என் மலர்
கதம்பம்

சஷ்டி விரத ரகசியம்
- நமது உடலை இயக்கும் “உயிர்சக்தி” மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது.
- உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.
வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.
நமது உடலை இயக்கும் "உயிர்சக்தி" மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும்.
இது தான் அந்த மூன்று சக்தி
(1) - செரிமான சக்தி
(2) - இயக்க சக்தி
(3) - நோய் எதிர்ப்பு சக்தி
இதில் ஒவ்வொன்றாக எப்படி வேலை செய்கிறது என்று சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.
காய்ச்சலின் போது உங்களுக்கு பசிக்குமா? பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது. காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா? முடியாது, உடல் இயக்க சக்தியை குறைத்துக்கொள்ளும். எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.
மதியம் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியுமா? முடியாதல்லவா, உடல் இயக்கம் சக்தியை குறைத்துக்கொள்ளும், நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.
உண்ணா நோன்பு இருக்கிறீர்கள். செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா? இல்லை. இயக்க சக்தியையும் குறைத்துக்கொள்வோம். இப்பொழுது செரிமானம் மற்றும் இயக்க சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு? என்ன? பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்திவிடும்.
இப்படி மூன்று சக்திகளும் அந்தந்த நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடம் இருந்து சக்தி பெற்று, மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும்.
உடல் முதல் முக்கியத்துவம் செரிமானத்திற்கு கொடுப்பதால் ஒவ்வொறு முறை நாம் உணவு எடுக்கும் போது, உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்துவிடும். ஏனென்றால் வெளியில் இருந்து ஒரு பொருள் வருகிறது. அது என்ன, ஏது என உடல் பார்த்து சீரமைக்க வேண்டும்.
உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.
உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.
இதற்காக நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாள் தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அந்த ஆறு நாளும் ஆறுமுகனை மையப்படுத்தி அழகான ஒரு திருவிழாவாக வடிவமைத்து உள்ளார்கள்.
ஆம், அது தான் தீபாவளி முடிந்து வரும் மறைமதியை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படும் "கந்த சஷ்டி விழா". கந்த சஷ்டி விழா என்றாலே நமது நினைவிற்கு வருவது "சஷ்டி விரதம்" தான்.
"செரிமான சக்தி" தான் முருகனின் தாய்.
"நோய் எதிர்ப்பு சக்தி" தான் 'முருகன்.
"நோய்" தான் அரக்கன்.
வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது.
இந்த விழாவில் எப்படி முருகப்பெருமான் தனது தாயிடம் இருக்கு சக்தி பெற்று அசூரனை வதம் செய்கிறாறோ, அதேப்போல் நமது உடலில் உள்ள "நோய் எதிர்ப்பு சக்தி" தனது தாயான செரிமான சக்தியிடம் இருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது.
வெளியில் முருகனுக்கும், அரக்கனுக்கும் நடக்கும் அதே போர் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்று உலகிற்கே தெரியும்.
உடலில் நடக்கும் இந்த அறிவியல் உண்மையை நமக்கு சூட்சமமாக சொல்லவோ என்னவோ, ஆறு நாட்களையும் "உண்ணா நோன்புடன்" அழகான விழாவாக வடிவமைத்துள்ளார்கள்.
உண்ணாநோன்பு இருப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்.
-மதிவாணன்






