என் மலர்
விளையாட்டு
புனே:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டி தொடர் நடக்கிறது. கடைசி 2 டெஸ்டும், 20 ஓவர் போட்டிகளும் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் நடந்தது. தற்போது 3 ஒருநாள் போட்டிகளும் மராட்டிய மாநிலமபுனேயில் நடத்தப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி புனேயில் நாளை (23-ந் தேதி) நடக்கிறது.
இந்திய அணி இந்த தொடரில் கடைசி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இங்கிலாந்து அணியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். இரு அணிகளும் கடைசியாக 2019 உலக கோப்பையில் மோதின. இதில் இங்கிலாந்து அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 20 ஓவர் தொடரில் 5 ஆட்டத்தில் 231 ரன்கள் எடுத்தார். இதில் 3 அரை சதம் அடங்கும். அதிக பட்சமாக 80 ரன் குவித்தார்.
இதே போல ரோகித் சர்மா, ரிஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், நடராஜன், யசுவேந்திர சாஹல் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.
டெஸ்ட், 20 ஓவர் தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரையாவது கைப்பற்றி பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது.
மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பட்லர், பேர்ஸ்டோவ், பென்ஸ்டோக்ஸ், ஜேசன்ராய், மார்க்வுட், மொய்ன்அலி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 101-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 100 ஆட்டத்தில் இந்தியா 53-ல், இங்கிலாந்து 42-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 3 போட்டி முடிவு இல்லை.
நாளைய ஆட்டம் பகல் இரவாக நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை முதலில் களமிறங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் துல்லிய பந்து வீச்சில் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான திரிமன்னே ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார்.
அவருக்கு அடுத்து விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை அணி 69.4 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை இந்தியாவில் 6 நகரங்களில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது. தங்கள் அணியில் உள்ள இந்திய வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் சமீபத்தில் வலியுறுத்தியது. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டித் தொடரின் போது எந்த அணி வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இல்லை என்று 8 அணிகளின் நிர்வாகங்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரியப்படுத்தியுள்ளது.
போட்டிக்கு முன்பாக வீரர்கள் 7 நாட்கள் கட்டாயம் ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்துதலின் போது 3 நாட்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். வீரர் யாருக்காவது கொரோனா பாதிப்பு தென்பட்டால் குறைந்தது 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் இ்ந்திய வீரர்கள் ஏற்கனவே கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை. நேரடியாக தங்களது ஐ.பி.எல். அணியுடன் இணைந்து கொள்ளலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை உன்னிப்பாக கண்காணிக்க சிறப்பு மேலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

அகமதாபாத்:
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது.
கேப்டன் விராட் கோலி 52 பந்தில் 80 ரன்னும், (7 பவுண்டரி, 2 சிக்சர்), ரோகித் சர்மா 34 பந்தில் 64 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்), ஹர்த்திக் பாண்ட்யா 17 பந்தில் 39 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), சூர்ய குமார் யாதவ் 17 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 34 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டேவிட் மெலன் 46 பந்தில் 68 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), பட்லர் 34 பந்தில் 52 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா, நடராஜன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்கினார். இந்த தொடரில் தொடக்க ஜோடி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக ஆடாததால், கேப்டனே தொடக்க வீரராக ஆடினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.
ரோகித் சர்மாவும், கோலியும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 9 ஓவரில் 94 ரன் எடுத்தனர்.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கு தயார்படுத்தி கொள்வதற்காக ஐ.பி.எல். போட்டியிலும் தொடக்க வீரராக ஆட இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நான் இதற்கு முன்பு பல்வேறு நிலைகளில் களம் இறங்கி உள்ளேன். மிடில் வரிசையில் நல்ல நிலையில் இருக்கிறேன். 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை 2 சிறந்த வீரர்கள் அதிக பந்துகளை எதிர்கொள்வதுதான் நல்லது. எனவே ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்கத்தில் களம் இறங்குவதை விரும்புகிறேன்.
நாங்கள் இருவரும் சேர்ந்து ஆடி, நல்ல நிலை அமைந்துவிட்டால் எதிரணிக்கு பாதிப்புதான். இதை தான் நாங்கள் விரும்புகிறோம்.
எங்கள் இருவரில் ஒருவர் களத்தில் இருந்தால், மற்ற வீரர்கள் தன்னம்பிக்கை அடைகின்றனர். அவர்களால் சுதந்திரமாக ஆட முடியும். இது அணிக்கு நல்லதாக அமையும். எனவே இதையே தொடரலாம் என்று நினைக்கிறேன்.
ஐ.பி.எல். போட்டியிலும் அதைத் தொடர்ந்து, உலக கோப்பையிலும் இதே நல்ல நிலைமையுடன் தொடக்க வீரராக ஆடுவேன்.
உலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கிறது.ஆனால் அதற்குள் பேட்டிங்வரிசை எப்படியிருக்கும் என்று இப்போது கூற முடியாது. இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக ஆடியது ஒரு சிறந்த முடிவு.
கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர் தேவை என்பதால் ராகுலை துரதிர்ஷ்டவசமாக நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 23-ந் தேதி புனேயில் நடக்கிறது.
அகமதாபாத்:
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஆர்ச்சர் விளையாட மாட்டார் என்று அந்த அணியின் கேப்டன் மார்கன் தெரிவித்துள்ளார்.
காயமடைந்துள்ளதால் இந்தியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டியிலும் ஆட மாட்டார். மேலும் ஐ.பி.எல் போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகமே. ஆர்ச்சர் ஒரு நாள் தொடரில் இருந்து விலகுவது இங்கிலாந்து அணிக்கு பாதிப்பாக இருக்கும்.
தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான 35 வயது விஜேந்தர் சிங் தனது 13-வது பந்தயத்தில் ரஷியாவை சேர்ந்த 26 வயது ஆர்டிஷ் லோப்சனை எதிர்கொண்டார். இந்த போட்டி கோவாவில் உள்ள ஆற்றுப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த சொகுசு கப்பலின் மேல் தளத்தில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது.
இந்த மோதல் 8 ரவுண்டுகளை கொண்டது. ஒவ்வொரு ரவுண்டும் 3 நிமிடங்கள் உள்ளடக்கியதாகும். இதில் முதல் சுற்றிலேயே தன்னுடைய உயரத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஆர்டிஷ் லோப்சன், விஜேந்தருக்கு எதிராக தாக்குதலை தொடுத்தார். முதலில் விஜேந்தர் சற்று தடுமாறினாலும், 2-வது சுற்றில் தகுந்த பதிலடி கொடுத்தார்.
ஆனால் அதன் பிறகு லோப்சனின் கை மீண்டும் ஓங்கியது. அவரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் விஜேந்தர் சிங் சில சமயங்களில் தடுமாறி களத்தில் சரிந்து எழுந்தார். 5-வது சுற்றில் லோப்சன் விட்ட குத்தில் விஜேந்தரின் முக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. இதனால் துவண்டு போன விஜேந்தர் இதற்கு மேல் தன்னால் தொடர்ந்து போட்டியிட முடியாது என்று ஒதுங்கினார். எனவே லோப்சன் ‘நாக்-அவுட்’ முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான விஜேந்தர் சிங் தொழில்முறை போட்டியில் அடியெடுத்து வைத்ததில் இருந்து தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு வந்தார். தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வாகை சூடி இருந்த அவரது வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்று சூளுரைத்து இருந்த லோப்சன் சொன்னபடியே அதனை செய்தும் காட்டினார். கொரோனா பரவல் காரணமாக 15 மாத இடைவெளிக்கு பிறகு களம் கண்ட விஜேந்தர் சிங்கின் ஆட்டத்தில் தொய்வை காண முடிந்தது.
வெற்றிக்கு பிறகு லோப்சன் கூறுகையில் ‘சிறந்த வீரரான விஜேந்தர் சிங்குக்கு எதிரான எனது வியூகம் கைகொடுத்தது. இந்த போட்டி அருமையான அனுபவமாகும். விஜேந்தரின் வெற்றிப் பயணத்தை முறியடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
விஜேந்தர் சிங் கூறுகையில், ‘இது ஒரு சிறந்த போட்டியாகும். லோப்சன் இளமையும், வலிமையும் மிக்க போட்டியாளராக உள்ளார். சரிவில் இருந்து வலுவாக மீண்டு வந்து மாஸ்கோவில் நடைபெறும் போட்டியில் லோப்சனை வீழ்த்துவேன்’ என்று குறிப்பிட்டார்.
சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அதிக வெற்றிகளைக் குவித்த கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் தோனி முதல் இடத்தில் இருந்து வந்துள்ளார். அவர், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்து வரும் இருபது ஓவர் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2வது இருபது ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது. இதனால், அந்த அணியின் கேப்டன் அஸ்கார் ஆப்கான் 41 வெற்றிகளுடன் தோனியின் சாதனையை சமன் செய்து இருந்துள்ளார்.
தொடர்ந்து நேற்று நடந்த 3வது இருபது ஓவர் போட்டியில் ஜிம்பாப்வேவை 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோற்கடித்தது. இந்த வெற்றியால், அஸ்கார் ஆப்கான் கூடுதலாக ஒரு வெற்றியைப் பெற்று 42 வெற்றிகளுடன் தோனியை முந்தியுள்ளார்.
3வது இடத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் (33 வெற்றிகள்) உள்ளார். பாகிஸ்தானின் சர்ப்ராஸ் அகமது (29 வெற்றிகள்) 4வது இடத்திலும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி (27 வெற்றிகள்) 5வது இடத்திலும் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
இதில் முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டிலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தன.
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 2 போட்டிகளில் வென்று 2-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் நஜிபுல்லா அதிரடியாக ஆடி அதிகபட்சமாக 72 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
உஸ்மான் கனி 39 ரன் எடுத்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா 44 ரன்னும், ரியான் பர்ல் 39 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைக்கவில்லை.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவை 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்று தொடரில் சமனிலை வகித்தன.
தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி 20 ஓவர் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் விளாசினார். இதில், 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். ரோகித் சர்மா 34 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 64 ரன்கள் குவித்தார். சூர்ய குமார் யாதவ் 32 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர்.
இதையடுத்து 225 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
அந்த அணியின் ஜேசன் ராய் இரண்டாவது பந்தில் டக் அவுட்டானார். பட்லருடன் டேவிட் மலன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர்.
இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர். 140 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை புவனேஷ்குமார் பிரித்தார்.
பட்லர் 52 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலனை ஷர்துல் தாக்குர் ஒரே ஓவரில் வீழ்த்தினார்.
இதனால் இங்கிலாந்து அணியின் ரன் வேகம் குறைந்தது. அடுத்து வந்த வீரர்களால் ரன்கள் விரைவாக எடுக்க முடியவில்லை.
இறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்து, 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா3-2 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது புவனேஷ்வர் குமாருக்கும், தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது.






