என் மலர்
விளையாட்டு

துபாய்:
ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றது.
அந்த ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்களால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா பேட்ஸ்மேனாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார். காயத்தில் இருந்து மீண்ட அவர் பந்து வீச இன்னும் தயார் ஆகாததால் வாய்ப்பு வழங்கவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். ஆனால் அவர் முழு உடல் தகுதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாண்ட்யா பந்து வீசி பயிற்சி எடுத்து வருகிறார். ஹர்திக் பாண்ட்யா தேர்வால் அணியில் 6-வது பந்து வீச்சாளரை சேர்க்க முடியாத நிலை உள்ளது.
இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் வருகிற 31-ந்தேதி நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்த நிலையில் ஹர்த்திக் பாண்யாவுக்கு பதிலாக இஷான் கிஷனை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்த்திக் பாண்ட்யா அடுத்த போட்டியில் பந்து வீச முடியவில்லை என்றால் அவருக்கு பதிலாக இஷான் கிஷனை அணியில் சேர்க்க வேண்டும். அவர் அற்புதமான பார்மில் இருக்கிறார். எனவே நான் நிச்சயமாக பாண்ட்யாவுக்கு முன்பாக அவரை அணியில் சேர்க்க பரிசீலிப்பேன்.
புவனேஸ்குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை சேர்க்கலாம். நீங்கள் அதிக மாற்றங்களை செய்தால், அணி பீதியடைந்து இருப்பதாக காட்டும். பீதியடைய தேவையில்லை. ஏனென்றால் இந்தியா ஒரு சிறந்த அணி.
நீங்கள் ஒரு நல்ல அணியுடன் முதல் ஆட்டத்தில் தோற்று விட்டீர்கள். இதனால் இந்தியா அடுத்து வெற்றி பெறாது அல்லது கோப்பையை வெல்லாது என்று அர்த்தமல்ல. அடுத்த நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றால் அரை இறுதிக்கும் அங்கிருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம். எனவே அதிக மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
துபாய்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு துபாயில் நடந்த சூப்பர்-12 சுற்று லீக் ஆட்டத்தில் இலங்கையை ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட் 154 ரன் எடுத்தது. அதிகபட்சமாக குஷால் பெரைரா, நிசாங்கா தலா 35 ரன்னும், பானுகா ராஜபக்சே 33 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 65 ரன் எடுத்தது.
இலங்கை அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. பவர்- பிளேயான முதல் 6 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 53 ரன் எடுத்தது. அதன்பின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா சிறப்பாக பந்து வீசினார். அவர் விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கையின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்.
ஆடம் ஜம்பா 4 ஓவர் வீசி 12 ரன் மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மேலும் அவரது பந்துவீச்சில் ஒரு பவுண்டரி, சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-
இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டோம். இலங்கை அணி தொடக்கத்தில் ரன் குவித்தது. அதன்பின் ஆடம் ஜம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்து வீசினர்.
மிடில் ஓவர்களில் அவர்கள் தொடர்ந்து தலா இரண்டு ஓவர்கள் வீசி விக்கெட்டுகளை கைப்பறினார்.
பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆட்டத்தில் பவர்-பிளேயில் ஓவருக்கு 15 ரன் எடுக்கப்படலாம் என்று நினைத்தேன். ஆனால் ஓவருக்கு 8 ரன்னுக்கு மேலேயே விட்டு கொடுத்தோம்.
ஆடம் ஜம்பாவுக்கு இன்றைய நாள் அற்புதமாக அமைந்தது. இலங்கையின் பவர்-பிளே ஆட்டம் சிறப்பாக இருந்த நிலையில் ஆடம் ஜம்பா ஆட்டத்தை கட்டுப்படுத்திய விதம் சிறப்பானது.
அவர் பெரிய விக்கெட்டுகளை கைப்பற்றிடினார். அவரிடமிருந்து உலக தரம் வாய்ந்த செயல்பாடு வெளிப்பட்டது. டேவிட் வார்னர் நன்றாக பேட்டிங் செய்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு எப்போதும் சிறந்த சவாலாக இருக்கும். அடுத்து அந்த அணியுடன் மோதுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா 2-வது வெற்றியை பெற்றது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மெக்காய் காயம் அடைந்ததால் மாற்று வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த போட்டித் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருந்தது.
துபாய்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
2-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை வருகிற 31-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு தோள்பட்டையில் பந்து பட்டது. இதனால் காயம் அடைந்து இருப்பாரோ என்ற அச்சத்தில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு எந்த காயமும் இல்லை என தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து நியூசிலாந்து எதிரான ஆட்டத்தில் விளையாட அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாகவே ஹர்த்திக் பாண்ட்யா கருதப்படுகிறார். இதனால் அணிக்குள் 6-வது பந்து வீச்சாளரை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணி வீரர்கள் தேர்விலும் சமநிலையற்ற தன்மை நிலவுகிறது. இதையடுத்து அவரை பந்து வீசி பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
ஐ.பி.எல். போட்டியிலும் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. இந்த சூழலில் அணியில் கூடுதலாக பந்து வீச்சாளரை சேர்ப்பதற்கு பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை 2 ஓவர் வீசச் செய்தால் 6-வது பந்து வீச்சாளர் தேவையில்லை என்று ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு பந்து வீச பயிற்சி அளிக்கப்பட்டது. அணியின் ஆலோசகர் டோனி, உடற்பயிற்சி வல்லுனர் நிதின் பட்டேல் ஆகியோர் முன்னிலையில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீசினார். ஏறக்குறைய 20 நிமிடங்கள் அவர் பந்து வீசி பயிற்சி எடுத்தார்.
தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின் பந்து வீசாமல் தவிர்த்து வந்த ஹர்த்திக் பாண்ட்யா பல மாதங்களுக்கு பிறகு பந்து வீசி பயிற்சி மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு பந்தை எறிந்து பயிற்சி எடுத்தலும் அளிக்கப்பட்டது.
முழுமையான உடல் தகுதி பெறாத ஹர்த்திக் பாண்ட்யாவை 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்த்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. மேலும் அவர் நிச்சயமாக பந்து வீச மாட்டார் என்பதால்தான் முன்னெச்சரிக்கையாகவே அக்ஷர் படேலை நீக்கிவிட்டு ஷர்துல் தாகூரை அணி நிர்வாகம் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.






