என் மலர்
மற்றவை
- பிரதமர் அலுவலகத்திற்கு குழந்தைகள் வந்திருந்தனர்
- மறக்க முடியாத தருணங்கள் என குறுஞ்செய்தியையும் பதிவிட்டுள்ளார் பிரதமர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.
இன்று அவரை காண சில குழந்தைகள் அவரது அலுவலகத்திற்கு வந்தார்கள்.
அவர்களுடன் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டார். அப்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் சில 'மேஜிக்' செய்து காட்டினார். இதில் ஒரு நாணயத்தை குழந்தைகளின் நெற்றியில் ஒட்டி அதனை மறைய செய்தார். அதை குழந்தைகள் ரசித்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோவை தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் பிரதமர் பதிவிட்டார். அது இணையத்தில் பரவி வருகிறது. அதில் "எனது இளைய நண்பர்களுடன் சில மறக்க முடியாத தருணங்கள்" என ஒர் குறுஞ்செய்தியையும் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட "ரக்ஷாபந்தன்" பண்டிகையின் போது சில குழந்தைகள் அவரை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- நமது உடலை இயக்கும் “உயிர்சக்தி” மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது.
- உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.
வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.
நமது உடலை இயக்கும் "உயிர்சக்தி" மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும்.
இது தான் அந்த மூன்று சக்தி
(1) - செரிமான சக்தி
(2) - இயக்க சக்தி
(3) - நோய் எதிர்ப்பு சக்தி
இதில் ஒவ்வொன்றாக எப்படி வேலை செய்கிறது என்று சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.
காய்ச்சலின் போது உங்களுக்கு பசிக்குமா? பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது. காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா? முடியாது, உடல் இயக்க சக்தியை குறைத்துக்கொள்ளும். எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.
மதியம் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியுமா? முடியாதல்லவா, உடல் இயக்கம் சக்தியை குறைத்துக்கொள்ளும், நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.
உண்ணா நோன்பு இருக்கிறீர்கள். செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா? இல்லை. இயக்க சக்தியையும் குறைத்துக்கொள்வோம். இப்பொழுது செரிமானம் மற்றும் இயக்க சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு? என்ன? பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்திவிடும்.
இப்படி மூன்று சக்திகளும் அந்தந்த நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடம் இருந்து சக்தி பெற்று, மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும்.
உடல் முதல் முக்கியத்துவம் செரிமானத்திற்கு கொடுப்பதால் ஒவ்வொறு முறை நாம் உணவு எடுக்கும் போது, உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்துவிடும். ஏனென்றால் வெளியில் இருந்து ஒரு பொருள் வருகிறது. அது என்ன, ஏது என உடல் பார்த்து சீரமைக்க வேண்டும்.
உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.
உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.
இதற்காக நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாள் தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அந்த ஆறு நாளும் ஆறுமுகனை மையப்படுத்தி அழகான ஒரு திருவிழாவாக வடிவமைத்து உள்ளார்கள்.
ஆம், அது தான் தீபாவளி முடிந்து வரும் மறைமதியை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படும் "கந்த சஷ்டி விழா". கந்த சஷ்டி விழா என்றாலே நமது நினைவிற்கு வருவது "சஷ்டி விரதம்" தான்.
"செரிமான சக்தி" தான் முருகனின் தாய்.
"நோய் எதிர்ப்பு சக்தி" தான் 'முருகன்.
"நோய்" தான் அரக்கன்.
வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது.
இந்த விழாவில் எப்படி முருகப்பெருமான் தனது தாயிடம் இருக்கு சக்தி பெற்று அசூரனை வதம் செய்கிறாறோ, அதேப்போல் நமது உடலில் உள்ள "நோய் எதிர்ப்பு சக்தி" தனது தாயான செரிமான சக்தியிடம் இருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது.
வெளியில் முருகனுக்கும், அரக்கனுக்கும் நடக்கும் அதே போர் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்று உலகிற்கே தெரியும்.
உடலில் நடக்கும் இந்த அறிவியல் உண்மையை நமக்கு சூட்சமமாக சொல்லவோ என்னவோ, ஆறு நாட்களையும் "உண்ணா நோன்புடன்" அழகான விழாவாக வடிவமைத்துள்ளார்கள்.
உண்ணாநோன்பு இருப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்.
-மதிவாணன்
- திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு இடப்புறம் வரவேண்டும்.
- வியாழக்கிழமைகளில் மட்டும் பிறைக்குத் தக்க சரம் ஓடும்.
சரம் பார்த்தல், அதாவது சுவாச ஓட்டத்தை காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பார்க்கவேண்டும். இதுவே சரம் பார்த்தல் ஆகும்.
திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு இடப்புறம் வரவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறுமணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சந்திரக்கலையில் அதாவது இடது நாசியில் இயங்க வேண்டும்.
திங்கள் அன்று சூரியக்கலை அதாவது வலது நாசியில் சுவாசம் ஓடினால்- தாயிடம் வெறுப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, ஜலதோசம், தலைவலி, கண், காது நோய்கள் உண்டாகும்.
புதன் அன்று சூரியக்கலை ஓடினால்-மாமனாரிடம் மதிப்பு போகும், தாய்மாமனிடம் உறவு கெடும், உடல் வலி, குடைச்சல், மூட்டு வலி வரும்.
வெள்ளி அன்று சூரியக்கலை ஓடினால் -பார்வை பழுதாகும், தாம்பத்ய உறவு கெடும்.
சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு வலப்புறம் ஓடவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறுமணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சூரியக் கலையில் இயங்க வேண்டும்.
சனிக்கிழமை சந்திரக்கலை ஓடினால், கடன் தொல்லை, சண்டை சச்சரவு, சரும நோய், ஜூரம் வரும்.
ஞாயிறு அன்று சந்திரக்கலை ஓடினால், தந்தையிடம் அன்பு குறையும், தொழிலில் அமைதி இருக்காது, தலைவலி, இருமல், சளி உண்டாகும்.
செவ்வாய் அன்று சந்திரக்கலை ஓடினால், உடன்பிறந்தோரிடம் பிணக்கு, வெப்பக்காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்சுவலி ஏற்படும்.
வளர்பிறையில் வருகின்ற வியாழன் அன்று இடப்புறம் (சந்திரக்கலை) சுவாசம் நடைபெற வேண்டும். தேய்பிறையில் வருகின்ற வியாழன் அன்று வலப்புறம் (சூரியகலை) சுவாசம் நடைபெறவேண்டும்.
வியாழக்கிழமைகளில் மட்டும் பிறைக்குத் தக்க சரம் ஓடும். மேற்கண்டவாறு ஓடாமல் மாறி இயங்கினால், பெற்ற மக்களால் துயரம், அடிவயிற்று வலி, மலடு ஆதல் போன்றவை நிகழும்.
மேற்கண்டவாறு அந்தந்த நாட்களில் அந்தந்த சரம் ஓடவில்லை எனில் தக்க உபாயத்தினாலும் ஆசாரியரிடமும் பயின்று சர ஓட்டத்தை சரி செய்ய வேண்டும்.
-சிவசங்கர்
- பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்.
- பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.
"போனஸ்" என்றால் என்ன..?
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது...! (வருடத்திற்கு 52 வாரங்கள்)
ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல்படுத்தினார்கள். 4 வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்..!(12×4=48 வாரங்கள்) அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4 வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.
இந்தியர்னா சும்மாவா?
அதனை தரும்படி 1930-1940 களில் மகாராஷ்டிராவில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப்படுவதாக போராடினார்கள்.
அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்..!
அப்போது தான், தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது..! பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.
-நளன்
- வாழ்க்கை என்பதும் ஒரு தேர்வுதான்.
- வேறு விதத்தில் வரும் புகழ்கள் அல்ல என்று அறிந்து கொள்ள வேண்டும்.
ஒருவன் நன்றாக படித்து, நான் படித்து விட்டேன் என்று சொன்னால், "அப்படியா, எங்க நாலு கேள்வி கேக்குறேன், பதில் சொல்லு பார்க்கலாம்" என்று தானே உலகம் சொல்லும்.
படித்து, அறிந்து இருந்தாலும், தேர்வு எழுதி, அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, பள்ளியோ, கல்லூரியோ சான்றிதழ் வழங்கினால் தான் உலகம் ஏற்றுக் கொள்ளும்.
இவர் முதல் வகுப்பில் தேர்வு பெற்றார், இவர் இரண்டாம் வகுப்பு என்று மற்றவர் சொல்ல வேண்டும். நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் உலகம் நம்பாது.
வாழ்க்கை என்பதும் ஒரு தேர்வுதான். அதில் நாம் தேர்வு பெற்றோமா இல்லையா என்று உலகம் சொல்ல வேண்டும். அந்த உலகம் சொல்வதுதான் "புகழ்".
"அவர் நல்ல மனிதர், ஏழைகளுக்கு உதவி செய்வார், ஒருத்தரை ஒரு வார்த்தை கடிந்து பேச மாட்டார், நல்ல படித்த மனிதர், சிறந்த நடிகர், வள்ளல் " என்றெல்லாம் ஒருவரை உலகம் பாராட்ட வேண்டும். அந்த பாராட்டுதல்தான் புகழ் என்பது.
ஒருவன் இல்லறத்தை செம்மையாக நடத்துகிறான் என்பதற்கு சான்று, அவன் பெறும் புகழ். நல்ல மனைவியைப் பெற்று, இல்லற கடமைகளை சரிவர செய்து, விருந்தோம்பி, நடுவுநிலை தவறாமல் இருந்து, செய்நன்றி மறவாமல் இருந்து, இனியவை பேசி, அடக்கமாய் இருந்து, பொறாமை போன்ற குணங்கள் இல்லாமல் இருந்து, ஊருக்கும், தனி மனிதர்களுக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்து ஒருவன் சிறப்பான இல்லறம் நடத்தினால், அவனுக்கு நல்ல பேர் கிடைக்கும்.
வள்ளுவர் சொன்ன ஒவ்வொன்றையும் சரியானபடி செய்து வந்தால், புகழ் - தானே வரும். வள்ளுவர் கூறுகிறார் :
"வாழ்வின் நோக்கம் என்ன?
இந்த வாழ்க்கை வாழ்வதின் பலன் என்ன?
எதுக்காக நாம் வாழ்கிறோம்?
எப்படி வாழ வேண்டும்? என்று கேட்டால், மற்றவர்களுக்கு உதவி செய்வதும், புகழோடு வாழ்வதும், இந்த இரண்டைத் தவிர வாழும் உயிர்களுக்கு வேறு ஒரு பயனும் இல்லை" என்கிறார் .
பாடல் :
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
பொருள்:
ஈதல் = வறியவர்களுக்கு உதவுதல்
இசைபட = அதனால் வரும் புகழோடு
வாழ்தல் = வாழ்தல்
அதுவல்லது = அதைத் தவிர
ஊதியம் = பயன் ஏதும்
இல்லை உயிர்க்கு = இல்லை இந்த உயிர்களுக்கு
ஈதல், இசைபட வாழ்தல் - என்று இரண்டு விடயங்களைக் கூறி இருக்கிறாரே, உதவி செய்யாமல், வேறு விதத்தில் புகழ் வந்தால் பரவாயில்லையா?
ஒலிம்பிக்கில் மெடல் வாங்கி, நாட்டிலேயே முதல் மாணவனாக தேர்வு பெற்று, சிறந்த நடிகர், எழுத்தாளர், பாடகர் என்றெல்லாம் புகழ் அடைந்தால் போதாதா? - என்றால் போதாது என்கிறார் .
ஈதல், இசைபட வாழ்தல் "அது" அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்றார்.
ஈதல் மூலம் வரும் புகழ் தான் வாழ்வின் பயன். வேறு விதத்தில் வரும் புகழ்கள் அல்ல என்று அறிந்து கொள்ள வேண்டும்.
" உயிர்க்கு" என்று பொதுவாகச் சொன்னாலும், இது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். விலங்குகள், தன்னைவிட வறுமையில் உள்ள மற்ற விலங்குகளுக்கு உதவி செய்வதில்லை. எனவே, உயிர் என்றது மனித உயிர்கள் என்று கொள்ள வேண்டும் என்கிறார்கள் சான்றோர்கள்.
-பி.டி.அரசு
- தனது இனத்தைப் பெருக்கி ஒவ்வொருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவி அந்த வைரஸ்கள் மகிழ்ச்சியாக இருக்கும் காலம் இது.
- சீசனல் ஜூரங்களில் அரிதிப் பெரும்பான்மை வைரஸ்களால் பரவுபவை.
மழைக்காலம் தொடங்கி தமிழ்நாட்டில் பருவகால காய்ச்சல் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளது. பொதுவாக வருடத்தின் இந்த மாதங்களில் காய்ச்சல் தொற்றுப் பரவல் நிலை அதிகரிப்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே ஆகும்.
சுவாசப்பாதை வழியே பரவும் வைரஸ்களுக்கு இந்த பருவ நிலை மிகவும் தோதானதாக இருப்பதால் இருமல், தும்மல், சளியை வெளியே துப்புவது, சளியை சிந்திய கைகளுடன் பல இடங்களில் தொட்டு வைப்பது என்று ஜாலியாக தனது இனத்தைப் பெருக்கி ஒவ்வொருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவி அந்த வைரஸ்கள் மகிழ்ச்சியாக இருக்கும் காலம் இது.
இதை மருத்துவர்கள் "சீசனல் ஜூரம்" என்று குறிப்பிடுவோம். இத்தகைய சீசனல் ஜூரங்களில் அரிதிப் பெரும்பான்மை வைரஸ்களால் பரவுபவை.
காய்ச்சல், மூக்கு அடைப்பு/ ஒழுகுதல், தொண்டை வலி, இருமல், உடல் வலி / சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
பெரும்பான்மை தொற்றுகள் ஓரிரு நாட்கள் ஓய்வு, முறையான மருத்துவ சிகிச்சை, உணவு முறை எடுத்தால் குணமாகிவிடும்.
எனினும் இந்த காலங்களில் பிரச்சனைக்குரிய வைரஸ்களான பன்றிக் காய்ச்சல் வைரஸ், கொரோனா வைரஸ் என்று பரவி குழந்தைகளுக்கும் முதியவர்களளுக்கும் இதய / சிறுநீரக/ கல்லீரல் நோய்கள் கொண்டவர்களுக்கு ஏற்படும் போது தீவிர நிலையை எட்டக்கூடும்.
இத்தகைய தீவிர நிலையில் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள்..
- கடுமையான அடங்காத காய்ச்சல்
- மூச்சுத்திணறல்
- நடக்கும் போது தலைசுற்றல்
- மூச்சு ஏங்கி ஏங்கி விடுவது
- அதீத உடல் சோர்வு
- உணவு உண்ண இயலாமை
- பசி அற்றுப்போதல்
- சிறுநீர் அளவில் குறைதல்
இத்தகைய அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும். தீவிர சிகிச்சை தேவை.
மழைக்காலத்தில் இன்னொரு பிரச்சனை கொசு மூலம் பரவும் டெங்கு போன்ற பிரச்சனைக்குரிய நோய் தொற்றுகள்.
டெங்குவில் "முதல் மூன்று" நாட்கள் அதீத உடல் சூடு இருக்கும். கூடவே கண்களுக்குள் வலி , முதுகுவலி, மூட்டுகளில் கடும் வலி ஏற்படும்.
அபாய அறிகுறிகள்..
உணவு உண்ண இயலாமை, சிறுநீர் அளவில் குறைதல், ஈறுகளில் ரத்தக் கசிவு, மலம் கருப்பாக வெளியேறுதல், கடும் வயிற்று வலி, உடல் முழுவதும் செந்நிறப் படை தோன்றுதல் போன்ற அபாய அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்.
காய்ச்சல், இருமல், தும்மல் இருந்தால் வீட்டில் ஓய்வு எடுப்பது, பிறருக்கு தொற்று பரவாமல் இருக்கவும், ஓய்வு எடுப்பதால் உடல் நலம் குணமாகவும் உதவுகிறது.
தொற்று ஏற்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது தொற்றுப் பரவலை தடுக்க உதவுகிறது.
சுய மருத்துவம் / மருந்தக மருத்துவத்தை தவிர்த்து விட்டு மருத்துவரை நேரடியாக சென்று பார்த்து சிகிச்சை பெறுவதே சரியான வழிமுறை.
-டாக்டர் .அ.ப.ஃபரூக் அப்துல்லா
- அன்புள்ளவர்களிடம் தான் பிடிவாதம் இருக்காது.
- அமைதியான குடும்பமே நல்ல குடும்பம்.
இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி?
மூன்று பண்புகள் வேண்டும். அவை..
1. விட்டுக் கொடுப்பது,
2. அனுசரித்துப் போவது,
3. பொறுத்துப் போவது.
இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது என்றார் மகரிஷி.
இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.
"விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்...யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?
பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!"
எல்லோரும் ஆவலோடு மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள்.
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா?அல்லது மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா?
மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார்.
"யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள் தான் பொறுத்துப் போவாகள்."
அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது. ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார்:
"அன்புள்ளவர்களிடம் தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள்."
அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும் என்கிறார் மகரிஷி.
- தமிழகத்தில் ஆசீவகர்கள் சங்ககாலத்தில் இருந்தே வாழ்ந்து வருகின்றனர்.
- எழுத்தே இல்லாதவர்கள் நமக்கு எழுத்து கொடுத்தவர்களாக சித்தரிக்கப்பட்டனர்.
இந்திய வரலாற்றில் மறைந்து போன மதங்களில் ஒன்று ஆசீவகம். சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாம் அறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு.
ஆதிநாதர் முதலான 23 தீர்த்தங்கரர்கள் ஜைனர்கள், ஆசீவகர்கள் - ஆகிய இருவருக்கும் பொது. இதனால்தான் இவர்கள் இருவருமே சமணர்கள்.
ஆனால் ஜைனருக்கு மகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர், ஆசீவகர்களுக்கோ மர்கலி 24ஆவது தீர்த்தங்கரர். உண்மையில் ஆசீவகம் ஜைனத்தின் போட்டி மதம். ஆனால் பின்னர் நலிவடைந்த ஆசீவகத்தை, ஜைனம் கைப்பற்றி சுவடே தெரியாமல் போகுமாறு செய்தது.
அப்படியாக அழிந்து போயிருந்த ஆசீவக வரலாற்றை அதன் கடைசி சல்லிவேரில் இருந்து மீட்டு எடுத்தவர் ஆய்வாளர் க.நெடுஞ்செழியன் அவர்கள்.
தலைமுடியை தனது கைகளால் பிய்த்து (மயிர் பறித்து) மொட்டைத் தலையோடு துறவிகளாகும் ஜைனர்களும், நீண்ட தலைமுடியோடு உள்ள ஆசீவகர்களும் 'சமணர்' - என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் வழிபாடுகள் கொள்கைகள் வேறுவேறு. ஜைனர்களும் பவுத்தர்களைப் போல 'வானத்தை பூதமாக ஏற்க இயலாது, மொத்தம் 4 பூதங்களே'-என்ற போது, 'வானமே முக்கியமானது, மொத்தம் 5 பூதங்கள்'-என்று சொன்னவர்கள் ஆசீவகர்கள்.
எதையும் விவாதித்து விளக்கும் மரபினர் ஆசீவகர்கள், இவர்கள் வசித்த இடங்களான 'பள்ளி'கள் மக்களுக்குக் கல்வி கொடுத்ததன் தொடர்ச்சியாகவே பின்னர் கல்வி நிலையங்களுக்கு 'பள்ளி' என்ற பெயர் வந்தது.
மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக ஆசீவகர்களைப் பல்வேறு இலக்கியங்கள் குறிக்கின்றன, குறிப்பாக மனநல மருத்துவத்தில் இவர்கள் நிபுணர்களாக இருந்துள்ளனர்.
ஆனால் 'தீமை என்ற ஒன்று இல்லை, எல்லாம் ஊழ்'-என்ற வினைக் கோட்பாடு இவர்களை வீழ்தியது. மக்கள் பரிகார லஞ்சங்களோடு வந்த பிற மதங்களின் பக்கம் ஈர்க்கப்பட, அறிவார்ந்த மதமான ஆசீவகம் அழிந்தது.
கி.மு.5-3ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவரை செல்வாக்கோடு இருந்த ஆசீவகம், 13-15ஆம் நூற்றாண்டுகளில் பெரும் தேய்வை சந்தித்தது. ஆசீவகம் கடைசி மூச்சை விட்ட இடமும் தமிழகம்தான்.
தமிழகத்தில் 'சமணர் கழுவேற்றம்'-என்று சொல்லப்படுவது பெரும்பாலும் ஆசீவகர் கழுவேற்றமாகவே இருந்துள்ளது, அதற்கு சடைமுடியோடு ஆசீவகர்கள் கழுவேறும் சிற்பங்களும் ஓவியங்களும் சான்றுகளாகின்றன.
அதுபோல சமணர் ஓவியம் என்று சொல்லப்படும் சித்தன்னவாசல் குகை ஓவியங்களிலும் முடிநீண்ட ஆசீவகர்களே உள்ளனர்.
தமிழகத்தில் ஆசீவகர்கள் சங்ககாலத்தில் இருந்தே வாழ்ந்து வருகின்றனர். கி.மு.5ஆம் நூற்றாண்டுவரை பழமையானது எனக் கருதப்படும் மாங்குளம் கல்வெட்டில் சமணர் என்ற பெயர் காணப்படுகின்றது. இவர்களின் சான்றுகளைத் திரித்துதான், 'தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்தே ஜைனர்கள் உள்ளனர், வடக்கில் இருந்து தமிழருக்கு எழுத்தை அறிமுகப்படுத்தியவர்களே ஜெயினர்கள்தான்'-என்ற கூற்று முன்வைக்கப்பட்டது.
தங்களுக்கு மொழி இல்லாத காரணத்தால்தான் ஜைனர்கள் சமஸ்கிருதத்தையும் பிராமி எழுத்தையும் எடுத்துக் கொண்டனர் - என்பதுதான் வட இந்திய வரலாறு. ஆனால் எழுத்தே இல்லாதவர்கள் நமக்கு எழுத்து கொடுத்தவர்களாக சித்தரிக்கப்பட்டனர். நாமும் நம்பி வந்தோம்.
அதை உடைத்து, 'சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்தவர்கள் ஜைனர்கள் அல்ல ஆசீவகர்கள். ஆசீவகம் தமிழரின் அறிவை வடக்குக்கு கொண்டு சென்றது, வடக்கில் இருந்து எழுத்தோ, வானியலோ இங்கு வரவில்லை'-என்று சான்றுகளோடு எழுதியவர் க.நெடுஞ்செழியன் அவர்கள்.
- இரா. மன்னர் மன்னன்.
- ஒரு முக்கியப் பொருளாக வெற்றிலையை நம் முன்னோர்கள் இணைத்துள்ளனர்.
- மருத்துவரீதியான பல காரணங்களும் உண்டு.
வெற்றிலைக் கொடிக்கால், வெற்றிலை விசாயிக்குக் கோவில் போன்றது. வெற்றிலைக் கொடிக்காலில் செருப்பணிந்து செல்ல மாட்டார்கள். மது அருந்தியோ மாமிசம் உண்டோ செல்லக்கூடாது என்பது எழுதப்படாத விதி. வெற்றிலை மண்டிகளிலும் பெரும்பாலும் செருப்பணிந்துப் பணியாற்றுவதில்லை.
நம் சமூகப் பழக்கவழக்கங்களோடும் இறை வழிபாட்டோடும் பிரிக்க இயலாத ஒரு முக்கியப் பொருளாக வெற்றிலையை நம் முன்னோர்கள் இணைத்துள்ளனர். அதற்கு மருத்துவரீதியான பல காரணங்களும் உண்டு.
தாம்பூலம் தரிப்பது என்பது வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றையும் சேர்த்து வாயிலிட்டு மெல்வது ஆகும். அதனின்று வரும் உமிழ்நீர் வாய் துர்நாற்றத்தைப் போக்குவதுடன் சீரணத்தையும் துரிதப்படுத்தும்.
வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த நீரை அந்தி சந்தி என இருவேளை பருகி வரும்போது நல்ல ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெறலாம்.
வெற்றிலையோடு சிறிது சுண்ணாம்பும் சிறிது பாக்கும் சேர்த்து மெல்வதால் கிடைக்கும் சத்து, 300 மி.லி. பாலில் இருந்து கிடைக்கும் சத்துக்கு இணையானதாகும்.
தாம்பூலம் தரிப்பதால் ஈறுகளினின்று ரத்தம் கசிவது நின்றுவிடும். வெற்றிலையை வேக வைத்து நசுக்கி ஈறுகளின்மேல் தேய்ப்பதால் ஈறுகளின் ரத்தக்கசிவு நிற்பதுடன் பற்கள் கெட்டிப்படும்.
உடலில் தீப்பட்டதால் காயங்கள் ஏற்பட்டபோது இளம் வெற்றிலையை தீக்காயங்களின் மேல் வைத்துக்கட்ட விரைவில் புண்கள் ஆறும்.
சுக்கு, மிளகு, திப்பிலி
சிறு குழந்தைகளுக்கு மலக்கட்டு ஏற்பட்டு வேதனையுறும்போதும், வயிற்றுப் பொருமல் வலி ஆகியன வந்தபோதும் வெற்றிலைக்காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து ஆசன வாயினுள் நுழைத்து வைக்க சிறிது நேரத்தில் மலம் வெளிப்பட்டு குழந்தையின் வயிற்றுத் தொல்லைகள் போகும்.
வெற்றிலைச்சாற்றோடு சம பங்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து உள்ளுக்குக் கொடுக்க சுவாச அறை கோளாறுகள் அத்தனையும் குணமாகும்.
திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்தோடு வெற்றிலை சாறும் தேனும் கலந்து உள்ளுக்குக் கொடுக்க ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய், நெஞ்சுச்சளி, இருமல் குணமாகும்.
பாம்பு கடித்தவர்களுக்கு உடன் வெற்றிலைச்சாறு பருகக் கொடுப்பதால் விஷம் முறிந்து குணமாகும். இதனாலேயே இதற்கு நாகவல்லி என்றும் ஒரு பெயர் விளங்குகிறது.
வெற்றிலைச்சாற்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாக சூடு செய்து வெதுவெதுப்பான நிலையில் நெற்றிப்பொட்டுகளின் மேல் தடவ தலைவலி விலகும்.
இரவு படுக்கும்முன் 2 தேக்கரண்டி வெற்றிலைச்சாற்றுடன் சிறிது ஓமத்தைப் பொடித்துச் சேர்த்து குடித்துவர மூட்டுவலி, எலும்பு வலி ஆகியன குணமாகும்.
-வீரமணி
- பலருக்கு புதிதாக சர்க்கரை நோயில் தொடங்கி கொலஸ்ட்ரால் உள்ளிட்ட வேறு சில வியாதிகளும் வரலாம்.
- வாய்வுக்கோளாறுகள் இருந்தால் வெள்ளைப்பூண்டை தீயில் சுட்டு சாப்பிடுங்கள்.
தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் என வரிசைகட்டி நிற்கும். புத்தாடை உடுத்திக்கொண்டு கவனமாக பட்டாசு கொளுத்துங்கள். நீங்களோ, குழந்தைகளோ வெடி வெடிக்கும்போது உங்களையும், மற்றவர்களையும் பாதிக்காதவாறு இருப்பது நல்லது.
மற்றபடி, எண்ணெய்ப்பலகாரங்கள், அசைவ உணவு சாப்பிடுவதால் சிலருக்கு ஜீரணக்கோளாறு ஏற்பட்டு வயிறு வலியில் தொடங்கி வயிறு வீக்கம், ஏப்பம், மலச்சிக்கல், மூச்சுத்திணறல் மட்டுமல்ல... பலருக்கு புதிதாக சர்க்கரை நோயில் தொடங்கி கொலஸ்ட்ரால் உள்ளிட்ட வேறு சில வியாதிகளும் வரலாம்.

சுக்கு காபி
ஆகவே, உண்ட உணவு ஜீரணமாக முன்னெச்சரிக்கையாக ஓமத்தை வறுத்து பனைவெல்லம் கலந்து சாப்பிடுங்கள். காலை வேளையில் இஞ்சி டீ, துளசி டீ...மதிய வேளையில் புதினா ஜூஸ்... மாலை வேளையில் சுக்கு, மிளகு, கொத்தமல்லி (தனியா), ஏலக்காய் கலவையிலான சுக்கு காபி போட்டு குடியுங்கள்.
வாய்வுக்கோளாறுகள் இருந்தால் வெள்ளைப்பூண்டை தீயில் சுட்டு சாப்பிடுங்கள். எனக்கொன்றும் பிரச்சினையில்லை என்று சொல்லாமல் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உங்கள் உடல்நலனையும் காத்துக்கொள்ளுங்கள்.
-மரிய பெல்சின்
- தன்னை அறிதல் என்பது ஒரு மிகப்பெரிய ஞானம்.
- அலைபாயாத மனதால் மட்டுமே தன்னை அறிய முடியும்.
உலகியல் பற்றிய அறிவு மட்டுமே அறிவு என்று நம்பிக்கொண்டும் அதையே சொல்லிக்கொண்டும் அதற்காக அலைந்துக்கொண்டும் இருக்கிறது இந்த உலகம். உலகியல் பற்றிய அறிவு மட்டுமே அறிவு என்று நம்புவது உண்மையில் அறியாமை.
தன்னையே தான்முழுவதும் அறிந்து வைத்திருக்கிற அறிவுதான் உண்மை அறிவு. தன்னை அறிதல் என்பது ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, முன்னேற்றத்திற்கும் அதுவே அடைப்படை !
தன்னையே தன்னுடைய குறைநிறைகளோடு தனக்குத் தெரியாதென்றால் பிறரையும் பிறவற்றையும் நாம் அறிவதிலும் என்ன முழுமை இருக்க முடியும்?
தன்னை அறிதல் என்பது ஒரு மிகப்பெரிய ஞானம். தன்னை அறிகிற வேலையை விட்டுவிட்டு மற்றவற்றையெல்லாம் அறிகிற அறிவு பேய் அறிவு.! என்கிறார் திரு மூலர்.
தன்னை அறிவது அறிவாம் அஃதுஅன்றிப்
பின்னை அறிவது பேய்அறிவு ஆகுமே
-(திருமந்திரம் 2318)
பேய்கள் ஓர் இடத்தில் நிலைகொள்ளாமல் உழலும்; அங்கும் இங்கும் அலையும்; தவிக்கும். அவற்றுக்கு ஏதேனும் ஒரு பிடிமானத்தில் தங்களை நங்கூரம் இட்டு நிறுத்திக்கொள்ளத் தெரியாது.
அதைப் போல, கண்டதையெல்லாம் அறிந்து, உலகில் தான் அறிந்ததை எல்லாம் தனக்கே உரித்தாக்கிக்கொள்ள நினைத்து, தானே அத்தனைக்கும் ஆசைப்பட்டு, அதன் பின்னால் ஓடி ஓடிஅலைந்து , அது கிடைத்துவிட்டால் அதை நுகர்ந்து பின்மனம் சலித்து, கிடைக்காவிட்டால் அதுபற்றியே வருந்தி மனம் இளைக்க செய்வது பேய் அறிவு.
அறிய வேண்டியதான தன்னபை்பற்றி அறிய, மனம் நங்கூரம் இட்டது போல் நிலைபெறவேண்டும். அலைபாயாத மனதால் மட்டுமே தன்னை அறிய முடியும்.
-அண்ணாமலை சுகுமாரன்
- மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
- உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
உலகில் மனித சமுதாயம் நிலைத்திருக்க பிரதான காரணியாக அமைவது தாம்பத்ய உறவுதான். கணவன் மனைவி இடையே அன்பை வெளிப்படுத்துவதில் ஏற்படும் தயக்கம்தான் சிக்கலுக்கு காரணமாகிறது.
தன்னை நேசிக்கும் கணவரையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். எனவே இதனை கணவன் புரிந்து கொண்டு அடிக்கடி ஐ லவ் யூ சொல்லி மனைவியின் மனதை ஆறுதல் படுத்தவேண்டும்.
மனைவி தன் கணவனிடம் பின்வரும் விடயங்களை எதிர்பார்க்கின்றனர்.
அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
மனது புண்படும்படி பேசக் கூடாது.
கோபப்படக்கூடாது.
சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
பலர் முன் திட்டக்கூடாது.
எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
வித்தியாசமாக ஏதாவது செய்தால் இரசிக்க வேண்டும். பாராட்ட வேண்டும்.
பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
குழந்தைகள் தவறு செய்துவிட்டால் 'இது உன் குழந்தை என்று ஒதுங்கக் கூடாது.
அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்.ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவியே.
எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக தாம்பத்தியத்தில் மனைவி திருப்தி அடைந்தாளா? என்பதில் அக்கறையாக இருக்க வேண்டும்.
தவறு செய்யாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை. கணவனோ அல்லது மனைவி தவறு செய்தால் அவற்றை குத்திக்காட்டி பேசுவதை விட பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தவே முற்பட வேண்டும். தம்பதியரிடையே மன்னிக்கும் அம்சம் இல்லாவிட்டால் எந்த உறவும் நிலைத்திருக்க முடியாது.






