என் மலர்tooltip icon

    சீனா

    • தலைநகர் பீஜிங்கில் புதிய அலை எழுந்துள்ளதால், வணிக வளாகங்கள் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
    • பீஜிங்கில் அவசியம் இல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என தடை போட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    பீஜிங்:

    சீனாவில் உகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் சீனாவில் அவ்வப்போது பல நகரங்களில் தீவிரமாக பரவுகிறது.

    தலைநகர் பீஜிங்கிலும் புதிய அலை எழுந்துள்ளதால், வணிக வளாகங்கள் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

    அந்த வகையில் அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜிக்ஸியாங் தியேட்டரும் இதற்கு தப்பவில்லை. இந்த தியேட்டர் 27-ந் தேதி மீண்டும் செயல்பட இருந்தது. ஆனால் அது குறிப்பிட்ட நாளில் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சீனாவில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பீஜிங்கில் மட்டும் 515 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    பீஜிங்கில் அவசியம் இல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என தடை போட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    • சீனா-தைவான் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • போருக்கு தயாராகி சீனாவை புதிய சகாப்தத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.

    பெய்ஜிங்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சீனா-தைவான் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    சீனாவில் கடந்த 1911-ம் ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு சீன தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. 1927-ம் ஆண்டில் ஆளும் கட்சிக்கு எதிராக சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. இதனார் 1949-ம் ஆண்டு வரை சீனாவில் உள்நாட்டு போர் நீடித்தது.

    இந்த போரில் தோல்வியை தழுவிய சீன தேசிய கட்சியினர், தென்சீன கடலில்168 தீவுகள் அடங்கிய தைவானில் குடியேறினர். அந்த பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

    இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவரின் பயணத்தை ஆரம்பம் முதலே சீன அரசு எதிர்த்து வந்தது.

    இந்நிலையில் தற்போது தைவானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் சீன ராணுவத்தை போருக்கு தயார் படுத்துவமாறு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைமையகமான மத்திய ராணுவ ஆணையத்தின் கூட்டுப் பணியாளர்கள் துறையை பார்வையிட்ட ஜின் பிங், உலகம் 100 ஆண்டுகளில் இல்லாத ஆழமான மாற்றங்களை சந்தித்து வருவதாக கூறி உள்ளார்.

    அப்போது ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஜின்பிங், போருக்கு தயாராகி சீனாவை புதிய சகாப்தத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். சீனாவில் ஆயுதப்படை பயிற்சி மற்றும் தயாரிப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.

    ஒட்டுமொத்த ராணுவமும், அனைத்து ஆற்றலையும் அர்ப்பணித்து போருக்கான தயார் நிலைக்கு அதன் அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும். போராடி வெற்றி பெறும் திறனை அதிகரிக்க வேண்டும். புதிய சகாப்தத்தில் பணிகளை திறம்பட செய்ய வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.

    மேலும் சமீபத்திய உலகளாவிய நிகழ்வுகள் சீனாவின் பாதுகாப்பு சூழ்நிலையில், உறுதியற்ற தன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையை தூண்டி உள்ளது. அதனால் தான் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவனம் தனது புதிய தசாப்தத்தில் உள்ள பணிகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், கட்டளைகள் மற்றும் செயல்பாட்டில் புதிய மாற்றங்களை வேண்டும் என்று ஜின்பிங் தெரிவித்ததாக அந்த நாட்டின் அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

    ரஷ்யா-உக்ரைன் போர், சீனா-தைவான் இடையேயான பதற்றம் ஆகியவற்றில் சீனாவின் நிலைப்பாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இருக்கும் நிலையில், வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் சீனாவை முதன் மைபடுத்தும் வகையில் ஜின்பிங் இவ்வாறு பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

    • கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
    • அந்தப் பெண் சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது.

    பீஜிங்:

    சீனாவின் ரயிலில் பயணித்த ஒரு பெண், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டு, வாழைப்பழத்தை சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, ரயிலில் பயணிக்கும் போதும், பொது இடங்களிலும் மக்கள் எதையும் சாப்பிட கூடாது என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், ரயிலில் பயணித்த ஒரு பெண், வாழைப்பழத்தை சாப்பிடுவதால், தொற்று பரவாமல் இருக்கும் உத்தரவை மீறாமல் இருக்கவும், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டுள்ளார். சக பயணிகள் இதை வினோதமாக பார்த்தனர். இவர் முகத்தை மூடிக்கொண்டு பழத்தை சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்தப் பெண் சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது. சுரங்கப்பாதை ரயிலில் அவர் பயணித்தபோது வாழைப்பழம் சாப்பிடும்போது சக பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீன ராக்கெட் பாகங்கள் பூமியில் விழுவது இது 4-வது முறையாகும்.
    • ராக்கெட் பாகங்கள் பூமிக்கு திரும்பும் போது வளி மண்டலத்தில் எரிந்து சாம்பலாகும்.

    பீஜிங்:

    சீனா விண்ணில் சொந்தமாக விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது.

    இதற்கு தேவையான உபகரணங்களை கடந்த அக்டோபர் 31-ந்தேதி, லாங் மார்ச்-5பி ராக்கெட் மூலம் அனுப்பியது.

    108 அடி நீளமும், 23 டன் எடையும் கொண்ட அந்த ராக்கெட், தான் சுமந்து சென்ற உபகரணங்களை விண்வெளி நிலையத்தில் சேர்த்தது. பின்னர் ராக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் பூமியை நோக்கி திரும்பியது.

    அந்த ராக்கெட் பாகங்கள், அதன் சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகி பூமியில் விழும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த பகுதியில் சரியாக விழும் என்பதை சீனா உறுதி செய்யவில்லை.

    இந்த நிலையில் ராக்கெட்டின் பாகங்கள் வளி மண்டலத்தில் நுழைந்து தெற்கு மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று அதிகாலை 4.01 மணியளவில் விழுந்துள்ளதாக யு.எஸ்.ஸ்பேஸ்காம் என்ற அமெரிக்க விண்வெளி கழகம் தெரிவித்துள்ளது.

    ராக்கெட் பாகங்கள் பூமிக்கு திரும்பும் போது வளி மண்டலத்தில் எரிந்து சாம்பலாகும். ஆனால் சீன ராக்கெட் பாகங்கள் பூமியில் விழுந்த சம்பவங்கள் நடந்து உள்ளன. இதற்கு முன்பு ராக்கெட் பாகங்கள் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன.

    ராக்கெட்டின் வடி வமைப்பின்படி பூமியின் எந்த பகுதியில் விழ வேண்டும் என்ற வழிகாட்டி அமைப்போ அல்லது மக்களிடம் இருந்து தொலைவில் விழுவதற்கான அமைப்போ அதில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. சீன ராக்கெட் பாகங்கள் பூமியில் விழுவது இது 4-வது முறையாகும்.

    • பாகிஸ்தான் பிரதமர், சீனாவில் 2 நாள் அரசு முறை சுற்றுப் பயணம்.
    • சீன அதிபருடன், பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை.

    பெய்ஜிங்:

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப் முதன்முறையாக இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். அவருடன் அந்நாட்டு அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தி வரும் திட்டங்களில் பணியாற்றி வரும் தங்கள் நாட்டு பணியாளர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவது குறித்து ஷபாஸ் செரீப்பிடம் ஜி ஜின்பிங் கவலை தெரிவித்ததாக இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் சீனர்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களை அடுத்து, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்து அப்போது பாகிஸ்தான் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள அனைத்து சீன பணியாளர்கள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கான பாதுகாப்பை ஷபாஸ் செரீப் உறுதிபடுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இரு நாடுகள் இடையே அனைத்து தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த குறித்தும், பல்வேறு துறைகளில் தற்போதைய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • குஜராத் பால விபத்துக்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட வெளிநாடுகள் இரங்கல் தெரிவித்தன.
    • குஜராத் பால விபத்தில் பலியானோருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்தார்.

    பீஜிங்:

    குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. ஆனால், 5 நாட்களில் பாலம் இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பால விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர்.

    இந்தத் துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா, இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ், சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம், போலந்து நாட்டின் வெளிவிவகார மந்திரி பிக்நியூ ரா உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், குஜராத் பால விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், சீன அரசாங்கம் மற்றும் சீன மக்கள் சார்பாக குஜராத் பாலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் லி உட்பட சீன உயர்மட்டத் தலைவர்களை சந்திக்க செரீப் திட்டம்.
    • பாகிஸ்தான் பிரதமருடன், அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பயணம்

    பெய்ஜிங்:

    சீன அதிபராக ஜி ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். பிரதமராக பதவியேற்ற பிறகு செரீப் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

    சீனப் பிரதமர் லீ கெகியாங்கின் அழைப்பின் பேரில் சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமருடன், அந்நாட்டு அமைச்சர்கள் பிலாவல் பூட்டோ சர்தாரி,இஷாக் தார், அக்சன் இக்பால், மரியம் ஔரங்கசீப்,சாத் ரபீக் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பங்கேற்றுள்ளது. தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் செரீப்பை சீன மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

    தமது பயணத்தின் போது அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லி உட்பட சீன உயர்மட்டத் தலைவர்களை சந்திக்கும் பாகிஸ்தான் பிரதமர் இரு தரப்பு உறவுகள், அந்நாட்டுடனான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    குவாதார் துறைமுகத்தை மேம்படுத்த சீனாவின் ஒத்துழைப்பு மற்றும் பல பில்லியன் டாலர் மதிப்பில் செயல்படுத்தப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின்போது ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

    • ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் பலர் ஐ-போன் தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓடுகிறார்கள்.
    • தொழிற்சாலையின் வேலியில் ஏறி, தாண்டி குதித்து ஊழியர்கள் தப்பி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    பீஜிங்:

    சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து அந்தந்த மாகாண நிர்வாகங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.

    இந்த நிலையில் செங்க்சோவ் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அப்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 3 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த தொழிற்சாலையில் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இந்த நிலையில் ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் பலர் ஐ-போன் தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓடுகிறார்கள். தொழிற்சாலையின் வேலியில் ஏறி, தாண்டி குதித்து ஊழியர்கள் தப்பி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஊழியர்கள் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாக செல்ல தொடங்கினர். அவர்கள் சாலையோரம், வயல்வெளிகள், மலைகளிலும் சிறிது நேரம் தஞ்சம் அடைந்தபடி மெதுவாக நடந்து செல்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி உள்ளது.

    சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக செல்லும் ஊழியர்களுக்கு உள்ளூர் மக்கள் இலவச விநியோக நிலையங்கள் அமைத்து உணவு வழங்குகிறார்கள்.

    • விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
    • மெங்டியன் என்கிற 2-வது ஆய்வுகூட அமைப்பை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

    பீஜிங் :

    சீனா விண்வெளியில் தனெக்கென புதிதாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. 'தியான்ஹே' என பெயரிடப்பட்டுள்ள புதிய விண்வெளி நிலையத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது.

    இதற்காக சீன விண்வெளி வீரர்கள் சூழற்சி முறையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    இந்த விண்வெளி நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக சீனா ஏற்கனவே வெண்டியன் என்கிற ஆய்வுகூட அமைப்பை அனுப்பியது. அந்த ஆய்வுகூட அமைப்பு 'தியான்ஹே' விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மெங்டியன் என்கிற 2-வது ஆய்வுகூட அமைப்பை சீனா நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹைனான் கடற்கரையில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து 'லாங் மார்ச் 5பி ஒய்4' ராக்கெட் மூலம் மெங்டியன் ஆய்வுகூட அமைப்பு விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த ஆய்வுகூட அமைப்பு நுண் புவியீர்ப்பு விசையை படிக்கவும், திரவ இயற்பியல், பொருள் அறிவியல், அடிப்படை இயற்பியல் ஆகியவற்றில் சோதனைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லுா உயிருடன் நண்டு சாப்பிட்டதை அவருடைய மனைவி மருத்துவர்களிடம் கூறினார்.
    • லுா மூன்று விதமான பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    சீனாவின் ஜெஜியாங் நகரை சேர்ந்தவர் லுா,39. இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு உயிருடன் நண்டுகள் வாங்கி வந்துள்ளார். அப்போது, நண்டு அவரது மகளை கடித்துள்ளது. இதனால் குழந்தை வலியால் அலறி துடித்துள்ளது.

    பின்னர் ஆத்திரம் அடைந்த லுா குழந்தையை கடித்த அந்த நண்டை பிடித்து உயிருடனேயே கடித்து தின்று விழுங்கியுள்ளார்.

    இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு லுாவிற்கு கடும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    இதற்கு காரணம் தெரியாமல் டாக்டர்கள் குழம்பிக்கொண்டிருந்த நிலையில், லுா உயிருடன் நண்டு சாப்பிட்டதை அவருடைய மனைவி மருத்துவர்களிடம் கூறினார்.

    இதன்பின், மருத்துவர்கள் லூவிற்கு ரத்தப் பரிசோதனைகள் செய்தனர். இதில் லுா மூன்று விதமான பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    பின் இதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், லுா கடந்த வாரம் குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் மருத்துவ சிகிச்சைக்காக அவர் தொடர்ந்து மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • ஷாங்காய் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் திடீரென உச்சம் தொட்டது.
    • மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு ஷாங்காய் நிர்வாகம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

    பீஜிங் :

    சீனாவின் வர்த்தக தலைநகராக அறியப்படும் ஷாங்காய் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் திடீரென உச்சம் தொட்டது. இதன் காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

    இந்த கட்டுப்பாடுகள் 2 மாதங்கள் வரை அமலில் இருந்தன. இதன் காரணமாக அங்கு பொருளாதார சீர்குலைவு, உணவு தட்டுப்பாடு போன்ற சிக்கல்கள் எழுந்தன. மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு ஷாங்காய் நிர்வாகம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

    இந்த நிலையில் ஷாங்காய் நகரில் சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட யாங்பூ மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதையடுத்து அந்த மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள 13 லட்சம் பேரும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் நபர்கள் முடிவுகள் வெளியாகும் வரை வீடுகளை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்ட உகான் நகரில் கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து, அங்கு 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இதுவரை 90 சதவீத சீனர்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர்.
    • தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக இலவசமாக வழங்கப்படுகிறது.

    பீஜிங்

    கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் சீனாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கொரோனாவை முற்றாக ஒழிக்க அந்த நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை கடைப்பிடித்து வருகிறது.

    குறிப்பாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை செலுத்துவதில் அரசு தீவிரம் கவனம் செலுத்தி வருகிறது.

    இதுவரை 90 சதவீத சீனர்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும், 57 சதவீதம் பேர் பூஸ்டர் டோசை பெற்றுள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஊசியின்றி வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை சீனா பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த நாட்டின் வர்த்தக தலைநகராக கருதப்படும் ஷாங்காய் நகரில் நேற்று முதல் வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தடுப்பு மருந்து, ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக இலவசமாக வழங்கப்படுகிறது.

    கொரோனாவுக்கு வாய் வழியாக வழங்கப்படும் உலகின் முதல் தடுப்பு மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×