என் மலர்
கதம்பம்

மருந்தாகும் வெற்றிலை
- ஒரு முக்கியப் பொருளாக வெற்றிலையை நம் முன்னோர்கள் இணைத்துள்ளனர்.
- மருத்துவரீதியான பல காரணங்களும் உண்டு.
வெற்றிலைக் கொடிக்கால், வெற்றிலை விசாயிக்குக் கோவில் போன்றது. வெற்றிலைக் கொடிக்காலில் செருப்பணிந்து செல்ல மாட்டார்கள். மது அருந்தியோ மாமிசம் உண்டோ செல்லக்கூடாது என்பது எழுதப்படாத விதி. வெற்றிலை மண்டிகளிலும் பெரும்பாலும் செருப்பணிந்துப் பணியாற்றுவதில்லை.
நம் சமூகப் பழக்கவழக்கங்களோடும் இறை வழிபாட்டோடும் பிரிக்க இயலாத ஒரு முக்கியப் பொருளாக வெற்றிலையை நம் முன்னோர்கள் இணைத்துள்ளனர். அதற்கு மருத்துவரீதியான பல காரணங்களும் உண்டு.
தாம்பூலம் தரிப்பது என்பது வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றையும் சேர்த்து வாயிலிட்டு மெல்வது ஆகும். அதனின்று வரும் உமிழ்நீர் வாய் துர்நாற்றத்தைப் போக்குவதுடன் சீரணத்தையும் துரிதப்படுத்தும்.
வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த நீரை அந்தி சந்தி என இருவேளை பருகி வரும்போது நல்ல ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெறலாம்.
வெற்றிலையோடு சிறிது சுண்ணாம்பும் சிறிது பாக்கும் சேர்த்து மெல்வதால் கிடைக்கும் சத்து, 300 மி.லி. பாலில் இருந்து கிடைக்கும் சத்துக்கு இணையானதாகும்.
தாம்பூலம் தரிப்பதால் ஈறுகளினின்று ரத்தம் கசிவது நின்றுவிடும். வெற்றிலையை வேக வைத்து நசுக்கி ஈறுகளின்மேல் தேய்ப்பதால் ஈறுகளின் ரத்தக்கசிவு நிற்பதுடன் பற்கள் கெட்டிப்படும்.
உடலில் தீப்பட்டதால் காயங்கள் ஏற்பட்டபோது இளம் வெற்றிலையை தீக்காயங்களின் மேல் வைத்துக்கட்ட விரைவில் புண்கள் ஆறும்.
சுக்கு, மிளகு, திப்பிலி
சிறு குழந்தைகளுக்கு மலக்கட்டு ஏற்பட்டு வேதனையுறும்போதும், வயிற்றுப் பொருமல் வலி ஆகியன வந்தபோதும் வெற்றிலைக்காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து ஆசன வாயினுள் நுழைத்து வைக்க சிறிது நேரத்தில் மலம் வெளிப்பட்டு குழந்தையின் வயிற்றுத் தொல்லைகள் போகும்.
வெற்றிலைச்சாற்றோடு சம பங்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து உள்ளுக்குக் கொடுக்க சுவாச அறை கோளாறுகள் அத்தனையும் குணமாகும்.
திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்தோடு வெற்றிலை சாறும் தேனும் கலந்து உள்ளுக்குக் கொடுக்க ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய், நெஞ்சுச்சளி, இருமல் குணமாகும்.
பாம்பு கடித்தவர்களுக்கு உடன் வெற்றிலைச்சாறு பருகக் கொடுப்பதால் விஷம் முறிந்து குணமாகும். இதனாலேயே இதற்கு நாகவல்லி என்றும் ஒரு பெயர் விளங்குகிறது.
வெற்றிலைச்சாற்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாக சூடு செய்து வெதுவெதுப்பான நிலையில் நெற்றிப்பொட்டுகளின் மேல் தடவ தலைவலி விலகும்.
இரவு படுக்கும்முன் 2 தேக்கரண்டி வெற்றிலைச்சாற்றுடன் சிறிது ஓமத்தைப் பொடித்துச் சேர்த்து குடித்துவர மூட்டுவலி, எலும்பு வலி ஆகியன குணமாகும்.
-வீரமணி






