என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக அமெரிக்க- மெக்சிகோ எல்லைக்குச் சென்றார்.
    • சட்டவிரோத குடியேற்றம் மற்றும் கடத்தல் தொடர்பான விவாதங்களின் மையமான டெக்சாசுக்கு அவர் சென்றார்.

    எல் பாசோ:

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக அமெரிக்க- மெக்சிகோ எல்லைக்குச் சென்றார்.

    அங்கு சட்டவிரோத குடியேற்றம் மற்றும் கடத்தல் தொடர்பான விவாதங்களின் மையமான டெக்சாஸின் எல் பாசோ பகுதிக்கு அவர் சென்றார்.

    மெக்சிகோ மற்றும் கனடாவின் தலைவர்களுடன் பிராந்திய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் மெக்சிகோ நகரத்திற்குச் சென்றதாக தகவல் வெளியானது.

    • மன் பிரீத் மோனிகா சிங், கடந்த 20 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றினார்.
    • முறையாகும். புதிய நீதிபதி மன்பிரீத் மோனிகா சிங்கிற்கு ஹாஸ்டன் நகர் மேயர் சில்வெஸ்டர் டர்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஹாரிஸ்க வுண்டி சிவில் கோர்ட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய இன பெண் நீதிபதியாக பதவி ஏற்று உள்ளார்.

    அவரது பெயர் மன் பிரீத் மோனிகா சிங். இவர் கடந்த 20 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றினார். அவர் ஏராளமான வழக்குகளில் வாதாடி உள்ளார். ஹாஸ்டன் நகரில் பிறந்த மன்பிரீத் மோனிகா சிங் தற்போது பெல்லாரில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    அமெரிக்காவில் சீக்கிய பெண் நீதிபதியாக பதவி ஏற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். புதிய நீதிபதி மன்பிரீத் மோனிகா சிங்கிற்கு ஹாஸ்டன் நகர் மேயர் சில்வெஸ்டர் டர்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். சீக்கிய மக்களுக்கு இது பெருமையை தரும் என அவர் கூறினார்.

    • பிரேசில் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
    • பாராளுமன்றத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

    வாஷிங்டன்:

    பிரேசிலில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கிடையே, பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    இந்நிலையில், பிரேசில் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய சம்ப்வத்துக்கு அமெரிக்கா கன்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பிரேசிலில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலையும், அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதையும் நான் கண்டிக்கிறேன். பிரேசிலின் ஜனநாயக நிறுவனங்களுக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது. அவர்களின் விருப்பத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

    • அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் 20,000 சீக்கியர்கள் வாழ்கின்றனர்.
    • அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பதவியேற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 5 லட்சம் சீக்கியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஹூஸ்டன் பகுதியில் 20,000 சீக்கியர்கள் வாழ்கின்றனர்.

    இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதி ஆனார். கடந்த வெள்ளிக்கிழமை டெக்சாஸில் உள்ள ஹாரிஸ் கவுண்டி சிவில் கோர்ட்டின் நீதிபதியாக மோனிகா பதவியேற்றார்.

    ஹூஸ்டனில் பிறந்து வளர்ந்த மோனிகா தற்போது தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் பெல்லாயரில் வசிக்கிறார். மோனிகாவின் தந்தை 1970-களின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 20 ஆண்டுகளாக வக்கீலாக இருந்த மோனிகா உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவில் பல சிவில் உரிமை அமைப்புகளில் ஈடுபட்டுள்ளார்.

    • அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • துப்பாக்கி சூடு சம்பவம் தற்செயலாக நடக்கவில்லை. மாணவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்நெக் தொடக்கப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது 6 வயது மாணவன் ஒருவன் திடீரென்று துப்பாக்கியால் ஆசிரியையை நோக்கி சுட்டான்.

    இதில் ஆசிரியை ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனால் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓடினார்கள். உடனே துப்பாக்கியால் சுட்ட மாணவனை மற்ற ஆசிரியர்கள் மடக்கி பிடித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த ஆசிரியையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தற்செயலாக நடக்கவில்லை. மாணவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் யாரும் காயம் அடையவில்லை. இப்பள்ளியில் 550 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களை சோதனை செய்யும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து மாணவர்களும் சோதனை செய்யப்படாமல் சிலர் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

    விசாரணையில் வகுப்பறையில் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்து மாணவன் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது. போலீஸ் காவலில் உள்ள மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

    • உக்ரைனுக்கு ஆதரவை அதிகரிக்கப் போகிறோம்.
    • ரஷியா மெதுவாக முயற்சி செய்யவில்லை.

    வாஷிங்டன் :

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன.

    இந்த நிலையில் உக்ரைன் போர் விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்சுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது இருநாடுகளும் இணைந்து உக்ரைனுக்கு பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்களை வழங்குவதாக இரு நாட்டு தலைவர்களும் அறிவித்தனர்.

    ஜெர்மனி அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு பின் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது, உக்ரைனில் போர் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. ரஷிய ஆக்கிரமிப்பை எதிர்க்க உக்ரைனியர்களுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். ரஷியா மெதுவாக முயற்சி செய்யவில்லை. அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைப் போலவே காட்டுமிராண்டித்தனமாகவே உள்ளன. அவர்கள் எதையும் விடவில்லை.

    ஜெர்மனி பிரதமருடன் உக்ரைன் போர் குறித்து நீண்டதொரு ஆலோசனை நடத்தினேன். போரில் அடுத்தக்கட்டமாக நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று பேசினோம். நாங்கள் உக்ரைனுக்கு ஆதரவை அதிகரிக்கப் போகிறோம். ரஷிய வான் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனைப் பாதுகாக்க நாங்கள் உதவப் போகிறோம். அதன்படி உக்ரைனுக்கு பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்களை வழங்குவதற்கான அறிவிப்பை நாங்கள் கூட்டாக வெளியிட்டோம்.

    இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

    • டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த கலவரத்தில் 5 பேர் பலியாகினர்.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிப்பதற்காக அந்த நாட்டு நாடாளுமன்றம் கூடியது.

    அப்போது தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 5 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சூழலில் நாடாளுமன்ற கலவரத்தின்போது பணியில் இருந்த பிரையன் சிக்னிக் என்கிற போலீஸ் அதிகாரி கலவரம் நடந்த மறுநாள் அதாவது ஜனவரி 7-ந் தேதி பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்தார். கலவரத்தில் பிரையன் சிக்னிக்குக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என டாக்டர்கள் கூறியபோதும், கலவரம் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் நாடாளுமன்ற கலவரம் குறித்து விசாரணை நடத்தி வந்த நாடாளுமன்ற விசாரணை குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ததது. அதில் டிரம்ப் கலவரத்தை தூண்டியதாகவும், அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவேண்டும் எனவும் கூறப்பட்டது.

    இந்தநிலையில் போலீஸ் அதிகாரி பிரையன் சிக்னிக் மரணத்துக்கு டிரம்ப் தான் காரணம் என கூறி அவர் மீது போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். வாஷிங்டன் நகர கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் டிரம்பிடம் இருந்து 10 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.82 கோடியே 63 லட்சம்) இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

    • உக்ரைனுக்கு 3.75 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது.
    • இதில் பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்கள், சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர்கள் ஆகியவை அடங்கும்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

    அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 3.75 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது என வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இதில் பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்கள், சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர்கள் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குடியரசு கட்சி சார்பில் அக்கட்சியின் பிரதிநிதிகள் சபை தலைவர் கெவின் மெக்கார்த்தி போட்டியிட்டார்.
    • அக்கட்சி உறுப்பினர்கள் 20 பேர் கெவின் மெக்கார்த்திக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சி 222 இடங்களையும், ஜனநாயக கட்சி 212 இடங்களையும் கைப்பற்றியது. இதன்மூலம் பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் வந்தது.

    இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்றம் கூடியது. பிரதிநிதிகள் சபைக்கான புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.

    இதில் குடியரசு கட்சியின் சார்பில் அக்கட்சியின் பிரதிநிதிகள் சபை தலைவர் கெவின் மெக்கார்த்தி போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில் ஹக்கீம் ஜெப்ரிஸ் களம் இறங்கினார்.

    சபாநாயகரை தேர்வு செய்ய 218 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. குடியரசு கட்சிக்கு 222 உறுப்பினர்கள் இருப்பதால் கெவின் மெக்கார்த்தி எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் 20 பேர் கெவினுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

    கடந்த 163 ஆண்டுகளில் சபாநாயகரை தேர்வு செய்ய முடியாமல் பாராளுமன்றத்தில் குழப்பமான சூழல் நீடிப்பது அமெரிக்காவில் இது முதல்முறை ஆகும்.

    கடந்த 3 நாட்களில் 11 முறை ஓட்டெடுப்பு நடத்தியபோதும் சபாநாயகரை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால் பிரதிநிதிகள் சபை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

    • துப்பாக்கியை எடுத்த மிக்கேல் மனைவி, குழந்தைகள் என பாராமல் மனதை கல்லாக்கி கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
    • யாராவது அவர்களை சுட்டுக்கொன்று இருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகம் அடைந்தனர்.

    அமெரிக்காவில் உதா மாகாணம் சால்ட் வேல் சிட்டி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 8 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர்.

    அப்போது 5 குழந்தைகள் உள்பட 8 பேர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதில் 2 பேர் பெண்கள். மற்றவர்கள் 4 வயது முதல் 17 வயது வரை உடைய குழந்தைகள் ஆவார்கள்.

    யாராவது அவர்களை சுட்டுக்கொன்று இருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் 42 வயதான மிக்கேல் கெயில் என்பவர் தனது மனைவி மாமியார் மற்றும் 3 மகள்கள், 2 மகன்கள் ஆகியோரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்தது தெரிந்தது.

    இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மிக்கேலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால் கணவரை பிரிய மனைவி முடிவு செய்தார். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவர் அமெரிக்கா கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

    இதையறிந்த மிக்கேல் அதிர்ச்சி அடைந்தார். மனைவியை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றார். ஆனாலும் மனைவி தனது முடிவை கைவிடவில்லை. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். மனைவி மீதான ஆத்திரத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொல்ல முடிவு எடுத்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். அந்த சமயம் துப்பாக்கியை எடுத்த மிக்கேல் மனைவி, குழந்தைகள் என பாராமல் மனதை கல்லாக்கி கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து 7 பேரும் வீட்டுக்குள்யே இறந்தனர்.

    குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்த பிறகு தான் மட்டும் இருந்து என்ன பயன் என நினைத்த மிக்கேல் தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவரங்கள் அனைவரும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்கள் மத்தியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்கள் கூறும்போது மிக்கேல் குழந்தைகள் எங்கள் குழந்தைகளுடன் தான் தினமும் விளையாடுவார்கள். அவர்கள் அனைவரும் எல்லோருடனும் பாசமாக பழகுவார்கள்.

    இப்போது அவர்கள் இல்லாததை நினைக்கும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது என்று தெரிவித்தனர். போலீசார் 8 பேர் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜப்பான் பிரதமர் வரும் 13-ம் தேதி சந்தித்துப் பேசுகிறார்.
    • இருவரும் உக்ரைன், ரஷியா போர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர்.

    வாஷிங்டன்:

    ஜப்பான் நாடு தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடன் நட்பு ரீதியிலான தொடர்பு கொண்டுள்ளது. மறுபுறம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    கடந்த 1-ம் தேதி ஜப்பானை நோக்கி குறுகிய தூர பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஏவி சோதித்தது வடகொரியா. இதையடுத்து நடந்த ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் பேசிய வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், நாட்டின் அணு ஆயுத உற்பத்தியை அதிவேகத்தில் அதிகரிக்க உத்தரவிட்டார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வரும் 13-ம் தேதி நேரில் சந்தித்துப் பேசுகிறார்.

    இதுதொடர்பாக, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் வருகையை அதிபர் ஜோ பைடன் எதிர்நோக்கி காத்து இருக்கிறார். இந்தச் சந்திப்பில் எங்களுடைய இரு அரசாங்கங்கள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் நாட்டு மக்களின் உறவுகளை ஆழப்படுத்துவதற்கான ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும், சர்வதேச அளவில் நிலவி வரும் பருவநிலை மாற்றம், வடகொரியா, சீனாவை சுற்றி நிலவும் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்கள், உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர் என தெரிவித்துள்ளது.

    • நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் ஒரு என்ஜின் மட்டும் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தது.
    • ஊழியர் இறந்ததையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அலபாமா மாநிலம் மாண்ட்கோமெரி நகரில் உள்ள விமான நிலையத்துக்கு டல்லாஸ் நகரில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், விமானங்கள் நிறுத்தும் இடத்தில் விமானம் நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விமானத்தின் ஒரு என்ஜின் மட்டும் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தது.

    இதனை அறியாத விமான நிலைய ஊழியர் ஒருவர் அந்த விமானத்துக்கு அருகே சென்றார். அப்போது அவர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு சிக்கிக்கொண்டார். இதனால் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி அவர் பலியானார். இந்த கோர சம்பவத்தால் அலபாமா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சக ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    சனிக்கிழமை நிகழ்ந்த இந்த கோர விபத்து குறித்து அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. 

    ×