என் மலர்tooltip icon

    மற்றவை

    • ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை வரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.
    • ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

    "பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது" என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும். ஆனால், "அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு" என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

    பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.

    நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.

    காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் `இல்லை இல்லை' என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.

    நன்றாகத் தலையாட்டத் தெரிந்த அழகர் கோவில் மாட்டை விடவா அவன் உயர்ந்து விட்டான்.

    ஆனால், ஆஸ்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு காரணம் சொல்லியாக வேண்டும்.

    சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.

    ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை வரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.

    ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான். ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

    அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை. வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

    ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன' என்று சொல்லத் தெரிகிறதே தவிர, அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

    பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.

    "கோவிலுக்குப் போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?" "அப்படிக் கோவிலிலே என்ன இருக்கிறது?" என்று நாஸ்திகன் கேட்கிறான்.

    அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில், `அந்தத் தேங்காய்க்குள் என்ன இருக்கிறது?' என்பது அவனுக்குத் தெரியுமா?

    அதில் வழுக்கையும் இருக்கலாம், முற்றிய காயும் இருக்கலாம்.

    ஆகவே, உடைத்த பின்பே காயைக் கண்டு கொள்ளும் மனிதன், உணர்ந்த பின்பு தெய்வத்தைக் காண முடியும் என்பது உறுதி.

    `கடவுளே இல்லை' என்று வாதாடியவன் எவனும் `எனக்கு மரணமே இல்லை' என்று வாதாட முடியவில்லையே!

    `மரணம்' என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது...!

    'இல்லை' என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை.

    எதைக் கேட்டாலும் `இல்லை' என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.

    ஆனால் `உண்டு' என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.

    -கவியரசு கண்ணதாசன்...!

    • வாய்வுக் கோளாறுகளை சரி செய்யக்கூடியது இது.
    • பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்துட்டு வந்தா எலும்புகள் உறுதியா வளரும்.

    `பிரண்டை தெரியுமா..?'னு கேட்டா பலபேர் `அது என்ன செடியா?.. இல்ல கொடியா?'னு கேக்குறாங்க. பிரண்டை நல்லதொரு மூலிகை. ஆனால் வெறும் கையால் அதை உடைத்தால் கைகளில் நமைச்சல் எடுக்கும்.

    வாய்வுக் கோளாறுகளை சரி செய்யக்கூடியது இது. வயிறு உப்பிசத்துக்கு நண்பர் ஒருவர் ஏதேதோ வைத்தியம் செய்து பார்த்தும் பலனளிக்காத பட்சத்தில், நான் சொன்னபடி பிரண்டையை துவையலாக செய்து சாப்பிட்டார்; நாலைந்து நாட்களில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக சொன்னார்.

    பிரண்டைத்து வையல் செய்றது எப்படின்னு தெரியாதவங்க இங்கே படிங்க...

    பிரண்டைத் தண்டுகளோட மேல் தோலைச் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்கணும். தேவைப்பட்டா உளுந்து, தேங்காய் சேர்த்து வதக்கி அரைக்கலாம். சிலபேர் கடுகு, உளுந்து சேர்த்து தாளிப்பாங்க. அப்பிடி ரெடியான துவையலை சாதத்தோட சேர்த்துப் பிசைஞ்சி சாப்பிடலாம். இந்த மாதிரி செய்தா குடல் வாயு சரியாகுறதோட ரத்த மூலம் குணமாகும். வயிற்றுப் பூச்சிகளும் விலகிரும்.

    இந்த பிரண்டைத் துவையலை நம்மளோட தினசரி உணவில் சேர்த்துக்கிட்டா உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகள் பலப்படும். பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்துட்டு வந்தா எலும்புகள் உறுதியா வளரும்.

    மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் சீக்கிரமா ஒண்ணு சேர்றதுக்கு இது உதவும்.

    இந்த மாதிரி ரொம்ப எளிமையான வைத்தியம் நம்ம கையில இருக்கும்போது நாம ஏன் எது எதையோ தேடிப்போகணும்..?

    -மரிய பெல்சின்

    • பனையின் ஒவ்வொரு பகுதிகளும் உலகின் உபயோகத்திற்கு வந்திருக்கும்.
    • பாலினைப்போல் 3 மடங்கு புரதச் செறிவுள்ள பானம் நுங்கு என்பதை மனதில் நிறுத்துவோம்.

    பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும்.

    இலகுவில் ஏமாறக்கூடிய மனம்படைத்த நாமும் பணத்தை வாரி இறைத்து அவற்றை வாங்கி உண்டிருப்போம். இதே பனைமரங்கள் அமெரிக்கா தேசத்திலே வளருபவையாக இருந்திருந்தால் பனங்கிழங்குகளின் மருத்துவக் குணங்களை உலகறிந்திருக்கும்.

    கருப்பட்டிகள் அருமருந்தாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். நுங்குகளின் மகத்துவம் பேசப்பட்டிருக்கும். ஒடியல், புழுக்கொடியல், மாவகைகள் உலக சந்தையிலே பெரும் இடத்தைப் பிடித்திருக்கும். பனையின் ஒவ்வொரு பகுதிகளும் உலகின் உபயோகத்திற்கு வந்திருக்கும்.

    ஆனால் பாவம் இந்தப் பனைமரங்கள் பாவப்பட்ட எம்மக்கள் மத்தியிலே தோன்றி பொலிவிழந்து காணப்படுகிறது.

    பானங்களிலே அதிகூடிய புரதச்செறிவுடைய பானம்நுங்கு என்பது நம்மில் பலருக்கு தெரியாது. பால் தான் புரதச்செறிவுடைய பானம் என்று நினைத்துக் கொள்கிறோம். 100 கிராம் பாலிலே 3.3 கிராம் புரதம் இருக்கிறது. ஆனால் 100 கிராம் நுங்கிலே 10.8 கிராம் புரதம் இருக்கிறது. பாலினைப்போல் 3 மடங்கு புரதச் செறிவுள்ள பானம் நுங்கு என்பதை மனதில் நிறுத்துவோம்.

    நுங்கினுடைய உலர்நிறையிலே 60% புரதமும் 30% மாப்பொருளும் இருப்பதுடன் மிகக்குறைந்தளவு கொழுப்பே இதனில் காணப்படுகிறது. பனங்கூடல்களுக்குள் வசிக்கும் எமது சிறார்கள் புரதக் குறைபாட்டினால் அவதியுறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு இந்த நுங்கின் மகத்துவம் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை.

    எம்மத்தியிலே ஒரு கோடிக்கும் அதிகமான பனைகள் இருந்தும் அவற்றில் இருந்து கிடைக்கும் பனம்பழங்களில் 5 வீதமான பனம்பழங்கள் கூட உபயோகப்படுத்தப்படுவதில்லை. வண்டுகளிடமிருந்தும் புழுக்களிடமிருந்தும் அவற்றை முற்றாகக் காப்பாற்றி அனைத்துப்பழங்களையும் முழுமையாகப் பயன்படுத்துவது எப்படி என்பது சம்பந்தமான வழிமுறைகளை நாம் ஆராயவில்லை.

    புரதச்சத்தது நிறைந்த வைட்டமின்கள், கனியுப்புக்கள் நிறைந்த எமது அரும் சொத்தான பனம்பழங்கள் வீணடிக்கப்பட்டு மண்ணுக்கு உரமாகிக்கொண்டிருக்கின்றன.

    பனம்பழங்களின் உலர்நிறையில் 11 வீதம் புரதமும் பெருமளவு பீட்டா கரோட்டினும் ஏனைய வைட்டமின்களும் இரும்பு, கால்சியம் போன்ற கனியுப்புக்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தப் பனம்பழங்களை மக்கள் விரும்பி உண்ணக்கூடிய வகையில் எவ்வாறு மாற்றங்கள் செய்வது என்பது சம்பந்தமான பல ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். சோடாவுக்கு மாற்றீடாக பனம் பழங்களிலிருந்து பலவகையான சுவையான பானங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இடியப்பத்தினுள்ளும் பிட்டினுள்ளும் பனங்களி சேர்த்து சமைப்பதன் மூலம் அவற்றின் சுவையும் நிறமும் ஊட்டச்சத்தும் மெருகு பெறும் என்பது சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். பனங்களிகளை இலகுவில் பிரித்தெடுப்பது பாதுகாக்கும் பொறிமுறைகள் கண்டறியப்பட வேண்டும்.

    பனம்பழங்களின் மருத்துவக் குணங்களும் அதிலே காணப்படும் நோய் எதிர்ப்புத்தன்மையும் விஞ்ஞானபூர்வ ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த முயற்சி வெற்றி அளிப்பின் நாம் பனம்பழங்களை ஈய உறைகளில் சுற்றி அவற்றில் ஸ்ரிக்கரும் ஒட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையும் ஏற்படலாம்.

    பலவிதமான விளம்பர யுத்திகளுடன் இறக்குமதியாகி அதிக விலையில் விற்பனையாகும் ஓட்ஸ் வகைகள் எமது அன்றாட உணவுகளில் ஒன்றாக மாறும் நிலை காணப்படுகிறது. ஆனால் எமது சொந்த மண்ணில் விளையும் ஓட்ஸிலும் சிறந்த அதிக நார்த்தன்மை கொண்ட மலிவான இயற்கையான பனங்கிழங்குகளை நாம் புறக்கணித்து விடுகின்றோம். பனங்கிழங்குகள் அதிகளவு நார்த்தன்மையும் மிகக்குறைந்தளவு கொழுப்பும் கொண்டிருப்பதுடன் உலர்நிறையில் 12 வீத புரதத்தையும் பல விற்ற மின்கள் கனியுப்புக்களையும் கொண்டிருக்கின்றன.

    பனங்கிழங்குகளில் இருக்கும் மாப்பொருளானது குறைந்த வேகத்திலே உடலினுள்அகத்துறிஞ்சப்படுவதால் இது நீரிழிவு நிலை உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த உணவாக காணப்படுகின்றது. பனம்பழங்களின் பயன்கள்அனைத்தையும் எடுத்த பின்பு அதன் கொட்டைகளை பனம்பாத்தி போடுவதன் மூலம் பனங்கிழங்குகளை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் பனம்பழங்களும் பனம் விதைகளும் பயனுடையவையாக மாற்றம் பெறும். அத்துடன் பனங்கிழங்குகளை பதப்படுத்தி பனங்கிழங்குகளாகவே பாதுகாக்கும் பொறிமுறை கண்டறியப்பட வேண்டும்.

    -Dr.சி.சிவன்சுதன்

    • யுத்த வியூகங்களை அமைப்பதில் கெட்டிக்காரன்.
    • பகைவர்கள் இவற்றைக் கவர்ந்து விடுவார்கள் என்று அடிக்கடி கணக்கிடுவேன்.

    மனம், தேகம் இரண்டையும் எப்போதும் தெம்பாக வைத்திருக்க வேண்டும். அதற்கு முயற்சி செய்யும் போது தானாவே இளமையாகி விடுவோம் .

    நெப்போலியன் ஒரு முறை எதிரி நாட்டின் மீது படையெடுத்தான். எதிரி நாட்டின் தளபதியை அவனது வீரர்கள் கைது செய்து நெப்போலியன் எதிரே நிறுத்தி, மன்னா.. இவன் சாதாரணமானவன் இல்லை. யுத்த வியூகங்களை அமைப்பதில் கெட்டிக்காரன். இவனை காவல் காக்க வேண்டும். இல்லையெனில் தப்பிவிடுவான் என்று சொன்னார்கள்.

    புருவம் உயர்த்திய நெப்போலியன் "உனக்கு என்ன வயது" என்று கேட்க… அவனோ யோசித்து "ஐம்பது அறுபது இருக்கலாம்" என்றான். சிரித்த நெப்போலியன், "உன்னைப் பற்றி இவ்ளோ பெருமையா பேசறாங்க. ஆனா உன் வயசே உனக்குத் தெரியலையா? குத்துமதிப்பா சொல்றியே"ன்னு கேட்க.

    இதற்கு அந்த தளபதி என்ன சொன்னான் தெரியுமா?

    "என் படையில் எத்தனை குதிரைகள் இருக்கின்றன? எவ்வளவு வாகனங்கள் உள்ளன? ஆயுதங்களின் எண்ணிக்கை.. இவற்றைக் கேட்டால், துல்லியமாகச் சொல்வேன். ஏனென்றால், பகைவர்கள் இவற்றைக் கவர்ந்து விடுவார்கள் என்று அடிக்கடி கணக்கிடுவேன். ஆனால், என் வயதை எந்தப் பகைவனாலும் கவர்ந்து செல்ல முடியாது. ஆகவே, வயது குறித்து சிந்திப்பதும் இல்லை. பயப்படுவதும் இல்லை. ! என்றானாம்.

    இந்த மனநிலையில் வாழ்ந்தால் என்றும் இளமையாக திகழலாம்.

    -பராஞ்சி சங்கர்

    • போக்குவரத்து நெரிசல் தாங்க முடியவில்லை.
    • மக்கள் அதை எல்லாம் பெரியதாக கண்டுகொள்ளவில்லை.

    மக்கள் திடீரென என்ன நடந்தது என தெரியாமல் விழித்தார்கள்.

    வடகிழக்கு சீனாவின் சாங்சூன் நகரம். (Changchun) பீகிங்குக்கு வடக்கே மஞ்சூரியாவில் உள்ளது. சமீப ஆண்டுகளில் இந்த நகரில் கார்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. போக்குவரத்து நெரிசல் தாங்க முடியவில்லை. புதியதாக பாலங்களை கட்டி, சாலைகளை மேம்படுத்துவதை விட கார்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்தால் என்ன?

    கார்களின் எண்ணிக்கையை எப்படி குறைக்கமுடியும்? நகர நிர்வாகம் ரகசியமாக திட்டம் ஒன்றை தீட்டியது. மெதுவாக நகரத்தில் இருந்த பார்க்கிங் பகுதிகளை குறைத்தார்கள். மார்க்கட், சாலையோரங்களில் கார் பார்க்கிங் செய்ய இருந்த பகுதிகளின் வெள்ளைக்கோடுகள் அழிக்கபட்டன. மக்கள் அதை எல்லாம் பெரியதாக கண்டுகொள்ளவில்லை. வழக்கம் போல கார்களை நிறுத்திக்கொண்டு இருந்தார்கள்.

    சுமார் 24,000 பார்க்கிங் பகுதிகள் இப்படி அழிக்கப்பட்டன. அதன்பின் சரமாரியாக கார்களுக்கு பைன் போட ஆரம்பித்தார்கள். பார்க்கிங் பகுதியில் நிற்காத ஒவ்வொரு காருக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் ஃபைன். இரவு 10 மணி, நள்ளிரவு, அதிகாலை 4 மணி என சரமாரியாக நேரம் காலம் பார்க்காமல் ஆபிஸ், வீடு, அபார்ட்மெண்ட் என ஒவ்வொரு இடத்திலும் ஃபைன் போட்டார்கள்.

    மக்கள் திடீரென என்ன நடந்தது என தெரியாமல் விழித்தார்கள். ஆனால் ஃபைன்கள் குவியவும் பார்க்கிங் பகுதிகளுக்கு பெரிய அடிதடி நடந்தது. பார்க்கிஙுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு எல்லாம் வந்தார்கள். ஒரு எல்லைக்கு மேல் கார்களை வீட்டில் நிறுத்திவிட்டு எல்லாரும் பேருந்துகளில் செல்ல ஆரம்பித்தார்கள்.

    கார்களை வைத்திருப்பவர்கள் பலரும் காரை பக்கத்து ஊர்களுக்கு கொண்டுபோய் சொந்தக்காரர்கள் வீடுகளில் விட்டுவிட்டு வந்தார்கள். ஊரை விட்டு ஓடமுடிந்தவர்கள் ஓடினார்கள். கேரேஜ்களில் மாதவாடகை கொடுத்து நிறுத்தினார்கள். ஆபிஸில் நிறுத்திவிட்டு நடந்து வீடு வந்து சேர்ந்தார்கள்.

    ஒரு மாதத்தில் 3 லட்சம் பேருக்கு டிக்கட் கொடுக்கபட்டு, கார்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து நகர தெருக்கள் மீண்டும் கொரொனா வந்து ஊரடங்கு உத்தரவு போட்டது போல இருக்கின்றனவாம்.

    "கார் வேணாம்னா வேணாம்னு சொல்லுங்கய்யா. அதுக்காக இப்படியா?" என புலம்பியபடி மக்கள் நடந்து சென்றுகொண்டு இருக்கிறார்கள்.

    பரவாயில்லை. சீனாவில் எல்லாம் ரொம்ப வித்தியாசமா தான் சிந்திக்கறாங்க..

    - நியாண்டர் செல்வன்

    • ஆசிரியர் சிரித்துக்கொண்டே, கேள்வியைச் சரியாகக் கவனித்தீர்களா என்று கேட்டார்.
    • காலம்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.

    வகுப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

    வாழ்க்கையில் இலக்கை அடைய கவனம் மிக முக்கியம் என்று தத்துவமாக மொழிந்தார்.

    இப்போது உங்களிடம் ஒரு கதை சொல்வேன். அதை நன்கு காது கொடுத்துக் கேளுங்கள். அதன் பின்னர் இரண்டே இரண்டு கேள்விகள் கேட்பேன். அவற்றுக்கு நீங்கள் மிகக் கவனத்துடன் பதில் அளிக்க வேண்டும். அறிவைவிடக் கவனம் முக்கியம் எனப் பலமாக பீடிகை போட்டார்.

    ஓட்டப் பந்தயம் ஒன்றில் நீங்கள் நூறு பேரும் ஓடுகிறீர்கள். இரண்டாவதாக ஓடும் ஆளை முந்திவிட்டீர்கள் என்றால் உங்கள் இடம் என்ன?

    ஆர்வத்துடன் எழுந்த மாணவர்களில் சிலர் முதலிடம் என்றார்கள்.

    ஆசிரியர் சிரித்துக்கொண்டே, கேள்வியைச் சரியாகக் கவனித்தீர்களா என்று கேட்டார்.

    இரண்டாவதாக ஓடும் மாணவரை முந்தினால் எப்படி முதலிடம் பெறுவீர்கள், இரண்டாமிடம் தானே என்றார்.

    ஆமால்ல என்று மாணவர்கள் சிரித்தனர்.

    இதற்குத் தான் கேள்வியைச் சரியாகக் கவனிக்க வேண்டும் என்றேன் என்றார் ஆசிரியர்.

    அடுத்த கேள்விக்குத் தாவினார்.. இப்போது கடைசியாக ஓடும் மாணவரை முந்திவிடுகிறீர்கள்… உங்கள் இடம் என்ன என்று கேட்டார்.

    உடனடியாகச் சிலர் எழுந்து 99 என்று கோரஸாக முழங்கினார்கள்.

    ஆசிரியரும் சிரித்துக்கொண்டார்.

    ஒருவன் மட்டும் முதலிடம் என்றான்.

    99 என்று சொன்ன மாணவர்களிடம் நூறு பேரும் ஓடுகிறீர்கள் என்றால் கடைசியில் ஓடும் மாணவரை எப்படி முந்த முடியும் என்று கேட்டார்.

    பதில் சொன்ன மாணவர்கள் அசடு வழிந்தனர்.

    முதலிடம் என்று சொன்ன மாணவனை அழைத்து, எப்படி முதலிடம் என்று சொன்னாய் என்று கேட்டார்.

    அவன், சார் என்னைப் பொறுத்தவரை எனது இலக்கு முதலிடம். ஆகவே, நான் முந்த வேண்டிய கடைசி ஆள் முதலில் ஓடுபவர். ஆகவே, கடைசி ஆளை முந்திவிட்டால் எனது இடம் முதலிடம் தானே என்றான்.

    ஆசிரியர் சிரித்தபடியே கண்ணா உனது விடை சரிதான்; ஆனால், உனக்கு மதிப்பெண் கிடைக்காது, காலம்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.

    -செல்லப்பா

    • தமிழ் மொழி என்பது இந்திய மொழிகளில் மிக முக்கியமான மொழி.
    • இரண்டு மிகக்கடினமான தமிழ்த்தேர்வு எழுதி தேர்வு பெறுவது அவசியமாக்கப்பட்டது.

    தரங்கம் பாடியில் கிருத்துவம் பரப்ப, சீகன் பால்க் உடன் அனுப்பப்பட்ட மிசினரிகளில் ஒருவரான ஜே .இ .கிரண்ட்லேர் என்பவர் 15/1/1715 இல் எழுதிய அவரது கடிதத்தில்,

    அந்தப்பகுதியில் பேசப்பட்ட "தமிழ் மொழி என்பது இந்திய மொழிகளில் (திராவிட என்றுதான் அவர் குறிப்பிட்டிருக்கிறார்) மிக முக்கியமான மொழி. அது மிகச் சிறந்த நூல்கள் அதிகம் கொண்டது. அதை ஐரோப்பாவில் இருக்கும் அனைத்து பல்கலைக்கழகத்திலும் பயிற்றுவிக்க மிகத்தகுதியானது. அது அவசியமும் கூட என்று வலியுறுத்துகிறார்.

    இதை ஏற்று 17 ஆம் நூற்றாண்டிலேயே இங்கு அனுப்பப்படும் மிஷினரிகள் இடையில்மொழி பெயர்ப்பாளர் யாரும் இல்லாது தமிழ் மக்களுடன் நேரடியாக பேசும் வகையில் தமிழ் கற்பித்த பின்பே தரங்கம்பாடி அனுப்பப்பட்டனர்

    அப்போது தரங்கம்பாடி அனுப்பப்படுவதற்கு முன் அவர்கள் இரண்டு மிகக்கடினமான தமிழ்த்தேர்வு எழுதி தேர்வு பெறுவது அவசியமாக்கப்பட்டது . இத்தகைய சிறப்பு அப்போது வேறு எந்த இந்திய மொழிகளுக்கும் கிடைக்கவில்லை.

    இவர்கள் இத்தனை ஆர்வமாக தமிழ் கற்று தரங்கம்பாடி வந்தததற்குக் காரணம் அவர்களது மதத்தைப் பரப்பவதற்கு மட்டுமில்லாது, இங்கே பண்டைய தமிழ் மருத்துவர்களிடம் கிடைத்த மருத்துவ அனுபவங்களையும் பெறவும், பண்டைய ஓலைச் சுவடிகளை சிறிய விலைக்கொடுத்து சேர்த்து ஜெர்மனி கொண்டு சேர்ப்பதற்காகவே என்று தமிழ் ஜெர்மன் ஆய்வாளர்கள்குறிப்பிட்டுள்ளனர்

    இத்தனை பெருமைகளையும் மருத்துவ சிறப்புகளையும் நாம் இழந்த பின்பும் இன்னமும் இருப்பதைப் பாதுகாக்கவும் போற்றவும் ஆர்வம் காட்டாது இருக்கின்றோம்.

    -அண்ணாமலை சுகுமாரன்

    • தொடர்ச்சியான அசைவ உணவுகள், நாட்பட்ட செரிமான சிக்கலை உருவாக்கும் என்பது உறுதியான ஒன்று.
    • வார இறுதி நாட்கள், விசேஷ நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில் பெரும்பாலும் அசைவம் விருப்பமான உணவாக இருக்கும்.

    தென் தமிழ்நாட்டு அசைவ உணவுப் பிரியர்கள், அசைவ உணவுடன் வேறெந்த காய்களையோ, கீரைகளையோ சேர்த்து உண்ணுவதைத் தவிர்த்து வருவது மிகப் பரவலாகி வருகிறது. இது கவனிக்க வேண்டிய விஷயம்.

    வார இறுதி நாட்கள், விசேஷ நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில் பெரும்பாலும் அசைவம் விருப்பமான உணவாக இருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் அல்லது ஒரே நாளில் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன், நண்டு, இறால், முட்டை..... இன்னும் என்ன என்ன அசைவம் இருக்கிறதோ அத்தனையும் செய்து விடுகிறார்கள்.

    இது இப்போது சாதாரண நாட்களில் கூட நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், இந்த அசைவப் பிரியர்கள், காய்கள், கீரைகள், பழங்களையும் சரியாக சாப்பிடுவது கிடையாது.

    இது போன்ற தொடர்ச்சியான அசைவ உணவுகள், நாட்பட்ட செரிமான சிக்கலை உருவாக்கும் என்பது உறுதியான ஒன்று. நெஞ்செரிச்சல் தொடங்கி வயிறு, குடல் தொடர்பான புண் முதல் புற்றுநோய் வரை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் இது.

    இதைத் தவிர்த்து விடுதல் நலம். அதற்குப் பதிலாக..... சாம்பார், கூட்டு, காரக் குழம்பு, வேறெந்த காய் வகைக் குழம்புகள் செய்யும்போது, அசைவ உணவுகளை பக்க உணவுகளாகவும், கறிக் குழம்பு, மீன்குழம்பு, நண்டுக் குழம்பு இறால் தொக்கு என்று செய்யும்போது கீரைப் பொரியல், காய்கள் பொரியல், அவியல், என்று தாவர வகைப் பக்க உணவுகளையும் சேர்த்துக் கொண்டால், செரிமானம் எளிதாகி விடுவதுடன், அதிகக் கொழுப்பு, அதனால் உருவாகும் நச்சுப் பொருட்கள் போன்றவை மறுநாளே எளிதாக வெளியேறி விடும்.

    மிகக் குறிப்பாகத் தொற்றாவகை நோய்களைக் கொண்டவர்கள் இந்த முறையைப் பின்பற்றினால், நோய் கட்டுப் பாட்டிற்குள் இருப்பதுடன், நோய் ஏற்படும் சூழலில் இருப்பவர்களுக்கு தவிர்க்கப்படலாம்.

    இனிமேல் இதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக ..சமையல் செய்யும் இல்லத்தரசிகள்....

    - வண்டார் குழலி

    • பணத்தால் நிறைய வாழைப்பழங்களை வாங்க முடியும் என்பது குரங்குகளுக்குத் தெரியாது.
    • ஊதியம் உங்களை ஆதரிக்கும், ஆனால் லாபம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.

    வாழ்வில் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்று சீனாவின் மிகப் பெரிய பணக்காரர் ஜாக் மா என்ன சொல்கிறார் தெரியுமா..

    "வாழைப்பழத்தையும், பணத்தையும் குரங்குகளுக்கு முன்னால் வைத்தால், குரங்குகள் வாழைப்பழத்தைத் தேர்ந்தெடுக்கும், ஏனென்றால் பணத்தால் நிறைய வாழைப்பழங்களை வாங்க முடியும் என்பது குரங்குகளுக்குத் தெரியாது.

    உண்மையில், நீங்கள் வணிகம் மற்றும் வேலையை மக்களுக்கு வழங்கினால், அவர்கள் வேலையைத் தேர்ந்தெடுப்பார்கள், ஏனென்றால் ஒரு வணிகத்தில் சம்பளத்தை விட அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.

    ஏழைகள் ஏழைகளாக இருப்பதற்கு ஒரு காரணம், தொழில் முனைவோர் வாய்ப்பை ஏழைகள் பயிற்சி பெறாததுதான்.

    அவர்கள் பள்ளி, கல்லூரியில் நிறைய நேரத்தை செலவிடுகிறார்கள், பள்ளியில் அவர்கள் கற்றுக்கொள்வது தங்களுக்கு வேலை செய்யாமல் சம்பளத்திற்கு வேலை செய்வதாகும்.

    ஊதியத்தை விட லாபமே சிறந்தது, ஏனென்றால் ஊதியம் உங்களை ஆதரிக்கும், ஆனால் லாபம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.

    -நீலமேகம் சீனிவாசன்

    • வாய்வுக்கோளாறுகளை சரி செய்யக்கூடியது இது.
    • இந்த மாதிரி ரொம்ப எளிமையான வைத்தியம் நம்ம கையில இருக்கும்போது நாம ஏன் எது எதையோ தேடிப்போகணும்..?

    `பிரண்டை தெரியுமா..?'னு கேட்டா பலபேர் `அது என்ன செடியா?.. இல்ல கொடியா?'னு கேக்குறாங்க. பிரண்டை நல்லதொரு மூலிகை. ஆனால் வெறும் கையால் அதை உடைத்தால் கைகளில் நமைச்சல் எடுக்கும்.

    வாய்வுக்கோளாறுகளை சரி செய்யக்கூடியது இது. வயிறு உப்பிசத்துக்கு நண்பர் ஒருவர் ஏதேதோ வைத்தியம் செய்து பார்த்தும் பலனளிக்காத பட்சத்தில், நான் சொன்னபடி பிரண்டையை துவையலாக செய்து சாப்பிட்டார். நாலைந்து நாட்களில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக சொன்னார்.

    பிரண்டைத்து வையல் செய்றது எப்படின்னு தெரியாதவங்க இங்கே படிங்க...

    பிரண்டைத் தண்டுகளோட மேல் தோலைச் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்கணும். தேவைப்பட்டா உளுந்து, தேங்காய் சேர்த்து வதக்கி அரைக்கலாம். சிலபேர் கடுகு, உளுந்து சேர்த்து தாளிப்பாங்க. அப்படி ரெடியான துவையலை சாதத்தோட சேர்த்துப் பிசைஞ்சி சாப்பிடலாம்.

    இந்த மாதிரி செய்தா குடல் வாயு சரியாகுறதோட ரத்த மூலம் குணமாகும். வயிற்றுப் பூச்சிகளும் விலகிரும்.

    இந்த பிரண்டைத் துவையலை நம்மளோட தினசரி உணவில் சேர்த்துக்கிட்டா உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகள் பலப்படும். பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்துட்டு வந்தா எலும்புகள் உறுதியா வளரும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் சீக்கிரமா ஒண்ணு சேர்றதுக்கு இது உதவும்.

    இந்த மாதிரி ரொம்ப எளிமையான வைத்தியம் நம்ம கையில இருக்கும்போது நாம ஏன் எது எதையோ தேடிப்போகணும்..?

    -மரிய பெல்சின்

    • கொடிய விலங்கு ஒன்றை வென்று அதனுடைய ‘பல்’ ஒன்றைக் காண்பித்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
    • பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வசதியாகத் தாலியின் உள்ளே ‘விஷம்’ வைத்து வாய்க்கு எட்டும் தூரத்தில் தொங்கவிட்டார்கள்.

    தொடக்கத்தில் மனிதன் மலையிலேதான் வாழ்ந்து வந்தான்.

    மலை கரைந்து காடாகி, காடு சமவெளியாகி, பயிரிடக் கூடிய நிலமாகியது.

    இப்படிக் குறிஞ்சி, முல்லை, மருதம் என்று மூன்று நிலமாகியது.

    மலையில் வாழும் ஆண்மகன் திருமணம் செய்ய வேண்டுமென்றால், அந்தப் பெண்ணைப் பாதுகாக்கக்கூடிய உடல்வலிவு இருக்கிறதா என்று கண்டுபிடிக்க ஒருமுறை வைத்தார்கள்.

    கொடிய விலங்கு ஒன்றை வென்று அதனுடைய 'பல்' ஒன்றைக் காண்பித்து சான்றிதழ் வாங்க வேண்டும்.

    அவ்வாறு கொண்டு வந்து காண்பித்த பல்லிலே ஒரு கயிற்றைக் கட்டி, பெண்ணின் கழுத்தில் தாலியாகக் கட்டுவது என்றாகியது.

    இப்போது புலிப் பல் தேடும் காலம் போய், புலிப்பல்லைப் போலவே இரண்டு நாக்கு வைத்து தங்கத்தால் செய்த ஒரு சின்னத்தைக் கட்டலாயினர்.

    இதைத் தான் இப்பொழுதுதாலி என வழங்குகிறோம்.

    வடநாட்டுத் தாலி எப்படி என்றால், யுத்தங்கள் அதிகமாக இருந்ததால் கலவரத்தில் பெண்களைச் சூறையாடும் வெறி இருந்தது.

    பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வசதியாகத் தாலியின் உள்ளே 'விஷம்' வைத்து வாய்க்கு எட்டும் தூரத்தில் தொங்க விட்டார்கள்.

    பிற்காலத்தில் கணவன் மனைவிக்குள் பிணக்கு சச்சரவு வரும் போது சாப்பிட ஆரம்பித்ததால், விஷம் நிறுத்தப்பட்டு, அரக்கு வைக்கப்படுகிறது.

    இப்படி சடங்குகளை அலசிப் பார்க்கும் பொழுது. ஒவ்வொரு கால கட்டத்தில் அவசியமானதென்று தெரியவருகிறது.

    தற்காலத்திற்கு தேவையில்லையெனில் அவற்றை தள்ளிவிட்டு மனித சமுதாயம் முன்னேற வேண்டும்.

    அதற்கு விரோத மனப்பான்மை எழாத விதத்திலே சமுதாயத்தோடு ஒத்தும் கலந்தும் இளைஞர்கள் செயலாற்ற வேண்டும்.

    -வேதாத்திரி மகரிஷி

    • சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
    • வீரட்டேசுவரர்... அம்பிகை மங்கள நாயகி... இவரை வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

    படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார்... குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.... அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது....

    1. பிரமசிரக்கண்டீசுவரர் ஆலயம், திருக்கண்டியூர்

    தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு சுமார் 4 கி.மீ தொலைவிலிருக்கிறது திருக்கண்டியூர்.... மூலவர் பெயர் வீரட்டேசுவரர்... அம்பிகை மங்கள நாயகி... இவரை வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

    2. வீரட்டேசுவரர் ஆலயம், திருக்கோவிலூர்... விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது வீரட்டேசுவரர் ஆலயம்... வீரட்டேசுவரர் சுயம்புவாக அருள்புரிகிறார்... இறைவன் வீரட்டேசுவரர்.. அம்பிகை பெரியநாயகி, சிவானந்தவல்லி.

    அந்தகாசுரனை கீழே தள்ளி, அவன் மேல் சூலாயுதத்தை ஏவும் நிலையில் அந்தகாசுர சம்ஹாரமூர்த்தி காட்சிதருகிறார். அஷ்டமியன்று இந்தத் தலத்துக்கு வந்து பைரவர் உருவில் அருள்புரியும் இறைவனை வழிபட்டால், கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை...

    3. வீரட்டானேசுவரர் ஆலயம், திருவதிகை. கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ தொலைவில் கெடிலம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது... இந்தத் தலத்தில் அருளும் இறைவன் திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்தார்... மேலும், திருஞானசம்பந்தருக்கு திருநடனமாடியும், அப்பருக்கு ஏற்பட்ட சூலைநோயைத் தீர்த்தும் அருள் புரிந்திருக்கிறார்.... இறைவனின் திருப்பெயர் வீரட்டானேசுவரர்.. அம்பிகை பெரியநாயகி, திரிபுரசுந்தரி...

    சிவபெருமான் முப்புரங்களை அழித்த இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், நம் மனதிலிருக்கும் தீய குணங்கள் நீங்குவதுடன், வயிறு தொடர்பான பிணிகளும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    4. திருப்பறியலூர் வீரட்டானேசுவரர் ஆலயம், கீழப்பரசலூர்.காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில்... மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது பரசலூர்... திருப்பறியலூர் என்பது புராணப் பெயர்... பரசலூர் என்றே இப்போது அழைக்கப்படுகிறது.... சிவபெருமான் தட்சனின் கர்வத்தை அடக்கிய தலம். மூலவர்: வீரட்டானேசுவரர்.. அம்பிகை: இளங்கொம்பனையாள்.

    இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்..

    5.வீரட்டானேசுவரர் ஆலயம், திருவிற்குடி.. இந்தத் தலமும் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது... திருவாரூரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவிலுள்ளது திருவிற்குடி. இறைவன்: வீரட்டானேசுவரர்... அம்பிகை: ஏலவார்க்குழலி, பரிமளநாயகி.

    ஜலந்தரன் என்ற அசுரனை சிவபெருமான் சம்ஹாரம் செய்த தலம் இது... முன்னோர் வழிபாட்டில் ஏற்பட்ட தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவிற்குடி...

    6.வீரட்டானேசுவரர் ஆலயம், திருவழுவூர்..திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் மங்கைநல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது வழுவூர்... இந்தத் தலத்தில் இறைவன் சுயம்புவாகத் தோன்றியவர்... இந்தத் தலத்தில்தான் கஜசம்ஹார மூர்த்தியாக அருளும் சிவபெருமானின் திருவடியின் உட்புறத்தை தரிசிக்க முடியும்... இறைவன்: வீரட்டானேசுவரர்.. அம்பிகை: இளங்கிளைநாயகி.

    அமாவாசையன்று இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனையும் அம்பிகையையும் வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்...

    7. வீரட்டேசுவரர் ஆலயம், திருக்குறுக்கை..மயிலாடுதுறையிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது திருக்குறுக்கை... இறைவன்: வீரட்டானேசுவரர்.. அம்பிகை: ஞானாம்பிகை...சிவபெருமான், மன்மதனை எரித்த தலம் இது...இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி இனிய இல்லற வாழ்க்கை அமையும்...

    8. அமிர்தகடேசுவரர் ஆலயம், திருக்கடையூர்...மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தில் அருளும் இறைவனின் திருப்பெயர் அமிர்தகடேசுவரர்.. அம்பிகை அபிராமி. தன் பக்தனைக் காப்பாற்றவும், யமதர்மனின் ஆணவத்தை அடக்கவும் வேண்டி, சிவபெருமான் யமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்த தலம் இது. இந்தத் தலத்தில் நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்க்கையும் பெற ஆயுஷ் ஹோமம் செய்துகொள்வது சிறப்பு. சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் தினமும் நடைபெறும் தலம்.

    -சிவசந்தோஷ் பாஸ்கரன்

    ×