என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    • ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது.
    • நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    நாகம்மன் கோவிலில் நாகசதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நாகதோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

    நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்துவரும் முக்கியமான வழிபாடு. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் `நாக சதுர்த்தி'. சதுர்த்தியன்று விரதம் இருந்து, துள்ளுமாவு படைத்து வேண்டிக்கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம்.

    கருட பஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே 'நாக சதுர்த்தி' தினமாகும். பொதுவாக, ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியோடு முடிவடையும். இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாக சதுர்த்தி தினமாகும். அவற்றில் முக்கியமானது சஷ்டி விரதத்தோடு அனுஷ்டிக்கப்படும் ஐப்பசி மாத நாக சதுர்த்தி.

    பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும், ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது. ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.

    நாக சதுர்த்தியின்போது நாகத்தைப் பிரதிஷ்டை செய்து புற்றில் மஞ்சள் பொடி வைத்து நாகத்தை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

    • மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் இந்த கரூர் மாரித்தாய்.
    • அம்மனை வழிபட்டால் தீராத நோய்களை தீர்த்து வைப்பாள் என்றே கூறுவார்கள்.

    மருத்துவம் மற்றும் அதிநவீன சிகிச்சை முறைகள் இன்று சிகரம் தொட்ட சாதனைகள் பலவற்றை படைத்தாலும் அன்றைய கால கட்டத்தில் ஆன்மீக நம்பிக்கைதான் அருமருந்தாக இருந்ததை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இன்றைய கொரோனாவைப்போல், அன்றைய காலரா, அம்மை நோய்கள் மக்களை பாடாய்படுத்தியது.

    எப்படி வாழ்க்கையை வாழ போகிறோம் என்ற அச்ச உணர்வை அன்றைக்கே காண்பித்துவிட்டு சென்றது. ஆனாலும் அயராத பக்தி, தீராத நம்பிக்கை போன்றவையே எப்பேற்பட்ட உயிர்க்கொல்லி நோய்களையும் விரட்டி அடித்தது. அம்மனை வழிபட்டால் தீராத நோய் உள்ளிட்ட வினைகளையும் தீர்த்து வைப்பாள் என்றே கூறுவார்கள்.

    அதுபோல அம்மை முதலான நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற்போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு கரூரில் வீற்றிருக்கும் மாரியம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.

    மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்த கரூர் மாரித்தாய் இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஏழை, எளியோரும் கண்ணீருடன் கரூர் மாரியம்மனை மனதுருகி வேண்டினால் மனமிறங்காமல் இந்த மாரித்தாய் இருக்க மாட்டாள் என்பது பக்தர்களின் மனதில் கல்வெட்டாய் பதிந்துள்ளது.

    • கலியுக்தில் கண்கண்ட தெய்வமாக ஆஞ்சநேயர் திகழ்கிறார்.
    • ஆஞ்சநேயரின் சிறப்புகளை கூறும் சுந்தர காண்டம் படியுங்கள்.

    சில ஆலயங்களில் மூலவரை விட சன்னதியில் உள்ள இறைவன் மக்களிடம் அதிகப்படியான வழிபாடுகளை பெறுபவராக இருப்பார். அதற்குகாரணம் அந்த இறைமூர்த்தம் பக்தர்கள் வேண்டுவதை எல்லாம் வழங்கும் அருள்கடலாகத் திகழ்வார்.

    அந்த சன்னதி அமையப் பெற்றதன் பின்னணியில் உள்ள புராண நிகழ்வு கூட மக்களை ஈர்ப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அந்த வகையில் வைணவத்தலங்களில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி மக்கள் மிகவும் விரும்பி வழிபாடு செய்யும் சன்னதியாக திகழ்கின்றன.

    கலியுக்தில் கண்கண்ட தெய்வமாக ஆஞ்சநேயர் திகழ்கிறார். 'சர்வமங்கள கார்யானு கூலம் ' என்று ஆஞ்சநேயர் வழிபாட்டின் பலனைக் குறிப்பிடுவார்கள்.

    அதாவது தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தன்னிடம் உள்ள எல்லா ஆற்றலையும் கொடுத்து மனதில் வலிமையை ஏற்படுத்துவார் என்பது ஆஞ்சநேய வழிபாட்டின் ஐதீகமாகும். அவர் வாயுவின் புத்திரர் என்பதால் அவர் காற்றோடு காற்றாக கலந்து, எங்கும் நிறைந்து நம்மை காப்பதாக நம்புகிறார்கள்.

    பலவித தோற்றங்களில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர், தலம், மூர்த்தி, தீர்த்தம் என்று மூன்று வகைகளிலும் வரப்பிரசாதமாக இருந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.சேவை செய்வதற்காகவே அவதாரம் எடுத்தவர் ஆஞ்சநேயர். மகாவிஷ்ணு ராமஅவதாரம் எடுத்த போது, அவருக்கு சேவை செய்வதையே தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு ஆஞ்சநேயர் வாழ்ந்தார்.

    இதனால் ராமபிரானுக்கு எங்கெங்கு ஆலயம் உள்ளதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி அமைப்பட்டுள்ளது இவை தவிர ஆஞ்சநேயருக்கு என்றே தனியாக ஆலயங்களும் உண்டு. தென் இந்தியாவை விட, வட இந்தியாவில்தான் ஆஞ்சநேயருக்கு அதிகமான கோவில்கள் உள்ளன.

    ராம அவதாரம் நிறைவு பெற்றுவிட்ட போதிலும் ஆஞ்சநேயர் இன்னமும் சிரஞ்சீவியாக இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அதனால் தான் ராமாயண சொற்பொழிவுகள், ராம கீர்த்தனம் ஆகியவை எங்கு நடந்தாலும் அங்கெல்லாம் ஆஞ்சநேயர் அமர்ந்து ஸ்ரீராம தியானத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வார் என்கிறார்கள்.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ராம நாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கு நிச்சயம் ஆஞ்சநேயர் இருப்பார். அந்த வகையில் யார் ஒருவர் ராமநாமத்தை ஜெபிக்கிறார்களோ, அவர்களிடம் ஆஞ்சநேயர் நெருங்கிவிடுவார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    இறை அவதாரங்களில் ஆஞ்சநேயருக்கு மட்டுமே இந்த சிறப்பு உண்டு. எனவே வைணவத் தலங்களுக்கு வழிபாடு செய்யச்செல்லும் போது, மறக்காமல் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் அர்த்தம் பொதிந்துள்ளது. அந்த தர்ப்பயத்தை அறிந்து, உணர்ந்து நாம் ஆஞ்ச நேயரை வழிபாடு செய்தல் வேண்டும்.

    பெரும்பாலும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. எப்போதும் ராமருக்கு சேவை செய்து கொண்டிருந்த ஆஞ்சநேயருக்கு களைப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உளுந்து தானியத்தில் அஞ்சனாதேவி வடை தயாரித்து கொடுத்தாள். இதனால் தான் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் பழக்கம் ஏற்பட்டது.

    வெற்றிலை மாலை வழிபாடு, வெண்ணெய் காப்பு அலங்காரம் ஆகியவையும் பக்தர்களால் ஆஞ்சநேயருக்கு விரும்பி செய்யப்படுகிறது. இலங்கை அசோகவனத்தில் தன்னை சந்திக்க வந்த அனுமனை வாழ்த்தி அருகில் இருந்த வெற்றிலையைப்பறித்து சீதை மாலையாக அணிவித்தார். அன்று முதல் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிப்பது வழக்கமாகி விட்டது.

    அதுபோல ராமரின் ஆயுள் பலத்துக்காக நெற்றியில் செந்தூரம் பூசுவதாக சீதாதேவி கூறியதை கேட்ட ஆஞ்சநேயர், 'என் பிரபு ராமனின் ஆயுள் கூடுமென்றால் நானும் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொள்வேன்' என்று பூசிக்கொண்டார். இதில் இருந்தே ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது.

    சனி, செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீராமஜெயம் கூறி ஆஞ்சநேயருக்கு செந்தூரம் சாற்றி வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.

    ஆஞ்சநேயருக்கு வாலில் தான் சக்தி அதிகம் என்பதால் வாலில் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து 48 நாட்கள் வழிபாடு செய்தால் உரிய பலனை பெறலாம். இது நவக்கிரக வழிபாட்டுக்கு நிகரானது.

    மனதில் தாங்க முடியாத அளவுக்கு வேதனை உள்ளதா? ஆஞ்சநேயரின் சிறப்புகளை கூறும் சுந்தர காண்டம் படியுங்கள். துன்பங்கள் தூசியாக பறந்தோடி விடும். அவரை நினைத்தாலே புத்தி வரும், பக்தி வரும், புகழ் வரும், செல்வம் வரும், மன உறுதி வரும், வீரம் வரும்.அனைத்துக்கும் மேலாக அவர் கடும் பிரம்மச்சார்யத்தை கடை பிடிப்பதால் நம் மனதில் ஒரு நொடி கூட தேவை இல்லாத காம உணர்வு வரவே வராது. ஆஞ்சநேய விரதம் இருந்தால், குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எதிரிகளின் தொல்லை நீங்கி வெற்றி கிடைக்கும். உறவினர்களிடையே நட்பு அதிகரிக்கும். இதன் மூலம் குபேரனுக்கு இணையான வாழ்வை பெறலாம்.

    தினமும் காலை அருகில் உள்ள பெருமாள் ஆலயத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டு, உங்கள் பணிகளை செய்து வந்தால் வெற்றி மீது வெற்றி வரும். 13 முடிச்சுள்ள அனுமன் விரத கயிறை கையில் கட்டிக் கொண்டால் உங்களது எல்லா முயற்சிகளும் இடையூறு இல்லாமல் நிறைவேறும்.

    ஆஞ்சநேயரின் சன்னதி முன்பு நின்று, அவரது மூல மந்திரத்தை 9 தடவை சொல்லி வழிபட்டால் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். கடுமையான வியாதிகள் குணமாகும்.

    ஆஞ்சநேயரிடம் யார் ஒருவர் மனதை பறி கொடுக்கிறாரோ அவர் மனம் தெளிவடையும். அவரால் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். ஆஞ்சநேயரின் தீவிர பக்தராக மாறி விட்டால், ஆஞ்சநேயரின் முழு பலமும் அவருக்கு வந்து விடும் என்பது ஐதீகம்.

    எனவே பெருமாள் ஆலயத்தில் வழிபாடு செய்யும் போது ஆஞ்சநேயரிடம் மனம் விட்டு பேசுங்கள். 'யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவரான ராம தூதனே! கருணைக் கடலே! பிரபோ... என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் வெற்றி தந்து சாதித்து தாருங்கள்' என்று கேளுங்கள்.

    ஆஞ்சநேயரிடம் மனம் உருக, உருக நம்மை பிடித்த தோஷங்கள், கரைந்தோடிவிடும்.

    ஆஞ்சநேயர் பணிவின் அணிகலனாகவும், ராஜதந்திரத்தில் சாமர்த்திய சாலியாகவும், வாக்கு சாதூர்யத்தில் வல்லவராகவும், வீரத்தில் நிகர் இல்லாதவராகவும், விளங்கி வருகிறார். அவரை வழிபட்டால் இத்தனை சிறப்புகளும் நமக்கும் நிச்சயம் வந்துசேரும்.

    • தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச்சிறப்பான இடம் ஆலங்குடி.
    • கொண்டைக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும்.

    நவகிரகங்களில் ஒருவரான குரு எனப்படும் வியாழ பகவானுக்கு ஜோதிட நூல்களில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜாதகப்படி குருவின் பார்வை பட்டால் தான் திருமணம், குழந்தை செல்வம், சிறந்த பதவி, செல்வச்சிறப்பு ஆகியவை ஏற்படும். ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இல்லாமல் இருந்தாலோ, கொடூரமானவராக இருந்தாலோ, கோசார ரீதியாகக் கெட்டவரானாலோ குரு தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும். வியாழன் தோறும் விரதம் இருந்து பூஜிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

    தட்சிணாமூர்த்தியை தரிசித்து பூஜித்து தியானித்து அர்ச்சனை முதலியவை செய்தால் குரு தோஷம் விலகும் என்று சூரியனார் கோவில் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச்சிறப்பான இடம் ஆலங்குடி. குருதோஷத்துக்கு ஆலங்குடி பரிகாரத்தலம் என்று அதன் தலபுராணமும் குறிப்பிடுகிறது.

    குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண்முல்லை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட குரு பகவானை வணங்க வேண்டும். அரசமர சமித்துகளால் ஹோமம் செய்து கடலைப்பொடி அன்னத்தால் அல்லது எலுமிச்சை ரச அன்னத்தால் ஆகுதி செய்து வேள்வியை முடிக்க வேண்டும். கொண்டைக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும். குரு கீர்த்தனைகளை அடாணா ராகத்தில் பாடி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இவற்றால் குரு தோஷம் நீங்கும்.

    • நல்ல வேலை கிடைக்க நமது முன்னோர்களின் புண்ணிய பலனும் தெய்வ அருட்கடாட்சம் அவசியமாகிறது.
    • அம்மன் வழிபாடு நமது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வல்லதாக இருக்கிறது.

    நன்றாக கல்வி கற்று முடித்த பின்பு அனைவருக்கும் சுலபத்தில் வேலை கிடைத்து விடவில்லை. படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க பல ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலையும் தற்போது உருவாகி வருகிறது. ஆக மொத்தத்தில் நமக்கு சிறப்பான கல்வி அமையவும், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவும் நமது முன்னோர்களின் புண்ணிய பலனும் தெய்வ அருட்கடாட்சம் அவசியமாகிறது.

    அம்மன் அல்லது அம்பாள் தெய்வ வழிபாடு நமது கோரிக்கைகள் விருப்பங்கள், அனைத்தையும் நிறைவேற்ற வல்லதாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற வளர்பிறை புதன் மற்றும் வெள்ளிக் கிழமை தினத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு பச்சை நிற புடவை சாற்றி வழிபாடு செய்வது நல்லது. மேலும் அம்மனுக்கு ஏதேனும் ஆபரணம் செய்து அணிவிப்பதும் அற்புதமான பலன்களை கொடுக்கும்.

    மேற்கண்ட முறையில் அம்மனுக்கு புடவை மற்றும் ஆபரணம் சாற்றி வழிபடுபவர்களின் வம்சத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் நல்ல முறையில் கல்வி கற்று, சிறப்பான வகையில் தேர்ச்சி பெறுவார்கள். மேலும் நீண்ட நெடுங்காலமாக தகுதியான வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்தவர்களுக்கு கூடிய விரைவில் நல்லவேளை அம்பாளின் அனுக்கிரகத்தால் கிடைக்கப் பெறுவார்கள்.

    • இந்தத் தலத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    • இந்த கோவில் அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருக்கிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருக்கிறது.

    வருடந்தோறும் இங்கே விழாக்களும் விசேஷங்களும் நடத்தப்படுகிறது.

    என்றாலும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா, சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் என அமர்க்களப்படும். நிறைவில், தீர்த்தவாரியின் போது சுற்றுவட்டார ஊர்க்காரர்கள் அனைவரும் நீடாமங்கலம் சிவாலயத்தில் ஒன்று திரண்டிருப்பார்கள்.

    காசிக்கு நிகரான இந்தத் தலத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தால் பித்ரு தோஷங்கள் உள்பட 16 வகையான சாபங்களும் தோஷங்களும் விலகும், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    • துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.
    • பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும் வெவ்வேறு பலன்கள் உண்டு.

    பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தியும், வெவ்வேறு பலன்களும் உண்டு.

    1. தேங்காய் - குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற் றுமை உண்டாகும்.

    2.துரைஞ்சி நாரத்தை ராஜகனி - நரம்பு வியாதி திருமணம் தடை நீங்கும்.

    3. கொடை மிளகாய் - புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தீரும்.

    4. கொய்யா பழம்/ கத்திரிக்காய் - நீரழிவு நோய், இருதய நோய், கிட்னி நோய்கள் குணமாகும்.

    5. பீட்ருட் - ரத்தம் சம்பந்தமான நோய்கள், எதிரிகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.

    6. பாகற்காய் - சனி பாதிப்பு நீங்கு, கர்ம தோஷம் நீங்கும், வம்சாவழி தோஷம் நீங்கும்.

    7. வில்வபழம்/ மாதுளம் - லட்சுமி கடாட்சம் உண்டாகும். வசீகரம் ஏற்படும்.

    8. ஆரஞ்சு பழம் - தொழில் விருத்தி ஏற்படும்.

    9. அன்னாசிப்பழம் - சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.

    10. பப்பாளி பழம் - திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

    11. இளநீர்-ரத்தம் சம்பந்தமான நோய் விலகும்.

    12. வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கை அமையும்.

    13. மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவர்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.

    • ஆலங்குடி மற்றும் திட்டை திருத்தலங்கள் குருபகவானுக்கு உரிய தலங்களாகும்.
    • ஜோதிடத்தில் குரு பகவானை புத்திகாரகன் என்று சொல்வார்கள்.

    தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்கள் அளவுக்கு அதிகமாக நடைபெறவும் குரு பகவானுக்கு செய்யும் பரிகார முறைகள் உதவும். வியாழனன்று குரு ஓரையில் நல்ல நேரத்தில் குருவிற்கு உரிய கோலத்தை வடகிழக்கு திசையில் வரைந்து, அதன் மேல் முல்லை மலர்கள் பரப்பிக் குரு யந்திரத்தை வைத்து அதற்கு முல்லை மலர் சூட்டிச்சந்தனப் பொட்டிட்டுப் பொன்னிறத்தட்டில் கடலை வைத்துத் தூப தீபம் காட்டிக் குரு காயத்ரியை 108 முறை மன ஒருமையுடன் கூறினால் குருவால் ஏற்பட்ட தீய பலன்கள் விலகும். நல்ல பலன்கள் மேலும் மேலும் அதிகரிக்கும்.

    வியாழக்கிழமையன்று வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபடுதல், குருவுக்கு உரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுதல் நல்லது. வியாழனன்று குரு பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை அணிவித்து புஷ்பராகம் வெண் முல்லை மலர்களால் அலங்கரித்து குருவுக்குரிய மூல மந்திரத்தினை ஓதி, அரச சமித்தினால் வேள்வி செய்து, கடலை பொடி அன்னத்தால் ஆகுதி செய்து, அஷ்டோத்திர அர்ச்சனை தூப தீப நெய்வேத்தியம் ஆகியவற்றைச் செய்து அடானா ராகத்தில் குருவுக்குரிய கீர்த்தனைகளைப் பாடி வணங்கக் குருக் கிரக தோஷம் நீங்கும்.

    மஞ்சள் நிற ஆடையை உடுத்துவது புஷ்பராகமணியை அணிவது, மஞ்சள் நிற ஆடை, கடலை தானியம் ஆகியவற்றைத் தானம் செய்வது வியாழக்கிழமைகளில் விரதங்களை மேற்கொள்வது ஆகியவற்றால் குரு தோஷப் பரிகாரங்களைச் செய்யலாம். எட்டுத் திசைகளுள் வடகிழக்கு எனப்படும் ஈசான்ய திசையே வியாழனுக்குரிய திசையாகக் கருதப்படுகின்றது. ஆலங்குடி மற்றும் திட்டை திருத்தலங்கள் குருபகவானுக்கு உரிய தலங்களாகும். இங்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும்.

    • சம்புவராயர் காலத்தில், இங்கு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
    • இரண்டு பெருமாள்கள் அருளும் இந்த ஆலயம் மிகவும் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாம்பூண்டி என்ற ஊர். இந்த திருத்தலத்தில் பிரம்மதேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் கோவில் கொண்டுள்ளனர்.

    ஒரு பிரளய காலத்தின்போது, இந்த பிரபஞ்சம் அனைத்தும் அழிந்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் திருமால், ஆலிலை மீது குழந்தை கண்ணனாக மிதந்து வந்தார். மீண்டும் இந்த பிரபஞ்சத்தை உருவாக்க நினைத்த அவர், தன்னுடைய நாபிக்கமலத்தில் (தொப்புள்) இருந்து பிரம்மனை உருவாக்கினார். அவருக்கு படைப்பு தொழில் புரியும் சக்தியையும் வழங்கினார். அந்த தொழிலை ஏற்ற பிரம்மா, நாராயணருக்கு நன்றி செலுத்தும் விதமாக பூலோகம் வந்து ஒரு கோவிலை அமைத்து வழிபட்டார். அந்த ஆலயமே 'திருவுந்திப்பெருமாள்' திருக்கோவில்.

    இங்கு பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இது ஒரு திருமண தடைநீக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு, மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    கோவிலில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு, கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை இந்த பெருமாளின் பெருமையை பறைசாற்றுகிறது.

    திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் நாயுடுமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கூட்டுரோட்டில் 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் நார்த்தாம்பூண்டியை அடையலாம்.

    • மாங்கல்ய தோஷம் போக்கி திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் பரிகாரத் தலமாக இது திகழ்கிறது.
    • மாங்கல்ய மகரிஷியை மனமுருகப் பிரார்த்தனை செய்தால் தோஷம் நீங்குவதுடன் சந்தோஷம் பெருகும்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) ஆனி உத்திரம் திருநாள். இன்று உத்திர நட்சத்திரம் அமிர்த யோகத்துடன் கூடி வருகிறது. மேலும் இன்று சஷ்டி திதி தினமாகும். இன்று காலை 8.05 மணிக்கு தொடங்கும் உத்திரம் நட்சத்திரம் நேரம் நாளை (6-ந்தேதி) காலை 8.39 மணி வரை உள்ளது. எனவே இன்று காலை சிவனை வழிபட்டால் மாங்கல்ய யோகம் உண்டாகும்.

    தமிழகத்தில் உத்திரம் நட்சத்திர நாள் வழிபாட்டுக்கு புகழ் பெற்ற தலமாக திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது மங்களாம்பிகை உடனுறை மாங்கலீஸ்வரர் சுவாமி கோவில். இக்கோயிலில் காட்சியருளும் இறைவன் மாங்கலீசுவரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மாங்கல்ய தோஷத்தை போக்கி, திருமணப் பாக்கியத்தை தந்தருளும் இறைவனாக மாங்கலீசுவரர் எழுந்தருளியுள்ளார். இறைவி மங்களாம்பிகை மங்காளம்பிகை அம்மன். மாங்கல்ய தோஷம் போக்கி திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் பரிகாரத் தலமாகத் இது திகழ்கிறது.

    இக்கோவிலில் மாங்கல்ய மகரிஷி தவம் செய்யும் கோலத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். அவரது நட்சத்திரம் உத்திரமாகும். பொதுவாகவே உத்திர நட்சத்திரம் என்பது மாங்கல்ய வரம் தந்தருளக்கூடியது. அதனாலேயே தான் பல்வேறு கோவில்களில் பங்குனி உத்திரத்தன்று சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் மற்றும் வைபவங்கள் நடத்தப்படுகிறது. பூ மாலைகளில் தங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கு எல்லாம் இவர் குருவாக போற்றப்படுகிறார்.

    பொதுவாக சம்பிரதாய திருமணப் பத்திரிகைகளில் மாங்கல்யத்துடன் மாலைகளில் பறப்பது போன்ற தேவதைகளை பார்த்திருப்போம். அந்த தேவதைகளைத் திருமணத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு ஆசீர்வாதத்தை மாங்கல்ய மகரிஷி அருளுகிறார் என்பதும் ஐதீகம். திருமணத்துக்கான சுபமுகூர்த்த நேரத்தை அமிர்தநேரம் என்பர். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல், சூட்சும வடிவில் இடையாற்று மங்கலத்திலுள்ள மாங்கலீசுவரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வாராம். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த கோவிலாக இது திகழ்கிறது.

    உத்திர நட்சத்திரத்தன்றோ அல்லது வேறு எந்த நாளிலோ உத்திர நட்சத்திரக்காரர்கள் இடையாற்றுமங்கலத்தில் உள்ள மாங்கலீஸ்வரர் கோவிலுக்கு வந்து, மாங்கல்ய மகரிஷி, மாங்கலீசுவரர்- மங்களாம்பிகையை மனதார வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமண வரம் விரைவில் நடந்தேறும். மேலும் உத்திர நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கவும், இன்னல்கள் அகலவும், தங்கள் நட்சத்திரத்தன்று இக்கோவிலுக்கு வந்து சுவாமி, அம்பாள், மாங்கல்ய மகரிஷியை மனமுருகப் பிரார்த்தனை செய்து சென்றால், தோஷம் நீங்குவதுடன் சந்தோஷம் பெருகும்.

    தடைப்பட்ட திருமணத்தால் வருந்துவோர் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷிக்கு நெய் விளக்கேற்றி, மாலை சாற்றி மனதுருகி அவரின் திருப்பாதத்தில் ஜாதகத்தை வைத்து வழிபட வேண்டும். அதேபோல மங்களாம்பிகை அம்மனுக்கும், மாங்கலீஸ்வரருக்கும் விளக்கேற்றி, மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமண வரன் தேடி வரும். திருமணம் உறுதியான பின்னர் கோவிலுக்குத் திருமண அழைப்பிதழுடன் வந்து சுவாமி, அம்மன், மாங்கல்ய மகரிஷியை வணங்கி, அவர்களுக்கு அழைப்பிதழை வைத்து பிரார்த்திக்க வேண்டும்.

    திருமணம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு, அவர்களைத் திருமணத்துக்கு வரும்படி அழைப்பு விடுப்பதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு. திருமணம் முடிந்த பின்னர் தம்பதியராக கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடனைச் செலுத்த வேண்டும். மாலைகள், இனிப்பு, தேங்காய் ஆகியவற்றுடன் மணமக்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவது தொடர்ந்து வருகிறது.

    உத்திர நட்சத்திரத்தன்று கன்னிப்பெண்கள் இக்கோவிலிலுள்ள சுவாமி, அம்மன், மாங்கல்ய மகரிஷிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, சட்டைத்துணி, பூ, பழம் போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலி பெண்களுக்கு வழங்கி, வேண்டிக் கொண்டால் சகல தோஷங்களும் விலகி, அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனை உத்திர நட்சத்திரத்தன்று கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமே பிரதிபலிக்கிறது.

    திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் கோவிலாக மட்டுமின்றி, குடும்ப ஒற்றுமை, உடலில் கால்வலி குணமடைய வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனைகளும் நிறைவேறுகிறது. மேலும் உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்களது கணவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ இங்கு வழிபடுகிறார்கள்.

    இன்று (5-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) ஆனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு மங்களாம்பிகை உடனுறை மாங்கலீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளது.

    தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

    பேருந்துகளில் வருவோர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் இடையாற்றுமங்கலத்துக்கு வரலாம்.

    சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களிலிருந்தும், சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்தும், மதுரை போன்ற தென் மாவட்டங்களிலிருந்து பேருந்துகள், கார், வேன்களில் வருவோர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெம்பர் 1 டோல்கேட் வந்து லால்குடி சாலையில் வாளாடி வந்து, பச்சாம்பேட்டை வளைவு வழியாக திருமணமேடு, பெரியவர்சீலி, மயிலரங்கம் வழியாக இந்த கோவிலை வந்தடையலாம். ரெயில் மூலம் வரும் பக்தர்கள் லால்குடி ரெயில் நிலையம் வந்து, அங்கிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள கோவிலுக்கு ஆட்டோக்கள் மூலம் வரலாம்.

    மேலும் தொடர்புக்கு சீனிவாச குருக்களை 98439 51363 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • ஜாதகப்படி செவ்வாய், ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
    • வராஹியை வழிபடுபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் செய்வினையால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
    • ஸ்ரீமகா வராஹியை வழிபடுபவர்கள், தனது பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் கையில் உள்ள பஞ்ச பாணங்களில் இருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மகாவராஹி எனப்படும் அம்மன்.

    படைகளுக்குத் தலைவியான அன்னையை பாதுகாப்பவளாக விளங்கும் இவள், வராக முகத்துடன் இருப்பதால் வராஹி எனப்படுகிறாள். பிராக்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டா என்னும் சப்த மாதாக்களில் இவள் 6-வதாக பூஜிக்கப்படுகிறாள். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் இருக்கும் 6 ஆதார சக்கரங்களில் நெற்றியில் 2 கண் புருவங்களுக்கு இடையில் இருக்கும் ஆக்ஞா சக்கரப் பகுதிக்கு வராஹியே தேவதை ஆவாள்.

    ஆனி மாதம் சுக்லபட்சம் பிரதமை முதல் நவமி வரையில் உள்ள (பத்து) 9 நாட்கள் வராஹி நவராத்திரி எனப்படுகிறது. குறிப்பாக இந்த நவராத்திரியின் நடுவில் நிகழும் பஞ்சமி திதியான 4.7.2022 (திங்கட்கிழமை) ஸ்ரீ வராஹி தேவியை உபாசிக்க சிறப்பான நாளாகும்.

    இந்த நாட்களில் ஸ்ரீ மகா வராஹியை அபிஷேகம், அர்ச்சனை, பூஜை, மந்திரம் செய்து பாராயணம், ஹோமம் நடத்தி வழிபாடு செய்யலாம். இதனால் சிறந்த வாக்குசக்தி கிடைக்கும். ஜாதகப்படி செவ்வாய், ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும். எங்கும் எதிலும் பாதுகாப்பு கிடைக்கும்.

    மேலும் ஸ்ரீமகாவராஹியை வழிபடுபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் மற்றும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இதனால்தான் வராஹிக்காரனோடு வாதாடாதே என்னும் பழமொழி கூறப்படுகிறது.

    ஸ்ரீமகா வராஹியை வழிபடுபவர்கள், தனது பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆத்திரத்தால் உணர்ச்சி வசப்பட்டு யாரையும் திட்டவோ, சபிக்கவோ கூடாது. ஏனென்றால் அது உடனே பலித்து பலனைத் தந்து விடும். பிறகு வருத்தப்பட நேரிடலாம். வராஹி வழிபாட்டுக்கு மட்டும் இந்த சிறப்பு உண்டு.

    வராஹி நவராத்திரியின் 9 நாட்களும் ஸ்ரீ மகாவராஹியின் படத்தை வைத்து அம்மனின் வலது பக்கத்தில் தாமரைத் தண்டு அல்லது வாழைத் தண்டால் திரி செய்து நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் பட்டுத் துணி சாத்தி வழிபடலாம். அப்போது பஞ்சம்யை நம, தண்டநாதாயை நம, சங்கேதாயை நம, சமயேஸ்வர்யை நம, சமய சங்கேதாயை நம, வராஹியை நம, போத்ரிண்யை நம, ஸ்ரீவாயை நம, வார்த்தாள்யை நம, மகாசேனாயை நம, ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம, அரிக்ன்யை நம என்னும் 12 மந்திரங்களைச் சொல்ல வேண்டும். மேலும் வராஹியை சிவப்பு புஷ்பத்தால் பூஜை செய்ய வேண்டும்.

    தோல் உரிக்காத கருப்பு உளுந்தால் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும், சக்கரைவள்ளிக் கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு முதலில் சொல்லிய வந்தே வாராக வக்த்ராம் என்னும் மந்திரத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு முறையாக பக்தியுடன் ஸ்ரீ வராஹியை நவராத்திரி 9 நாட்களும் பூஜை செய்பவர்கள் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் நோய், எதிரி மற்றும் அனைத்து ஆபத்துகளில் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.

    தினமும் ஒரு அலங்காரம்

    தஞ்சாவூா் பெரியகோவிலில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. தஞ்சாவூா் பெரியகோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

    இதில், அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். இதன்படி, நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா ஜூன் 28-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    தொடா்ந்து வராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரமும், 29-ம் தேதி மஞ்சள் அலங்காரமும், 30-ம் தேதி குங்கும அலங்காரமும், ஜூலை 1-ம் தேதி சந்தன அலங்காரமும், 2-ம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 3-ம் தேதி மாதுளை அலங்காரமும், 4-ம் தேதி நவதானிய அலங்காரமும், 5-ம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 6-ம் தேதி கனி அலங்காரமும், 7-ம் தேதி காய்கறி அலங்காரமும் நடைபெற உள்ளன.

    நிறைவு நாளான 8-ம்தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், வாண வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் வீதி உலாவும் நடைபெற உள்ளன.

    • மாங்கல்ய தோஷம் பற்றிப் பேசுபவர்கள் அறியாமைவாதிகள்.
    • மனைவியை மிரட்டி அடிபணிய வைத்த காலம் மறைந்து விட்டது.

    ஜோதிட ரீதியாக இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் தசாபுத்தி மட்டுமே மாங்கல்ய தோஷத்தின் வீரியத்தை நிர்ணயம் செய்கிறது என்பது தெளிவாகிறது.

    பொதுவாக ஒருவருக்கு 8-ம் அதிபதியின் தசை புத்தி நடப்பில் இருக்கும் போதும் திருமணமான குறுகிய காலத்தில் 8-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை புத்தி செயல்பட்டாலும் திருமணம் நடத்தி வைத்தால் கண்டிப்பாக கோர்ட், கேஸ், பிரச்சினை, விவாகரத்து ஏற்பட்டுவிடுகிறது அல்லது அவர்களது வாழ்க்கை சங்கடங்கள் நிறைந்ததாகவே அமைந்து விடுகிறது.

    திருமணமாகி குறைந்தது 10 வருடங்களுக்கு மேல் இப்படியான அமைப்பில் தசாபுத்தி பெண்ணுக்கு இருந்தால் அந்தப்பெண் கணவனுக்காக சம்பாதித்துப் போட்டு கணவனின் சுமைகளை இவளே ஏற்றுக் கொண்டு குடும்ப பாரத்தை சுமக்கிறாள்.இப்படியான நிலை ஒரு ஆணுக்கு இருந்தால் தன் மனைவியின் சகோதர, சகோதரிகளையும், மாமனார், மாமியாரையும் தூக்கிச் சுமக்கும் நிலை உருவாகிறது.

    இது சுகமான சுமைதானே. கணவனின் சுமையை தன் மேல் ஏற்றிக் கொண்டு குடும்ப பாரத்தை தாங்கும் இல்லாள் தெய்வப் பிறவி. அவளின் சேவைகள் காலத்தின் பதிவேட்டில் புண்ணிய பலனாக பதிவேற்றம் செய்யப்படும்.

    தன் மனைவியின் குடும்ப பாரத்தைச் சுமக்கும் ஒரு ஆண் காவியத் தலைவன். அவனுடைய தியாகங்கள் மனைவியின் மனதில் ராஜ கோபுரமாக உயர்ந்து நிற்கும். கால கணக்கில் கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்த பலனாக எழுதப்படும். இது தம்பதிகளின் அன்யோன்யத்தையும் நெருக்கத்தையும் தானே வெளிப்படுத்துகிறது. இது எப்படி மாங்கல்ய தோஷமாகும்?

    பொருளாதாரம் என்ற விசயத்தை முன்னிலைப்படுத்தி திருமணம் என்ற வாழ்க்கைப் பயணத்தை உற்று நோக்கினால் ஆண்-பெண் இருவருமே சம்பாதித்து குடும்பம் நடத்த வேண்டிய கால சூழல் உலகில் நிலவி வருகிறது. தற்காலத்தில் அனைத்துப் பெண்களும் சுயமாக சம்பாதித்து தங்களை காப்பாற்றிக் கொள்ளும் திறன் உடையவர்களாக இருக்கிறார்கள்.

    ஆண்களை முழுமையாக நம்பி வாழும் பெண்கள் குறைவு.கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வாழாவெட்டி, மாங்கல்ய தோஷம் அது, இது என்று பெண்கள் மேல் வாசிக்கப்பட்ட குற்றப் பத்திரிக்கை குறைந்து பெண்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்று பேசும் காலம் வந்துவிட்டது. அதே நேரத்தில் சம்பாதிக்காத ஆண்களை பெண்கள் துச்சமாக எண்ணி உதறி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் துணிந்து விட்டார்கள் என்பதால் மனைவியை மிரட்டி அடிபணிய வைத்த காலம் மறைந்து விட்டது. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டு வரும் இந்த காலத்தில் மாங்கல்ய தோஷம் பற்றிப் பேசுபவர்கள் அறியாமைவாதிகள்.

    ஒரு குடும்பத்தின் சொத்து மதிப்பை மட்டும் வைத்து திருமணம் முடிப்பவர்களும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்பவர்களுக்கும் 8-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் தசா புத்திகள் வலுவாக இயங்கினால் மட்டுமே ஆயுள் குற்றம் உருவாகிறது.

    ஒருவரின் ஜனனம் ஏற்பட்ட நாளில் ஆயுளும் தீர்மானிக்கப்பட்டு விடும். ஒரு பெண்ணின் மாங்கல்ய தோஷத்தால் ஆயுள் குறைவுபடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. ஆயுள் பலம் நிறைந்த ஒருவர் பெண்ணின் ஜாதகத்தில் 8ம் இடம் பலம் குறைந்திருந்தாலும் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் காலம் வரை நிச்சயம் வாழ்வார்.

    ஜனன கால ரீதியாக ஆயுள் பலம் குறைந்த ஒருவரின் மறைவிற்கு மனைவி எப்படி காரணமாக முடியும்.கோடான கோடி மக்கள் தொகையில் ஆண்களின் விகிதாச்சாரம் அதிகமாகவும், பெண்களின் விகிதாச்சாரம் குறைவாகவும் உள்ளது. திருமணத்திற்குப் பெண் கிடைப்பதே அரிதான இந்த கலியுகத்தில் மாங்கல்ய தோஷம் என்ற பெயரில் கிடைக்கும் நல்ல வரனையும் இழக்கும் ஆண்கள் தான் அதிகம்.

    உலவியல் ரீதியாக ஆயுள் குற்றம் என்ற பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றால் ஒரு மனிதனுக்கு மரணம் நோய்,விபத்து, தற்கொலை போன்ற காரணங்களால் ஏற்படலாம். 25 வருடங்களுக்கு முன்பு வரை போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் தீராத நோய் என்ற ஒன்று இருந்தது. மருந்துவ வசதி பெருகிய இந்த காலத்தில் எல்லா நோய்க்கும் தீர்வு உண்டு என்பதால் இதை தோஷமாக கருத வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் 6, 8, 12-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா புத்திகளில் வீட்டை விட்டுப் போய் திருமணம் செய்து கொள்வது அல்லது வீட்டில் பெரியவர்களிடம் கோபித்துக் கொண்டு தனிக்குடித்தனம் செல்பவர்கள் கடன் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள்.

    வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்களை எதிர்த்துப் போராட தைரியம் இல்லாதவர்கள் கல்யாணம் செய்து கொண்டு மாங்கல்ய தோஷத்தின் மேல் பழிபோடுவது நியாயமா?விபத்து என்பது மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிய ஒரு செயல். ஆயுள் குற்றம் என்பது ஆயிரத்தில் ஒரு ஜாதகத்திற்கு மட்டுமே உண்டாகும் பிரச்சினை.இதை அனைத்து ஜாதகத்திலும் பொருத்தி பல பெண்களின் வாழ்க்கை யில் திருமணம் என்ற அத்தியாயம் இல்லாமல் செய்வது மிகவும் வருந்தத்தக்க செயல்.

    ஒரு சதவிகிதப் பிரச்சினையான மாங்கல்ய தோஷத்தை நூறு சதவிதப் பிரச்சினையாக உருவகப்படுத்துவதால் மாங்கல்ய தோஷம் என்ற கருத்து உண்மையாகி விடாது. துக்கம், சந்தோஷம், சண்டை, சமாதானம், ஏற்றம், இறக்கம், வெறுப்பு, ஆதரவு இவற்றின் கலவைதான் திருமண வாழ்க்கை.

    பொறுமை, சகிப்புத்தன்மை இன்மையால் பலர் கிடைத்த வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் இருப்பதே மாங்கல்ய தோஷத்திற்கு முழுமையான காரணம். ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் பிறரின் கோபத்தாலும், சாபத்தாலும் உருவாகுபவை.

    எந்த தோஷமும் தானாக வருவதில்லை. கோபத்தாலும் சாபத்தாலும் தோஷமாக வரவழைக்கப்படுகிறது. ஒருவரின் நடத்தை யாரையும் பாதிக்காத வகையில் வாழப்பழகிக் கொள்ளும் போது கோபமும், சாபமும் நீங்கி மாங்கல்ய தோஷம் என்ற கூற்று செயலற்றுப் போகும். ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் பொறுத்த வரை எப்படியான தோஷங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் இணைக்கும் ஜாதகமே நிரந்தர தீர்வு தரக்கூடியதாக இருக்க முடியும்.

    பெண்கள் மாங்கல்ய பலம் அதிகரிக்கவும் திருமண வாழ்க்கை தித்திக்கவும், திருமணத் தடை அகலவும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான சுக்கிர ஹோரையில் திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியையும் அருள்மிகு ஜம்புகேஸ்வரையும் வழிபட சுப பலன் உண்டு.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×