search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    உத்திர நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் கோவில்
    X

    உத்திர நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் கோவில்

    • மாங்கல்ய தோஷம் போக்கி திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் பரிகாரத் தலமாக இது திகழ்கிறது.
    • மாங்கல்ய மகரிஷியை மனமுருகப் பிரார்த்தனை செய்தால் தோஷம் நீங்குவதுடன் சந்தோஷம் பெருகும்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) ஆனி உத்திரம் திருநாள். இன்று உத்திர நட்சத்திரம் அமிர்த யோகத்துடன் கூடி வருகிறது. மேலும் இன்று சஷ்டி திதி தினமாகும். இன்று காலை 8.05 மணிக்கு தொடங்கும் உத்திரம் நட்சத்திரம் நேரம் நாளை (6-ந்தேதி) காலை 8.39 மணி வரை உள்ளது. எனவே இன்று காலை சிவனை வழிபட்டால் மாங்கல்ய யோகம் உண்டாகும்.

    தமிழகத்தில் உத்திரம் நட்சத்திர நாள் வழிபாட்டுக்கு புகழ் பெற்ற தலமாக திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது மங்களாம்பிகை உடனுறை மாங்கலீஸ்வரர் சுவாமி கோவில். இக்கோயிலில் காட்சியருளும் இறைவன் மாங்கலீசுவரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மாங்கல்ய தோஷத்தை போக்கி, திருமணப் பாக்கியத்தை தந்தருளும் இறைவனாக மாங்கலீசுவரர் எழுந்தருளியுள்ளார். இறைவி மங்களாம்பிகை மங்காளம்பிகை அம்மன். மாங்கல்ய தோஷம் போக்கி திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் பரிகாரத் தலமாகத் இது திகழ்கிறது.

    இக்கோவிலில் மாங்கல்ய மகரிஷி தவம் செய்யும் கோலத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். அவரது நட்சத்திரம் உத்திரமாகும். பொதுவாகவே உத்திர நட்சத்திரம் என்பது மாங்கல்ய வரம் தந்தருளக்கூடியது. அதனாலேயே தான் பல்வேறு கோவில்களில் பங்குனி உத்திரத்தன்று சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் மற்றும் வைபவங்கள் நடத்தப்படுகிறது. பூ மாலைகளில் தங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கு எல்லாம் இவர் குருவாக போற்றப்படுகிறார்.

    பொதுவாக சம்பிரதாய திருமணப் பத்திரிகைகளில் மாங்கல்யத்துடன் மாலைகளில் பறப்பது போன்ற தேவதைகளை பார்த்திருப்போம். அந்த தேவதைகளைத் திருமணத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு ஆசீர்வாதத்தை மாங்கல்ய மகரிஷி அருளுகிறார் என்பதும் ஐதீகம். திருமணத்துக்கான சுபமுகூர்த்த நேரத்தை அமிர்தநேரம் என்பர். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல், சூட்சும வடிவில் இடையாற்று மங்கலத்திலுள்ள மாங்கலீசுவரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வாராம். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த கோவிலாக இது திகழ்கிறது.

    உத்திர நட்சத்திரத்தன்றோ அல்லது வேறு எந்த நாளிலோ உத்திர நட்சத்திரக்காரர்கள் இடையாற்றுமங்கலத்தில் உள்ள மாங்கலீஸ்வரர் கோவிலுக்கு வந்து, மாங்கல்ய மகரிஷி, மாங்கலீசுவரர்- மங்களாம்பிகையை மனதார வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமண வரம் விரைவில் நடந்தேறும். மேலும் உத்திர நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கவும், இன்னல்கள் அகலவும், தங்கள் நட்சத்திரத்தன்று இக்கோவிலுக்கு வந்து சுவாமி, அம்பாள், மாங்கல்ய மகரிஷியை மனமுருகப் பிரார்த்தனை செய்து சென்றால், தோஷம் நீங்குவதுடன் சந்தோஷம் பெருகும்.

    தடைப்பட்ட திருமணத்தால் வருந்துவோர் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷிக்கு நெய் விளக்கேற்றி, மாலை சாற்றி மனதுருகி அவரின் திருப்பாதத்தில் ஜாதகத்தை வைத்து வழிபட வேண்டும். அதேபோல மங்களாம்பிகை அம்மனுக்கும், மாங்கலீஸ்வரருக்கும் விளக்கேற்றி, மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமண வரன் தேடி வரும். திருமணம் உறுதியான பின்னர் கோவிலுக்குத் திருமண அழைப்பிதழுடன் வந்து சுவாமி, அம்மன், மாங்கல்ய மகரிஷியை வணங்கி, அவர்களுக்கு அழைப்பிதழை வைத்து பிரார்த்திக்க வேண்டும்.

    திருமணம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு, அவர்களைத் திருமணத்துக்கு வரும்படி அழைப்பு விடுப்பதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு. திருமணம் முடிந்த பின்னர் தம்பதியராக கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடனைச் செலுத்த வேண்டும். மாலைகள், இனிப்பு, தேங்காய் ஆகியவற்றுடன் மணமக்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவது தொடர்ந்து வருகிறது.

    உத்திர நட்சத்திரத்தன்று கன்னிப்பெண்கள் இக்கோவிலிலுள்ள சுவாமி, அம்மன், மாங்கல்ய மகரிஷிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, சட்டைத்துணி, பூ, பழம் போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலி பெண்களுக்கு வழங்கி, வேண்டிக் கொண்டால் சகல தோஷங்களும் விலகி, அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனை உத்திர நட்சத்திரத்தன்று கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமே பிரதிபலிக்கிறது.

    திருமணப் பாக்கியத்தைத் தந்தருளும் கோவிலாக மட்டுமின்றி, குடும்ப ஒற்றுமை, உடலில் கால்வலி குணமடைய வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனைகளும் நிறைவேறுகிறது. மேலும் உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்களது கணவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ இங்கு வழிபடுகிறார்கள்.

    இன்று (5-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) ஆனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு மங்களாம்பிகை உடனுறை மாங்கலீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளது.

    தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

    பேருந்துகளில் வருவோர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் இடையாற்றுமங்கலத்துக்கு வரலாம்.

    சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களிலிருந்தும், சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்தும், மதுரை போன்ற தென் மாவட்டங்களிலிருந்து பேருந்துகள், கார், வேன்களில் வருவோர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெம்பர் 1 டோல்கேட் வந்து லால்குடி சாலையில் வாளாடி வந்து, பச்சாம்பேட்டை வளைவு வழியாக திருமணமேடு, பெரியவர்சீலி, மயிலரங்கம் வழியாக இந்த கோவிலை வந்தடையலாம். ரெயில் மூலம் வரும் பக்தர்கள் லால்குடி ரெயில் நிலையம் வந்து, அங்கிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள கோவிலுக்கு ஆட்டோக்கள் மூலம் வரலாம்.

    மேலும் தொடர்புக்கு சீனிவாச குருக்களை 98439 51363 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    Next Story
    ×