரிகள் (அத்தை, பெரியப்பா, சித்தப்பா), தந்தையின் சசோதரரின் மனைவி (பெரியம்மா, சின்னம்மா), உடன்பிறந்த சகோதர- சகோதரிகள் (அண்ணன், தம்பி, அக்கா, தங்கை), தாயின் சகோதர-சகோதரிகள் (மாமா, பெரியம்மா, சித்தி), தந்தை, தாத்த போன்றவர்களின் மூத்த, இளைய தார மனைவிகள் ஆகியோரது ஆத்மாவும் சாந்தியடைய உதவி செய்யும் விதமாக தர்ப்பணம் செய்வது ஒருவரின் கடமையாகும். பாவங்களில் பெரிய பாவம், பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்ய வேண்டும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி.
    நம் வீட்டிற்கு வரும் பொறாமை எண்ணம் கொண்டவர்களின் திருஷ்டியை விரட்டியடிக்க கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்து பயன் பெறலாம்.
    அன்று முதல் வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்படும். பண விரயம் ஏற்படும். பொருட்கள் வைத்த இடம்  தெரியாமல் போகும். சில பொருட்கள் உடைந்து போகும். கால்கள் இடறி காயங்கள் ஏற்படும். இத்தகைய பொறாமை எண்ணம் கொண்டவர்களின் திருஷ்டியை விரட்டியடிக்க கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்து பயன் பெறலாம். திருஷ்டி பொம்மை மாட்டுவதால் மட்டும் பரிகாரம் கிடைக்காது.
     
    இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும். ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது  கண்பார்வை திருஷ்டி எனப்படும்.
     
    * குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோசம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு,உப்பு,மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து  கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும். இது கண்  திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்.
     
    * எப்படிபட்டவர் வீட்டிற்குள் வந்து சென்றாலும் சுகம் கொடுக்க கூடியது சீரகம் என்று சித்தர்கள் வழிகாட்டி சென்று உள்ளார்கள். எனவே ஒவ்வொருவர் வீட்டிலும் விருந்து நடைபெறும் காலங்களில் கருப்பட்டி கலந்த சீரக பானகம் தயாரித்து வீட்டிற்கு  வந்தவர்களுக்கு கொடுத்தால் விஷப் பார்வை உள்ளவர்களின் திருஷ்டி தோஷம் விலகும்.
     
    * திருஷ்டி தோஷம் விட்டினுள் அதிகமாக இருந்தால், அல்லது மந்து கஷ்டமாக இருந்தாலும் இந்த சீரகமும், கருப்பட்டியும்  லகந்த பானகம் தயாரித்து அதனை உங்கள் பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு எடுத்து சென்று அங்கு உள்ள பக்தர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கும் கொடுக்க, திருஷ்டி தோஷம் விலகும். இரண்டு விட்டர் அளவு பானகம் போதுமானது.
     
    குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அன்பிற்பிரியாள் அம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
    குழந்தைப்பேறு இல்லாமல் இருக்கும் தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு வழங்கும் கோவிலாகத் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகிலுள்ள பூளவாடி எனுமிடத்தில் அமைந்திருக்கும் அன்பிற்பிரியாள் அம்மன் கோவில் இருந்து வருகிறது.

    சிவபெருமானின் அன்பில் பிரியாது இருக்கும் பார்வதிதேவி, தன் பக்தர்களிடமும் அன்பு கொண்டு அவர்கள் வேண்டியதை வழங்குவாள் எனும் கருத்தில், இக்கோவிலின் இறைவி, ‘அன்பிற்பிரியாள்’ என்று அழைக்கப்படுகிறார்.

    குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கை. இதே போல் தாங்கள் செய்து வரும் வணிகம் பெருகி வாழ்வில் வளமடைய வேண்டியும் பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    திருஞானசம்பந்தர் திருவிடை மருதூர் கோவிலுக்கு வந்த போது, வழியெங்கும் லிங்கமாக இருந்ததால், அவர் அங்கே கால் வைக்க அஞ்சி நின்றார். அதனைக் கண்ட இறைவன், திருஞானசம்பந்தரை அழைத்து வரும்படி இறைவியிடம் சொன்னார். அவரும் திருஞானசம்பந்தரைக் குழந்தை போல், தனது இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்தார். இந்த அம்பிகை, இறைவனுடன் கயிலாயத்தின் மீது காட்சி தருகிறாள். இவளை ‘அன்பிற் பெரியாள்’ என்று அழைக்கின்றனர். குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் இந்த அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் பூளவாடி உள்ளது. திருப்பூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, தாராபுரம் நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
    சப்த கன்னிகளை நாம் வழிபடும் போது நோய்நொடி இல்லாத சிறந்த ஆரோக்கியமான வாழ்வை பெறலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சப்த கன்னிகளை நாம் வழிபடும் போது நோய்நொடி இல்லாத சிறந்த ஆரோக்கியமான வாழ்வை பெறலாம். பழமையான சிவாலயங்களில் கர்ப்பகிரகத்தை ஒட்டி முதல் பிரகாரத்தின் உள்ள தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு முன்பாக சப்த கன்னியர்களை நாம் காணமுடியும்.

    பிராமி இவர் நான்முகனான பிரம்மன் அம்சமாக தோன்றியவர். அரசுப் பணிகளுக்காக முயற்சி செய்பவர்கள் தினமும் காயத்திரி மந்திரத்தை கூறி வருவதன் மூலம் கண்டிப்பாக அவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். காயத்திரி மந்திரத்தை படிக்கும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    மகேஸ்வரி மகேசனின் சக்தி உடையவர், இவரை வழிபடுவதனால் கோபங்கள் நீங்கி அமைதியான வாழ்வு கிடைக்கும்.

    வராகி சிவன், சக்தி, ஹரி என மூன்று அம்சங்களை பெற்றவர். பன்றியினவராகியை குறிப்பிடும் போது வாழ்வில் சிக்கல்கள் தடைகள் தீராத பகைகள் விலகிவிடும். விஷ்ணுவின் அம்சமாகும் வளமான வாழ்க்கை சகல பாக்கியங்கள் செல்வ என அனைத்தையும் வைஷ்ணவி தேவியை வணங்குவதால் கிடைக்கும். திருமணம் ஆகாத ஆண்கள் வழிபட்டால் நல்ல வாழ்க்கை துணைவி சிறந்த மனைவியாக கிடைப்பாள்.

    கல்யாணம் ஆகாத பெண்கள் இந்திராணியை மூலம் மிகச் சிறந்த கணவனைப் பெறமுடியும். முருகனின் அம்சமே கவுமாரி எனப்படுகின்றது இவரை வழிபடுவதன் மூலம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் அதே போல் முருகனின் அழகோடு இவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும் ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளி தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக காட்சி தருகிறார்.

    இந்த சாமுண்டி தேவியானவள் சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் சாமுண்டி தேவியை வழிபடுவது மூலம் எதிரிகளின் தொல்லை நீங்கி நமக்கு தேவையான செல்வம் சுகங்கள் நமக்கு கிடைக்கும். இவர்களே சப்த கன்னிகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
    தோஷத்தை கண்டு பயப்படாமல், அதனுடன் சேர்ந்து பயணிப்பதே நம் வாழ்வைச் சிறப்பாக்கும். தோஷங்களுக்காக செய்யும் பரிகாரங்கள் பலன் தருமா என்பதை அறிந்து கொள்ளலாம்.
    தோஷம் என்பது தோஷம்தான். ஆனால் இந்தத் தோஷத்தில் இருந்து முற்றிலுமாக விலகிவிடலாம் என்று சொல்கிற, செய்யச் சொல்கிற பரிகாரங்களால் ஏதும் நிகழப்போவதில்லை என்பதை உணருங்கள்.

    மிகப்பெரிய ஹோமங்களோ பரிகாரங்களோ செய்துதான் தோஷ நிவர்த்தியாகவேண்டும் என்றில்லை. எல்லாப் பரிகாரங்களும் பூஜைகளும் தோஷங்களின் தாக்கத்தைக் குறைக்க உதவும் என்பதே உண்மை.

    இரண்டே இரண்டு விஷயங்கள். இதுவே பரிகாரங்கள். முதலாவது, தினமும் வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் ஒரு பத்து நிமிடமேனும் அமர்ந்து ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள்.

    சொல்லப்போனால், ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து வழிபடுகிற சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பாக்கெட்டில் உள்ள பணம் குறையும் போது, ஏடிஎம் சென்று பணம் எடுத்து, பர்ஸில் வைத்துக் கொள்கிறோம் தானே. அதேபோல், வழிபாடுகளும் தரிசனங்களும் பிரார்த்தனைகளும் தோஷங்களின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்துவிடும் சேமிப்பே பிரார்த்தனை, வழிபாடு என்பதை மறக்காதீர்கள்.

    எனவே ராகு கேதுவைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்கள்தான் நம் மூச்சுக் காற்று என உணர்ந்தால், எல்லாம் நன்மையே... எல்லாம் நன்மைக்கே என்று கூறி, வழிபாடு செய்யுங்கள்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விட்டிலாபுரம் பாண்டுரங்கன் கோவிலில் திருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள்.
    பழமையும், புதுமையும் இணைந்தது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விட்டிலாபுரம் பாண்டுரங்கர் ஆலயம். வடநாட்டில் பண்டரிபுரம் இருப்பது போல, இங்கு ‘தென் பண்டரிபுரம்’ என்று அழைக்கப்படுவதுதான் இந்த விட்டிலாபுரம். வட பண்டரிபுரத்திற்குச் சென்று நிறைவேற்ற முடியாத காரியங்களை, இந்த ஆலயத்தில் செய்து பலன் பெறலாம்.

    வட பண்டரிபுரம் செல்ல முடியாதவர்கள், இங்கு வந்து வழிபட்டாலேயே அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும். இங்குள்ள மூலவர் ‘பாண்டுரங்க விட்டலர்’ என்ற திருநாமத்துடன் கிழக்குத் திசை நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.

    இங்கு இறைவனுக்கு படைக்கப்படும் திரட்டுப்பால், பால்பாயசம் மிக விசேஷம். திருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் இக்கோவிலில் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள். கல்வி -கேள்விகளில் குழந்தைகள் சிறந்து விளங்க சில பக்தர்கள் பால்பாயசம் அளித்தும் வழிபடுகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் மன்னன் வேண்டுகோளை ஏற்று, தன் திவ்ய சொரூபத்துடன் அர்ச்சாவதாரம் கொண்டு எழுந்தருளியுள்ள திருமால், கிருதயுகத்தில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்டவர் என்று சொல்கிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் விட்டிலாபுரம் கிராமம் உள்ளது. திருநெல்வேலி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் செய்துங்கநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து டவுண் பஸ் வசதியும் உள்ளது.
    சின்ன சின்ன மனக்கசப்புகளால் பிரியும் உறவுகளை மீண்டும் எளிய பரிகாரங்கள் மூலமாகவே மீண்டும் சேர்க்கலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒருவர் வளரும் சூழலே அவரது முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எப்படி எல்லாம் வளர்ந்தோமோ அப்படி எல்லாம் நம் பிள்ளைகள் வளர முடியவில்லையே என்ற ஆதங்கம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. நாம் வளர்ந்த சூழலே கூட்டு குடும்ப சூழல். ஆனால் இன்று கணவனும் மனைவியும் இணைந்து வாழ்ந்தாலே கூட்டு குடும்பம் என்று சொல்லும் அளவுக்கு நம் பாரம்பரியமான கூட்டு குடும்ப அமைப்பை இழந்து இருக்கிறோம்.

    இன்றைய காலசூழலில் பல குடும்பங்களில் நிம்மதி இல்லாமல் போக காரணம் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்கள் தான். சின்ன சின்ன மனக்கசப்புகள் கூட மிகப்பெரிய பிளவுகளை உண்டாக்கி விடுகிறது. அப்படி பிரிந்துபோன உறவுகளை ஆன்மீகம் மூலம் மீண்டும் சேர்க்க முடியும். ஆன்மீகம் என்பதே அன்பை அடிப்படையாக கொண்டது தான். அந்த ஆன்மீகத்துக்கு அன்பை உணர்த்தி உறவுகளை இணைக்கும் வலிமை உண்டு.

    பிரிந்த உறவுகளை ஆன்மீகம் மூலம் இணைப்பது பற்றி இந்த வாரம் பார்க்கலாம். பிரிந்த உறவுகளை சின்ன சின்ன பரிகாரங்கள் மூலமாகவே மீண்டும் சேர்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் அதிகமாக கணவன் - மனைவி உறவில் தான் பிளவு ஏற்படுகிறது. கணவன் மனைவி தாம்பத்யம் என்பது தான் குடும்பத்துக்கு அடிப்படை. மற்ற எந்த உறவுகளாக இருந்தாலும் விட்டுவிட்டு வாழ்ந்து விடலாம். ஆனால் இணையாகவும் துணையாகவும் இருக்க வேண்டிய தம்பதிகளே பிரிந்தால் இருவருக்குமே அது இழப்பு தான்.

    மனதுக்குள் பாசமும் பிரியமும் இருந்தாலும் சில சமயங்களில் சூழ்நிலையால் கூட நமது உறவுகளை பிரிந்து இருக்கிறோம். அவர்களுடன் மீண்டும் சேர்ந்து விட மாட்டோமா என்று ஏங்குகிறோம். பிரிந்த உறவுகளில் யாராவது ஒருவராவது மீண்டும் சேர்ந்து விட மாட்டோமா என்று நினைப்பார்கள். இன்னொருவர் ஒருவேளை பகைமை பாராட்டலாம். இல்லை சேரும் எண்ணம் இருந்தாலும் தயக்கம் தடுக்கலாம். ரத்த பந்தங்களுக்குள் இருக்க கூடிய பாசப்பிரிவினைகள் யாராவது மூன்றாவது நபரால் தான் ஏற்பட்டு இருக்கும்.

    அந்த மூன்றாவது நபருக்கு இவர்களது ஒற்றுமை கண்களை உறுத்தி இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் திட்டமிட்டு பிரித்து இருக்கலாம். சிலர் இதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். இன்று நிறைய குடும்பங்கள் சிதறி கிடக்கின்றன. தாய் - தந்தை, தாய் - மகன், தாய் - மகள், சம்பந்தி, மாமியார் - மருமகள், மாமனார் - மருமகன், அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை உள்பட அனைத்து உறவுகளிலுமே பிரிவுகள் ஏற்படுகின்றன. இதற்கான காரணத்தை பொறுமையாக யோசித்து பார்த்தால் மிக சிறிய காரணமாக தான் இருக்கும்.

    அந்த காலத்தில் குடும்பங்களில் இருக்கும் பெரியவர்கள் இப்படி பிரிந்த உறவுகளை சேர்த்து வைக்கும் பணியை மேற்கொள்வார்கள். குடும்பத்தில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதோடு அவர்களது சொல்லுக்கு மதிப்பு கொடுத்து கட்டுப்பட்ட காலம் அது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் பெரியவர்கள் இருப்பது இல்லை. தனி குடும்பமாக தான் வசிக்கிறோம்.

    அப்படியே ஒன்று இரண்டு குடும்பங்களில் பெரியவர்கள் இருந்தாலும் அவர்களது பேச்சுக்கு நாம் செவி கொடுப்பது இல்லை. நமக்குள் ஏற்படும் சின்ன சின்ன மனக்கசப்புகளை தீர்க்க பெரியவர்கள் முயற்சித்தாலும் மனிதர்களுக்குள் இருக்கும் ஈகோ குணம் மீண்டும் இணைவதை தடுத்துவிடுகிறது. பழைய விஷயங்களை கிளறி பார்த்து பகைமையை வளர்த்துக் கொள்கிறார்கள்.

    மனித வாழ்க்கை என்பது அந்த காலத்தில் 100, 120 ஆண்டுகள் கூட வாழ்ந்து இருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனிதனின் அதிகபட்ச ஆயுளே 70 ஆண்டுகளுக்குள் தான். 70 வயது தொடுவதையே ஆச்சர்யமாக பார்க்கிறோம். மிக சிலரே 80,90 வயது வரை வாழ்கிறார்கள். இந்த யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது குறுகிக்கொண்டே செல்கிறது.

    இந்த சின்ன வாழ்க்கையை அன்புடன் வாழ்வதை விட்டு ஏன் பகையை வளர்க்கிறோம்? இந்த வாழ்க்கையை முடித்து விட்டு செல்லும்போது எதையுமே எடுத்து செல்வது கிடையாது. அப்படி இருக்கும்போது ஏன் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ள வாய்ப்பு தராமல் சுயநலமாக வாழ வேண்டும்? இதை சில நிமிடங்கள் யோசித்தாலே போதும். சில இடங்களில் திருமணம் வரை இருக்கும் ஒற்றுமை திருமணத்துக்கு பின்னர் இருப்பது இல்லை. இப்படி நெருங்கிய உறவுகளில் ஏற்படும் ஏதாவது ஒரு உறவையாவது நிச்சயம் பாதிக்கும். மன நிம்மதியை குலைக்கும்

    பரிகாரம்

    சின்ன சின்ன மனக்கசப்புகளால் பிரியும் உறவுகளை மீண்டும் சேர்ப்பதற்கான பரிகாரத்தை பார்க்கலாம். இந்த பரிகாரம் குறிப்பிட்ட உறவுக்கு தான் என்று கிடையாது. கணவன் - மனைவி முதல் அனைத்து வித உறவுகளுக்குமே செய்யலாம். இது மிகவும் எளிய பரிகாரம்.

    ஏழு கிராம்புகளை எடுத்துக்கொள்ளவும். அந்த கிராம்புகள் சிதைக்கப்பட்டு இருக்கவோ, உடைக்கப்பட்டு இருக்கவோ கூடாது. கிராம்புகள் முழுதாக பூவுடன் இருக்க வேண்டும். ஞாயிறு அன்று இந்த பரிகாரத்தை தொடங்கவேண்டும். ஒரு முழு கிராம்பை எடுத்து கையில் வைத்துக்கொண்டு சுவாமி அறையில் ஒரு ஆசனம் விரித்து அமர்ந்துகொள்ளவும். கிராம்பை கையில் வைத்துக்கொண்டு எந்த உறவு மீண்டும் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த உறவின் பெயரை சொல்லவும். விளக்கை ஏற்றி வைத்து பூஜை செய்யவும். உறவின் பெயரை 21 முறை சொல்லவும். அவர்கள் மீண்டும் பழையபடி சேரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

    அடுத்து அந்த கிராம்பை அடுப்பில் காட்டியோ அல்லது சாம்பிராணி போடும் தூவகாலில் வைத்தோ சுட்டுவிட வேண்டும். நன்றாக எரியவிட வேண்டும். இது முதல் ஞாயிறு அன்று செய்ய வேண்டியது. அடுத்த ஞாயிறு அன்று இன்னொரு கிராம்பை எடுத்து இதேபோல் செய்யவும். தொடர்ந்து 7 வாரங்கள் இதை செய்யவேண்டும். இதை செய்யும்போது பெண்களுக்கு மாதவிடாய் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் அந்த ஒரு வாரம் மட்டும் நிறுத்தி வைத்துவிட்டு அடுத்த வாரம் முதல் தொடர்ந்து செய்யலாம். கணக்கு விடுபட்டதாக கருதவேண்டாம்.

    கிராம்புக்கு உறவுகளை சேர்த்து வைக்கும் வலிமை உண்டு. பழங்குடி மக்கள் இந்த பரிகார முறையை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். வட நாட்டிலும் இந்த பரிகார முறை வழக்கத்தில் இருக்கிறது. பழங்குடி மக்கள் என்பவர்களே நம் முன்னோர்கள் தானே... சில மாநிலங்களில் இந்த கிராம்பு பரிகாரத்தை அனுமனுக்கான பூஜையாக செய்கிறார்கள். இது நம் பெரியோர்கள் கண்கூடாக கண்ட உண்மை. நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கை தான் ஆன்மீகம். எனவே விரைவிலேயே உங்களது பிரிந்த உறவுகள் மீண்டும் சேர்வார்கள். 
    ×