search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜனதா-பா.ம.க. கூட்டணியால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
    X

    பா.ஜனதா-பா.ம.க. கூட்டணியால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ் மூத்த தலைவராக இருப்பார்.
    • தமிழகத்தில் இந்த கூட்டணி வலுவான அணியாக களம் இறங்குகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் அதிரடி திருப்பமாக பாரதிய ஜனதா கட்சியுடன் பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்தில் இதற்கான ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதைத்தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் வைத்து பேட்டி அளித்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாட்டாளிகளால் உருவாக்கப்பட்ட கட்சியான பா.ம.க. மிக முக்கியமான முடிவை இன்று எடுத்துள்ளது. பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் மூத்த அரசியல் தலைவரான டாக்டர் ராமதாஸ் இந்த முடிவை எடுத்திருப்பதை பாரதிய ஜனதா கட்சி மனமுவந்து வரவேற்கிறது.

    400 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெற வைப்பதற்காக நாங்கள் வேள்வியோடு களம் இறங்கியுள்ளோம்.

    தமிழக அரசியலில் டாக்டர் ராமதாஸ் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளார். மேலும் அவர் போராடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு உரிய மரியாதையை பாரதிய ஜனதா கட்சி அளிக்கும்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ் மூத்த தலைவராக இருப்பார். வாஜ்பாய் காலத்தில் இருந்தே ராமதாஸ் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கமாக அன்பு பாராட்டி வருகிறார். அந்த வகையில் இந்த நேரத்தில் மீண்டும் வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறோம்.

    பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் புதிய விடியலுக்காக, மாற்று அரசியலுக்காக குரல் கொடுத்து வருகிறார். அதனை முன்னெடுத்து செல்லும் தலைவராகவும் அவர் விளங்கி வருகிறார்.

    தமிழகத்தில் இந்த கூட்டணி வலுவான அணியாக களம் இறங்குகிறது. இதற்காக டாக்டர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பா.ம.க. எடுத்துள்ள முடிவால் நேற்று இரவில் இருந்து தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தல் மட்டுமின்றி 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி நிச்சயம் அர சியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.

    கூட்டணியை இறுதி செய்து சேலத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் டாக்டர் ராமதாசையும், அன்புமணி ராமதாசையும் மேடை ஏற்றுவதற்கு முடிவு செய்தோம். இதற்காக இரவோடு இரவாக கோவையில் இருந்து புறப்பட்டு தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தோம்.

    டாக்டர் ராமதாஸ் எங்களுக்கு சிற்றுண்டி கொடுத்து வரவேற்றார். பிரதமர் மோடியுடன் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இருவருமே இசைவளித்துள்ளார்கள். பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 2014, 2019-ம் ஆண்டு தேர்தல்களிலும் இணைந்து போட்டியிட்டுள்ளது.

    நடைபெற உள்ள தேர்தலில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கைகோர்த்துள்ளோம்.

    60 ஆண்டுகளாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அனைவருமே விரும்புகிறார்கள். டாக்டர் ராமதாசும் அதையே கூறி வருகிறார். அவர் தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் வலு சேர்க்கப்போகிறார். அவருக்கு நாங்கள் முழு மரியாதையை அளிப்போம். இந்த நேரத்தில் வேறு அரசியலை பேச விரும்பவில்லை.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவரிடம், எந்தெந்த தொகுதியில் பா.ம.க. போட்டியிடும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதுபற்றி விரைவில் அறிவிப்போம் என்று அண்ணாமலை தெரிவித்தார். பா.ம.க.வுக்கு மேல்சபை எம்.பி. அளிக்கப்படுமா? என்கிற கேள்விக்கு அன்புமணி, ராமதாஸ் இருவருமே பதில் அளிக்காமல் சென்று விட்டனர்.

    Next Story
    ×