என் மலர்
அமெரிக்கா
- போலி கணக்குகள் குறித்து சரியான தகவலை தராததால் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார்.
- எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் நிறுவனமும் அறிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 37 ஆயிரத்து 465 கோடி கொடுத்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. எலான் மஸ்கிற்கு டுவிட்டர் நிறுவனத்தை மேற்கண்ட தொகைக்கு விற்பனை செய்ய டுவிட்டர் நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது.
ஆனால் டுவிட்டரில் 20 - 50 சதவீதம் போலி கணக்குகள் இருப்பதாகவும், அதன் கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால், 5 சதவீதத்திற்கும் குறைவான போலி கணக்குகளே உள்ளதாக டுவிட்டர் நிறுவனம தெரிவித்து வந்தது.
இந்நிலையில், டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தை வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார். போலி கணக்குகள் குறித்து சரியான தகவலை தராததால் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார்.
தனது பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கும் டுவிட்டர் நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்று மஸ்க் புகார் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவு செய்ய எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் நிறுவனமும் அறிவித்துள்ளது.
- ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் மாபெரும் போராட்டம் வெடித்தது.
- ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் மாபெரும் போராட்டம் வெடித்தது.
வாஷிங்டன் :
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினியாபொலிஸ் நகரில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்தனர். அப்போது டெரெக் சாவின் என்ற போலீஸ் அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் கால் முட்டியை வைத்து பலமாக அழுத்தினார்.
இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு ஜார்ஜ் பிளாயட் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலானது. ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் மாபெரும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும், போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்த போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது.
இதற்கிடையில் ஜார்ஜ் பிளாய்ட்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டெரெக் சாவின் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜார்ஜ் பிளாய்ட்டின் கைது நடவடிக்கையின் போது போலீஸ் அதிகாரி டெரெக் சாவின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் டெரெக் சாவின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து, இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
- அமெரிக்க போலீஸ் அதிகாரி மனித உரிமையை மீறிவிட்டதாக உலகம் முழுவதும் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன.
- இதையடுத்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மினிசோட்டாவை சேர்ந்தவர் ஜார்ஜ் பிளாய்ட்.
கருப்பின வாலிபரான இவர் கடந்த 2020-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அதற்காக அவர் கொடுத்த பணம் கள்ளநோட்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் கடைக்காரருக்கு ஏற்பட்டது.
எனவே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்ததை கண்டதும் ஜார்ஜ் பிளாய்ட் அங்கிருந்து தப்பியோடினார். அவரை விரட்டி சென்று பிடித்த போலீஸ் அதிகாரி டெரிக் சாவின், கருப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் காலை அழுத்தி நெருக்கினார்.
இதில் மூச்சு திணறிய ஜார்ஜ் பிளாய்ட் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க போலீஸ் அதிகாரி மனித உரிமையை மீறிவிட்டதாக உலகம் முழுவதும் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. இதையடுத்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் அவர் மீது மினிசோட்டா மாநில கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு மாநில கோர்ட்டு 22 அரை ஆண்டுகள் தண்டனை வழங்கியது.
இந்த நிலையில் ஜார்ஜ் பிளாய்டு மீதான மனித உரிமை மீறலை கண்டித்து தொடரப்பட்ட வழக்கு அமெரிக்க பெடரல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த பெடரல் கோர்ட்டு நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இதில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு 21 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மாநில ஜெயிலில் இருந்து மத்திய ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
- முதல் மனைவி மூலம் எலாஸ் மஸ்க் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார்.
- கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோ :
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன், எலாஸ் மஸ்க்கின் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார்.
பின்னர் கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார். இந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் தற்போது 9 குழந்தைகள் உள்ளன.
இது குறித்து பலர் அவரிடம் சமூகவலைத்தளங்கள் வாயிலாக பல கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக எலான் மஸ்க் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "குறைந்த மக்கள்தொகை நெருக்கடிக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைவது நாகரிகம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரிய ஆபத்து" என தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே இவர் சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சி குறித்து எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரிட்டனும், அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள்.
- பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர்ந்து இணைந்து செயல்படும்.
வாஷிங்டன்:
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறினர். இதனால் பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் போரிஸ் ஜான்சன், பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரிட்டன் அரசுடன் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பை வழங்க ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா அறிவித்துள்ளது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஜோ பைடன், பிரிட்டனும், அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகள் என்றார்.
எங்களுக்கு இடையிலான சிறப்பான உறவு வலுவாக நீடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மக்களுக்கான ஆதரவு, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.
- செயற்கைகோள் நிலவை அடைய 4 மாதங்கள் ஆகும்.
- புதிய சுற்றுப்பாதை மூலம் எரிபொருள் பயன்பாடு குறைகிறது.
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, ராக்கெட் லேட் மற்றும் அட்வான்ஸ்ட் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கேப்ஸ்டோன் செயற்கைகோளை ஏவியது. நியூசிலாந்தின் மகியா தீபகற்பத்தில் சிறிய எலெக்டிரான் ராக்கெட்டில் 25 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் கடந்த 6 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்ட பாதையை அடைந்த செயற்கைகோள் அதிலிருந்து விலகி வெற்றிகரமாக நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
இந்த செயற்கைகோள் நிலவை அடைய 4 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராக்கெட் லேப் நிறுவனர் பீட்டர் பெக் கூறும்போது, மீதமுள்ள பணிகள் வெற்றிகரமாக இருந்தால் கேப்ஸ்டோன் செயற்கைகோள், நிலவை சுற்றி ஒரு புதிய சுற்றுப் பாதையில் முதன் முதலில் செல்லும். பல தகவல்களை பல மாதங்களுக்கு அனுப்பும் என்றார்.
இந்த செயற்கைகோள் குறைந்த செலவில் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேட்வே என்ற விண்வெளி நிலையத்தை சுற்றுப்பாதையில் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. அதில் இருந்து விண்வெளி வீரர்கள், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவின் மேற்பரப்பில் இறங்கு திட்டம் வகுத்துள்ளது.
புதிய சுற்றுப்பாதை மூலம் எரிபொருள் பயன்பாடு குறைகிறது. மேலும் செயற்கைகோள் அல்லது விண்வெளி நிலையம் பூமியுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- வாலிபர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை.
- சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் சுதந்திர தினவிழா ஆண்டுதோறும் ஜூலை 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் 246-வது சுதந்திர தின விழா இந்திய நேரப்படி நேற்று இரவு கொண்டாடப்பட்டது.
இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணி வகுப்பு தொடங்கியது. இதில் ஏராளமான பொது மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
அணிவகுப்பு தொடங்கிய 10 நிமிடத்தில் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் பொது மக்களை நோக்கி சரமாரியாக சுட்டார். அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தினார். அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி துடித்துக் கொண்டு ஓடினர். துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுதந்திர தின அணி வகுப்பில் மர்ம நபர் துப்பாக்கியால் 25 சுற்றுகள் சுட்டதாகவும் அவருக்கு 18 முதல் 20 வயது வரைக்குள் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிய வாலிபரை போலீசார் தேடினர்.
இந்த நிலையில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர். அவனது பெயர் ராபர்ட்-இ-க்ரைமோ. 22 வயதான அந்த வாலிபரை துப்பாக்கி சூடு நடந்த பகுதி அருகே மடக்கி பிடித்தனர்.
அப்போது அவரிடம் இருந்து அதிநவீன துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஐலேண்ட் பார்க் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது துப்பாக்கி சூடு தொடர்பாக ராபர்ட் க்ரைமோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலியானவர்களில் ஒருவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர். குழந்தைகள் உள்பட பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார்.
வாலிபர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை. துப்பாக்கி சூடு காட்சி வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையின் தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து போராடுவேன். அதை கைவிட போவதில்லை.
இந்த சுதந்திர தினத்தன்று அமெரிக்க சமூகத்திற்கு மீண்டும் வருத்தத்தை ஏற்படுத்திய புத்தியில்லாத துப்பாக்கி வன்முறையால் நானும், மனைவி ஜில்டை னும் அதிர்ச்சி அடைந்தோம் என்றார்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 21 பேர் பலியானார்கள்.
இதையடுத்து துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்த ஜோபைடன், துப்பாக்கி கட்டுப்பாடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் அமல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இல்லினாய்ஸ் நகரில் சுதந்திரதின அணிவகுப்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
- இந்த தாக்குதலில் 19 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து, அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அதிபர் பைடன் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான கொள்கையையும் வகுத்து வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்கா உருவான 246-வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன.
இந்நிலையில், இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது.
அணிவகுப்பு தொடங்கிய பின் 10 நிமிடங்களில் திடீரென வந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அப்பகுதி மக்கள் அங்குமிங்கும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுதந்திர தின நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கறிவேப்பிலைக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி உள்ளது.
- மும்பையை சேர்ந்தவர் குல்சன் சைனி. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
வாஷிங்டன்:
நம்மூர் காய்கறி கடைக்கு காய்கறி வாங்க சென்றால் அதற்கு கொசுறு போல வியாபாரிகள் கறிவேப்பிலை கொடுப்பார்கள். ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் இதற்கு 2 ரூபாய், 3 ரூபாய் காசு வாங்குவதும் உண்டு.
இந்த கறிவேப்பிலைக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி உள்ளது. அமெரிக்காவில் ஒரு கட்டு கறிவேப்பிலை 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் நம்பி தான் ஆக வேண்டும்.
மும்பையை சேர்ந்தவர் குல்சன் சைனி. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் நம்ம ஊரில் கிடைக்கும் மளிகை பொருட்களின் விலை அமெரிக்காவில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது தொடர்பாக விளக்கி உள்ளார்.
அதன்படி பன்னீர் பாக்கெட் ரூ393-க்கும், வீட்டை பெருக்கும் துடைப்பம் ஒன்று ரூ 472, ஒரு கொத்து கறிவேப்பிலை இந்திய ரூபாய் மதிப்பில் 80 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக தெரிவித்து உள்ளார்.
மேலும் மொத்தம் இந்திய பணத்தில் ரூ.7 ஆயிரத்துக்கு 10 பொருட்கள் தான் வாங்க முடியும் என்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்த பொருட்கள் எல்லாம் தாறுமாறாக விற்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதை பார்த்து பலர் கமாண்ட் செய்து வருகிறார்கள்.
- புளோரிடாவில், 15 வாரங்களுக்குப் பிந்தைய கருக்கலைப்புகளைத் தடைசெய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
- டெக்சாஸில் உள்ள கிளினிக்குகள் கருக்கலைப்புகளை மீண்டும் தொடங்கியதாக தகவல்,
டெக்சாஸ்:
அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையை உறுதிப்படுத்திய 1973 ஆம் ஆண்டின் முக்கிய தீர்ப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்துச் செய்தது.
இது தொடர்பாக கடந்த 24ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அமெரிக்கா மாகாணங்களுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெக்க உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவின் 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல், 25-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.
இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு டெக்சாஸ் அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த தீர்ப்பு வந்த சில நாட்களுக்கு பின்பு டெக்சாஸில் உள்ள கிளினிக்குகள் கருக்கலைப்புகளை மீண்டும் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின. புளோரிடாவில், 15 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்புகளைத் தடைசெய்யும் சட்டம் வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு வந்தது,
எனினும் அந்த மாகாண ஒரு நீதிபதி, இந்த தீர்ப்பு மாநில அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி அடுத்த வாரம் சட்டத்தை தற்காலிகமாகத் தடுக்கும் உத்தரவில் கையெழுத்திடுவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கர்ப்பமாகி ஆறு வாரங்கள் வரை கருக்கலைப்புகளை தற்காலிகமாக மீண்டும் தொடங்கலாம் என்று கடந்த செவ்வாயன்று ஹூஸ்டன் நீதிமன்ற நீதிபதி, அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில் கருக்கலைப்புகளை மீண்டும் தொடங்கும் உத்தரவை டெக்சாஸ் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த மாத இறுதியில் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
- ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகள், பீரங்கி ராக்கெட்டுகள் ஆகியவையும் இதில் உள்ளடங்கி உள்ளன.
வாஷிங்டன்:
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேவைப்படும் வரை மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும். ரஷியா இந்தப் போரில் வெற்றி பெறாது என தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகள், பீரங்கி ராக்கெட்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் ஆகியவையும் உள்ளடங்கி உள்ளன.
- அனைத்து மதங்களையும் மதித்து நடந்தால் வெவ்வேறு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் அமைதியாக வாழலாம் என ஐ.நா. தெரிவித்தது.
- மக்கள் பரஸ்பரம் பிற மதத்தினரையும், சமூகத்தினரையும் மதிக்கவேண்டும் என ஐ.நா. சபை கூறியது.
நியூயார்க்:
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரரை ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் கொலை செய்து, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், உதய்பூரில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றியும், சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தனியார் செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது சுபைர் கைது குறித்தும் ஐ.நா., பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:-
உலகம் முழுதும் அனைத்து மதங்களையும் பரஸ்பரம் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இதனால் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழலாம். அத்தகைய சமூகம் உருவாகும் என, ஐ.நா. நம்புகிறது. கருத்து தெரிவிப்பது மக்களின் அடிப்படை உரிமை. தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிப்பது, பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமை. மக்கள் பரஸ்பரம் பிற மதத்தினரையும், சமூகத்தினரையும் மதிக்கவேண்டும். இந்த இரண்டு அம்சங்களும் மிக முக்கியமானவை என தெரிவித்தார்.






