search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    பஞ்சமி திதி: ராகு, கேது தோஷத்தை போக்கும் ஸ்ரீவராஹி நவராத்திரி வழிபாடு
    X

    பஞ்சமி திதி: ராகு, கேது தோஷத்தை போக்கும் ஸ்ரீவராஹி நவராத்திரி வழிபாடு

    • ஜாதகப்படி செவ்வாய், ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
    • வராஹியை வழிபடுபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் செய்வினையால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
    • ஸ்ரீமகா வராஹியை வழிபடுபவர்கள், தனது பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் கையில் உள்ள பஞ்ச பாணங்களில் இருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மகாவராஹி எனப்படும் அம்மன்.

    படைகளுக்குத் தலைவியான அன்னையை பாதுகாப்பவளாக விளங்கும் இவள், வராக முகத்துடன் இருப்பதால் வராஹி எனப்படுகிறாள். பிராக்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டா என்னும் சப்த மாதாக்களில் இவள் 6-வதாக பூஜிக்கப்படுகிறாள். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் இருக்கும் 6 ஆதார சக்கரங்களில் நெற்றியில் 2 கண் புருவங்களுக்கு இடையில் இருக்கும் ஆக்ஞா சக்கரப் பகுதிக்கு வராஹியே தேவதை ஆவாள்.

    ஆனி மாதம் சுக்லபட்சம் பிரதமை முதல் நவமி வரையில் உள்ள (பத்து) 9 நாட்கள் வராஹி நவராத்திரி எனப்படுகிறது. குறிப்பாக இந்த நவராத்திரியின் நடுவில் நிகழும் பஞ்சமி திதியான 4.7.2022 (திங்கட்கிழமை) ஸ்ரீ வராஹி தேவியை உபாசிக்க சிறப்பான நாளாகும்.

    இந்த நாட்களில் ஸ்ரீ மகா வராஹியை அபிஷேகம், அர்ச்சனை, பூஜை, மந்திரம் செய்து பாராயணம், ஹோமம் நடத்தி வழிபாடு செய்யலாம். இதனால் சிறந்த வாக்குசக்தி கிடைக்கும். ஜாதகப்படி செவ்வாய், ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும். எங்கும் எதிலும் பாதுகாப்பு கிடைக்கும்.

    மேலும் ஸ்ரீமகாவராஹியை வழிபடுபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் மற்றும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இதனால்தான் வராஹிக்காரனோடு வாதாடாதே என்னும் பழமொழி கூறப்படுகிறது.

    ஸ்ரீமகா வராஹியை வழிபடுபவர்கள், தனது பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆத்திரத்தால் உணர்ச்சி வசப்பட்டு யாரையும் திட்டவோ, சபிக்கவோ கூடாது. ஏனென்றால் அது உடனே பலித்து பலனைத் தந்து விடும். பிறகு வருத்தப்பட நேரிடலாம். வராஹி வழிபாட்டுக்கு மட்டும் இந்த சிறப்பு உண்டு.

    வராஹி நவராத்திரியின் 9 நாட்களும் ஸ்ரீ மகாவராஹியின் படத்தை வைத்து அம்மனின் வலது பக்கத்தில் தாமரைத் தண்டு அல்லது வாழைத் தண்டால் திரி செய்து நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் பட்டுத் துணி சாத்தி வழிபடலாம். அப்போது பஞ்சம்யை நம, தண்டநாதாயை நம, சங்கேதாயை நம, சமயேஸ்வர்யை நம, சமய சங்கேதாயை நம, வராஹியை நம, போத்ரிண்யை நம, ஸ்ரீவாயை நம, வார்த்தாள்யை நம, மகாசேனாயை நம, ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம, அரிக்ன்யை நம என்னும் 12 மந்திரங்களைச் சொல்ல வேண்டும். மேலும் வராஹியை சிவப்பு புஷ்பத்தால் பூஜை செய்ய வேண்டும்.

    தோல் உரிக்காத கருப்பு உளுந்தால் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும், சக்கரைவள்ளிக் கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு முதலில் சொல்லிய வந்தே வாராக வக்த்ராம் என்னும் மந்திரத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு முறையாக பக்தியுடன் ஸ்ரீ வராஹியை நவராத்திரி 9 நாட்களும் பூஜை செய்பவர்கள் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் நோய், எதிரி மற்றும் அனைத்து ஆபத்துகளில் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.

    தினமும் ஒரு அலங்காரம்

    தஞ்சாவூா் பெரியகோவிலில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. தஞ்சாவூா் பெரியகோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

    இதில், அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். இதன்படி, நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா ஜூன் 28-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    தொடா்ந்து வராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரமும், 29-ம் தேதி மஞ்சள் அலங்காரமும், 30-ம் தேதி குங்கும அலங்காரமும், ஜூலை 1-ம் தேதி சந்தன அலங்காரமும், 2-ம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 3-ம் தேதி மாதுளை அலங்காரமும், 4-ம் தேதி நவதானிய அலங்காரமும், 5-ம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 6-ம் தேதி கனி அலங்காரமும், 7-ம் தேதி காய்கறி அலங்காரமும் நடைபெற உள்ளன.

    நிறைவு நாளான 8-ம்தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், வாண வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் வீதி உலாவும் நடைபெற உள்ளன.

    Next Story
    ×