என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2026 சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி?
    X

    2026 சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி?

    • 200 தொகுதிகளை குறி வைத்து தி.மு.க. ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டது.
    • எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

    சென்னை:

    2026 சட்டசபை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கி உள்ளன.

    ஆளும் தி.மு.க. 200 தொகுதிகளை குறி வைத்து ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டது. மேலும், 2 கோடி உறுப்பினர் சேர்க்கை பணிகளையும் தி.மு.க. தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தலைவர்களும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட தயாராகி வருகிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

    இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அமித்ஷா, தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிவிடும் என்றார்.

    இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க இணைவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான நகர்வுகள் நடைபெறுகிறது என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எங்கள் கூட்டணியில் விஜய் சேருவாரா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. நல்லதே நடக்கும் என்றார்.

    இந்த நிலையில், இன்று நடைபெற்ற த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி, விஜயே முதலமைச்சர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இதனால், விஜய் வருகிற சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடக்கூடும் என்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனை போட்டி ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×