வில்லியம் எனது சட்டைக் காலரைப் பிடித்திழுத்து கீழே தள்ளினார் - சுயசரிதையில் இளவரசர் ஹாரி அதிர்ச்சி தகவல்

ஸ்பேர் என்ற தலைப்பில் இளவரசர் ஹாரி தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி உள்ளார். அதில் வில்லியம், ஹாரி இளவரசர் சகோதரர்கள் இடையேயான மோதல் அம்பலத்துக்கு வந்துள்ளது.
சகோதரருடன் இளவரசர் ஹாரி
சகோதரருடன் இளவரசர் ஹாரி
Published on

லண்டன்:

இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மறைந்த டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (38), தன்னை விட 3 வயது மூத்த அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேயை காதலித்து 2018-ம் ஆண்டு மே 19-ம் தேதி விண்ட்சர் கோட்டையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் வைத்து மணந்தார். இவர்களது திருமணம் அரச குடும்பத்தில் ஒரு பெரும் புயலை ஏற்படுத்தியது.

இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச பதவிகளைத் துறந்து தங்கள் குழந்தைகளான ஆர்ச்சீ மவுண்ட் பேட்டன், லில்லிபெட் மவுண்ட் பேட்டன் ஆகியோருடன் அரண்மனையை விட்டு வெளியேறி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறினர்.

இந்நிலையில், இளவரசர் ஹாரி 'ஸ்பேர்' என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் 16 மொழிகளில் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியே கசிந்து உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் புத்தகத்தில் இளவரசர் ஹாரி, தனக்கு அரச குடும்பத்தில் நேர்ந்த கதி குறித்து இதயம் திறந்து பேசியுள்ளார். அதுவருமாறு:

லண்டன் இல்லத்தில் வைத்து 2019-ம் ஆண்டு எங்கள் குடும்பத்தில் ஒரு மோதல் வந்தது. என் மனைவி மேகனை கடினமானவர், முரட்டுத்தனமானவர், கரடுமுரடானவர் என்றெல்லாம் வில்லியம் விமர்சித்தார்.

ஒரு கட்டத்தில் வில்லியம் எனது சட்டை காலரைப் பிடித்து, என் கழுத்துச் சங்கிலியை இழுத்து, தாக்கி தரையில் தள்ளினார். நான் நாய்க்கு சாப்பாடு வைக்கிற தட்டில் போய் விழுந்தேன். இதனால் எனது முதுகில் கீறல் ஏற்பட்டது.

எங்களுக்கு இடையேயான உறவு மற்றும் போராட்டங்களின் சீரழிவு பற்றி அவர் ஊடகங்களுடன் பேச விரும்பினார். மேகனைப் பற்றி புகார்கள் கூறியபின், ஊடகங்களிடம் பேசுவதைப் பற்றி திரும்பத் திரும்ப கூறினார். ஆனால் அவரிடம் விவேகம் இல்லை. இது இருவரும் ஒருவரையொருவர் கூச்சல் போட வழிநடத்தியது. வில்லியம் வாரிசு மாதிரி நடந்துகொண்டார். என்னை அவர் புரிந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

புத்தகம் வெளிவருவதற்கு முன்பே அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியே கசிந்தது உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com