search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்த்திக் பாண்ட்யா
    X
    ஹர்த்திக் பாண்ட்யா

    டோனி முன்னிலையில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீசி பயிற்சி - நியூசிலாந்து போட்டிக்கு உடல் தகுதி பெற்றார்

    முழுமையான உடல் தகுதி பெறாத ஹர்த்திக் பாண்ட்யாவை 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்த்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.

    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    2-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை வருகிற 31-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு தோள்பட்டையில் பந்து பட்டது. இதனால் காயம் அடைந்து இருப்பாரோ என்ற அச்சத்தில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு எந்த காயமும் இல்லை என தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து நியூசிலாந்து எதிரான ஆட்டத்தில் விளையாட அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணியில் ஸ்பெ‌ஷலிஸ்ட் பேட்ஸ்மேனாகவே ஹர்த்திக் பாண்ட்யா கருதப்படுகிறார். இதனால் அணிக்குள் 6-வது பந்து வீச்சாளரை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணி வீரர்கள் தேர்விலும் சமநிலையற்ற தன்மை நிலவுகிறது. இதையடுத்து அவரை பந்து வீசி பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

    ஐ.பி.எல். போட்டியிலும் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. இந்த சூழலில் அணியில் கூடுதலாக பந்து வீச்சாளரை சேர்ப்பதற்கு பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை 2 ஓவர் வீசச் செய்தால் 6-வது பந்து வீச்சாளர் தேவையில்லை என்று ஆலோசிக்கப்பட்டது.

    இதையடுத்து அவருக்கு பந்து வீச பயிற்சி அளிக்கப்பட்டது. அணியின் ஆலோசகர் டோனி, உடற்பயிற்சி வல்லுனர் நிதின் பட்டேல் ஆகியோர் முன்னிலையில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீசினார். ஏறக்குறைய 20 நிமிடங்கள் அவர் பந்து வீசி பயிற்சி எடுத்தார்.

    தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின் பந்து வீசாமல் தவிர்த்து வந்த ஹர்த்திக் பாண்ட்யா பல மாதங்களுக்கு பிறகு பந்து வீசி பயிற்சி மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு பந்தை எறிந்து பயிற்சி எடுத்தலும் அளிக்கப்பட்டது.

    முழுமையான உடல் தகுதி பெறாத ஹர்த்திக் பாண்ட்யாவை 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்த்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. மேலும் அவர் நிச்சயமாக பந்து வீச மாட்டார் என்பதால்தான் முன்னெச்சரிக்கையாகவே அக்‌ஷர் படேலை நீக்கிவிட்டு ‌ஷர்துல் தாகூரை அணி நிர்வாகம் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×