
தட்சன்யாகத்தில் விழுந்து உயிரை மாய்த்த அம்பிகை உடலை எடுத்து சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடிய போது, அம்பாளின் உடல் பாகங்கள் சிதறி விழுந்த இடங்கள்தான் சக்தி பீடங்களாக மாறின. அதை உணர்த்தும் வகையில் சக்தி பீடங்களில், அம்பாளின் எந்த பாகம் விழுந்தது என்ற வரலாறு இருக்கும்.
அந்த வகையில் திருவதிகை தலத்தில் அம்பிகையின் தொடைப்பகுதி விழுந்ததாக சொல்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் வகையில் இத்தலத்து அம்பிகையான பெரியநாயகி இடது தொடையில் கை வைத்தப்படி நின்ற கோலத்தில் இருப்பதை காணலாம்.
வீராட்டனேசுவரருக்கு வலது பக்கத்தில் அம்பாளுக்கு தனி ஆலயம் உள்ளது. இங்கு பெரிய நாயகிக்கு திரிபுர சுந்தரி என்ற பெயரும் உண்டு. கிழக்கு நோக்கி சுமார் 8 அடி உயரத்தில் அம்பாள் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். அவளது நான்று கரங்களில் ஒரு கரத்தில் நீலோற்பவம், மற்றொரு கையில் தாமரை வைத்துள்ளார்.
கீழ்பக்க கரங்களில் ஒன்று அபயமாகவும், மற்றொரு கை தொடை மீது வைத்தபடியும் உள்ளது. ஆலய அர்ச்சகர் சீனிவாச குருக்கள் அந்த காட்சியை காண்பித்த போது உண்மையிலேயே சிலிர்ப்பு ஏற்பட்டது. அந்த அளவுக்கு பெரிய நாயகி மிக, மிக சக்தி வாய்ந்தவளாகத் திகழ்கிறாள்.
அம்பிகை முன்பு தரையில் ஸ்ரீசக்கரம்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சக்கரம் சமீபத்தில் நிறுவப்பட்டதாகும். ஸ்ரீசக்கரத்தில் அம்பிகை உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே பெரியநாயகிக்கு வழிபாடு நடத்தப்படும் போது இந்த ஸ்ரீசக்கரத்தில் குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கேட்கும் வரத்தை தருபவளாக இத்தாய் போற்றப்படுகிறாள். அதனால் தான் இந்த அம்பிகைக்கு அபயாம் பிகை, வரதாம்பிகை என்றும் பெயர்கள் உள்ளது.
திருமணம் ஆகாதவர்கள் ஒரு கிலோ மஞ்சள் வாங்கி அரைத்து அபிஷேகம் செய்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்தால் விரைவில் மனதுக்கு ஏற்றப்படி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இது தவிர இந்த பெரியநாயகி அம்மனுக்கு மிகப்பெரிய மாலையை காலடி வரை தொங்க விட்டு வழிபடும் பழக்கமும் உள்ளது. இந்த மாலை வழிபாட்டுக்கு நிலை மாலை என்று பெயர்.
ஆடி மாதம் பெரிய நாயகிக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகிறது. தனி கொடி மரம், பலி பீடத்துடன் இத்தலத்தில் ஆட்சி நடத்தும் அம்பிக்கையை மனம் குளிர வழிபட்டால், மனம் போல் வாழ்வு அமையும்.
திரிபுரசுந்தரி அம்மன் ஆலயத்தில் நின்று அம்பிகையை எவ்வளவு நேரம் நின்று தரிசனம் செய்தாலும், திரும்பிச் செல்ல மனவே வராது. அவ்வளவு அழகும், அமைதியும் இந்த அம்மனிடம் குடி கொண்டுள்ளது. அடுத்தத் தடவை இந்த தலத்துக்கு செல்லும் போது இந்த உண்மையை நீங்களே அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.