என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • சந்திரனின் விட்டத்தில் 3-ல் ஒரு பங்கை விட சற்று குறைவாக உள்ளது.
    • ஒரு குள்ள கிரகம் என்றும் சொல்லலாம்.

    லண்டன்:

    சூரிய குடும்பத்தை பற்றிய ஆய்வுகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் உலகின் மிகப்பெரிய ஆப்டிக்கல் தொலை நோக்கியான 10.4 மீட்டர் விட்டம் கொண்ட கிரேன் டெலஸ்கோப்பியோ கனரி யாசில் பொருத்தப்பட்ட இங்கிலாந்தின் ஷெபீல்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டஅதிநவீன கேமிராவை பயன்படுத்தி சர்வதேச வானியலாளர்கள் குழு ஒரு ஆய்வை ஸ்பெயினில் நடத்தியது.

    இந்த ஆய்வின் கண்டுபிடிப்பு குறித்த தகவல்கள் வெளியானது. ஆய்வின்படி, வளைய அமைப்பு குவாவர் என்று பெயரிடப்பட்ட ஒரு குள்ள கிரகத்தை சுற்றி உள்ளது. குவாவர் புளூட்டோவின் விட்டத்தில் பாதியை கொண்டுள்ளது என்று சொல்லலாம்.

    அதுபோல் சந்திரனின் விட்டத்தில் 3-ல் ஒரு பங்கை விட சற்று குறைவாக உள்ளது. எனவே இதை ஒரு குள்ள கிரகம் என்றும் சொல்லலாம். ஈர்ப்பு விசையால் வட்ட வடிவில் இழுக்கப்படும் குள்ள கிரகம் இது.

    இதுவரை அறியப்பட்ட அனைத்து அடர்த்தியான வடிவங்களும் ரோச் எல்லைக்குள் இருப்பதால் அவற்றின் அடிப்படை கிரகத்திற்கு அருகில் அமைந்திருந்ததாக ஆய்வு குறிப்பிடுகிறது.

    • இந்தியா-இங்கிலாந்து இணைந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
    • இந்திய மாணவர்களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

    லண்டன் :

    இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை ஆகியவை இணைந்து இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

    இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய மாணவர்களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதோடு இருநாடுகளிலும் கல்வி, அரசியல், பொருளாதாரம் போன்ற பல துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்வோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் வாழ்வில் ஆற்றிய பங்களிப்பிற்காக மன்மோகன் சிங்குக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்ட இந்த விருது, தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தால் விரைவில் டெல்லியில் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில், "நமது நாட்டின் எதிர்காலம் மற்றும் நமது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் கீழ் இளைஞர்களிடம் இருந்து வரும் அர்த்தமுள்ள இந்த விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-இங்கிலாந்து உறவு உண்மையில் நமது கல்விக் கூட்டாண்மை மூலம் வரையறுக்கப்படுகிறது. நமது தேசத்தை நிறுவிய மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், சர்தார் படேல் மற்றும் பலர் இங்கிலாந்தில் படித்து, சிறந்த தலைவர்களாக மாறினர். பல ஆண்டுகளாக எண்ணற்ற இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

    • போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் திடீர் பயணமாக உக்ரைன் சென்றார்.
    • புதினிடம் மேற்கத்திய நாடுகள் எவ்வாறு போராடியது என்பதை காட்டும் ஆவணப்படத்தை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது.

    லண்டன் :

    உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக வலுவாக குரல் கொடுத்து வரும் உலக தலைவர்களில் ஒருவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

    இவர் பிரதமராக இருந்தபோது போருக்கு மத்தியில் 3 முறை உக்ரைனுக்கு பயணம் செய்து அந்த நாட்டுக்கு இங்கிலாந்தின் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினார். பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் திடீர் பயணமாக உக்ரைன் சென்றார்.

    இந்த நிலையில் போர் தொடங்குவதற்கு முன், அதை தடுக்க ரஷிய அதிபர் புதினிடம் மேற்கத்திய நாடுகள் எவ்வாறு போராடியது என்பதை காட்டும் ஆவணப்படத்தை பிபிசி செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதில் பேசியுள்ள போரிஸ் ஜான்சன், புதின் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    போருக்கு முன்னர் என்னிடம் தொலைபேசியில் உரையாடிய புதின், என்னை மிரட்டும் தொனியில் பேசினார். ஒரு கட்டத்தில் "போரிஸ், நான் உன்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் ஏவுகணை மூலம், அது ஒரு நிமிடத்தில் நடக்கும் அல்லது அதுபோல வேறு ஏதும் நடக்கும்" என மிரட்டினார்.

    இவ்வாறு போரிஸ் ஜான்சன் கூறினார்.

    • நாதிம் ஜகாவி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • ஈராக்கைப் பூர்வீகமாகக் கொண்ட நாதிம் நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

    பிரிட்டன்:

    பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய நாதிம் ஜகாவி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ஈராக்கைப் பூர்வீகமாகக் கொண்ட நாதிம் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு அவர் வருவாய் மற்றும் சுங்கத்துறைக்கு அபராதம் கட்ட ஒப்புக் கொண்டதையடுத்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நாதிம் மீது வைக்கப்பட்டன.

    பிரதமரின் தனிப்பட்ட ஆலோசகர் இது குறித்து விசாரணை நடத்திய நிலையில் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாதிம் ஜஹாவிவை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அரசு பதவியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    • இங்கிலாந்தில் போதைபொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • காரில் வந்த ஒருவன் திடீரென கீழே இறங்கி வந்து போலீசாரிடம் தனது காரில் போதைப்பொருட்கள் உள்ளதாகவும், தான் அணிந்து உள்ள பூட்சில் கொகைன் மறைத்து வைத்து உள்ளதாகவும் தெரிவித்தான்.

    பொதுவாக தாங்கள் செய்யும் தவறுகளை யாரும் ஒப்புக்கொள்வது இல்லை. ஆனால் கடத்தல்காரன் ஒருவன் தானாகவே முன்வந்து தான் போதைப்பொருட்கள் கடத்துவதாக கூறி போலீசாரை அதிர வைத்தான். இங்கிலாந்தில் போதைபொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த ஒருவன் திடீரென கீழே இறங்கி வந்து போலீசாரிடம் தனது காரில் போதைப்பொருட்கள் உள்ளதாகவும், தான் அணிந்து உள்ள பூட்சில் கொகைன் மறைத்து வைத்து உள்ளதாகவும் தெரிவித்தான்.

    இதனால் போலீசார் ஒரு கணம் திகைத்தனர், அவனை சந்தேக கண்ணோடு மேலும் கீழும் பார்த்தனர். உடனே அவன் நான் உண்மையயை தான் சொல்கிறேன் சார். வேண்டுமென்றால் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறினான். இதையடுத்து போலீசார் அவன் வந்த காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 2 பைகளில் கொகைன் போதை பொருட்கள் இருந்தது. அவன் காலில் போட்டு இருந்த பூட்சை பிரித்து பார்த்த போது அதிலும் போதைபொருட்கள் மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசார் அவனை கைது செய்து 19 கிலோ எடைகொண்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அதன் சர்வதேச மதிப்பு ரூ. 20 கோடியாகும். விசாரணையில் கடத்தல்காரன் பெயர் கியாரன் கிரான்ட் என்பது தெரியவந்தது. போலீசார் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

    • பேச்சுவார்த்தையில் உடன்பாட்டை எட்ட முடியவில்லை.
    • போராட்டத்தை தொடர உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

    லண்டன்:

    இங்கிலாந்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் அமைப்புகள் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்தில் 5-ல் ஒரு பங்கு ரெயில்கள் மட்டுமே இயங்கி வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    குறிப்பாக ஸ்காட்லாந்து, வேல்ஸ், இங்கிலாந்தின் கிராமப் பகுதிகள் பலவற்றிலும் ரெயில் சேவை முடங்கியுள்ளது. அதே சமயம் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் நியாயமான உடன்பாட்டை எட்ட முடியாததால் தங்கள் போராட்டத்தை தொடர உள்ளதாக தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அரசு தங்களது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், இல்லாவிடில் ஜனவரி மாத கடைசியில் வேல்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரியும் 2,600 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் தொழிற்சங்க அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    • பொது இடத்தில் மன்னர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
    • கைது செய்யப்பட்ட வாலிபர் மீது வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வடக்கு இங்கிலாந்து பகுதியில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மன்னர் சார்லஸும், ராணி கமிலாவும் பங்கேற்றனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களை நோக்கி மன்னரும், ராணியும் கையசைத்து உரையாடியபடி நடந்து சென்றனர். அப்போது, கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் மன்னர் சார்லஸை நோக்கி மூன்று முட்டைகளை வீசினார். அவை மன்னர் மீது விழவில்லை. தரையில் விழுந்து உடைந்தன. 'இந்த நாடு அடிமைகளால் உருவாக்கப்பட்டது. நீங்கள் மன்னர் அல்ல...' என்று அந்த நபர் கோஷமிட்டார். மன்னர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    மன்னர் மீது முட்டைகளை வீசிய ஹாரி மே (வயது 21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, அந்த வாலிபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 100 பவுண்டுகள் அபராதம் மற்றும் வழக்கு செலவுக்காக 85 பவுண்டுகள் செலுத்தும்படி நிதிபதி உத்தரவிட்டார்.

    ஒருவருடன் உங்களுக்கு என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும், அதைத் தீர்ப்பதற்கான வழி, இதுபோன்று பொருட்களை வீசுவது அல்ல என நீதிபதி கண்டித்தார்.

    • இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.
    • எல்லா இடங்களிலும் வேலைகளுக்கு தரவுகளும், புள்ளி விவரங்களும் முக்கியமாகி விட்டது.

    லண்டன் :

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், புத்தாண்டில் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.

    அப்போது அவர் இங்கிலாந்து மாணவர்கள் அனைவரும் 18 வயது வரையில் கணிதத்தை படிப்பதை உறுதி செய்வதற்கான திட்டம் கொண்டு வர விருப்பம் தெரிவித்தார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், "எல்லா இடங்களிலும் வேலைகளுக்கு தரவுகளும், புள்ளி விவரங்களும் முக்கியமாகி விட்ட இன்றைய உலகில், நமது குழந்தைகளின் வேலைகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவில், கூடுதல் அளவிலான பகுப்பாய்வு திறன் தேவைப்படும். இந்த திறன்கள் இன்றி நமது குழந்தைகள் வெளி உலகுக்கு சென்றால், அவர்களை நாம் கீழே விழச் செய்வதாகத்தான் கருத வேண்டும்" என தெரிவித்தார்.

    ஆனால் இங்கிலாந்தில் 16 முதல் 19 வயது வரையிலானோரில் பாதிப்பேர்தான் கணிதத்தை படிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    • ஸ்பேர் என்ற தலைப்பில் இளவரசர் ஹாரி தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி உள்ளார்.
    • அதில் வில்லியம், ஹாரி இளவரசர் சகோதரர்கள் இடையேயான மோதல் அம்பலத்துக்கு வந்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மறைந்த டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (38), தன்னை விட 3 வயது மூத்த அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேயை காதலித்து 2018-ம் ஆண்டு மே 19-ம் தேதி விண்ட்சர் கோட்டையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் வைத்து மணந்தார். இவர்களது திருமணம் அரச குடும்பத்தில் ஒரு பெரும் புயலை ஏற்படுத்தியது.

    இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச பதவிகளைத் துறந்து தங்கள் குழந்தைகளான ஆர்ச்சீ மவுண்ட் பேட்டன், லில்லிபெட் மவுண்ட் பேட்டன் ஆகியோருடன் அரண்மனையை விட்டு வெளியேறி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறினர்.

    இந்நிலையில், இளவரசர் ஹாரி 'ஸ்பேர்' என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் 16 மொழிகளில் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியே கசிந்து உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தப் புத்தகத்தில் இளவரசர் ஹாரி, தனக்கு அரச குடும்பத்தில் நேர்ந்த கதி குறித்து இதயம் திறந்து பேசியுள்ளார். அதுவருமாறு:

    லண்டன் இல்லத்தில் வைத்து 2019-ம் ஆண்டு எங்கள் குடும்பத்தில் ஒரு மோதல் வந்தது. என் மனைவி மேகனை கடினமானவர், முரட்டுத்தனமானவர், கரடுமுரடானவர் என்றெல்லாம் வில்லியம் விமர்சித்தார்.

    ஒரு கட்டத்தில் வில்லியம் எனது சட்டை காலரைப் பிடித்து, என் கழுத்துச் சங்கிலியை இழுத்து, தாக்கி தரையில் தள்ளினார். நான் நாய்க்கு சாப்பாடு வைக்கிற தட்டில் போய் விழுந்தேன். இதனால் எனது முதுகில் கீறல் ஏற்பட்டது.

    எங்களுக்கு இடையேயான உறவு மற்றும் போராட்டங்களின் சீரழிவு பற்றி அவர் ஊடகங்களுடன் பேச விரும்பினார். மேகனைப் பற்றி புகார்கள் கூறியபின், ஊடகங்களிடம் பேசுவதைப் பற்றி திரும்பத் திரும்ப கூறினார். ஆனால் அவரிடம் விவேகம் இல்லை. இது இருவரும் ஒருவரையொருவர் கூச்சல் போட வழிநடத்தியது. வில்லியம் வாரிசு மாதிரி நடந்துகொண்டார். என்னை அவர் புரிந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

    புத்தகம் வெளிவருவதற்கு முன்பே அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியே கசிந்தது உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    • பொது சுகாதார சேவையில் நிலவும் பின்னடைவைக் குறைக்க பிரதமர் உறுதியளித்தார்.
    • பிரிட்டனில் கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 10.7 சதவீதமாக இருந்தது.

    லண்டன்:

    பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரிஷி சுனக் கடந்த அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்றார்.

    பிரிட்டனின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் பேசிய பிரதமர் ரிஷி சுனக், நாட்டின் அனைத்து பிரச்சனைகளும் 2023ல் தீர்ந்துவிடாது என கூறினார். அதேசமயம் 2023ம் ஆண்டு புதிய வாய்ப்புகளை வழங்கி, மீண்டும் பிரிட்டன் பொருளாதாரம் சிறப்பாக உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து பிரதமர் ரிஷி சுனக் உரையாற்றினார். அப்போது, நாட்டில் பணவீக்கத்தை பாதியாக குறைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    தேசிய கடனைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்த அவர், சிறிய படகுகளில் வந்து பிரிட்டன் கரையில் குடியேறுபவர்களை தடுக்க புதிய சட்டங்களை இயற்ற உள்ளதாகவும், பிரிட்டனின் பொது சுகாதார சேவையில் நிலவும் பின்னடைவைக் குறைக்கவும் அவர் உறுதியளித்தார்.

    பிரிட்டனில் கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 10.7 சதவீதமாக இருந்தது. இது அக்டோபர் மாதத்தை விட சற்று குறைவு. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகமாகவே உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போரின் எதிரொலியாக, பிரிட்டனில் எரிபொருள் மற்றும் உணவுக்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால் பல லட்சம் மக்களின் வாழ்க்கைத் தரம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனா தொற்றிலிருந்து உலகம் மீண்டதை போல இங்கிலாந்தும் இந்த நெருக்கடியிலிருந்து மீளும்.
    • ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முழு ஆதரவளிக்கிறோம் என்றார் பிரதமர் ரிஷி சுனக்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:

    2022-ம் ஆண்டு ஒரு நெருக்கடியான ஆண்டு. கொரோனா தொற்றிலிருந்து இந்த உலகம் மீண்டதை போல இங்கிலாந்தும் இந்த நெருக்கடியிலிருந்து மீளும்.

    தற்போதுள்ள நெருக்கடி அனைவரையும் பாதித்துள்ள நிலையில் இதிலிருந்து மக்களை மீட்க பிரிட்டன் அரசு நியாயமான மற்றும் கடினமான முடிவுகளை மேற்கொண்டுள்ளது.

    இந்த கடினமான முடிவின் காரணமாகதான் எரிபொருளின் விலை அதிகரித்தது. ஆனாலும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

    அடுத்த 12 மாதங்களிலும் இங்கிலாந்தின் பிரச்சினை தீர்வுக்கு வராது. 2023-ம் ஆண்டும் இங்கிலாந்து மக்களுக்கு நெருக்கடியான ஆண்டாகதான் இருக்கும். இந்த நெருக்கடியான 12 மாதங்களைக் கடந்த பின் இங்கிலாந்து மிகச் சிறந்ததாக இருக்கும்.

    ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முழு ஆதரவளிக்கிறோம்.

    அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சார்லஸ் மன்னரின் முடிசூட்டுவிழா இங்கிலாந்தை மீண்டும் ஒன்றிணைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    • ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் தடை விதித்தனர்.
    • இந்த இடைக்கால தடைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    லண்டன்:

    ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

    ஆறாம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மகள்களுக்கு தந்தையாக, அவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் உலகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு வழங்க நிறைய இருக்கிறது. அவர்களுக்குப் பல்கலைக்கழகத்தில் நுழைய அனுமதி மறுப்பது மிகப் பெரிய பின்னடைவாகும் என பதிவிட்டுள்ளார்

    இதேபோல், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பல்கலைக் கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது.

    ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாகவும், அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்குவதற்கும் எங்களின் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.

    ×