என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • சிராக்கை சந்தித்த அந்த பெண்ணிடம் அவர் பணப்பையை ஒப்படைத்தார்.
    • ஒரு பயனர் சிராக் போன்றவர்கள் இந்தியா சுற்றுலாவில் உண்மையான தூதர்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இம்மாத தொடக்கத்தில் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் தான் இந்தியாவில் ரெயிலில் ஏறிய போது தனது பணப்பையை மறந்து விட்டு ரெயில் நிலையத்தில் இறங்கியதாக கூறி இருந்தார்.

    ஆனால் சிறிது நேரத்திலேயே தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் சிராக் என்ற நபரிடம் இருந்து ஒரு தகவல் வந்ததாகவும், அதில் சிராக் தனது பணப்பையை கண்டுபிடித்ததாகவும், அதை திருப்பி தருவதாகவும் கூறப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து சிராக்கின் பதிவுகளின்படி அவர் குஜராத்தின் புஜ் நகர பகுதியில் ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சிராக்கை சந்தித்த அந்த பெண்ணிடம் அவர் பணப்பையை ஒப்படைத்தார்.

    அதனை பெற்று கொண்ட அமெரிக்க பெண், சிராக்கிற்கு நன்றி தெரிவித்து பணம் வழங்கினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த சிராக் அமெரிக்க பெண்ணிடம் அவரது பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறினார். இது தொடர்பாக அமெரிக்க பெண் பதிவிட்டு இருந்த பதிவில் சிராக்கின் உண்மையான கருணை சேவைக்கு நான் பணம் வழங்கியது எவ்வளவு பெரிய தவறு என்பதை நான் கற்றுக் கொண்டேன் என கூறியுள்ளார்.

    அமெரிக்க பெண்ணின் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோ சுமார் 50 ஆயிரம் விருப்பங்களை பெற்றுள்ளது. அதில் ஒரு பயனர் சிராக் போன்றவர்கள் இந்தியா சுற்றுலாவில் உண்மையான தூதர்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.

    • உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
    • இரு நாடுகளிடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

    உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு 2 பில்லியன் டாலர்கள் ஆயுத உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுத உதவியின் மொத்த மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 16 ஆயிரத்து 586 கோடியே 71 லட்ச ரூபாய் ஆகும்.

    உக்ரைன் போர் ஓராண்டைக் கடந்துள்ள நிலையில் ரஷியாவுக்கு சீனா ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    • ஜாம்பி போதைப்பொருள் பழக்கம் முதலில் பிலடெல்பியாவில் தோன்றியிருக்கலாம் என தெரிகிறது
    • ஜாம்பிக்கள் போல சாலைகளில் ஒரு சிலர் சுற்றித்திரியும் வீடியோ வெளியானது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு அடுத்து போதைப்பொருள் பயன்பாடு அரசுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. அந்த வகையில் இப்போது ஜாம்பி போதைப் பொருள் பிரபலமாகி வேகமாகப் பரவி வருகிறது. ஹெராயினுக்கு பதிலாகவே முதலில் இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதன் பின்னரே இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    டிராங்க் டோப் எனப்படும் இந்த ஜாம்பி போதைப்பொருளை பயன்படுத்தினால் மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதை எடுத்துக் கொண்டால் மயக்க மருந்தை எடுத்துக் கொண்டது போல இருக்குமாம். தீவிர தூக்கம், மன அழுத்தம், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் கை, கால்களில் மோசமான புண்கள் ஏற்படுமாம். அதனை அப்படி கவனிக்காமல் விட்டால் தோல் முழுவதும் பாதிப்படைந்து அழுகிவிடுமாம்.

    இந்த போதைப் பொருளை பயன்படுத்தியதும் உச்சகட்ட போதை அடைவதால், அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  போதை தலைக்கேறினால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் நினைவில் இருக்காதாம். ஜாம்பிக்கள் போல சாலைகளில் ஒரு சிலர் சுற்றித்திரியும் வீடியோ வெளியான நிலையில், அவர்கள் இந்த போதைப் பொருளை பயன்படுத்தியவர்கள் என தெரியவந்துள்ளது.

    ஜாம்பி போதைப்பொருள் பழக்கம் முதலில் பிலடெல்பியாவில் தோன்றியிருக்கலாம் என தெரிகிறது. தற்போது, அமெரிக்கா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்துகிறது.

    டிராங்க் டோப் என்பது அமெரிக்காவின் இளைஞர்களின் வாழ்வை அழித்த பென்டானில்  போதைப்பொருள் மற்றும் சைலாசின் என்ற கால்நடை மருந்தின் கலவையாகும். சைலாசின் என்பது, கால்நடை மருத்துவ பயன்பாட்டிற்காக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு பயன்படுத்தக்கூடாது. இந்த மருந்தை அதிகமாக உட்கொண்டால், மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். 

    • கலிபோர்னியாவின் மேற்கு மாகாண பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்புயல் நிலவி வருகிறது.
    • பனிகட்டிகள் பல அடி உயரத்தில் உறைந்து கிடப்பதால் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மேற்கு மாகாண பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்புயல் நிலவி வருகிறது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள்.

    முக்கிய ரோடுகளில் பனிகட்டிகள் பல அடி உயரத்தில் உறைந்து கிடப்பதால் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகிறார்கள்.

    • தனியார் சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனத்தின் அதிகாரிகள் 5 பேர் சிறிய விமானத்தில் ஓகியோ மாகாணத்துக்கு புறப்பட்டனர்.
    • விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாணத்தில் உள்ள உலோக உற்பத்தியில் ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து அந்த பகுதி முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், உலோக ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக அர்கானாஸ் மாகாணத்தை சேர்ந்த தனியார் சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனத்தின் அதிகாரிகள் 5 பேர் சிறிய விமானத்தில் ஓகியோ மாகாணத்துக்கு புறப்பட்டனர்.

    லிட்டில் ராக் நகரில் உள்ள பில் அண்ட் ஹலாரி கிளின்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்து நொருங்கியது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    • உக்ரைனில் அமைதி நிலைக்க ரஷியா போரை நிறுத்துவது தொடர்பாக 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.சபையின் சிறப்பு கூட்டம் நடந்தது.
    • பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள புகழ் பெற்ற ஈபிள் டவர் உக்ரைன் தேசிய கொடி நிறமான நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்ட மைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது தாக்குதலை தொடங்கியது.

    இதில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து சின்னாபின்னமாகிவிட்டன. இந்த சண்டையில் சுமார் 2 லட்சம் வீரர்களும், 42 ஆயிரம் பொதுமக்களும் உயிர் இழந்துவிட்டனர். 57 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.

    பலம் வாய்ந்த ரஷியாவிடம் உக்ரைன் சில நாட்களில் வீழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகள் அதி நவீன ஆயுத உதவிகள் செய்ததால் ரஷியாவை எதிர்த்து உக்ரைன் ஆக்ரோஷத்துடன் போரிட்டு வருகிறது. இதனால் இந்த போர் மாதக்கணக்காக நீடித்து இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. போர் தொடங்கி இன்று 366-வது நாளை எட்டி உள்ளது.

    இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனாலும் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.

    இந்நிலையில் உக்ரைனில் அமைதி நிலைக்க ரஷியா போரை நிறுத்துவது தொடர்பாக 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.சபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் உக்ரைன் மீதான போரை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உக்ரைனை விட்டு ரஷிய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    ரஷியாவுக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரித்து 141 நாடுகளும், எதிராக 7 நாடுகளும் வாக்களித்தன.

    ஆனால் இந்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நாடுகள் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. 141 நாடுகள் ஆதரவு கொடுத்ததால் ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேற்றப்பட்டது.

    முன்னதாக நடந்த விவாதத்தில் மேற்கத்திய நாடுகள் ரஷியாவை பிளவுபடுத்த முயற்சிப்பதாக ரஷிய பாதுகாப்பு துறை மந்திரி கெர்கய் குற்றம் சாட்டினார்.

    இந்தியா சார்பில் பங்கேற்ற ஐ.நா. சபையின் பிரதிநிதி ருச்சிரா காம்போஸ் பேசும் போது அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும், பேச்சு வார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.

    உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள புகழ் பெற்ற ஈபிள் டவர் உக்ரைன் தேசிய கொடி நிறமான நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது. இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி உக்ரைன் நாடு புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு உள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவில் பொது மக்கள் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
    • ‘செல்பி’ படத்தை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் வெளியிட்டுள்ளது.

    வாஷிங்டன் :

    பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள அந்த நாட்டின் ராணுவ தளங்களின் மீது சீன உளவு பலூன் பறக்க விடப்பட்டு, அது தெற்கு கரோலினாவில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அட்லாண்டிக் பெருங்கடலில் வீழ்த்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்துவதற்கு முன்பாக, 60 ஆயிரம் அடி உயரத்தில், அதைக் கண்காணித்த 'எப்-2 ராப்டர்' போர் விமானத்தின் விமானி எடுத்த 'செல்பி' படத்தை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் வெளியிட்டுள்ளது.

    அந்தப் படம் சீன உளவு பலூனின் மர்மமான வெள்ளை கோளத்தில் பேனல்கள் தொங்குவதைக் காட்டுகிறது. பலூனுக்கு எதிராக தாக்குதல் தொடுத்த அமெரிக்க விமானத்தின் நிழலின் ஒரு குறிப்பிடத்தக்க காட்சியையும் அது வெளிப்படுத்தியது.

    இந்த 'செல்பி' படம், அமெரிக்க கண்டத்துக்கு மேலே உள்ள வான்வெளியில் அதிக உயரத்தில் பலூன் நுழைந்தபோதே, விமானப்படை வீரரால் எடுக்கப்பட்டது என்று சி.என்.என். தெரிவித்துள்ளது.

    • பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை பாகிஸ்தான் வழங்கி வருகிறது.
    • மேலும் அவர்களுக்கு தண்டனையின்றி செய்கிறது என ஐ.நா.வுக்கான இந்திய தூதர் தெரிவித்தார்.

    ஜெனீவா:

    பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் மற்றும் தண்டனையின்றி அதைச் செய்யும் ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் பிரதீக் மாத்தூர் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    இரண்டு நாட்கள் தீவிரமான விவாதங்களுக்குப் பிறகு, மோதல் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரே பாதை சமாதானப் பாதைதான் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொண்ட நேரத்தில், இத்தகைய விரும்பத்தகாத ஆத்திரமூட்டல் சம்பவங்கள் வருந்தத்தக்கது. இது நிச்சயமாக தவறானது.

    பாகிஸ்தானின் பிரதிநிதிக்கு நாங்கள் வழங்கும் அறிவுரை என்னவென்றால், கடந்த காலத்தில் நாங்கள் பயன்படுத்திய ஏராளமான சம்பவங்களை கூறலாம்.

    ஐ.நா.சாசனத்தின் கொள்கைகளை இந்தியா நிலைநிறுத்துகிறது, நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மட்டுமே ஒரே வழி என்று கூறுவோம் என தெரிவித்தார்.

    • ஐ.நா.சபை தீர்மானத்திற்கு ஆதரவாக 141 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
    • இந்தத் தீர்மானத்தில் சீனா, இந்தியா உள்பட 32 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

    நியூயார்க்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில், உக்ரைனில் நீடித்த அமைதி திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    உக்ரைனில் விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதன் அவசியம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது.

    ஐ.நா.சபை தீர்மானத்திற்கு ஆதரவாக 141 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதை எதிர்த்து 7 பேரும் வாக்களித்தனர்.

    இந்தத் தீர்மானத்தின் மீது சீனா, இந்தியா உள்பட 32 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

    • அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே சமீபத்தில் அறிவித்தார்.
    • குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட திட்டம்.

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.

    குடியரசு கட்சியில் தன்னை எதிர்த்து வேட்பாளர் தேர்வில் வேறு யாரும் போட்டியிட கூடாது என்பதில் டிரம்ப் தீவிரமாக இருந்து கட்சி நிர்வாகத்திடம் ஆதரவு திரட்டி வந்தார். இதற்கிடையே அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே சமீபத்தில் அறிவித்தார்.

    இந்த நிலையில் டிரம்ப்பை எதிர்த்து மற்றொரு வரும் அதிபர் தேர்தலில் களம் இறங்க உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

    தொழில் அதிபரும் மிகப் பெரிய கோடீஸ்வரருமான விவேக் ராமசாமி, அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்கள். அவரது தந்தை மின் பொறியாளராகவும், தாய் முதியோர் மனநல மருத்துவராகவும் பணிபுரிந்தனர்.

    அமெரிக்காவின் சின்சினாட்டியில் பிறந்த விவேக் ராமசாமி புகழ் பெற்ற ஹார்வர்ட், யேல் பல்கலைக்கழகங்களில் படித்தவர். ஒரு டி.வி. சேனலில் நேரடி நிகழ்ச்சியில் பேசிய விவேக் ராமசாமி, தான் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

    37 வயதான விவேக் ராமசாமி மிகப்பெரிய மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.4,140 கோடி என்று கூறப்படுகிறது. அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட அவருக்கு குடியரசு கட்சியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதிபர் தேர்தலில் போட்டியிட கட்சி வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போயிங் 777-300ER விமானம் மூலம் இயக்கப்பட்ட விமானத்தின் என்ஜின் ஒன்றில் எண்ணெய் கசிவு.
    • விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானம் ஸ்வீடனில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 300 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    போயிங் 777-300ER விமானம் மூலம் இயக்கப்பட்ட அந்த விமானம், என்ஜின் ஒன்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், திருப்பிவிடப்பட்டது.

    எண்ணெய் கசிவைத் தொடர்ந்து, இயந்திரம் நிறுத்தப்பட்டது. பின்னர் விமானம் பாதுகாப்பாக ஸ்டாக்ஹோமில் தரையிறக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) மூத்த அதிகாரி தெரிவித்தார்.

    தரை ஆய்வின் போது, என்ஜின் இரண்டின் வடிகால் மாஸ்டில் இருந்து எண்ணெய் வெளியேறுவதைக் காண முடிந்தது என்றும் இதுதொடர்பாக ஆய்வு நடந்து வருவதாகவும் அதிகாரி கூறினார்.

    மேலும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

    • அமெரிக்கா வான்வெளி பகுதியில் சமீபத்தில் பறந்த சீனா உளவு பலூன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • பலூன் எங்கிருந்து வந்தது என்ற விவரம் எதுவும் இல்லை.

    ஹவாய்:

    அமெரிக்கா வான்வெளி பகுதியில் சமீபத்தில் பறந்த சீனா உளவு பலூன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் ஜோபை டன் உத்தரவின் பேரில் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமெரிக்க மற்றும் கனடா வான்வெளியில் பறந்த 3 மர்ம பொருளையும் அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஹவாய் தீவில் உள்ள ஹனலோவ் என்ற இடத்தில் 500 மைலுக்கு அப்பால் ராட்சத வடிவிலான வெள்ளை நிற பலூன் மர்மமான முறையில் பறப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சுமார் 40 ஆயிரம் அடி முதல் 50 ஆயிரம் அடி உயரத்தில் இந்த மர்ம பலூன் பறப்பதாக அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பான அந்த பலூனின் புகைப்படமும் வெளியாகி உள்ளது. அந்த பலூன் எங்கிருந்து வந்தது என்ற விவரம் எதுவும் இல்லை. இதையடுத்து அங்கு உஷார் படுத்தப்பட்டு உள்ளது.

    ×