என் மலர்tooltip icon

    சீனா

    • சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • சீனாவில் அடுத்த 12 நாட்களுக்கு கடும் வெப்பம் அலைகளுக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    பீஜிங் :

    சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின் பல பகுதிகள் சமீபத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. இந்நிலையில், சீனா முழுவதும் ஜூன் 13ந்தேதியில் இருந்து கடுமையான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கின. இந்த வெப்ப அலைகள் தொடர்ந்து, ஆகஸ்டு மாதம் 2வது வாரம் வரை நீடித்திருக்கும் என்று குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    2022ம் ஆண்டுக்கான வெப்ப அலை முன்பே வந்து விட்டது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்துடன் தொடர்புடைய தேசிய வானிலை மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சன் ஷாவோ கூறியுள்ளார். இதனால், வடமேற்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தின் தென்கிழக்கு உள்ளிட்ட பகுதிகள் கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சீனா, கடந்த ஜூனில் இருந்து கடுமையான வெப்பநிலை பதிவாகி வருகிறது. வடக்கு சீனாவின் ஹெபய் மாகாணத்தில் மொத்தம் 71 தேசிய வானிலை ஆய்வு மையங்களில் வெப்பநிலை சாதனை பதிவை கடந்து உள்ளது. அவற்றில் லிங்ஷூ நகரில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

    சீனாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வருகிற 26ந்தேதி வரை கடுமையான வெப்பம் நிலவும். நாட்டின் பல பகுதிகளில் வருகிற 31ந்தேதி முதல் ஆகஸ்டு 15ந்தேதி வரை முந்தின ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக வெப்பம் பதிவாகும் என குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    சீனாவின் சில நகரங்களில் வெப்ப அலைகள் மற்றும் கொரோனா தொற்றுகள் என இருவகையான சவால்களை சந்திக்க வேண்டிய சூழலில் மக்கள் உள்ளனர். சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான பீஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமுடன் பரவி வருகிறது.

    உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவல் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 580 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஷாங்காய் நகரில்தான் அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கொரோனா தடுப்பு பணிகள் தற்போது மிக தீவிரமுடன் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    இதுபோக, ஷாங்காய் நகரில் கடந்த புதன்கிழமை 40.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது கடந்த 1973ம் ஆண்டுக்கு பின்பு பதிவான அதிக வெப்பநிலையாகும். கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் ஹாங்ஷூ நகரில் தீவிர வெப்பம் பற்றிய 54 சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இது ஒரு நாளில் விடப்பட்ட வெப்பநிலைக்கான எச்சரிக்கை எண்ணிக்கையில் மிக அதிகம் ஆகும்.

    சீனாவின் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் கடுமையான ஊரடங்குகள் மற்றும் பரிசோதனை நடைமுறைகள் மக்களின் வாழ்க்கை முறை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த சூழலில், சீனாவில் அடுத்த 12 நாட்களுக்கு கடும் வெப்பம் அலைகளுக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால், 90 கோடி பேர் பாதிக்கப்பட கூடும். ஒரு வாரத்தில் சீனாவின் பாதி நிலப்பகுதி பாதிப்பிற்குள்ளாகும்.

    இந்த நீடித்த வெப்ப அலைகளால் மக்களின் வாழ்வு மற்றும் பயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளன. சீனாவில் மின்சார பயன்பாடும் சாதனை அளவை கடந்து இருக்கும் என குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. சீனாவில் கொரோனா பெருந்தொற்றில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த சூழலில், அவர்களுக்கு சவால் விடும் வகையில் வெப்ப அலையும் சேர்ந்து இயல்பு வாழ்க்கையை புரட்டி போட உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால், சீன மக்களை காக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் உள்ளது.

    • திடீர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
    • பருவநிலை மாற்றம் காரணமாக இத்தகைய தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகமாவதாக நிபுணர்கள் தகவல்

    பீஜிங்:

    சீனாவில் பரவலாக கோடைவெப்பம் வாட்டி வரும் நிலையில், நேற்று திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதன்காரணமாக தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஒன்றரை நாளில் 98.9 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் பெய்யும் சராசரி மழையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

    இந்த திடீர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. மழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    பருவநிலை மாற்றத்தின் காரணமாக இத்தகைய தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகமாகி வருகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வெப்பமான காற்று அதிக நீரைச் சேமித்து வைக்கும். அது வெளியிடப்படும் போது பெரிய மேக வெடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறி உள்ளனர்.

    • தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது.
    • சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது.

    பெய்ஜிங்:

    கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதன்பிறகு பல நாடுகளுக்கும் தொற்று பரவிய நிலையில் பல நாடுகளும் பொதுமுடக்கத்தை அறிவித்தன. தற்போது தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது.

    எனினும் உருமாறிய கொரோனா வைரசால் தற்போது சில நாடுகளில் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

    அந்தவகையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. அந்தநாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உருமாறிய பிஏ.5 வகை தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இதனால் அங்கு கடந்த சில நாட்களாக பாதிப்பு 400-ஐ தாண்டி பதிவாகி வரும் நிலையில், தெற்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள மக்காவ் பிராந்தியத்திலும் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    இந்த பிராந்தியத்தில் தான் உலகின் மிகப்பெரிய சூதாட்ட விடுதிகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் தொற்று பரவல் காரணமாக சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மக்காவ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று மூடப்பட்டன.

    இதற்கிடையே பெய்ஜிங் நகரிலும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் பொதுமுடக்கம் அமலாக்கப்படலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

    • கடுமையான வெப்பநிலை அதிகரித்து வருவதால், ஷாங்காய் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
    • கடந்த வாரம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகள் காரணமாக, சீனா மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டது.

    ஷாங்காய்:

    சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஷாங்காய் நகர் ஜூலை 5 முதல் தொடர்ந்து ஆறு நாட்களாக மிக அதிக வெப்பநிலையைக் காண்கிறது.

    கடுமையான வெப்பநிலை அதிகரித்து வருவதால், ஷாங்காய் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடுமையான வெப்பத்தை சமாளிக்கவும், வெப்ப தாக்குதலை தவிர்க்கவும், நண்பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பகல் நேரங்களில் வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்கவும், அதிக வெப்பநிலையில் வெளியே வரும் தொழிலாளர்கள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில், அங்குள்ள வானிலை ஆய்வு மையம், மாகாணத்தின் சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த வாரம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகள் காரணமாக, சீனா மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டது. நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 39 அல்லது 40 டிகிரி செல்சியஸூக்கு மேல் இருக்கும் என்று கணித்துள்ளது.

    • கடந்த ஆண்டு தம்பதியர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் அனுமதி தந்து சட்டதிருத்தம் செய்யப்பட்டது.
    • சீனாவில் வாழ்கிற மக்களின் ஆயுட்காலம் 0.6 ஆண்டு அதிகரித்து 77.93 ஆண்டுகளாகி இருக்கிறது.

    பீஜிங்:

    உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட நாடான சீனாவில் இப்போது குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு, தம்பதியர் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தும் நிலைமையில் பெரிதான மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு, தம்பதியர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் அனுமதி தந்து சட்டதிருத்தம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அங்கு வாழ்கிற மக்களின் ஆயுட்காலம் 0.6 ஆண்டு அதிகரித்து 77.93 ஆண்டுகளாகி இருக்கிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புபடி சீனாவில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கை 26 கோடியே 40 லட்சமாக உள்ளது.

    சீனாவின் அங்கமாக உள்ள திபெத்தில் உயரமான நிலப்பரப்பு காரணமாக ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதால், அங்கு மக்களின் ஆயுட்காலம் 1951-ல் 35.5 ஆண்டுகளாக இருந்தது. தற்போது அது 72.19 ஆண்டுகளாக இருக்கிறது.

    • சீனாவின் ஜிங் ஜியாங் மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

    பீஜிங்:

    சீனாவின் ஜிங் ஜியாங் மாகாணத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    • சீனா 2014 மற்றும் 2018 -ம் ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் தங்கம் வென்றுள்ளது.
    • உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ஏற்கனவே ரஷியாவுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

    பீஜிங்:

    சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக சீன அணி அறிவித்துள்ளது. ஆனால்,அதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    இதற்கு முன்னதாக, 2014, 2018-ம் ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவின் தங்கம் வென்றுள்ளது. குறிப்பாக, சீன மகளிர் அணியினர் இதற்கு முன் நடந்த இரண்டு தொடர்களிலும் தங்கம் வென்றிருந்தனர்.

    உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ஏற்கனவே ரஷியா அணிக்கு செஸ் ஒலிம்பியாட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு தங்க பதக்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

    • கொரோனாவை கட்டுப்படுத்த, மதுக்கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டன.
    • 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

    பெய்ஜிங்

    கொரோனா முதன்முறையாக பரவிய சீனாவில் கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டில் மொத்தம் 2,25,487பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதை அடுத்து அங்குள்ள 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக சைனா டெய்லி இதழ் தெரிவித்துள்ளது

    அந்த நகரத்தில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மதுக்கடைகள், திரையரங்குகள், சலூன்கள், பூங்காக்கள் மூடப்பட்டன. மக்காவோ நகரத்தில் 600,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் புதிய தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

    • பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை
    • வேண்டுமென்றே பொருளாதாரத் தடைகளை விதிப்பவர்கள் இறுதியில் மற்றவர்களுக்கும், தங்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள்.

    பீஜிங்:

    இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டத்தை காணொலி முறையில் சீனா நடத்துகிறது. இதில் தொடக்க உரையாற்றிய சீன அதிபர் ஜின்பிங், உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை. சர்வதேச நிதி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தை அரசியலாக்குபவர்கள் மற்றும் வேண்டுமென்றே பொருளாதாரத் தடைகளை விதிப்பவர்கள் இறுதியில் மற்றவர்களுக்கும், தங்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள். அத்துடன் உலக மக்களுக்கு பேரழிவுகளை ஏற்படுத்துவார்கள்' என்று சாடினார்.

    சர்வதேச மேலாதிக்கம், குழு அரசியல் மற்றும் கூட்டு மோதல்கள் அனைத்தும் அமைதியையோ, நிலைத்தன்மையையோ தருவதில்லை எனக்கூறிய ஜின்பிங், மாறாக போரையும், மோதலையுமே ஏற்படுத்துவதை வரலாறு காட்டுவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், பிரேசில் அதிபர் போல்சொனாரோ உள்ளிட்டோரும் உரையாற்றுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.

    • ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • ஷாங்காயில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் 228 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

    பிஜீங்:

    சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. தலைநகர் பிஜீங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அங்கு மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டன.

    மேலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா இல்லாத நிலையை உருவாக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    கொரோனா இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று சீன அரசு கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தியது. ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு விலக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

    ஷாங்காயில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் 228 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஒருவர் மூலம் மற்ற அனைவருக்கும் தொற்று பரவியது தெரிய வந்தது.

    இதனால் அப்பகுதி முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதி, உணவு விடுதி உள்ளிட்டவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தலைநகர் பிஜீங்கிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களில் அதிகபட்சமாக பிஜீங்கில் நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கி றது. இதனால் பிஜீங்கில் மீண்டும் கட்டுபாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.


    • பயணிகள் விமானங்களுடன், ராணுவ விமானங்கள் தரை இறங்கும் வகையில் ஓடு பாதைகள் அமைப்பு
    • தைவான் மீது படையெடுக்க சீனா தயாராகி வருவதாக தகவல்

    பெய்ஜிங்:

    வடமேற்கு சீனாவில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான ஜின்ஜியாங்கில்,  சீன அரசு புதிய விமான நிலையம் ஒன்றை கட்டி வருகிறது. தாஷ்குர்கன் மலை பகுதியில் அமையும் இந்த விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 3,258 மீ உயரத்தில் உள்ளது,

    இது சீனாவின் மிக உயரமான விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விமான நிலையம் தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.

    இந்த விமான நிலையத்தில் ஓடு பாதைகள், ராணுவ போர் விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் தரை இறங்கும் வகையில் இரட்டை பயன்பாடுடன் அமைக்கப்பட்டுள்ளதாக சீனாவில் இருந்து வெளிவரும் புலனாய்வு இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.அடுத்த மாதம் இந்த விமான நிலையத்தை திறக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.

    போர் அல்லாத நடவடிக்கைகளில் சீன ராணுவத்தை அனுமதிப்பது மற்றும் வெளிநாடுகளில் சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது குறித்த சாலமன் தீவுகளுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கையெழுத்து போட்டுள்ளதாகவும், சீன புலனாய்வு இதழ் கூறியுள்ளது.

    பாதுகாப்பு நடவடிக்கை என்ற போர்வையில் தைவான் மீது படையெடுக்க பெய்ஜிங் தயாராகி வருவதாகவும் அதற்காக தாஷ்குர்கன் விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றதாகவும் சீன புலனாய்வு இதழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • இந்தியாவில் உள்ள சீனா தூதரகம் தனது விசா கொள்கையை புதுப்பித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
    • சீனாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    பெய்ஜிங்:

    உலகம் முழுவதும் கடந்த 2020- ஆம் ஆண்டு கொரோனா ஆட்டி படைத்தது. இதனால் சீனாவில் படித்து வந்த இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தாயகம் திரும்பினார்கள்.

    ஆனால் அதன் பிறகு அவர்கள் சீனா திரும்பி வர அந்நாட்டு அரசு விசா வழங்கவில்லை. இதனால் இந்தியர்கள் கடந்த 2 ஆண்டுகளாக சீனா திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இந்தியாவில் உள்ள சீனா தூதரகம் தனது விசா கொள்கையை புதுப்பித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி சீனாவில் வேலைபார்த்து வந்த இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீண்டும் அந்நாட்டுக்கு திரும்புவதற்காக விசா விண்ணப்பங்களை வழங்க சீனா முடிவு செய்துள்ளது.

    சீனாவில் இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். கொரோனாவுக்கு முன்பு சீனாவில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மருத்துவம் உள்ளிட்ட உயர்படிப்புகள் படித்து வந்தனர்.

    தற்போது இதில் 12 ஆயிரம் பேர் சீனா திரும்பி மீண்டும் படிப்பை தொடர விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    சீனா திரும்ப விரும்பும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்குமாறு இந்திய தூதரகத்திடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.

    இந்தியர்களுக்கு விசா வழங்க முடிவு செய்யப்பட்ட போதிலும் சென்ற 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்தியா- சீனா இடையேயான விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×