என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சனின் சிரிப்பு வெல்லுமா? விராட் கோலியின் ஆக்ரோசம் வெல்லுமா?
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணியை விராட் கோலி வழி நடத்துகிறார். நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்சன் வழி நடத்துகிறார். விராட் கோலி ஆக்ரோசமானவர். கேன் வில்லியம்சன் சாந்தமானவர். இருவரும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள்.

    எந்தவொரு சூழ்நிலையிலும் கேன் வில்லியம்சன் டென்சன் ஆகமாட்டார். சிரித்துக் கொண்டே இருப்பார். ஆனால் போட்டி வெற்றித் தோல்வியை யூகிக்க முடியாமல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும்போது விராட் கோலி முகத்தில் சிரிப்பை பார்க்க முடியாது. முகத்தில் தீப்பொறியை காணலாம். இந்த நிலையில் இருவரையும் நெருப்பு- ஐஸ் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுள்ளார் தினேஷ் கார்த்திக்.

    விராட் கோலி, கேன் வில்லியம்சன்

    இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘இருவரையும் ஒப்பிட நெருப்பு- ஐஸ் ஆகிய சிறந்ததாக இருக்கும். விராட் கோலி நெருப்பை சுவாசிக்கிறார். கேன் வில்லியம்சனை எடுத்துக்கொண்டால் கூல் எனலாம். ஒரு ஓவருக்கு 32 ரன்கள் வேண்டும் என்ற நிலையிலும் கேன் வில்லியம்சன் சிரித்துக் கொண்டே, அதை எளிதாக எடுத்துக் கொள்வார்.

    விராட் கோலி, கேன் வில்லியம்சன்

    ஆனால் அதே சூழ்நிலையில் விராட் கோலியை எடுத்துக் கொண்டால், நீங்கள் ஒரு தவறு செய்து, அவுட்டாகி செல்லும்போது, அவர் உங்களை நோக்கி சொற்களை வீசுவார். இது அனுபவம். இதுதான் அவர்களுடன் விளையாடும்போது அழகானது. அவர்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள். ஆனால், இவருவரம் வெவ்வேறு வழியில் விளையாடுகிறார்கள்’’ என்றார்.

    ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார்.
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுமா? அல்லது 4 பேருடன் விளையாடுமா? என்பது இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நாளை தொடங்குகிறது. இரண்டு அணிகளிலும் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்கும் வீரர்கள் யார்? யார்? என்பதை தெரிந்து கொள்வதில்தான் ரசிகர்களும், விமர்சகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

    நியூசிலாந்து ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடும். அதில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடிப்பது உறுதி. இந்திய அணியிலும் ஐந்து பந்து வீச்சாளர்கள் விளையாடுவார்கள் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

    இந்தியா தற்போது வரை மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என்றால், அவர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜா என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

    ஒருவேளை ஒரு சுழற்பந்து வீச்சாளர்கள் போதும், நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் நன்றாக இருக்கும் என அணி நிர்வாகம் நினைத்தால் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரில் ஒருவர்தான் இடம்பெற முடியும். இருவரில் அஷ்வின் இடம் பிடிப்பார். இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் ஜடேஜா வெளியில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இந்த நிலையில் மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்படும் ஜடேஜாவை எக்காரணம் கொண்டும் ஆடும் லெவனில் இருந்து நீக்கக்கூடாது. அது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கெய்க்வாட் கூறுகையில் ‘‘ஜடேஜாவை எக்காரணம் கொண்டும் ஆடும் லெவன் அணியில் நீக்கக் கூடாது. அவர் மூன்று துறைகளிலும் இந்திய அணிக்கு முக்கியமான சொத்து. அவர் டிரிபிள்-பிளஸ். மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து சீதோஷ்ண நிலையில் ஆதிக்கம் செலுத்த முடியும் என நான் நினைக்கவில்லை. நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் உதவியாக இருக்கும். மூன்று பேரும் போதுமானது.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாடும் இந்திய அணி வீரர்கள்

    அணிக்கு ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவை என்றால் அஷ்வின் சரியான நபர். ஆனால், ஜடேஜாவும் அணியில் சேர்க்கப்பட்டு, அவர் விளையாட வேண்டும். எத்தனை சர்வதேச அணிகள் தரம் வாய்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளது?. ஜடேஜா உங்களுக்கு பந்து வீச்சாளராக மட்டும் அல்ல. பேட்ஸ்மேனாகவும், பீல்டராகவும் நிரூபித்துள்ளார். இதைவிட உங்களுக்கு வேற என்ன வேண்டும்?.

    நியூசிலாந்தை போன்று இந்தியாவும் சில போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். நியூசிலாந்து அணி ஏற்கனவே விளையாடி சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப அவர்களை தயார் செய்திருப்பார்கள். இந்தியாவுக்கும் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உள்ளது. இருந்தாலும் இறுதியாக சீதோஷ்ணநிலை எல்லாவற்றிற்கும் முக்கியமானது அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கிலாந்தில் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’’ என்றார்.
    நியூசிலாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

    சவுத்தம்டன்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

    2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கப்பட்டது. டெஸ்டில் விளையாடும் 9 நாடுகள் இதில் பங்கேற்றன.

    புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடரின் பல போட்டிகள் பாதிக்கப்பட்டது. இதனால் இறுதிப் போட்டிக்கு நுழையும் முறை மாற்றப்பட்டது.

    வெற்றி சதவீத அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றன.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி முதல் ஐ.சி.சி. உலக டெஸ்ட் கோப்பையை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துடன் விளையாடிய 2 டெஸ்டிலும் தோற்று இருந்தது. 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்து மண்ணில் இந்த தோல்வி ஏற்பட்டது.

    ஆனால் அதன் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கிலும் சொந்த மண்ணில் இங்கிலாந்தை 3-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது. இதனால் விராட்கோலி அணி மிகுந்த நம்பிக்கையுடன் இறுதி போட்டியில் விளையாடும்.

    11 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு அணிக்கு சவாலாக இருக்கும். கூடுதல் பேட்ஸ்மேன் தேவைப்பட்டால் விகாரி களம் இறக்கப்படலாம். ஆல்ரவுண்டருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    வேகப்பந்து வீரர்களில் முகமதுசமி, பும்ரா இடம் பெறுவார்கள். 3-வது வேகப்பந்து வீரராக தேர்வு பெறுவதில் இசாந்த் சர்மா, முகமதுசிராஜ் இடையே போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலிய பயணத்தில் முகமது சிராஜ் சிறப்பாக வீசியதால் அவருக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.

    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன்கில்லும் களம் இறங்குவார்கள். அதற்கு அடுத்த நிலையில் புஜாரா, கேப்டன் விராட் கோலி, ரகானே, ரி‌ஷப்பண்ட் ஆகியோர் உள்ளனர்.

    இங்கிலாந்து ஆடுகளங்களில் விராட்கோலி சிறப்பாக ஆடுவார். அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவர் 2 சதம் உள்பட 727 ரன் எடுத்துள்ளார். ரகானே 556 ரன்னும், புஜாரா 500 ரன்னும் எடுத்துள்ளனர். சுழற்பந்து வீச்சில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    நியூசிலாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதனால் வில்லியம்சன் தலைமையிலான அந்த அணி கூடுதல் பலத்துடன் திகழ்கிறது.

    நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், டாம் லாதம், முன்னாள் கேப்டன் ரோஸ் டைலர், கான்வே ஆகியோரும் பந்துவீச்சில் போல்ட், சவுத்தி, அஜாஸ்படேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 60-வது டெஸ்ட் ஆகும். இதில் இந்தியா 21-ல், நியூசிலாந்து 12-ல் வெற்றி பெற்றுள்ளன. 26 டெஸ்ட் டிரா ஆனது.

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையே நடந்த 2-வது டெஸ்ட்டுக்கான ஆடுகளம்போல உலக டெஸ்ட் இறுதிப் போட்டிக்கான பிட்ச் இருக்கும் என கருதப்படுகிறது.

    இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரடிப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெவிலி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

    முழங்கை காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாடாததால் 9 புள்ளிகளை பறிகொடுத்த வில்லியம்சன் (886 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நம்பர் ஒன் இடத்தை இழந்து இருக்கிறார்.

    முழங்கை காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாடாததால் 9 புள்ளிகளை பறிகொடுத்த வில்லியம்சன் (886 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (891 புள்ளி) மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறினார். அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் (878 புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சோபிக்காத இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (797 புள்ளி) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (814 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்து இருக்கிறார். இந்திய வீரர்கள் ரிஷாப் பண்ட், ரோகித் சர்மா (தலா 747 புள்ளி) கூட்டாக 6-வது இடத்தில் தொடருகின்றனர்.

    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (908 புள்ளி) முதலிடத்திலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் (850 புள்ளி) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் (412 புள்ளி) முதலிடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (386 புள்ளி) 2-வது இடத்திலும், ஆர்.அஸ்வின் (353 புள்ளி) 4-வது இடத்திலும் தொடருகின்றனர்.
    பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரெனால்டோவின் ஒரே ஒரு செயலால், கோக-கோலா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு ஒரே நாளில் 400 கோடி டாலர் சரிந்தது.
    போர்ச்சுக்கல்- ஹங்கேரி இடையிலான போட்டிக்கு முன்னதாக ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார். யூரோ கால்பந்து போட்டியில் கோக-கோலா நிறுவனம் ஸ்பான்சராக இருப்பதால் அதன் 2 பாட்டில்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

    அப்போது மேஜை மீது இருந்த இரண்டு கோககோலா பாட்டில்களை எடுத்து ஓரமாக வைத்த ரெனால்டோ, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து, எல்லோரும் தண்ணீர் குடியுங்கள் என்பதுபோல் உயர்த்திக் காட்டினார்.

    இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பரவி கோக-கோலா நிறுவனத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்நிறுவன பங்குகள் விலை குறைந்து, அதன் சந்தை மதிப்பு ஒரே நாளில் சுமார் 29,316.40 கோடி ரூபாய் வரை சரிந்தது.
    நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு முன்பு இங்கிலாந்துடன் 2 போட்டியில் விளையாடி உள்ளது.

    சவுத்தம்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் விராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    உலக டெஸ்ட் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், ‌ஷர்துல் தாகூர், லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணி விவரம் வருமாறு:-

    விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரகானே, ரி‌ஷப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, முகமது ‌ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், விர்த்திமான் சஹா, உமேஷ் யாதவ், விகாரி.

    இந்தநிலையில் உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் விளையாடாதது பாதகமே என்று இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு முன்பு இங்கிலாந்துடன் 2 போட்டியில் விளையாடி உள்ளது. இதனால் அந்த அணி இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலையை நன்கு அறிந்து இருப்பார்கள். அவர்கள் எல்லாவகையிலும் தயாராக உள்ளார்கள். அதேநேரத்தில் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல் உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் ஆடுவது பாதகமே.

    ஆனாலும் நாங்கள் நியூசிலாந்து அணியை எல்லா வகையிலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதற்காக நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம். எங்கள் அணியின் பந்து வீச்சு வலுவானதாக இருக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி, ஒருநாள் போட்டி உலக கோப்பை இறுதி ஆட்டம் ஆகியவற்றை போலவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் மிகப்பெரியதாகும்.

    இவ்வாறு புஜாரா கூறி உள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ள 11 வீரர்களை புதிர் மூலம் வெளியிட்டுள்ளார் வாசிம் ஜாபர்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாளைமறுநாள் தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. 15 பேர் கொண்ட அணிகளை இரு நாடுகளும் அறிவித்துவிட்டன. ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்கும் வீரர்கள் யார்? யார்? என்பது டாஸ் சுண்டப்பட்ட பிறகே தெரியும்.

    அதற்கு முன் இந்திய அணியில் இவர்களெல்லாம் இடம் பெறலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

    இந்திய அணிக்காக விளையாடிய முன்னாள் பேட்ஸ்மேனும், ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் அடித்தவருமான வாசிம் ஜாபர் ரசிகர்களுக்கு புதிர் போடுவது வழக்கம்.

    இந்திய வீரரர்கள் பெரும்பாலானோர் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார்கள். அவர்கள் விளையாடும் ஐபிஎல் அணியை வைத்து 11 பேர் கொண்ட இந்திய அணியை வாசிம் ஜாபர் குறிப்பிட்டுள்ளார்.

    வாசிம் ஜாபர் டுவிட்டர் பக்கத்தில்,

    1. மும்பை இந்தியன்ஸ், 2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 3. சென்னை சூப்பர் கிங்ஸ், 4. ஆர்சிபி, 5. டெல்லி கேப்பிட்டல்ஸ், 6 டெல்லி கேப்பிட்டல்ஸ், 7. சென்னை சூப்பர் கிங்ஸ், 8. டெல்லி கேப்பிட்டல்ஸ், 9. டெல்லி கேப்பிட்டல்ஸ், 10. பஞ்சாப் கிங்ஸ், 11. மும்பை இந்தியன்ஸ்.

    எனத் தெரிவித்துள்ளார். 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளவர்கள் ஐபிஎல் போட்டியில் எந்த அணிக்காக விளையாடி வருகிறார்கள் என்பதை ரசிகர்கள் சரியாக கண்டுபிடித்தால் 11 பேர் கொண்ட பட்டியல் வரும்.

    வாசிம் ஜாபர் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் 1. ரோகித் சர்மா, 2. ஷுப்மான் கில், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரகானே, 6. ரிஷப் பண்ட், 7. ஜடேஜா, 8. அஷ்வின், 9. இஷாந்த் சர்மா, 10, முகமது ஷமி, 11. பும்ரா.

    இவர்கள்தான் என்பது தெரியவந்துள்ளது.
    பேட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரரகள் இடம் பெறவில்லை.
    ஆஸ்திரேலிய ஒயிட்-பால் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஐந்து டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. வங்காளதேசம் அணிக்கெதிராக ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இதற்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான வீரர்களான டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் இடம் பெறவில்லை.

    மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், அலேக்ஸ் கேரி, மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மிட்செல் ஸ்வெப்சன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), 2 ஆஷ்டேன் அகர், 3. வெஸ் அகர், 4 ஜேசன் பெரேன்டர்ஃப், 5. அலேக்ஸ் கேரி, 6. டேன் கிறிஸ்டியன், 7. ஜோஷ் ஹசில்வுட், 8. மொய்சஸ் ஹென்ரிக்ஸ், 9. மிட்செல் மார்ஷ், 10. ரிலே மெரிடித், 11. பென் மெக்டெர்மோட், 12. ஜோஷ் பிலிப், 13. மிட்செல் ஸ்டார்க், 14. மிட்செல் ஸ்வெப்சன், 15. ஆஷ்டோன் டர்னர், 16. அண்ட்ரூ டை, 17. மேத்யூ வடே, 18. ஆடம் ஜம்பா.
    நியூசிலாந்து அணி டாஸ் வென்றால், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் ஆருடம் தெரிவித்துள்ளார்.
    ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளைமறுதினம் (ஜூன் 18) இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதுதான் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனென்றால் அந்த அணிதான் இரண்டு ஆண்டிற்கு சிறந்த டெஸ்ட் அணியாக கருதப்படும்.

    இரண்டு நாடுகளும் நேற்று 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என, நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் ஆருடம் தெரிவித்துள்ளார்.


    இதுகுறித்து ஷேன் பாண்ட் கூறுகையில் ‘‘நியூசிலாந்து அணி வெற்றிபெறும் என நினைக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா பேலன்ஸ் பவுலிங் அட்டாக்கை பெறும் என நினைக்கிறேன். அவர்கள் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கலாம்.

    நியூசிலாந்து ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கலாம். அவர்கள் டாஸ் வென்றால், பந்து வீச்சை தேர்வு செய்வார்கள். முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இந்தியாவை மிகவும் குறைந்த ஸ்கோரில் ஆல்-அவுட் ஆக்கலாம். இது நியூசிலாந்தின் மோசமான யோசனை என நான் கூறமாட்டேன். நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்து, இந்தியாவை குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழக்க செய்யாவிடில், இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் வைத்துள்ளார்கள். அது நியூசிலாந்துக்கு கடினமாகிவிடும்.


    ஆகையால் டாஸ் வென்று என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமானது. அதேபோல் முதல் இன்னிங்ஸும் முக்கியமானது’’ என்றார்.
    2025-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூமுல் ஹசன் கூறியுள்ளார்.

    டாக்கா:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 1998-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 8 போட்டிகள் நடந்துள்ளது. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    இந்த நிலையில், 2025-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த வங்காளதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதை அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜூமுல் ஹசன் தெரிவித்தார். போட்டியை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

    1998-ம் ஆண்டு அறிமுக ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வங்காளதேசம் தான் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணி 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு விளையாடும் முதல் டெஸ்ட் இதுவாகும்.
    பிரிஸ்டல்:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணி 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு விளையாடும் முதல் டெஸ்ட் இதுவாகும். அதாவது 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் மீண்டும் கால்பதிக்கும் இந்திய அணி எப்படி செயல்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இதுவரை 13 டெஸ்டில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 2-ல் இ்ந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி கண்டன. 10 ஆட்டங்கள் டிரா ஆனது. இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி இதுவரை டெஸ்டில் தோற்றது கிடையாது. 8 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 6-ல் டிராவும் சந்தித்து இருக்கிறது.

    அதே சமயம் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்ய தீவிரம் காட்டுகிறது. எனவே டெஸ்டில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஹங்கேரி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வென்றது.
    புடாபெஸ்ட் நகரில் நேற்று அரங்கேறிய எப் பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல், ஹங்கேரி அணிகள் கோதாவில் குதித்தன. இதில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை பதம் பார்த்தது.

    இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் அடித்தார். இதன்மூலம் 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

    இதற்கு முன் பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தது. அவரது சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.

    அத்துடன் தொடர்ந்து 5 ஐரோப்பிய தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்றார். போர்ச்சுகல் அணிக்காக அவர் 106 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    ×