என் மலர்tooltip icon

    கதம்பம்

    உங்கள் இடம் என்ன?
    X

    உங்கள் இடம் என்ன?

    • ஆசிரியர் சிரித்துக்கொண்டே, கேள்வியைச் சரியாகக் கவனித்தீர்களா என்று கேட்டார்.
    • காலம்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.

    வகுப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

    வாழ்க்கையில் இலக்கை அடைய கவனம் மிக முக்கியம் என்று தத்துவமாக மொழிந்தார்.

    இப்போது உங்களிடம் ஒரு கதை சொல்வேன். அதை நன்கு காது கொடுத்துக் கேளுங்கள். அதன் பின்னர் இரண்டே இரண்டு கேள்விகள் கேட்பேன். அவற்றுக்கு நீங்கள் மிகக் கவனத்துடன் பதில் அளிக்க வேண்டும். அறிவைவிடக் கவனம் முக்கியம் எனப் பலமாக பீடிகை போட்டார்.

    ஓட்டப் பந்தயம் ஒன்றில் நீங்கள் நூறு பேரும் ஓடுகிறீர்கள். இரண்டாவதாக ஓடும் ஆளை முந்திவிட்டீர்கள் என்றால் உங்கள் இடம் என்ன?

    ஆர்வத்துடன் எழுந்த மாணவர்களில் சிலர் முதலிடம் என்றார்கள்.

    ஆசிரியர் சிரித்துக்கொண்டே, கேள்வியைச் சரியாகக் கவனித்தீர்களா என்று கேட்டார்.

    இரண்டாவதாக ஓடும் மாணவரை முந்தினால் எப்படி முதலிடம் பெறுவீர்கள், இரண்டாமிடம் தானே என்றார்.

    ஆமால்ல என்று மாணவர்கள் சிரித்தனர்.

    இதற்குத் தான் கேள்வியைச் சரியாகக் கவனிக்க வேண்டும் என்றேன் என்றார் ஆசிரியர்.

    அடுத்த கேள்விக்குத் தாவினார்.. இப்போது கடைசியாக ஓடும் மாணவரை முந்திவிடுகிறீர்கள்… உங்கள் இடம் என்ன என்று கேட்டார்.

    உடனடியாகச் சிலர் எழுந்து 99 என்று கோரஸாக முழங்கினார்கள்.

    ஆசிரியரும் சிரித்துக்கொண்டார்.

    ஒருவன் மட்டும் முதலிடம் என்றான்.

    99 என்று சொன்ன மாணவர்களிடம் நூறு பேரும் ஓடுகிறீர்கள் என்றால் கடைசியில் ஓடும் மாணவரை எப்படி முந்த முடியும் என்று கேட்டார்.

    பதில் சொன்ன மாணவர்கள் அசடு வழிந்தனர்.

    முதலிடம் என்று சொன்ன மாணவனை அழைத்து, எப்படி முதலிடம் என்று சொன்னாய் என்று கேட்டார்.

    அவன், சார் என்னைப் பொறுத்தவரை எனது இலக்கு முதலிடம். ஆகவே, நான் முந்த வேண்டிய கடைசி ஆள் முதலில் ஓடுபவர். ஆகவே, கடைசி ஆளை முந்திவிட்டால் எனது இடம் முதலிடம் தானே என்றான்.

    ஆசிரியர் சிரித்தபடியே கண்ணா உனது விடை சரிதான்; ஆனால், உனக்கு மதிப்பெண் கிடைக்காது, காலம்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.

    -செல்லப்பா

    Next Story
    ×