என் மலர்
கதம்பம்

அட்ட வீரட்ட தலங்கள்
- சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
- வீரட்டேசுவரர்... அம்பிகை மங்கள நாயகி... இவரை வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார்... குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.... அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது....
1. பிரமசிரக்கண்டீசுவரர் ஆலயம், திருக்கண்டியூர்
தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு சுமார் 4 கி.மீ தொலைவிலிருக்கிறது திருக்கண்டியூர்.... மூலவர் பெயர் வீரட்டேசுவரர்... அம்பிகை மங்கள நாயகி... இவரை வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
2. வீரட்டேசுவரர் ஆலயம், திருக்கோவிலூர்... விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது வீரட்டேசுவரர் ஆலயம்... வீரட்டேசுவரர் சுயம்புவாக அருள்புரிகிறார்... இறைவன் வீரட்டேசுவரர்.. அம்பிகை பெரியநாயகி, சிவானந்தவல்லி.
அந்தகாசுரனை கீழே தள்ளி, அவன் மேல் சூலாயுதத்தை ஏவும் நிலையில் அந்தகாசுர சம்ஹாரமூர்த்தி காட்சிதருகிறார். அஷ்டமியன்று இந்தத் தலத்துக்கு வந்து பைரவர் உருவில் அருள்புரியும் இறைவனை வழிபட்டால், கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை...
3. வீரட்டானேசுவரர் ஆலயம், திருவதிகை. கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ தொலைவில் கெடிலம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது... இந்தத் தலத்தில் அருளும் இறைவன் திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்தார்... மேலும், திருஞானசம்பந்தருக்கு திருநடனமாடியும், அப்பருக்கு ஏற்பட்ட சூலைநோயைத் தீர்த்தும் அருள் புரிந்திருக்கிறார்.... இறைவனின் திருப்பெயர் வீரட்டானேசுவரர்.. அம்பிகை பெரியநாயகி, திரிபுரசுந்தரி...
சிவபெருமான் முப்புரங்களை அழித்த இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், நம் மனதிலிருக்கும் தீய குணங்கள் நீங்குவதுடன், வயிறு தொடர்பான பிணிகளும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
4. திருப்பறியலூர் வீரட்டானேசுவரர் ஆலயம், கீழப்பரசலூர்.காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில்... மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது பரசலூர்... திருப்பறியலூர் என்பது புராணப் பெயர்... பரசலூர் என்றே இப்போது அழைக்கப்படுகிறது.... சிவபெருமான் தட்சனின் கர்வத்தை அடக்கிய தலம். மூலவர்: வீரட்டானேசுவரர்.. அம்பிகை: இளங்கொம்பனையாள்.
இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்..
5.வீரட்டானேசுவரர் ஆலயம், திருவிற்குடி.. இந்தத் தலமும் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது... திருவாரூரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவிலுள்ளது திருவிற்குடி. இறைவன்: வீரட்டானேசுவரர்... அம்பிகை: ஏலவார்க்குழலி, பரிமளநாயகி.
ஜலந்தரன் என்ற அசுரனை சிவபெருமான் சம்ஹாரம் செய்த தலம் இது... முன்னோர் வழிபாட்டில் ஏற்பட்ட தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவிற்குடி...
6.வீரட்டானேசுவரர் ஆலயம், திருவழுவூர்..திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் மங்கைநல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது வழுவூர்... இந்தத் தலத்தில் இறைவன் சுயம்புவாகத் தோன்றியவர்... இந்தத் தலத்தில்தான் கஜசம்ஹார மூர்த்தியாக அருளும் சிவபெருமானின் திருவடியின் உட்புறத்தை தரிசிக்க முடியும்... இறைவன்: வீரட்டானேசுவரர்.. அம்பிகை: இளங்கிளைநாயகி.
அமாவாசையன்று இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனையும் அம்பிகையையும் வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்...
7. வீரட்டேசுவரர் ஆலயம், திருக்குறுக்கை..மயிலாடுதுறையிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது திருக்குறுக்கை... இறைவன்: வீரட்டானேசுவரர்.. அம்பிகை: ஞானாம்பிகை...சிவபெருமான், மன்மதனை எரித்த தலம் இது...இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி இனிய இல்லற வாழ்க்கை அமையும்...
8. அமிர்தகடேசுவரர் ஆலயம், திருக்கடையூர்...மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தில் அருளும் இறைவனின் திருப்பெயர் அமிர்தகடேசுவரர்.. அம்பிகை அபிராமி. தன் பக்தனைக் காப்பாற்றவும், யமதர்மனின் ஆணவத்தை அடக்கவும் வேண்டி, சிவபெருமான் யமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்த தலம் இது. இந்தத் தலத்தில் நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்க்கையும் பெற ஆயுஷ் ஹோமம் செய்துகொள்வது சிறப்பு. சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் தினமும் நடைபெறும் தலம்.
-சிவசந்தோஷ் பாஸ்கரன்






