என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • உக்ரைனில் பொதுமக்கள் மீது ரஷிய ராணுவம் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது.
    • ரஷிய ராணுவம் உக்ரைனில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது என்றார் கமலா ஹாரிஸ்.

    பெர்லின்:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் சுமார் ஓராண்டு காலமாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் இருதரப்பிலும் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

    உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.

    இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜெர்மனி நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள முனிச் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    உக்ரைன் மீதான போரில் ரஷியா மிக மோசமான போர் குற்றங்களை செய்திருக்கிறது. உக்ரைனில் பொதுமக்கள் மீது ரஷிய ராணுவம் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது. கொலை, பாலியல் பலாத்காரம், அடித்து துன்புறுத்துதல், மின்சாரம் பாய்ச்சுவது உள்ளிட்ட சித்ரவதைகளை ரஷிய ராணுவம் பொதுமக்கள் மீது நிகழ்த்தியுள்ளது.

    உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ரஷியாவிற்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். பல குழந்தைகள் தங்கள் குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். போர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே ரஷிய ராணுவத்தின் அத்துமீறல்களை நாம் கவனித்து வருகிறோம். இது தொடர்பாக நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள், ரஷிய ராணுவம் உக்ரைனில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது என்பதை நிரூபிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

    • நிலநடுக்கம் நடைபெற்று 2 வாரம் நெருங்கி வரும் நிலையில் இன்றுடன் மீட்புபணிகளை நிறுத்த துருக்கி திட்டம்.
    • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

    துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த 6-ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதினானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி- சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன.

    நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

    இதனிடையே துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும்பணிகள் பல நாட்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த சூழ்நிலையில், நிலநடுக்கம் நடைபெற்று 2 வாரம் நெருங்கி வரும் நிலையில் இன்றுடன் மீட்புபணிகளை நிறுத்த துருக்கி திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் சென்றுள்ளார்.

    அங்கு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டு வருகிறார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா ஜனநாயக நாடு ஆனால் அந்நாட்டின் தலைவர் நரேந்திரமோடி ஜனநாயகமானவர் அல்ல.
    • அதானி விவகாரம் இந்திய அரசில் மோடியின் வலிமையை குறைக்கும்.

    வாஷிங்டன்:

    அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியிட்டது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் அதன் பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இதனால், அதானி நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதேவேளை, அதானி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்காவின் பெரும் பணக்காரரும், முதலீட்டாளருமான ஜார்ஜ் சொரோஸ் ஜெர்மனியின் முனிச் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பருவநிலை மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் என்ற தலைப்பில் பல்கலைக்கழகத்தில் பேசிய ஜார்ஜ் சொரோஸ் இந்தியா, பிரதமர் மோடி, அதானி குறித்து பேசினார்.

    அவர் பேசுகையில், இந்தியா சுவாரசியமான நாடு. இந்தியா ஜனநாயக நாடு ஆனால் அந்நாட்டின் தலைவர் நரேந்திரமோடி ஜனநாயகமானவர் அல்ல.

    அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குவாட் அமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளது. ஆனால், மிகவும் தள்ளுபடி விலையில் ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி அதில் அதிக பணம் சம்பாதிக்கிறது.

    மோடியும், தொழிலதிபர் அதானியும் நெருங்கிய கூட்டாளிகள். அவர்களின் விதி பின்னிப்பிணைந்துள்ளது. அதானி நிறுவனம் பங்குச்சந்தை மூலம் நிதி பெற முயற்சித்து தோல்வியடைந்தது. பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக அதானி மீது குற்றச்சாட்டு உள்ளது. அவரின் பங்குகள் சீட்டுக்கட்டு போல சரிந்துள்ளது. இந்த விவகாரத்தில் மோடி அமைதியாக உள்ளார். ஆனால், பாராளுமன்றத்திலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்க வேண்டும்.

    அதானி விவகாரம் இந்திய அரசில் மோடியின் வலிமையை குறைக்கும். மேலும், இது கட்டாயம் தேவைப்படும் நிறுவன சீர்திருத்தங்களுக்கான கதவுகளை உந்தி தள்ளும். நான் அனுபவமில்லாதவனாக இருக்கலாம், ஆனால் இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை நான் எதிர்பார்க்கிறேன்' என்றார். இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அமெரிக்க பெரும் பணக்காரர் ஜார்ஜ் சொரோஸ் தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி கூறுகையில், தனது மோசமான செயல்களை வெற்றிபெற செய்ய வளைந்துகொடுக்கும் அரசு வேண்டுமென்று ஜார்ஜ் சொரோஸ் நினைக்கிறார். அவரது பேச்சில் இருந்தே பிரதமர் மோடி போன்ற தலைவர்களை குறிவைக்க 1 மில்லியன் டாலர்களை நிதி உதவி வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது. ஜார்ஜ் சொரோஸ் இந்திய ஜனநாயகத்தை அழித்து அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மூலம் அரசை நடத்த முயற்சிக்கிறார். நாம் வெளிநாட்டு சக்திகளை கடந்த காலங்களில் முறியடித்துள்ளோம்... மீண்டும் முறியடிப்போம் என்றார்.

    • அமெரிக்காவின் மிசிசிபி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
    • துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் மிசிசிபி நகரில் நேற்று நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

    • யூடியூப் நிறுவன சி.இ.ஓ. சூசன் வோஜ்சிக்கி அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.
    • புதிய சி.இ.ஓ.வாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கலிபோர்னியா:

    யூடியூப் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    சூசன் வோஜ்சிக்கி கடந்த 2014-ம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். உடல்நலக் காரணங்களால் 9 ஆண்டுகளாக இருந்த சி.இ.ஓ பதவியிலிருந்து நேற்று விலகினார்.

    இந்நிலையில், யூடியூப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அலபாமா-டென்னஸ்சி எல்லையில் உள்ள மேடிசன் நகரில் நேற்று முன்தினம் மதியம் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் யுஎச்-60 பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர். இது ராணுவத்தின் டென்னஸ்சி நேஷனல் கார்டு பிரிவுக்கு சொந்தமானது என தகவல்கள் கூறுகின்றன.

    இந்த விபத்து பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் விபத்து நடந்த இடத்தில் கரும்புகை எழும்பியதைக் காண முடிந்ததாகவும், அங்கு ஆம்புலன்சுகள் விரைந்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

    வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளி தலைவர்களின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • ஐரோப்பிய நாடான அயர்லாந்தை ஆட்சி செய்வதும் ஒரு இந்திய வம்சாவளிதான்.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே அறிவித்திருக்கிறார்.

    ஏற்கனவே குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக நிக்கி ஹாலே களம் இறங்கி இருக்கிறார். இதனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதன் மூலம் நிக்கி ஹாலே உலக நாடுகளின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளி தலைவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளி தலைவர்களின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த பெண் அரசியல் தலைவரான கமலா ஹாரிஸ் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்று சாதனை படைத்தார்.

    இந்தியாவை சேர்ந்த தாய்க்கும், ஜமைக்கா நாட்டின் தந்தைக்கும் பிறந்த கமலா ஹாரிசின் இந்த வெற்றி அமெரிக்க அரசியல் அரங்கில் இந்திய வம்சாவளியினரின் பங்கு தவிர்க்க முடியாததாக மாறியிருப்பதை காட்டியது.

    அதன் எதிரொலியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் இந்திய வம்சாளியை சேர்ந்த 5 பேர் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகினர்.

    ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால், அமி பெரா மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகிய 5 பேரும் அமெரிக்க நாடாளுமன்ற பிரநிதிகள் சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அமெரிக்கா மட்டும் இன்றி உலகின் பிற முக்கிய நாடுகளின் அரசியலிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தலைவர்களின் ஆதிக்கம் தொடர்ந்து நீண்டு வருவதை காண முடிகிறது.

    அந்த வகையில் இந்தியாவை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த இங்கிலாந்தின் பிரதமராக கடந்த ஆண்டு பதவியேற்று, உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்.

    210 ஆண்டுகளில் இங்கிலாந்தை ஆட்சி செய்யும் மிக இளைய பிரதமர் இவர்தான். அந்த நாட்டின் முதல் இந்து பிரதமரும் இவரே.

    ரிஷி சுனக்கை தவிர்த்து இன்னும் சில இந்திய வம்சாவளியினர் இங்கிலாந்து அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் ரிஷி சுனக்கின் மந்திரி சபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்துறை மந்திரியாக உள்ளார்.

    அதேபோல் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசில் இந்திய வம்சாவளி பிரிதி படேல் உள்துறை மந்திரியாகவும், மற்றொரு இந்திய வம்சாவளி அலோக் சர்மா சர்வதேச வளர்ச்சி மந்திரியாகவும் இருந்தனர்.

    இ்ங்கிலாந்தை போல மற்றொரு ஐரோப்பிய நாடான அயர்லாந்தை ஆட்சி செய்வதும் ஒரு இந்திய வம்சாவளிதான். கடந்த 2017 முதல் 2020 வரை அந்த நாட்டின் பிரதமராக பதவி வகித்த இந்திய வம்சாவளி லியோ வரத்கர், கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் அந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதே போல் 2015-ம் ஆண்டு முதல் போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக இருந்து வரும் அன்டோனியோ கோஸ்டா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

    கனடாவின் ராணுவ மந்திரியாக இருந்து வரும் அனிதா ஆனந்தின் பெற்றோர் இந்தியர்கள். இவரது தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தாயார் பஞ்சாபைச் சேர்ந்தவர்.

    அனிதா ஆனந்தை தவிர, கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் மந்திரி சபையில் இந்திய வம்சாவளிகளான ஹர்ஜித் சஜ்ஜன் மற்றும் கமல் கேரா ஆகிய இருவரும் மந்திரிகளாக உள்ளனர்.

    அதேபோல் நியூசிலாந்தில் மந்திரியாக பதவியேற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்கிற பெருமைக்குரியவர் பிரியங்கா ராதாகிருஷ்ணன். சென்னையில் கேரள தம்பதிக்கு பிறந்த இவர், நியூசிலாந்தின் சமூகம் மற்றும் தன்னார்வத் துறை மந்திரியாக உள்ளார்.

    கயானா நாட்டின் அதிபர் முகமது இர்பான் அலி, மொரீஷியஸ் நாட்டின் அதிபர் பிரித்விராஜ்சிங் ரூபன், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்னாட், சீஷெல்ஸ் நாட்டின் அதிபர் வாவல் ராம்கலாவன் ஆகியோரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களே.

    இப்படி உலகம் முழுவதும் இந்திய வம்சாவளி தலைவர்கள் பலரும் உயர் பதவிகளில் இருந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

    • போயிங் விமானங்களை ஏர் இந்தியா வாங்கும் ஒப்பந்தத்திற்கு அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்தார்.
    • இரு தலைவர்களும் அமெரிக்கா, இந்தியா உறவின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 20 போயிங் 787 ரக விமானங்கள், 10 போயிங் 777-9s அகலமான விமானங்கள் மற்றும் 190 போயிங் 737MAX அகலம் குறைவான விமானங்களை இந்தியா வாங்குகின்றது. விமான வர்த்தக வரலாற்றில் இது மிகப்பெரிய கொள்முதலாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டி, வரவேற்பு அளித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது பேசிய அதிபர் ஜோ பைடன், ஏர் இந்தியா-போயிங் ஒப்பந்தம் அமெரிக்காவில் 1 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்தக் கொள்முதல் 44 மாநிலங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க வேலைகளை உருவாக்கும் என தெரிவித்தார்.

    இரு தலைவர்களும் அமெரிக்கா, இந்தியா உறவின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

    இரு நாடுகளுக்கும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், நமது பகிரப்பட்ட முன்னுரிமைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், குவாட் போன்ற குழுக்களில் தொடர்ந்து இணைந்து பணியாற்றவும் இருவரும் உறுதிபூண்டனர்.

    • கடந்த முறை ஜோ பைடனிடம் தோல்வியடைந்த டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்
    • நிக்கி ஹாலே போட்டியிட உள்ளதாக அறிவித்ததும், அவருக்கு இந்திய வம்சாவளியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக முன்னாள் மாகாண கவர்னரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியுமான நிக்கி ஹாலே (வயது 51) இன்று அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில் களமிறங்க உள்ளதாக கூறி உள்ளார்.

    'குடியரசு கட்சியினர் கடந்த 8 அதிபர் தேர்தல்களில் 7-ல் மக்கள் வாக்குகளை இழந்துள்ளனர். இது மாற்றப்பட வேண்டும். ஜோ பைடனின் சாதனை படுமோசமானது. ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எனவே வரும் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், எல்லையைப் பாதுகாக்கவும், நமது நாட்டை, வலுப்படுத்தவும் புதிய தலைமுறை தலைமையேற்கும் நேரம் இது' என்றும் நிக்கி ஹாலே கூறி உள்ளார்.

    குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 76) ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர் கடந்த முறை அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக ஆதரவு திரட்டி வருகிறார். தற்போது நிக்கி ஹாலேவும் அறிவித்துள்ளதால், குடியரசு கட்சியின் வேட்பாளர் யார்? என்பதில் இவர்கள் இருவருக்கும் இடையே நேரடி போட்டி உள்ளது.

    குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் டிரம்பை எதிர்த்து நிக்கி ஹாலே இன்று தனது பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு இந்திய வம்சாவளியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அதிபர் தேர்தலில் நுழைவதற்கு முன், அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் நிக்கி ஹாலே வெற்றி பெற வேண்டும். அதன்பிறகே அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது.
    • சீனா வான் எல்லைக்குள் அமெரிக்காவின் பலூன்கள் 10 முறைக்கு மேல் அனுமதியின்றி பறந்துள்ளதாக சீனா குற்றம்சாட்டியது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்துக்கு மேலே பறந்த ராட்சத பலூன் அட்லாண்டிக் கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    இது சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் அதை சீனா மறுக்கிறது. அதன்பின்னர் அமெரிக்காவில் கடந்த 10-ந்தேதியும், நேற்றும், நடுவானில் பறந்த 2 மர்ம பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

    கனடாவிலும் மர்ம பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தபட்டுள்ளது. இதற்கிடையே சீனா வான் எல்லைக்குள் அமெரிக்காவின் பலூன்கள் 10 முறைக்கு மேல் அனுமதியின்றி பறந்துள்ளதாக சீனா குற்றம்சாட்டியது.

    2022-ம் ஆண்டு ஜனவரி முதல் சீனா வான்பரப்புகளில் அமெரிக்க ராட்சத பலூன்கள் பறந்ததாகவும், அதனை பொறுப்புடன் தொழில் ரீதியாக அணுகியதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கெர்பி கூறும்போது, 'சீனாவின் மீது அமெரிக்கா கண்காணிப்பு பலூன்களை பறக்கவிடவில்லை. சீன வான்வெளியில் நாங்கள் எந்தவித பலூன்களையும் நாங்கள் அனுப்பவில்லை' என்றார்.

    வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கரீன்-ஜூன் பியர் கூறும் போது, 'அமெரிக்க வான்பரப்பில் பறந்த மர்ம பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அது வேற்றுகிரக வாசிகள் அல்லது வேற்று கிரக நடவடிக்கைகள் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

    இதுகுறித்து கேள்விகள் மற்றும் கவலைகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அது வேற்றுகிரக வாசிகள் அல்ல' என்றார்.

    • அமெரிக்கா, கனடா எல்லையின் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
    • ஒரே மாதத்தில் 4வது தடவையாக வானில் பறந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் கடந்த 4-ம் தேதி சீன உளவு பலூன் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    தங்கள் நாட்டு வான்பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு அதிருப்தி தெரிவித்த சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, பலூன் விவகாரத்தில் அரசியல் ரீதியில் தங்களை தவறாக சித்தரிக்கும் செயல் என்று குற்றம் சாட்டியது. இதேபோல், அமெரிக்காவின் அலாஸ்காவில் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    இதற்கிடையே, கனடா நாட்டின் வான்வெளியில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்கா-கனடாவின் வான்வெளியை பாதுகாக்கும் இருநாட்டு கூட்டுப்படைகளின் கீழ் இயங்கும் அமெரிக்காவின் எப்-22 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.

    இந்த விவகாரம் குறித்து உடனடியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், அமெரிக்கா, கனடா எல்லையில் உள்ள லேக் ஹுரான் பகுதியில் பறந்த மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

    ஒரே மாதத்தில் 4வது தடவையாக வானில் பறந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரதமர் மோடியால் (ரஷிய அதிபர் புதினை) சமாதானப்படுத்த முடியும்.
    • உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடுத்தது.

    வாஷிங்டன் :

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டு முடியப்போகிறது. போர் தொடங்கியபோது, ஒரு வார காலத்துக்கு மேல் நீடிக்காது என்றுதான் உலக நாடுகள் எதிர்பார்த்தன.

    ஆனால் ரஷியாவை உக்ரைன் இன்னும் உக்கிரத்துடன் எதிர்த்து போர் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளை செய்து வருகின்றன.

    இந்தப்போர் உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற குரல் ஒலித்து வருகிறது. பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம், "உக்ரைன் போரை நிறுத்த இந்திய பிரதமர் மோடிக்கு இன்னும் நேரம் இருக்கிறதா அல்லது ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சமாதானப்படுத்த இன்னும் நேரம் இருக்கிறதா?" என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு ஜான் கிர்பி பதில் அளிக்கையில் கூறியதாவது:-

    உக்ரைன் போரை நிறுத்துவதற்கு இன்னும் ரஷிய அதிபர் புதினுக்கு நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இன்னும் அதற்கு நேரம் உள்ளது என்று கருதுகிறேன். பிரதமர் மோடியால் (ரஷிய அதிபர் புதினை) சமாதானப்படுத்த முடியும். என்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாரோ அதைப் பிரதமர் மோடி பேசட்டும். நாங்கள் போர் இன்று முடிவுக்கு வர முடியும் என கருதுகிறோம். அது முடிவுக்கு வரவேண்டும். உக்ரைன் போரை நிறுத்த மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×