search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி - வில்லியம்சன்
    X
    விராட் கோலி - வில்லியம்சன்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா-நியூசிலாந்து மோதும் இறுதிப் போட்டி நாளை தொடக்கம்

    நியூசிலாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

    சவுத்தம்டன்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

    2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கப்பட்டது. டெஸ்டில் விளையாடும் 9 நாடுகள் இதில் பங்கேற்றன.

    புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடரின் பல போட்டிகள் பாதிக்கப்பட்டது. இதனால் இறுதிப் போட்டிக்கு நுழையும் முறை மாற்றப்பட்டது.

    வெற்றி சதவீத அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றன.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி முதல் ஐ.சி.சி. உலக டெஸ்ட் கோப்பையை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துடன் விளையாடிய 2 டெஸ்டிலும் தோற்று இருந்தது. 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்து மண்ணில் இந்த தோல்வி ஏற்பட்டது.

    ஆனால் அதன் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கிலும் சொந்த மண்ணில் இங்கிலாந்தை 3-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது. இதனால் விராட்கோலி அணி மிகுந்த நம்பிக்கையுடன் இறுதி போட்டியில் விளையாடும்.

    11 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு அணிக்கு சவாலாக இருக்கும். கூடுதல் பேட்ஸ்மேன் தேவைப்பட்டால் விகாரி களம் இறக்கப்படலாம். ஆல்ரவுண்டருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    வேகப்பந்து வீரர்களில் முகமதுசமி, பும்ரா இடம் பெறுவார்கள். 3-வது வேகப்பந்து வீரராக தேர்வு பெறுவதில் இசாந்த் சர்மா, முகமதுசிராஜ் இடையே போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலிய பயணத்தில் முகமது சிராஜ் சிறப்பாக வீசியதால் அவருக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.

    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன்கில்லும் களம் இறங்குவார்கள். அதற்கு அடுத்த நிலையில் புஜாரா, கேப்டன் விராட் கோலி, ரகானே, ரி‌ஷப்பண்ட் ஆகியோர் உள்ளனர்.

    இங்கிலாந்து ஆடுகளங்களில் விராட்கோலி சிறப்பாக ஆடுவார். அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவர் 2 சதம் உள்பட 727 ரன் எடுத்துள்ளார். ரகானே 556 ரன்னும், புஜாரா 500 ரன்னும் எடுத்துள்ளனர். சுழற்பந்து வீச்சில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    நியூசிலாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதனால் வில்லியம்சன் தலைமையிலான அந்த அணி கூடுதல் பலத்துடன் திகழ்கிறது.

    நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், டாம் லாதம், முன்னாள் கேப்டன் ரோஸ் டைலர், கான்வே ஆகியோரும் பந்துவீச்சில் போல்ட், சவுத்தி, அஜாஸ்படேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 60-வது டெஸ்ட் ஆகும். இதில் இந்தியா 21-ல், நியூசிலாந்து 12-ல் வெற்றி பெற்றுள்ளன. 26 டெஸ்ட் டிரா ஆனது.

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையே நடந்த 2-வது டெஸ்ட்டுக்கான ஆடுகளம்போல உலக டெஸ்ட் இறுதிப் போட்டிக்கான பிட்ச் இருக்கும் என கருதப்படுகிறது.

    இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரடிப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெவிலி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

    Next Story
    ×