என் மலர்
அமெரிக்கா
- ஜோ பைடனுக்கு வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிப்பு.
- ஜோ பைடனுக்கு மேற் சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவர்கள் தகவல்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் மார்பில் இருந்து தோல் புற்றுநோய் புண் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோ பைடனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனையின் போது மார்பில் புண் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஒரு அடித்தள செல் புற்றுநோய் என்பதும் இது பரவுவதற்கு வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மார்பில் இருந்த தோல் புற்றுநோய் புண் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜோ பைடனுக்கு மேற் சிகிச்சை தேவையில்லை என்றும் அவரது உடல் நிலை தகுதியாக உள்ளதாகவும் மருத்துவர் கெவின் ஓகானர் தெரிவித்துள்ளார்.
- நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது.
- விமானம் குலுங்கியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 469 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு விமானம் ஜெர்மனிக்கு புறப்பட்டது. கிளம்பிய சிறிது நேரத்துக்கு பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது. இதில் பயணிகள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். பயணிகள் அனைவரும் பயத்தில் கூச்சலிட்டனர். விமானம் குலுங்கியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் விரைந்து வந்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். பின்னர், காயம் அடைந்த 7 பயணிகளும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
- அரசு மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை அகற்ற 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
- காலக்கெடுவுக்குள் அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மின்னணு சாதனங்களில் இருந்தும் டிக்-டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்:
இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சீனாவை சேர்ந்த பிரபல டிக்-டாக் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை செய்யப்பட்டது. மேலும் அந்நாட்டு அரசின் மின்னணு சாதனங்களிலும் டிக்-டாக் செயலியை நிரந்தரமாக தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.
அரசு மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை அகற்ற 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மின்னணு சாதனங்களில் இருந்தும் இந்த செயலியை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் டிக்-டாக் செயலியை முழுமையாக தடை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மசோதாவுக்கு அமெரிக்கா பாராளுமன்ற குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் டிக்-டாக் செயலியை தடை செய்வதற்கான முழு அதிகாரம் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஜனாதிபதி ஜோ பைடன் விரும்புவது உண்மைகளை மட்டுமே.
- 3 ஆண்டுகளை கடந்தும் இந்த உயிர்க்கொல்லி தொற்று எங்கிருந்து உருவானது என்பதில் தொடர்ந்து குழப்பமே நீடிக்கிறது.
வாஷிங்டன் :
சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அங்கிருந்து உலகெங்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. 3 ஆண்டுகளை கடந்தும் இந்த உயிர்க்கொல்லி தொற்று எங்கிருந்து உருவானது என்பதில் தொடர்ந்து குழப்பமே நீடிக்கிறது. இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் உருவானது என பரவலாக குற்றம் சாட்டப்பட்டாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் அமெரிக்க மின்சக்தி அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில், "சீனாவின் உகானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டது" என கூறப்பட்டுள்ளது. இது கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது? என்கிற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பியிடம் ஆய்வறிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், "உளவுத்துறையும், அரசின் பிற துறைகளும் இன்னும் அதை (கொரோனா எங்கிருந்து உருவானது என்பதை) ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. இதுவரை உறுதியான முடிவு எதுவும் இல்லை. எனவே நான் சொல்வது கடினம். ஜனாதிபதி ஜோ பைடன் விரும்புவது உண்மைகளை மட்டுமே. முழு அரசும் அந்த உண்மைகளை பெறுவதற்காக வடிவமைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். நாங்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை" என கூறினார்.
- டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடம் இருந்தவர் ஸ்டெபி கிராப்.
- இவரது சாதனையை செர்பிய வீரர் ஜோகோவிச் முறியடித்துள்ளார்.
நியூயார்க்:
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான பெலாரசின் சபலென்கா 2-வது இடத்திலும், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். துபாய் ஓபன் டென்னிசில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து மகுடம் சூடிய செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 14 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,980 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6,780 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கிரீசின் சிட்சிபாஸ் 5,805 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 2 இடம் சரிந்து 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஜோகோவிச் 'நம்பர் ஒன்' இடத்தில் பயணிப்பது இது 378-வது வாரமாகும். 2011-ம் ஆண்டு ஜூலையில் தனது 24-வது வயதில் முதல்முறையாக 'நம்பர் ஒன்' அரியணையில் அமர்ந்த அவர் அப்போது தொடர்ச்சியாக 122 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார். அதன் பிறகு சில சறுக்கலுக்கு பிறகு மீண்டும் முதலிடத்துக்கு வந்தார். இப்படியே ஏறுவதும் இறங்குவதுமாக உள்ள ஜோகோவிச் கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஓபனை வசப்படுத்தியதும், அல்காரசை பின்னுக்குத் தள்ளி மறுபடியும் முதலிடத்துக்கு முன்னேறினார்.
இந்நிலையில், ஜோகோவிச் சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஒட்டுமொத்தத்தில் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இதற்கு முன் 22 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஜெர்மனி முன்னாள் வீராங்கனை ஸ்டெபிகிராப் 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையை ஜோகோவிச் தகர்த்துள்ளார்.
இதுதொடர்பாக ஜோகோவிச் வெளியிட்ட வீடியோ பதிவில், அதிக வாரங்கள் முதலிடம் வகிக்கும் சாதனை வரிசையில் ஜாம்பவான்களில் ஒருவரான ஸ்டெபி கிராப்பை முந்தியுள்ளேன். இச்சாதனை உண்மையிலேயே மிக மிக பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது என தெரிவித்தார்.
- ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில், 187 பில்லியன் டாலருடன் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.
- பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும் எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவருமான பெர்னார்ட் அர்னால்ட் 185 பில்லியன் டாலருடன் 2வது இடத்தில் உள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க்.
கடந்த டிசம்பர் மாதம் டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், தற்போது அதே டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்டுள்ள எழுச்சி காரணமாக மீண்டும் நம்பர் ஒன் இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில், 187 பில்லியன் டாலருடன் எலான் மஸ்க் முதலிடத்திலும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும் எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவருமான பெர்னார்ட் அர்னால்ட் 185 பில்லியன் டாலருடன் 2வது இடத்திலும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஏற்கனவே உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.
- டுவிட்டரும் தனது மொத்த ஊழியர்களில் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது.
மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.
இந்நிலையில் சிறந்த பணியாளர் என்று விருது வாங்கியவரை பணியில் இருந்து தற்போது நீக்கி உள்ளது.
டுவிட்டரும் தனது மொத்த ஊழியர்களில் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் டுவிட்டர் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,800 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- எலான் மஸ்க் டுவிட்டரை பெரும் தொகை கொடுத்து வாங்கினார்.
- எலான் மஸ்க் கொண்டு வந்த மாற்றங்களால் அதிருப்தியடைந்த நூற்றுக்கணக்கான டுவிட்டர் ஊழியர்கள் ராஜினாமா செய்தனர்.
வாஷிங்டன் :
உலகப்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டரை பெரும் தொகை கொடுத்து வாங்கினார்.
டுவிட்டர் நிறுவனம் தன்வசமானதும் அதன் நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார் எலான் மஸ்க். அந்த வகையில் முதல் பணியாக டுவிட்டரின் மொத்த ஊழியர்கள் 7,500 பேரில் 4,000-க்கும் மேற்பட்டோரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.
மேலும் சிக்கன நடவடிக்கை என்கிற பெயரில் எலான் மஸ்க் கொண்டு வந்த மாற்றங்களால் அதிருப்தியடைந்த நூற்றுக்கணக்கான டுவிட்டர் ஊழியர்கள் ராஜினாமா செய்தனர். அதன் பின்னரும் டுவிட்டர் சிறிய அளவிலான பணி நீக்கங்களை தொடர்ந்து வருகிறது. இதன்காரணமாக டுவிட்டர் ஊழியர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் டுவிட்டரில் இருந்து மேலும் 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளர். அதாவது தனது மொத்த ஊழியர்களில் 10 சதவீதம் பேரை டுவிட்டர் பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் டுவிட்டர் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,800 ஆக குறைந்துள்ளது.
- அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியில் உள்ளார் நிக்கி ஹாலே.
- சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம் என நிக்கி ஹாலே தெரிவித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024-ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே அறிவித்து விட்டார். டிரம்பிற்கு போட்டியாக களமிறங்கப் போவதாக அதே கட்சியைச் சேர்ந்த நிக்கி ஹாலேயும் அறிவித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் வந்திருக்கலாம் என முன்னாள் மாகாண கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், கொரோனா சீன ஆய்வகத்திலிருந்து வந்திருக்கலாம். அமெரிக்கா சீனாவுக்கான உதவியை நிறுத்தவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, இதுதொடர்பாக நிக்கி ஹாலே அளித்த பேட்டியில் கூறியதாவது:
எந்த ஒரு வலுவான அமெரிக்கரும், தன் பணம் மோசமான நபர்களுக்குச் சென்றடைவதை விரும்ப மாட்டார்கள். இந்த வகையில், நான் அதிபராக தேர்வானால், அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான், சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு நிதியுதவி கிடைப்பதை முழுமையாக தடுத்து நிறுத்துவேன்.
கடந்தாண்டு மட்டும், 3.81 லட்சம் கோடி ரூபாயை பல நாடுகளுக்கு உதவியாக அமெரிக்கா அளித்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுவோருக்கு தங்களுடைய வரிப்பணம் செல்கிறது என்பது வரி செலுத்துவோருக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
- கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது.
- அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து ஆணையம் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டது.
விமானத்தில் விமானி, மருத்துவர், செவிலியர், நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்தனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது.
இதனையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிட்டன. சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மாயமான அந்த ஆம்புலன்ஸ் விமானம் ஸ்டேஜ்கோச் நகரில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மீட்பு குழுக்கள் அங்கு உடனடியாக விரைந்து சென்று பார்த்தபோது இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து ஆணையம் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே நெவாடாவில் தேசிய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்ட குளிர்கால புயல் எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த விமான விபத்து நடந்துள்ளதால் வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்ததா என்கிற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
- ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு 6 மிஷன் என பெயரிடப்பட்டுள்ள இந்த பயணத்தில் 2 அமெரிக்கர்கள், ஒரு அரேபியர் மற்றும் ஒரு விண்வெளி வீரர் உள்ளனர்.
- விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஹார்மெனி தொகுதியுடன் இணைக்கப்படும்.
வாஷிங்டன்:
உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்கா-ரஷியா இடையே இறுக்கமான சூழல் நிலவும் நிலையில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கின்றனர்.
ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு 6 மிஷன் என பெயரிடப்பட்டுள்ள இந்த பயணத்தில் 2 அமெரிக்கர்கள், ஒரு அரேபியர் மற்றும் ஒரு விண்வெளி வீரர் உள்ளனர்.
பால்கன்- 9 ராக்கெட், டிராகன் குழுவினருடன் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள தளத்தில் இருந்து விண்வெளிக்கு இன்று அனுப்பப்படுகிறது. நாளை அதிகாலை இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஹார்மெனி தொகுதியுடன் இணைக்கப்படும்.
நாசாவின் கமாண்டர் ஸ்டீபன் போவன், பைலட் வாரன் போபர்க், ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த சுல்தான் அல்னியாடி மற்றும் ரோஸ் ரஷிய வீரர் ஆண்ட்ரே பெட்யாவ் ஆகியோர் இந்த பயணத்தில் புறப்பட்டு சென்றனர்.
இந்த பயணத்திற்காக 4 வீரர்களும் முன்னதாக தங்களை தனிமைபடுத்தி கொண்டிருந்தனர்.
- மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
- சாலைகள், வீதிகளெங்கும் பனித்துகள்கள் பல அடி உயரத்துக்கு குவிந்து கிடக்கின்றன.
லாஸ் ஏஞ்சல்ஸ் :
புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது. இதன் விளைவாக உலகின் பல நாடுகளில் வெயில், குளிர், மழை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா காலநிலை மாற்றத்தால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பனிப்புயல் அமெரிக்க மாகாணங்களை பந்தாடியது. இந்த புயலால் டஜன் கணக்கானோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பனிப்புயலால் அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்தன.
இந்த நிலையில் அமெரிக்காவின் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் வீசி வரும் பயங்கர பனிப்புயல் அந்த மாகாணத்தை புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக அந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரான லாஸ் ஏஞ்சல்ஸ் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயல் காரணமாக மாகாணம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவுடன், மழையும் கொட்டி வருகிறது. இதனால் சாலைகள், வீதிகளெங்கும் பனித்துகள்கள் பல அடி உயரத்துக்கு குவிந்து கிடக்கின்றன. மேலும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. அதேபோல் ரெயில் வழித்தடங்களிலும் பனித்துகள்கள் மலைபோல் குவிந்து கிடப்பதால் ரெயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புயலின் போது ஏராளமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருளில் தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பனிப்புயல் காரணமாக கலிபோர்னியா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.






