என் மலர்
விளையாட்டு
துபாய்:
முதலாவது ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றியது.
2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2021 முதல் 2023 வரை நடக்கிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே வருகிற 4-ந் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான அட்டவணை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 9 அணிகளும் இந்தக்காலக்கட்டத்தில் 6 டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும்.
உள்ளூர், வெளியூர் என சமமாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு அணிக்கும் மாறுபட்டு இருக்கும்.
இந்திய அணி, நியூசிலாந்து(2 டெஸ்ட்), இலங்கை (3), ஆஸ்திரேலியாவுடன் (4) உள்ளூரிலும், இங்கிலாந்து (5), தென் ஆப்பிரிக்கா (3), வங்காளதேசம்(2) ஆகியவற்றுடன் அந்நாட்டு மண்ணிலும் விளையாடுகிறது.
இந்திய அணி மொத்தம் 19 டெஸ்டில் விளையாடுகிறது. இங்கிலாந்து அதிகபட்சமாக 22 போட்டிகளில் ஆடுகிறது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 18 டெஸ்டில் விளையாடுகிறது.
இந்திய வீரர்கள் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரை முடித்த பிறகு ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்வார்கள். அதைத்தொடர்ந்து அங்கேயே டி20 உலகக்கோப்பையும் நடைபெறுகிறது. அதன் பிறகு நாடு திரும்பியதும் அவர்கள் நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள். 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி நவம்பர் மாதம் இந்தியா வருகிறது.
அதன்பிறகு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இலங்கை அணி இந்தியா வந்து 3 டெஸ்டில் விளையாடும். அதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லும்.
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகள் முறையில் மாற்றம் செய்து ஐ.சி.சி. அறிவித்து உள்ளது. அதன்படி வெற்றி பெறும் அணிக்கு 12 புள்ளியும், டிராவுக்கு 4 புள்ளியும், டைக்கு 6 புள்ளியும் வழங்கப்படும். மெதுவாக பந்து வீசும் அணிக்கு ஒருபுள்ளி குறைக்கப்படும்.
பார்சிலோனா:
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த அவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடுகிறார்.
34 வயதான அவரது 21 ஆண்டுகால ஒப்பந்தம் சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மெஸ்சி எந்த அணிக்கும் சொந்தமில்லை என்றும் தனி வீரர் என்றும் அறிவிக்கப்பட்டது. அவர் நினைத்தால் எந்த கிளப்பில் வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற நிலை ஏற்பட்டது.
சமீபத்தில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்க கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது. கிளப் அணிகளில் பல்வேறு கோப்பைகளை பெற்று கொடுத்த மெஸ்சி முதன் முறையாக தனது நாட்டுக்காக முக்கிய பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் அவரது கனவு நனவானது.
இந்தநிலையில் மெஸ்சி பார்சிலோனா கிளப்பில் தொடர்ந்து விளையாடுகிறார். அவரது ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. மெஸ்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதை பார்சிலோனா கிளப் ஒப்புக்கொண்டுள்ளது.
அந்த கிளப் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக மெஸ்சிக்கு வழங்கப்படும் ஊதியம் 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதை மெஸ்சி தரப்பு ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. ஒப்பந்த நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
செம்ஸ்போர்டு:
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வி மூலம் இந்தியா 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஏற்கனவே ஒருநாள் போட்டியிலும் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்திருந்தது. ஒரே ஒரு டெஸ்ட் ‘டிரா’ ஆனது.



நியூசிலாந்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திலேயே இருக்கிறது.
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கு முன் 20ந்தேதி துவங்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது.






