என் மலர்
கதம்பம்

யார் விட்டுக் கொடுப்பது?
- அன்புள்ளவர்களிடம் தான் பிடிவாதம் இருக்காது.
- அமைதியான குடும்பமே நல்ல குடும்பம்.
இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி?
மூன்று பண்புகள் வேண்டும். அவை..
1. விட்டுக் கொடுப்பது,
2. அனுசரித்துப் போவது,
3. பொறுத்துப் போவது.
இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது என்றார் மகரிஷி.
இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.
"விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்...யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?
பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!"
எல்லோரும் ஆவலோடு மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள்.
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா?அல்லது மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா?
மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார்.
"யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள் தான் பொறுத்துப் போவாகள்."
அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது. ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார்:
"அன்புள்ளவர்களிடம் தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள்."
அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும் என்கிறார் மகரிஷி.






