search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்- மனைவி உள்பட 7 பேரை சுட்டுக்கொன்றவர் தற்கொலை
    X

    விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்- மனைவி உள்பட 7 பேரை சுட்டுக்கொன்றவர் தற்கொலை

    • துப்பாக்கியை எடுத்த மிக்கேல் மனைவி, குழந்தைகள் என பாராமல் மனதை கல்லாக்கி கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
    • யாராவது அவர்களை சுட்டுக்கொன்று இருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகம் அடைந்தனர்.

    அமெரிக்காவில் உதா மாகாணம் சால்ட் வேல் சிட்டி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 8 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர்.

    அப்போது 5 குழந்தைகள் உள்பட 8 பேர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதில் 2 பேர் பெண்கள். மற்றவர்கள் 4 வயது முதல் 17 வயது வரை உடைய குழந்தைகள் ஆவார்கள்.

    யாராவது அவர்களை சுட்டுக்கொன்று இருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் 42 வயதான மிக்கேல் கெயில் என்பவர் தனது மனைவி மாமியார் மற்றும் 3 மகள்கள், 2 மகன்கள் ஆகியோரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்தது தெரிந்தது.

    இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மிக்கேலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால் கணவரை பிரிய மனைவி முடிவு செய்தார். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவர் அமெரிக்கா கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

    இதையறிந்த மிக்கேல் அதிர்ச்சி அடைந்தார். மனைவியை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றார். ஆனாலும் மனைவி தனது முடிவை கைவிடவில்லை. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். மனைவி மீதான ஆத்திரத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொல்ல முடிவு எடுத்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். அந்த சமயம் துப்பாக்கியை எடுத்த மிக்கேல் மனைவி, குழந்தைகள் என பாராமல் மனதை கல்லாக்கி கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து 7 பேரும் வீட்டுக்குள்யே இறந்தனர்.

    குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்த பிறகு தான் மட்டும் இருந்து என்ன பயன் என நினைத்த மிக்கேல் தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவரங்கள் அனைவரும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்கள் மத்தியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்கள் கூறும்போது மிக்கேல் குழந்தைகள் எங்கள் குழந்தைகளுடன் தான் தினமும் விளையாடுவார்கள். அவர்கள் அனைவரும் எல்லோருடனும் பாசமாக பழகுவார்கள்.

    இப்போது அவர்கள் இல்லாததை நினைக்கும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது என்று தெரிவித்தனர். போலீசார் 8 பேர் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×